தெற்கா? வடக்கா?
பொழுது புலர்ந்திருந்தது… அனுராதபுரத்தை விட்டு வெள்ளம் முற்றாக ஓடி வழிந்திருந்தது. ஓயாத மழைக்கு பின்னர் இன்றைக்குத்தான் சூரியனின் கிரணங்கள் பூமியை ஆரத்தழுவிக்கொண்டது…மழை பட்டுக் கழுவிய மரங்கள் எல்லாம் புத்துயிர் பெற்றுப் பூரித்து நின்றன… குளங்களும் குட்டைகளும் நீர் ததும்பி நிறைந்திருந்தன… காலைச் சூரிய ஒளியின் துலங்கலால் நீர்நிலைகளெல்லாம் மின்னி யாலம் செய்தன… குரங்குகளும் மான்களும் கூட்டம் கூட்டமாக புதர்களுக்கு வெளியே வந்து தலை காட்டின… கனத்த மழையிலும் தப்பி வாழ்வதற்கும் அடைக்கலமாவதற்கும் அவற்றுக்கு வழி தெரிந்திருந்தது…
இயற்கை வழியமைத்திருந்தது! இந்த இனிய காட்சிகளுக்கு அப்பால், நாட்டின் துயர முகமும் தூலாம்பரமாகத் தெரிந்தது! வயல்களையெல்லாம் வாரிச்சுருட்டி வெள்ளம் தின்று ஏப்பம் விட்டிருந்தது… குடிசைகளும் குந்து வைத்த வீடுகளும் பாறி விழுந்தும், வெள்ளத்தில் முற்றாக அடித்துப்போயும் கிராமங்கள் எல்லாம் மைதானங்கள் போலும் ஆகியிருந்தன… இறந்துபோன கால்நடைகளை மக்கள் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருந்தனர்… சிலர் தமது வாழிடங்களை அமைக்கும் முயற்சியை ஆரம்பித்திருந்தனர்.
காசியப்பனால், படை வீரர்களும் மக்களுக்கு உதவுவதற்காக, குறிப்பாக மக்களிடம் மன்னனுக்காக நற்பெயரை ஏற்படுத்திக்கொள்ள கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்தப்பெருவெள்ளம் ஏற்படுத்தியிருந்த அழிவிலிருந்து அனுராதபுரம் தன்னை பழைய நிலைக்கு கொண்டுவர ஓராண்டேனும் ஆகும் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர்! ஆனால் காட்டு விலங்குகளெல்லாம் தம் பழைய வாழ்க்கைக்கு திரும்பியிருந்தன… இயற்கையும் தன் அன்றாட நகர்வுகளை வழமை போல் நகர்த்தத் தொடங்கியிருந்தது!
“பாவம் இந்த மனிதன்தான் காலாகாலமாக இயற்கையைப் பகைத்து, அதன் கோவத்துக்கும் தன்னை ஆளாக்கிக்கொள்கின்றான்… வஞ்சகமும் பொறாமையும் பேராசையும் கொண்ட மனிதை இயற்கை இப்படி காலத்துக்குக் காலம் தண்டித்து வருவது வழமை… ஆனால் முக்காலமும் அந்தப் போதிமாதவனையே வணங்கி, பௌத்த அறத்தையே கடைப்பிடித்துவரும் தங்களைப்போன்றவர்களையும் ஏன் இந்தக்காலம் இப்படிச் சோதிக்கிறது?”
என்று மகாநாமரைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டான் முகலன்!

குகையில் ஒரு உயரமான கல்லில் அமர்ந்திருந்த மகாநாமர் தன் பேரனைப் பார்த்து சிரித்தார்…
“மகனே…சோதனைகள் வருவது எம்மை வருத்துவதற்காக மட்டுமல்ல… புடம் போடுவதற்காயும் தான்! தீயில் இட்ட சங்கு இன்னும் வெண்மையாவதைப் போல சோதனை சூழ்ந்த மனிதன் தன்னை இன்னும் தகவமைத்துக்கொள்கின்றான்… சோதனைத்தீ எரிகிற போது சருகாக இருப்பதா? சங்காக இருப்பதா? என்று நீ தீர்மானித்து உன் மனதைத்திடப்படுத்திக்கொள்!”
முகத்தில் நம்பிக்கை நிழலாட,
“ஐயனே… தெளிவுப்பெற்றேன்… ஒருவாரமாகத் தலைமறைவாக இருந்துவிட்டோம்… இன்று ஒரு முடிவெடுத்து நாளைய திட்டமிடல்களை செய்வோம்! உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கின்றோம்!”
என்று வணங்கி நின்றான் முகலன்…
“மகனே… முக்கியமான ஒருவனுக்காய் காத்திருக்கின்றோம்… அவன் வந்ததும்… தெற்கே போவதா வடக்கே போவதா என்ற முடிவுக்கு வந்து விடலாம்…”
என்று கூறி முடிப்பதற்குள் வீரனொருவன் ஓடிவந்து வணங்கினான்…
“அவர்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள் அமைச்சரே …”
ஆர்வ மிகுதியால் முகலனும் குகையின் வாசலுக்குச் சென்று பார்த்தான்… தூரத்தில் முகலனின் வீரர்களின் தலைவனோடு நமக்கு இன்னும் அறிமுகமாகாத சீலகாலனும் வந்துகொண்டிருந்தான்… முகலனுக்கு மைத்துணனான சீலகாலன் மகாநாமரோடு சேர்ந்து துறவறம் ஏற்றவன்… மகாநாமர் மீளவும் முதலமைச்சரான போதும் தன் துறவு வாழ்வை நீங்காமல் தொடர்ந்தவன்… புத்தரின் போதனைகளை சிரம்மேல் கொண்டு தன்னை நிலைப்படுத்தியவன்! (“The King’s (Mogalaana’s) brother-in-law Seelakala, who had feld with him to India! – L.E.Blaze in his ‘A History Of Ceylon’)
இன்று மகாநாமரின் வேண்டுதலுக்கு ஏற்ப இங்கு வந்து சேர்ந்திருந்தான்… முகலன் ஓடிச் சென்று சீலகாலனைத் தழுவிக்கொண்டான்… அவனும் முகலனை அன்போடு அணைத்துக்கொண்டு மகாநாமரிடம் சென்று வணங்கி நின்றான்…
“முகலா… உன் கேள்விகளுக்கு விடையாக சீலகாலன் வந்து சேர்ந்தான்… சீலா… நடந்தவற்றை அறிந்திருப்பாய் … இனி நடக்கப் போகிறவற்றுக்கு ஒரு வழியை நீயே சொல்ல வேண்டும்!”
“அனைத்துமறிந்த நீங்களே என்னிடம் பொறுப்பை தருவதை எனக்கு வைக்கும் சோதனையாகவே பார்க்கிறேன்… வடக்கே போவது தான் சிறந்தது… பாதுகாப்பும் கூட…”
மகாநாமரும் அதை ஆமோதிப்பதைப்போல தலையசைத்தார்… ஆனால் இந்த முடிவை எடுப்பதற்காக சீலகாலனுக்காக மகாநாமர் காத்திருக்கவில்லை… சீலகாலனையும் அழைத்துச் செல்லவே காத்திருந்ததையும்… மகாநாமரைபோலவே சிந்திக்கும் சீலகாலனும் வடக்கு நோக்கிய பயணத்தை பரிந்துரைத்ததும் முகலனுக்கு விளங்காமல் இல்லை… எல்லாம் தனக்கான எதிர்காலத்துக்கான நகர்வுகளே என்பதையும் அவன் அறிந்திருந்தான்… எதுவும் அவனுக்கு மகிழ்ச்சியே…

பயணம் தொடங்கியது….