
அந்த நகரத்து வீதியின்
ஓரத்தில் ஓர் கடை
தேநீர்க்கடையாக இருக்க வேண்டும்!
யாருமே இல்லை என்றில்லை!
எதற்கோ ஓடர் கொடுத்து விட்டு
ஒரு பெண்மணி
கதிரையில் காத்திருந்தாள்.
அவள் கொடுத்த ஓடர்
விசேடமானதாக இருந்திருக்க வேண்டும்!
கடையைத்தாண்டி
தெரு வரை ஓர் வாசனை!
மங்கல வாசனைக்கு
மஞ்சளை சொல்வார்கள்…
நறுமண வாசனைக்கு
ஊதுபத்தி சொல்வார்கள்…
மலர்களின் வாசனைக்கு
மல்லிகையை சொல்வார்கள்..
அத்தனை வாசனையும்
தோற்குமளவு ஒரு வாசனை…
அந்தக்கடையின் அடுப்பங்கரையில்..
தளம்பல்களோடு
ஒரு தட்டு!
தட்டின் மேலே..
இரு தேநீர் கோப்பைகள்..
வந்த வாசனையாவும்
அந்த கோப்பைகளில் இருந்துதான்!
பூவோடு சேர்ந்த நார் போல
தேநீரோடு சேர்ந்த கோப்பைகளும்
கமகமத்தன!
தேநீரா?
தேநீரின் வாசனை
தெருவரை போகுமா?
பாலோடு
சீனி சிறுக சேர்த்து
சாயம் சாதுவாய் காட்டிய
சுடுநீருக்கு இவ்வளவு மணமா?
சுடுநீரெல்லாம் தேநீருமல்ல!
தேநீரெல்லாம் சுடுநீருமல்ல!
தேநீரில் பலவகை!
அதில் இது ஒரு வகை!
நுரைகளால் நிரம்பியிருந்தன
தேநீர்க்கோப்பைகள்!
தள்ளாடிய தட்டால்
நுரைகள் சில
தட்டையும் எட்டிப்பார்த்தன!
அவள் ஒருத்தி தான் இருக்கிறாள்!
ஏன் இரண்டு தேநீர்?
ஒன்றெடுத்தால் ஒன்று இலவசமா? – இல்லை
இரண்டும் இவளுக்கா?
இருக்கும்!
தேநீர் பிரியர்கள்
தேசத்தில் அதிகம்!
தேநீர் சமரசம் செய்த
சண்டைகள் அதிகம்!
தேநீர் தீர்வு சொன்ன
பிரச்சினைகள் அதிகம்!
தேநீர் ஆரம்பித்து வைத்த
உறவுகள் அதிகம்!
தேநீர் தெரிவு செய்த
காதலர்கள் அதிகம்!
தட்டோடு வந்தவன்
கோப்பைகளை ஒவ்வொன்றாய்
மேசை மேல் வைத்தான்!
சற்று பொறுங்கள்!
அவளெதிரே அவனும்
அமர்ந்துவிட்டான்!
அந்த கோப்பை மணத்ததோ
அந்த கடை மணத்ததோ
அந்த தெரு மணத்ததோ
தேநீரால் அல்ல!
காதலால்!
யாருமற்ற கடையில்
அவளுக்காக அவனும்
அவனுக்காக அவளும்
தேநீரோடு…
பேசிக்கொண்டே இருந்தார்கள்!
அவன் அளித்த ரோஜா இதழ்களை அவனுக்கு எறிந்து விளையாடினாள்!
பதிலுக்கு அவள் அளித்த கச்சானை
அவன் வீசி விளையாடினான்!
தேநீர் மட்டும்
அப்படியே இருந்தது!
விளங்கவில்லையா?
முன் அட்டையை பாருங்கள்!
இன்னும் விளங்கவில்லையா?
காதலியுங்கள்!
தீவிர காதலர்களோ ?
இருக்கும்!
அவனுக்கும் அவளுக்கும்
வயது எண்பதுக்கு மேல்
இருக்கும்!
இந்த வயதில் காதலர்களா?
இந்த வயதிலும் காதலர்கள்!
யாருமற்ற கடையில்
இந்த முதியவர்கள்
ஏன்? எதற்கு? எப்படி?
தாஜ்மஹால் போல
ரோஜாக்கள் போல
இதயங்கள் போல
தேநீர்
இவர்களின் காதல் சின்னம்!
இவர்களுக்கென்றே ஒரு கடை!
தினமும் வருவார்கள்!
தினமும் கதைப்பார்கள்!
தினமும் தேநீர் குடிப்பார்கள்!
தினமும் காதலிப்பார்கள்!
அதிலும் இன்று
அவர்கள் திருமணநாளாம்!
தேநீர் மட்டும் ஆறியிருந்தது!