இதழ் 19

கப்பசினோ கதைகள்

ஆதலினால் காதல் செய்வீர்..

காதலிக்கப்போகிறவர்களே!
காதலித்துக்கொண்டு இருப்பவர்களே!
காதலை தவறாய் அர்த்தப்படுத்திக் கொண்டவர்களே!

(இந்த மூன்று வகைக்குள்ளும் முழு மனித இனத்தையும் அடக்கியாகி விட்டது. எப்படி என்பதை அறிய அடி வரை வாருங்கள்) உங்களுடன் நிறையவே கதைக்க வேண்டுமென்று நெடுநாளாய் காத்திருந்தேன். கதைப்போமா?

காதலைப்பற்றி கதைக்க உனக்கு என்ன அருகதை என்று நினைக்கிறீர்களா? என்னைப்பற்றி நான் கதைக்க கூடாதா? ஆம்! காதலைப்பற்றி காதலே கதைக்கப்போகிறேன். போலி நுரைகளை புறந்தள்ளி, தித்திப்பான இந்த காதலின் கப்பச்சினோவை பருகத் தயாராகுங்கள்.

காதலிக்கப்போகிறவர்களே!

எதற்காக காதலிக்கப்போகிறீர்கள்?
எல்லோரும் காதலிக்கிறார்கள் என்று காதலிக்கப்போகிறீர்களா? பொழுது போக்கிற்காக காதலிக்கப்போகிறீர்களா? அப்படியாயின் தயவு செய்து காதலிக்காதீர்கள். காதலிக்க வேண்டுமென்று பழகாதீர்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதவரை காதல் கொள்ளாதீர்கள். எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் காதலையும் காதலித்தவரையும் கைவிடக்கூடாதென்கிற வைராக்கியம் இல்லையா? காதலே வேண்டாம் உங்களுக்கு..

அப்படியென்றால் காதல் என்பது அவ்வளவு கஷ்டமா? இல்லை. அதை கஸ்டமென்று நினைத்தால் காதலிக்காதீர்கள். சிலையாக முடிவெடுத்துவிட்ட கல் ஆனது உளிகள் தரும் வேதனையை வெறுத்துவிடுவதில்லை.

கண்டதும் காதல் என்பது சினிமாவுக்கானது. 3 மணி நேரத்தில் முடித்தாக வேண்டிய படத்தில் 3 நிமிடத்திலேயே காதல் வரும். ஆனால் நிஜ வாழ்க்கைக்கு அது எல்லோருக்கும் சரி வந்து விடுவ தில்லை. ஒரு மரம் கனி தருவதற்கு மரமாய் காத்திருக்க வேண்டி இருக்கிறது, பூவாய் பின் காயாய் என பொறுமையோடு காத்திருந்து தக்க காலத்தில் கனி ஆகிறது. அதே போலத்தான் காதலும்.
காத்திருக்க வேண்டும். உங்களுக்கு உரியவரை காணும் வரை காத்திருக்க வேண்டும். அவர் உங்கள் காதலை ஏற்கும் வரை காத்திருக்க வேண்டும். திருமணத்தில் அக்காதல் இணையும் வரை காத்திருக்க வேண்டும். காத்திருப்பின் சுகத்தை காதலில் அறியலாம். ஆனால் தக்க சமயத்தில் கனியாவதை உறுதிப்படுத்தி, அதை பறிக்காவிடின் பழம் அதிகமாக கனிந்து அழுகி விடும். அது போல காதலையும் தக்க சமயத்தில் கைகூடச்செய்து விட வேண்டும்.

Image result for visvasam love

காதலித்துக்கொண்டு இருப்பவர்களே!

காதலால் நீங்கள் அடைந்த இன்பங்கள் மற்றும் பயன்கள் ஏராளம். ஆனால் திருப்பி அந்த காதலுக்கு என்ன பிரதி உபகாரம் செய்தீர்கள்? ஆம். எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் நீங்கள். நான் இழந்து விட்ட புனிதத்தை மீளப்பெற்றுத்தாருங்கள். காதல் என்றால் கெட்ட பழக்கம் என்ற நம்பிக்கையோடு உள்ள மக்கள் கூட்டத்திற்கு மத்தியில்தான் நீங்கள் காதலித்துக்கொண்டிருக்கிறீர்கள். சல்வார் போனால் தாவணி உள்ளது என்பது காதல் அல்ல என்று சொல்லிக்கொடுங்கள். காதல் ஒருமுறை தான் வரும் என சொல்லிக்கொடுங்கள். அம்மா போல, அப்பா போல காதலனோ, காதலியோ ஒன்றுதான் என்று வாழ்ந்து காட்டுங்கள்.

கஸ்டங்கள், கண்ணீர்கள் காணாத காதல் அதன் ஆழத்தை காண்பது கடினம். அவனோடோ, அவளோடோ கதைக்க முடியாத, சந்திக்க முடியாத சந்தர்ப்பம் உருவாகலாம். அது நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக நீளலாம். அந்த காலங்கள் உங்கள் காதலின் ஆழத்தை உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் புரிய வைக்கும் காலங்கள். காதலின் பசுமையான நினைவுகளோடும் , காதலின் எதிர்கால கனவுகளோடும் அந்த காலத்தை கடந்து விட்டீர்கள் என்றால் இன்பங்களை அறுவடை செய்ய ஆரம்பிப்பீர்கள். அவசரப்பட்டு தற்கொலை என்ற முடிவுக்கு மட்டும் போய்விடாதீர்கள். தற்கொலை செய்யுமளவிற்கு தைரியம் இருந்தால், அந்த தைரியத்தை வைத்து, எதிர்த்து போராடி, உங்கள் காதலிலும் வாழ்க்கையிலும் வெற்றியடைய பாருங்கள்.
காதலுக்காக சாகவும் கூடாது. காதலிக்காமல் சாகவும் கூடாது.

சில அதிர்ஸ்டசாலிகள் தவிர பலருக்கு காதலுக்கான அங்கீகாரம் அவர்கள் பெற்றோரிடத்தில் அவ்வளவு இலகுவாக கிடைத்துவிடுவதில்லை. இதனால் காணாமல்ப்போன காதல் கதைகள் நிறைய உண்டு. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்வது காதலின் வெற்றியல்ல. உங்கள் காதலின் ஆழத்தை உங்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கு புரியவைக்க இருவரும் இணைந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்யுங்கள். எறும்பு ஊரக் கல்லும் நகரும். காதலின் ஆழமா? பெற்றோரின் பாசமா? என்று ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். இரண்டுமே ஒப்பிடமுடியாத இரு உன்னதமான உணர்வுகள். காதலுக்காக பெற்றவர்களையோ, பெற்றவர்களுக்காக காதலையோ கைவிட்டுவிடக்கூடாது.

காதல் திருமணத்தில் கைகூடியவர்களே! உண்மையில் நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று திருமணத்தில் இணைவதற்காக போராடும் காதலர்களை கேட்டால் சொல்வார்கள். காதலில் வெற்றி அடைந்த நீங்கள் வாழ்க்கையிலும் வெற்றியடைய வேண்டும். அப்போதுதான் காதல் மீதான நம்பிக்கை பெற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வரும். திருமணத்திற்கு முதல் எவ்வாறு இருந்தீர்களோ திருமணத்திற்கு பிறகும் அவ்வாறே இருக்க முயலுங்கள். இயன்றவரை என்றெல்லாம் கூற மாட்டேன் கட்டாயம் உங்கள் துணையிடம் வெளிப்படையாக இருங்கள். குழந்தை வரலாம், வேலைப்பழுக்கள் அதிகமாகலாம். ஆனால் உங்கள் இருவருக்குமிடையிலான அந்நியோன்னியமும், காதலும், நம்பிக்கையும் என்றுமே மாறாமல் இருக்க வேண்டும். உங்கள் காதல் வெற்றியடைந்த கையோடு காதலின் தேவை முடிந்ததாக நினைத்து விடாதீர்கள். கட்டையில் வேகும் வரை காதல்த்தீயை அணையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். காதலில் வெற்றியடைந்தவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதை இந்த சமூகம் அடிக்கடி அவதானிக்குமானால் காதல் செய்யச்சொல்லி அதுவே சொல்லும் காலமும் வரும்.

Image result for neethane en ponvasantham

காதலை தவறாய் அர்த்தப்படுத்திக்கொண்டவர்களே!

காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் பலர் காதல் செய்வதாக சொல்பவர்களும் காதலின் மேன்மையையும், மகத்துவத்தையும் உணராமல் அதை எதிர்க்கும் இந்த சமூகத்தினரும் என இரு தரப்பினருமே இந்த வகைக்குள் வருவார்கள்.

எதிர்ப்பால் கவர்ச்சியாலும், வயதுத் தூண்டுதலாலும் ஏற்படுவது காதலே அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒருவரிடம் உங்கள் இதயத்தை பறிகொடுத்து விட்டால் இன்னொருவரிடம் நிச்சயமாக உங்களை இழக்க மனமே வராது. ஆனால் இங்கே மாதத்திற்கு ஒருவரை மாற்றுவதையும் காதல் என்கிறார்கள்.


‘அவள் எங்கே விட்டுப்போனாளோ
அங்கே இருந்து உனை நான் காதல் செய்தேனே”


என்பதெல்லாம் காதல் அல்ல. அவள்(ன்) விட்டுச்சென்று விட்டால் அந்த இடத்தை நிரப்ப எவளா(னா)லும் எப்போதும் முடியாது. இந்த சத்தியம் எல்லோருக்கும் புரிய வேண்டும். ஒரு முறைதான் அது பூக்க முடியும். அதை வாடிவிடாமல் காப்பது உங்கள் கெட்டித்தனம். உடல் இச்சைகளை ஈடேற்றிக்கொள்ளவும் காதலை பாலமாக பயன்படுத்துகிறார்கள். இவற்றுக்கெல்லாம் வேறு பெயர் வைத்துவிடுங்கள். காதல் என்று சொல்லி களங்கப்படுத்தி விடாதீர்கள்.

ஒருதலைக்காதலை இருதலைக்காதலாக மாற்ற பிரயத்தனம் எடுப்பவர்களே.. இரு மனமும் இணைந்தால்த்தான் காதல். உங்களுக்கு காதல் வந்து விட்டது என்பதற்காக நீங்கள் காதலிப்பவருக்கும் வரவேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை. கட்டாய திருமணம் எந்தளவு தவறோ, கட்டாய காதலும் தவறானது. உங்கள் காதலை தெரியப்படுத்தலாம். காத்திருக்கலாம். ஆனால் கட்டாயப்படுத்தி மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. உங்கள் காதல் உண்மை என்றால் அது நீங்கள் காதலிப்பவரை கஷ்டப்படுத்திப்பார்க்க உங்களை அனுமதிக்காது.

ஓமோன்களின் ஓட்டம் என்றும், விதியின் ஆட்டம் என்றும் காதலை மெலினப்படுத்துவது இந்த சமூகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாக காதல் என்பது என்னவென்பதை காலம் கற்பித்தும் கற்க மறந்திருக்கிறது அல்லது மறுத்திருக்கிறது இந்த சமூகம். கடவுளைப்போல்த்தான் காதலை நம்புகிறவர்களும் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

‘காதல் தோல்வியில் போதைக்கு அடிமையான பேதை. காதலை ஏற்காத பெண்ணின் மீது அசிட் வீச்சு. பலரை காதலித்து பணம் திருடிய பெண். காதலிப்பதாக ஏமாற்றி பலாத்காரம் செய்த ஆண். பெற்றவர்களின் சம்மதம் இல்லாததால் தூக்கில் தொடங்கிய காதலர்கள். திருமணமானபின் பழைய காதலனுடன் ஓடிய காதலி.”
இவ்வாறு காதலைப்பற்றிய கேவலமான செய்திகள்தான் பட்டி தொட்டி முதல் பத்திரிக்கை வரை பேசு பொருளாகி இருக்கிறது. வென்ற காதல்களை, சாதித்த காதலர்களை தேடித்தேடி ஆவணமாக்குங்கள். முதிர்கன்னிகளாக (மணமாகாமல் உள்ள ஆண்கள் உள்ளடங்கலாக) இறந்த மற்றும் இருக்கின்றவர்களைத்தேடி பிடித்து அவர்களின் கதைகளை கேளுங்கள். பிறர் கேட்கும் படி செய்து விடுங்கள். இந்த விசித்திரமான சமூகத்தையும், தங்கள் புனிதமான காதலையும் விட்டு விட முடியாமல் இரண்டுக்காகவும் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள் அவர்களில் பெரும்பாலானவர்கள். உங்களுக்கு புரியுமாறு சொல்வதென்றால் மாறா படத்தில் வரும் மீனாட்சி வெள்ளையன் போல.

Image result for maara mouli

ஆகவே, சாதித்த காதல்கள் சிறுபான்மையாக இருப்பதால்தான் இன்னும் நீதி கிடைக்கவில்லை. பெரும்பான்மை ஆகுங்கள். எல்லோரும் காதலியுங்கள். திகட்டத்திகட்ட காதலியுங்கள். சமூகக்களைகளின் வேர்கள் பிடுங்கப்பட காதலியுங்கள். அடுத்த தலைமுறையாவது சமத்துவமாக வாழ காதலியுங்கள். வாழும் போதே சொர்க்கம் காண காதலியுங்கள். உங்களுக்காக முக்கியமாக எனக்காக காதலியுங்கள். காதலித்துக்கொண்டே இருங்கள்.

இப்படிக்கு,
காதல்

Related posts

IPL இலக்கு அடையப்பட்டதா?

Thumi2021

மந்திர மெஸ்ஸி – 5

Thumi2021

மறுபக்கம்

Thumi2021

Leave a Comment