நான் பிரிந்து வந்த நேரம்
யாரேனும் பார்த்துவிடப்போகிறார்கள்
என்று பயந்து விலகிப் போகும் நீ
அன்று ஆயிரம் பேர் அருகிலிருந்தும்
என் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாய்
அட ! அதுதான் பிரிவின் வலியா?
ஏதேதோ சொல்லவேண்டும் என்று
நினைத்து வார்த்தைகளின்றி
தவித்தாய்.
பரவாயில்லை.
நீ சொல்ல நினைத்ததை எல்லாம்
உன் விரல்கள் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தன
உன் ஒட்டுமொத்த காதலையும்
உன் கைகள் வழியே நான்
உணரந்து கொண்டிருந்தேன்.
என்னிடமிருந்தும் ஏதோ பதில் வர வேண்டும் என எதிர்பார்த்தாய்
நானும் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன்
உனக்கு ஏதாவது புரிந்ததா?
காதலிப்பதைத் தவிர, வேறு எந்த வகையிலும் என் காதலை என்னால் விளக்கவே முடியாது!
-இராவி நவிலன்
நீ அடையாத இன்பங்களை
தருவேனா தெரியாது…
நீ கண்ட கனவுகளை
நனவாக்குவேனா தெரியாது…
ஆனால்!!!
ஒன்று மட்டும் தெரியும்…
நீ நீயாக இருப்பாய்!!!
நம்பி வா..
நமக்கான வாழ்வில்,
உனக்குரியவர்களும்
உடனிருப்பர்!!!
-மொழியருவி
அச்சத்தில் அல்ல,
நாணத்தில் அல்ல,
அவன் கேட்ட போதெல்லாம்
என் கை தர மறுத்தது…
உலகம் பார்க்க,
உலகம் ஏற்க,
அவன் என் கரம்
பற்ற வேண்டும்!!!
அதற்காகத்தான்
அன்று மறுத்தேன்!
அதை அவனும் அறிவான்!
-கண்ணம்மா
அன்று…
நம்பி கை தந்ததில்லை – அவள்
நாணம் தடுத்திருக்கும்!
நம்பிக்கை தந்ததில்லை – அவள்
சோகம் தடுத்திருக்கும்!
இன்று…
நம்பி கை தந்துவிட்டாள் – அதை
இறுக பற்றிக் கொண்டேன்!
நம்பிக்கை தந்துவிட்டாள் – அதை
கொண்டாடத் தொடங்கிவிட்டேன்!
-இனியவன்
அவன் கை பிடித்து நடக்கும் போதெல்லாம் ஒரு தைரியம் வருகிறது. இரவோ, பகலோ, கூட்டமோ, தனிமையோ அந்த நம்பிக்கையை அவன் கரங்களால் மட்டுமே இன்றுவரை தர முடிகிறது.
-வினோ
அப்பா கைபிடிக்க நடந்தேன்!!
அண்ணன் கையால் வாகனம் ஓட்டினேன்!!
ஆசான் கைபிடிக்க எழுதினேன்!!
உந்தன் கைபிடிக்க திரும்பவும் பிறக்கிறேன்!!
-சந்திரனார்
இன்றைய,
இதம் தரும் இணைய யுகத்தில்
இன்பமற்று…
இனிய காதல் எண்ணத்தில்
இரு கரம் கோர்த்தேன்… என்
இனிய காதலனுடன்!
இணைந்தேன் இல்லறத்தில்!
இளைப்பாறினேன் இனியவன் தோளில்!
இன்றும் இவன் தோளிலே…
இன்பமயமாய் இரு கரம் கோர்த்து
இனியவனுடன் இனியவள்!
-இவள் வரைபி
பெரிய மதில் எழுப்பி
அதைச்சூழ அகழி வெட்டி
முதலைகள், பாம்புகள் என
அத்தனைக்கும்
அகழியை புகலிடமாக்கி,
திறப்பே இல்லாத பூட்டால்
திறக்கவே முடியாத கதவை பூட்டி
அதற்குள்ளும் அங்குலத்திற்கொரு
அரக்கரை காவல் போட்டு
அன்பே உன்னை
அடைத்து வைத்தாலும்
அத்தனையும் உடைத்து உன்னை
கரம் பிடிப்பேன் – இது
காதல் மீது சத்தியம்!
-சசி