இதழ் 19

ஆசிரியர் பதிவு

இப்பரந்த உலகில் இன்று 7117 மொழிகள் நாவினாலும் உதடுகளாலும் அசைக்கப்படுகிறதாகவும், அதேநேரம் ஏறத்தாழ 40மூமான மொழிகள் அருகி வருவதாகவும், அவற்றில் 1000இற்கும் குறைவான மக்களே அம்மொழிகளின் காவிகளாய் இன்று உள்ளதாகவும் ஆய்வுகள் சுட்டி நிற்கின்றது. இது அழியும் 40மூமான தாய்மொழி பேசுபவர்களின் சிந்தனைத்திறனை பூச்சியமாக்க உள்ளது என்பது துயரமான பதிவாகவே காணப்படுகிறது.

இன்றைய உலகமயமாதல் காலச்சூழ்நிலையில் ஆங்கில மொழிக்கான சர்வதேச மொழி மோகத்தில் தாய்மொழியை பழமைவாதமாக, குறுகிய கண்ணோட்டத்துடன் நோக்கப்படுவது பரவலாக அதிகரித்து வருகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்கள் தாய்மொழியினூடான செயற்பாடுகளை அதிகரித்து வருகின்ற போதிலும், தாய்மொழியை புறக்கணித்து உலக மொழிகளை நாகரீக மொழிகளாய் பின்பற்றும் அவலம் ஆசிய நாடுகளிலேயே பரவலாக காணப்படுகிறது. ஆசிய நாடுகளிலும் சீனர்கள் விதிவிலக்கானவர்கள். இன்றும் சீனர்கள் தங்கள் தாய்மொழிக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறார்கள். உலகின் எம்மூலையில் வெளியிடப்படும் அரிய சிந்தனை புத்தகங்களை மிகவிரைவிலேயே தங்களது சீன மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். அதுவே மேற்கிடம் நீண்டகாலமாய் பொதிந்த வல்லாதிக்கத்தை ஆசியாவின் பக்கம் இழுக்கும் ஆற்றலை சீனா பெற வழிவகுத்துள்ளது.

தாய்மொழி உதாசினத்தால் ஆசிய நாடுகள் அடைந்துள்ள பின்னடைவை ஆய்ந்துகொள்ள சற்றே ஆசியர்கள் வரலாற்றையும் நிகழ்காலத்தையும் ஒப்பீட்டு ஆராய வேண்டி உள்ளது. உலகத்தோடு தொடர்பற்ற காலங்களில் தத்தமது அடையாளங்களோடு மக்கள் வாழ்ந்த நூற்றாண்டுகளில் ஆசியா முதன்மையான கண்டமாக மிளிர்ந்துள்ளது. சான்றாக, இன்று உலகை ஆளும் முதன்மை மதங்களான கிறிஸ்தவம் (மேற்கு ஆசியா) இஸ்லாம் (மேற்கு ஆசியா) இந்து (தென்னாசியா) ஆகிய மதங்களின் உருவாக்கங்கள் ஆசியாவை மையப்படுத்தியே இடம்பெற்றுள்ளது. தாங்கள் தாய்மொழிகளில் சிந்தித்த காலங்களில் மதங்களையே உருவாக்கிய ஆசியர்கள். இன்று போலி நாகரீக மோகத்தில் தாய்மொழியையும் சிந்தனைகளையும் இழந்து மேற்கின் அடிமைகளாய் உலா வருவது ஆசியாவின் அவலமேயாகும்.

தாய்மொழிகள் பாதுகாக்கப்படுவதோடு
அவை அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

காதலர் தினத்துக்கும்(14.02.2021) தாய்மொழி தினத்துக்கும்(21.02.2021) இடையிலே எமது துமியின் 19ஆவது இதழ் (16.02.2021) வெளிவருகிறது. காதலும் தமிழும் இணைந்த இந்த இனிய நாளில் துமியின் இணையத்தளமும் புதுப்பொலிவுடன் உத்தியோகபூர்வமாக தொடங்கப்படுகிறது. பல வாசகர்களது வேண்டுகோளுக்கு இணங்க இணையத்தளம் மூலமாகவும் நேரடியாக துமி மின்னிதழை வாசிக்கக்கூடிய வகையில் வடிவமைத்துள்ளோம். வாசிப்பை இலகுபடுத்தி, வாசிப்புத்திறனை தாய்மொழியில் அதிகரிக்கச் செய்யும் ஒரு முயற்சியே இது. பல புதிய அம்சங்கள் இதில் வர இருக்கின்றன.

காத்திருங்கள்…
எதிர்பார்த்திருங்கள்…

Related posts

கப்பசினோ கதைகள்

Thumi2021

மறுபக்கம்

Thumi2021

திரைத்தமிழ்

Thumi2021

Leave a Comment