இதழ் 19

ரசிக்கும் சீமானே

நேரம் எட்டரையாகிறது. ஒன்பது மணிக்கு பஸ். பஸ் ஸ்ராண்டிற்கு அழைத்து செல்ல அப்பா தயாராகிறார். படபடப்பு நிறைந்த இவள். காலிலே ஸ்பிரிங்  பூட்டி விட்டவள் போல அங்குமிங்குமாய் அலமலத்துக்கொண்டிருக்கிறாள். நேரம் நகராதது போலவே இருக்கிறது.

//அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ//

முதல்நாள் இரவிலிருந்தே தூக்கம் இல்லாது மனமெல்லாம் குளிர் ஊற, கண் மூடுவதும் முழிப்பதுமாய் எப்படா விடியும் என்று காத்திருந்து அந்த இரவை மூச்சு முட்ட கடந்தவள். மனசெல்லாம் இரவு கொழும்புக்கு போகப்போறன் என்ற எண்ணம். போய்?? அங்கேயே தொங்கிக்கொண்டு அந்தரத்தில் ஊசலாடியது மனசு.

//பால் வடியும் வான் நிலவில் தீ வடிவதேனோ

ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ//

ஈவினிங்கே தயார்படுத்தி வைத்த பா(b) க்கினை மீண்டும் படபடப்போடு செக் செய்தாள். உடுப்பு, புக்ஸ், பென், ஹிப்ட் எல்லாமே சரியாக இருக்கிறது. ஆனாலும் கொப்பளிக்கும் டோப்பாமைனின் சேட்டையால் அவளுக்கும் நடக்கும் ஆனந்ததாண்டவத்தை கையாள முடியாது தடுமாறுகிறாள்.

“மனமே மனமே

தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே”

தயாராகி வந்த அப்பா, ‘தாரா! வெளிக்கிடுவமா?’ என்று கேட்க, ‘ஆ ஆ ஓ ஓ ஓம் சரி’ என்று வார்த்தைகள் உடைந்து வசனத்தை விழுங்கி தயார் என்றாள்.

//வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ

மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ//

‘ஏன் இப்ப பதறுறாய்? எல்லாம் படிச்சிட்டாய் தானே? எக்ஸாமெல்லாம் வடிவா செய்யலாம். எங்கையாலும் மண்டை விட்டுட்டு யோசிச்சுக்கொண்டிருக்காம வெளிக்கிடு.’ இவளது பதற்றத்தை புரிந்து கொண்டு அம்மா அதட்டினாள்.

“மாலை வந்தால் போதும் ஒரு நூற்று பத்தில் தேகம்

செங்காந்தள் போல் காயும்

காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்

பின் ஏமாற்றம் தீண்டும்

தவிப்பதை மறைக்கிறேன்

என் பொய்யைப் பூட்டி வைத்துக் கொண்டேன்”

அப்பாவின் மோட்டார் பஸ் ஸ்டாண்டை நோக்கி புறப்பட்டது. அப்பா கேட்டார்,

‘லியா பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிறாளா?’

‘அங்க எல்லா இடமும் கொரோனாவாம்! மாஸ்க், சனிட்டைசர் எல்லாம் எடுத்து வச்சனி தானே?’

அப்பாவின் கேள்விக்களுக்கு, ‘ம்ம் ம்ம் ஓ ஓ’ என்ற படியே, கொரோனாவிடம் பாய்ந்தது மூளை.

“காற்றையும் இடைபுகவிடாதவரிடையே

கை குலுக்கலையே இடை நிறுத்திய கைங்கரியம் யாரினதோ!

சோல்மேட்டின் தீண்டலை தீதாயும்

சோப்பின் தீண்டலை தோதாயும்

சோடித்த அருஞ்செயல் யாரினதோ!

ஒட்டி உறவாடாது ஒதுங்கி ரசித்த ஒருதலைக்காதலரை

ஒன்லைன்ல் ஒத்தையில் உழல விட்ட

வில்லத்தனம் யாரினதோ! “

யாரோ எழுதிய கொரோனோ கவிதை இவளது நிலையையும் சேர்த்தே சொன்னதால், அவளிடம் இன்னும் நினைவில் இருக்கும் வரிகள் இவை. மீட்ட கவிதையோடு மேலும் பல நினைவுகளை தேடி மனம் பறக்க, பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தாள். தோழி லியா இவளுக்காக காத்திருக்க, இருவரும் பஸ் ஏறினார்கள்.

“நான் இங்கே நீயும் அங்கே

இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ

வான் இங்கே நீலம் அங்கே

இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ”

பஸ்ஸிலிருந்த டிவியில் ரஹ்மான் பாடிக் கொண்டிருந்தார். சீட்டில் உட்கார்ந்த இவள் டிவியை பார்த்தபடியே நினைவுகளுக்குள் மூழ்கினாள்.

இவள் களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவி. தன்னுடைய பட்ச்சில் கற்கும் ‘தரன்’ மேல் பல்கலைக்கழகம் சென்றதிலிருந்தே  தனி ஈர்ப்பு. அவன் என்றால் இவளுக்குள் சந்தோஷ சிலிர்ப்பு.

“தூக்கத்தில் உளறல் கொண்டேன்

தூறலில் விரும்பி நின்றேன்

தும்மல் வந்தால் உன் நினைவே கொண்டேன்”

என்று,

//கால் விரல் காவியம் எழுதுதே ஏனோ

கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ//

என்ற கேள்விகளுடன் அவனுடன் நட்பாகி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

“நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ

சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ

குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ

வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ”

அத்தனை ஏனோக்களும் சேர்ந்து இவளுக்குள் கும்மாளம் அடித்தாலும், இது அது தான் என்பதை இவள் உணர்த்தும், எது தான்?

//காதலென்று கவிகள் சொல்வார்கள் அது தானோ//

அவன் மறுப்பு சொல்லிவிட்டால்? என்ற பயத்தால், தன்னுள்ளேயே மறைத்து வைத்தாள்.

//நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இது தானோ//

மன நிலவரம் கலவரமாகவே இருந்தாலும், அவன் கூடவே இருப்பதால் நாட்கள் சாதாரணமாகவே கடந்தது. திடீரென்று வந்த கொரோனாவும் லொக்டவுணும் அவனிடமிருந்து தூரமாக்கி விட, பிரிவின் வலியில் வெந்து காதல் பிரவாகம் எடுத்தது.

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட செவ்வியை ஆகுமதி

யார்ஃ தறிந்திசி னோரே சாரற்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கி வள்

உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே!”

உயர்ந்த பலா மரத்தில் சிறிய காம்பில் தொங்கிக்கொண்டிருக்கும் பலாப்பழம் நாளுக்கு நாள் பெரிதாக, பழத்தின் எடை தாங்காது எந்த நேரத்திலும் காம்பு உடைந்து பழம் விழலாம். அதுபோல, இவள் உள்ளத்தின் காதலானது நாளுக்கு நாள் மிகுந்துகொண்டே செல்வதால் காம்பை போல சிறிய இவளது உயிரும் காதல் பாரத்தில் பிரியலாம். இப்படியாக காதல் மடை உடைத்த நிலையில், அவனிடம் தன் காதலை ஒப்பித்தாள்.

“நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நீயா நெஞ்சம் சொன்னதே

முன்பே வா”

அவனும் இவளை போலவே தன் காதலை ஒழித்து வைத்திருந்தவன். இவள் உருக, அவன் ஏந்தினான். காதல் வாட்ஸ்அப்பிலும் சூமிலும் வளர்ந்தது.

“நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி

புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி

வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி”

என்று கேட்க,

//நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ

போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ//

ஈருடல் – ஓருயிர் ஆனார்கள்.

இப்படியாக பிரிவிலே காதல் வளர்த்தவர்களுக்கு பல்கலைக்கழகம் பரீட்சைக்கு அழைக்க, பரீட்சை பயத்துக்கு மேலாக, இவ்வளவு நாளும் நண்பன் என்ற யாரோ ஒருவனாக பார்த்தவனை இப்பொழுது தன்னவனாக தன் தலைவனை பார்க்க போகிறோம் என்ற பயமும் சந்தோஷமும் கலந்த ஏக்கம் தான் இவளது தவிப்பு – படபடப்பு.

“பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே

உயிர் இரண்டும்   உராயக்கண்டேன் நெருங்காமலே

உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே”

நாளை  எதிர்காலத்தை முதன் முதலாய் சந்திக்கும் போது, வெட்கம் இவளை நனைக்குமா இல்லை கண்ணீர் இவளை நனைக்குமா இல்லை முத்தம் தான் இவளை நனைக்குமா??

Related posts

மறுபக்கம்

Thumi2021

சட்டத்தின் சாரல்

Thumi2021

ஆசிரியர் பதிவு

Thumi2021

Leave a Comment