இதழ் 19

சித்திராங்கதா – 19

வரலாற்றிலிருந்து சில தகவல்கள்

யாழ்க் குடாநாட்டின் மூன்று கரைகளிலும் விளங்கிய துறைமுகங்கள் வர்த்தகப் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் திசைகளெங்கும் பரிமாற்றிக்கொள்ளும் வாயில்களாக திகழ்ந்தன என்பதை அவற்றின் பெயர்களைக் கவனிக்கும் போதே அறிந்துகொள்ளலாம்.

கப்பல்கள் இத்துறைகளிலிருந்து எங்கே புறப்பட்டுச் சென்றனவோ அந்த இடத்தின் பெயரையே இவை பொதுவாகக் கொண்டிருந்தன. கொழும்புத்துறை, காயாத்துறை, சம்பித்துறை ஆகிய பெயர்கள் இவ்வகையினவே. இங்கிருந்து புத்தகயாவுக்கு சென்றமையாலே காயாத்துறை அல்லது கசாத்துறை என்ற பெயரை அத்துறைமுகம் பெற்றிருந்தது.

சோழ இளவரசி மாருதப்புறவீகவல்லி மாவிட்டபுரத்தில் கோயில் கட்டுவதற்காக வேண்டிய பொருட்களைத் தன் தந்தையாகிய சோழ மன்னனிடமிருந்து வருவித்தாள். அப்பொருட்களை எல்லாம் ஒருவன் கப்பலில் கொண்டுவருகின்ற செய்தி அந்நாட்களில் ஊர் முழுவதும் பரவியிருந்தது. மக்கள் கூடும் இடமெல்லாம் அவன் வருகையே பேசுபொருளானது. அவன் பெயரே அவ்வேளை நாட்டிலுள்ள அனைவராலும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்தப் பெயர்தான் காங்கேயன். அவனே அப்பொருட்களை கப்பல்களில் கொண்டுவந்து காயாத்துறையில் சேர்த்தான்.அத்துறை அன்றுமுதல் காங்கேயன் துறை ஆயிற்று என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் காரணங் கூறுகின்றனர்.

காங்கேயனாகிய முருகப் பெருமானது திருவுருவச்சிலை கொண்டுவரப்பட்டு இங்கே இறக்கப்பட்டமையால் இத்துறை காங்கேயன்துறை என்ற பெயரையும் பெறுவதாயிற்று என்றும் சிலரால் கருதப்படுகிறது.

தட்சணகைலாச மான்பியப்படி சூரசங்காரம் முடித்த பின்பு கந்தவேளும் அவர் பரிவாரங்களும் கதிர்காமம் நோக்கி வரும் வழியில் கப்பலேறி துறையில் வந்திறங்கிய இடமே காங்கேயன்துறையாகும் எனவும் பெயர் விளக்கம் கொடுக்கப்படுகிறது.(வி.குமாரசுவாமி : 1935 பக் 26-29)

காங்கேயன் என்ற ஒருவனால் சிறப்புபெற்றதாலே காங்கேசன்துறை என்ற பெயர் தோன்றியிருக்க வேண்டும் என்பதும் சில ஆய்வாளர் முடிவாகும்.

“அவனி புகழ் (பயில்) குடி நயினாப்பணிக்கனெனுமவன் மிகுந்தோன் (பலமிகுந்த)
கவளமதக்களிற்றண்ணல் காங்கேசன் தேவையர்கோன்
தவமென்ன விளங்கு புகட்சகவீரன் தாரணியிற்
சிவனருளாலிக் காதையைச் செந்தமிழ்ப் பாமாலை செய்தான்”

என்கிற கண்ணகி வழக்குரை காதை என்ற ஈழத்திலக்கிய நூற் பாடல்ப்படி
ஆரியச்சக்கரவர்த்திகள் காங்கேசன் என்ற சிறப்பு விருதினையும் பெற்றிருந்தனர் என அறியமுடிகிறது. எனவே ஆரியச்சக்கரவர்த்தி இத்துறைமுகத்தை பெருப்பித்து வர்த்தகவளர்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் ஊகிக்க முடிகிறது.

சரி..
இனி கதைக்குள் செல்வோம்…

காங்கேசந் துறை

மாருதவல்லியை தேடி வந்த வருணகுலத்தானும் மகிழாந்தகனும் காங்கேசந்துறையை வந்தடைந்தனர். சுற்றி மையிருட்டு. இங்கு மாருதவல்லி எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளாள் என்பதே இருவர்க்கும் அப்போது பெரிய கேள்வியாக இருந்தது. அதை அறிந்து கொள்ள ஏதேனும் உபாயம் தென்படாதா என சுற்றும் முற்றும் இருட்டினை ஊடுருவி தேடிக்கொண்டிருந்தனர் இருவரும்.

அந்நேரம் அருகே மரம் ஒன்றிலிருந்து புது வகை சத்தம் ஒன்று கேட்டது. வருணகுலத்தானிற்கு அது புதுவகை அல்ல. முன்னர் எங்கோ கேட்ட சத்தம் தான். விளங்கிற்று. தன் குறுவாளினை உருவி மரத்தை நோக்கி எறிந்தான் வருணகுலத்தான். உக்கிரசேனன் வெளிப்பட்டான்.

மரத்திலிருந்து தவறிக் குதித்தவன் விரைந்து தப்பியோட எத்தனித்தான். குதிரையிலிருந்து பாய்ந்துவந்த வருணகுலத்தான் உக்கிரசேனன் கழுத்தினை இறுக்கப்பிடித்து தன் மணிக்கட்டினால் நெருக்கினான்.

‘பொடியனே, என்னையே ஏமாற்றி விட்டாயா? . உனக்கு எத்தனை தைரியம் இருந்தால் மீண்டும் என்னைக் கண்டபின்னும் உன் விசித்திர சத்தம் மூலம் யாருக்கோ சைகை கொடுக்கிறாய்? உன்னை இன்று உயிரோடு விட்டால் பார்’ என்று கழுத்தை நெருக்கினான் வருணகுலத்தான்.

வருணகுலத்தானின் இரும்புப்பிடியிலிருந்து விலகிக்கொள்ள முடியாமல் கத்தினான் உக்கிரசேனன்.

‘ஐயா..ஐயா… என்னை விட்டுவிடுங்கள்.. நான் வெறும் ஊழியன் மட்டுமே, எனக்கு இட்ட பணியைத் தானே என்னால் செய்ய முடியும், தயவு கூர்ந்து என்னை விட்டுவிடுங்கள்’

‘இனியும் உன் பிதற்றல்களிற்கு நான் செவிசாய்க்க மாட்டேன். உண்மையை நீ கூறினாலன்றி உன்னை உயிரோடு நான் விட்டுவைக்க மாட்டேன்.’

‘என்ன உண்மை வீரரே, எல்லாவற்றையும் தாங்களே கச்சிதமாய் புரிந்து கொண்டீரே, இனியும் என்ன உண்மை?’

‘உன் நாடகத்தை நிறுத்தப்போகிறாயா? இல்லை உயிரை இழக்கப்போகிறாயா?’ என்று கூறியபடி கழுத்தை இன்னும் அழுத்தமாக நெருக்கினான் வருணகுலத்தான்.

மூச்சுத்திணறியபடி கத்தினான் உக்கிரசேனன்.
‘ஐயா, கூறிவிடுகிறேன்..கூறிவிடுகிறேன்.. மாருதவல்லி இருக்குமிடத்தை இப்போதே கூறிவிடுகிறேன், என்னை விட்டுவிடுங்கள்’ என்று கத்தினான்.

விடுவித்தான் வருணகுலத்தான். உக்கிரசேனனும் கூறினான்.

‘இவனை எப்போதும் நம்பக்கூடாது வருணகுலத்தாரே, இவனையும் உடன் அழைத்துச் சென்றாக வேண்டும்’ என்றான் மகிழாந்தகன்.

‘அதுவே சரி சேனாதிபதி’ என்று கூறியபடி அவன் கழுத்தைப் பற்றியபடியே புரவியில் அமர்த்தினான் வருணகுலத்தான்.

‘என்ன பயப்படுகிறாயா உக்கிரசேனா? உனக்குத்தான் புரவியென்றாலே பயமாயிற்றே’ என்று கேளிக்கையாய்க் கேட்டபடியே தானும் புரவியில் ஏறினான் வருணகுலத்தான்.

‘அது உண்மைதான் வீரரே, ஆனால் நான் இப்போது என்ன செய்ய முடியும்? தங்களிடமிருந்து தப்பிக்க உலகின் எந்த மாவீரனாலுமே இயலாதாம். நான் யார் பொடியன்’

‘போதும் உன் கபடநாடகங்கள். ஒழுங்காய் மாருதவல்லி மறைத்துவைக்கப்பட்டுள்ள இடத்தை மட்டும் காட்டு’ என்று கூறி புரவியினை செலுத்தத் தொடங்கினான்.

உக்கிரசேனனை கடுமையாகத் தாக்கும் எண்ணமும் வருணகுலத்தானிடம் இல்லை. ஏனெனில் அவன் மூலம் தான் பெற்றுக்கொண்ட உதவியையும் அந்த உதவியால் அடைந்த இன்பங்களையும் எண்ணுகையில் உக்கிரசேனன் மீது ஒரு நன்றியுணர்வும் வருணகுலத்தானின் உள்ளத்தில் இருந்தது. ஆனாலும் மாருதவல்லியை மீட்டாக வேண்டிய நோக்கம் கருதி அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

உக்கிரசேனன் காட்டிய வழியே அந்த இருட்டிலே கடலின் கோரசத்தம் கேட்கும் தொலைவில் பாழ் அடைந்து போய் பார்ப்பதற்கு பயங்கரமாய் தெரியக்கூடிய ஓர் மாளிகை வாயிலிற்கு மூவரும் வந்தடைந்தனர்.

அந்த மாளிகையின் பயங்கரத்தோடு மாருதவல்லியின் பரிதாபமான நிலையை எண்ணிப்பார்க்கையில் மகிழாந்தகனும் வருணகுலத்தானும் கணநேரம் கூட காலம் தாமதிக்காமல் புயலைப்போல் அந்த மாளிகைக்குள் பிரவேசித்தனர்.

அவர்கள் வேகம் கண்களில் தெரிபவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. அந்த மாளிகைக் காவலர்கள் என்ன நடக்கிறது என்று ஊகிப்பதற்கு முன்னே தாக்குதல்கள் அவர்களை நோக்கி நிகழ்ந்துவிட்டன.

தன் கையிலிருந்த ஒற்றை வாளினைக் கொண்டே எதிர்த்து வந்த அத்தனை விதமான ஆயுதங்களையும் தகர்த்தெறிந்தான் வருணகுலத்தான்.

மாளிகைக்குள் நுழைந்து ஒரு நாழிகைக்கும் குறைவான பொழுதிலே அவர்கள் மிக்கபிள்ளையை நிராயுதபாணியாய்ச் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கினர்.

‘வாருங்கள் வீரர்களே… வாருங்கள்..வாருங்கள்… ‘ என்றபடியே உடம்பினை ஒரு சிலிர்ப்பு செய்தான் மிக்கபிள்ளை.

‘தங்களுக்காகத்தானே காத்திருக்கிறேன். இவ்வளவு நேரமும் தாங்கள் நிகழ்த்திய பெரும்யுத்தம் கண்டு வியக்கிறேன்.
அபாரம் ! ஆனாலும் உங்களுக்கு இத்தனை பெரிய ஏமாற்றத்தை அளிக்க எனக்கே இப்போது மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது’

‘என்ன உளறுகிறாய் மிக்கபிள்ளை?’ என்று கொதிக்கும் கோபத்தோடு கேட்டான் மகிழாந்தகன்.

‘உளறவில்லை நல்லைச் சேனாதிபதியே, உண்மை என்னவென்றால் தாங்கள் தேடி வந்த திரவியம் இங்கில்லை என்றெண்ணும் போதுதான் சிரிப்பு வருகிறது’ என்று கூறிச் சிரித்தான். உதட்டினை ஓரமாக்கிய அதே ஏளனச்சிரிப்பு. அது இருவருக்கும் இருந்த கோபத்தீயின் எண்ணெயாய் உருமாறியது.

‘ஒரு மகாராணியை இந்த மாளிகைக்குள்ளேயா நான் மறைத்து வைப்பேன்? தங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் நான் அவ்வளவு மூடனல்ல’

கோபத்தில் பொறுமையிழந்த வீரர்கள் இருவரும் அந்நேரம் தம் உடன் வந்த உக்கிரசேனனை தேடினார்கள்.

‘யாரைத் தேடுகிறீர்கள்? தங்களது வழிகாட்டியையா? ‘ என்று கேட்டு மேலும் சிரித்தான் மிக்கபிள்ளை.

உக்கிரசேனன் மீண்டும் எங்கோ மறைந்து விட்டான்.

‘உன் இறுதிக் காலத்து சிரிப்பு இது மிக்கபிள்ளை. அதை நினைவில் கொள். முறையாய் உண்மையைக் கூறு’

‘அப்படியே இருக்கட்டும் நல்லைச்சேனாதிபதியே , முடிந்தால் தாமே கண்டுபிடியுங்கள்.. முடிந்தால்’ என்று அழுத்தமாய்ச் சொன்னான் மிக்கபிள்ளை.

மிக்கபிள்ளையின் வார்த்தைகளை கூர்ந்து அவதானித்துக் கொண்டிருந்த வருணகுலத்தான்
‘சேனாதிபதியாரே, மிக்கபிள்ளையவர்களின் கடைசி ஆயுதமே இந்தப் போலித்தந்திரம் போல் தெரிகிறது. மாருதவல்லி இங்குதான் எங்கோ இருக்கின்றார்.உக்கிரசேனன் இம்முறை பொய்யுரைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்’

‘அடடே,, பெரும்புத்திசாலியாகத் தெரிகிறதே. தாங்கள் தான் தஞ்சையிலிருந்து வந்த தளபதியாரோ’

‘ஆம் மிக்கபிள்ளை, வந்த உடனே உனக்கு அச்சம் பெருக ஈட்டிப்பாய்ச்சல் என்றொரு கோழைத்திட்டம் தீட்டினாயே, அதே தஞ்சை வீரர் இவர் தான்’ என்றான்
மகிழாந்தகன்.

இது மகிழாந்தகனின் உள்ளத்தில் தோன்றியிருந்த புதிய சந்தேகத்தின் விளைவாகும். வருகின்ற வழியில் அவன் காத்தவராயனையும் ராஜமந்திரியாரையும் சந்தித்த கணந்தொட்டு அவனிற்கு இந்தச் சந்தேகம் தோன்றியிருந்தது. அதை மனதிலே எண்ணியிருந்தவன் சந்தர்ப்பம் கிடைத்ததுமே மிக்கபிள்ளையிடம் அவ்வாறு கேட்டான். ஆனால் மிக்கபிள்ளையின் பதில் அவனை மேலும் குழம்பத்திற்கே உள்ளாக்கியது.

‘நானா ? அச்சமிகுதியால் ஈட்டிப்பாய்ச்சல் நிகழ்த்தினேனா? ‘ என்று கேட்டு விடாது சிரித்தான் மிக்கபிள்ளை.

‘இந்தக் கதையை நல்லை இராச்சியத்தில் யார் வேண்டுமானாலும் நம்பட்டும் . ஆனால் அவ்வாறான மூடச்செயல் புரியும் கோழையல்ல இந்த மிக்கபிள்ளை’ என்று கூறி மீண்டும் ஆணவமாய்ச் சிரித்தான்.

ஆனாலும் மிக்கபிள்ளையின் வார்த்தைகளையும் மகிழாந்தகன் முழுதாய் உண்மை என்று நம்பவில்லை.

‘மகிழாந்தகரே, மிக்கபிள்ளை மிகுந்த சத்தியபுருசராக தெரிகிறதே, அவரின் வார்த்தைகளை கேட்டு நாம் வீணே காலங்கழியாமல் விரைந்து சென்று மாருதவல்லியைத் தேடுங்கள். நான் இந்த சத்திய புருசரை பார்த்துக் கொள்கிறேன்’ என்று மகிழாந்தகனை நோக்கி கூறினான் வருணகுலத்தான்.

மகிழாந்தகன் மாளிகையினுள் ஒவ்வொரு அங்கமாகத் தேடத்தொடங்கினான். அவன் தேடலோடு மிக்கபிள்ளையின் கண்களை கூர்ந்து நோக்கிய வருணகுலத்தானிற்கு ஒரு உண்மை புலனானது.

தேடல் தொடரும்…

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 16

Thumi2021

தொடரும் பனிக்காலம்

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 19

Thumi2021

Leave a Comment