இதழ் 20

சித்திராங்கதா – 20

இரகசிய சிறை

காங்கேசந்துறையின் கடலோரமாக அமையப்பெற்றிருந்த அந்த இருண்ட மாளிகையின் ஓர் அறையில் அமைதியும் தைரியமும் மிகுந்த முகத்தோடு மாருதவல்லி நின்றுகொண்டிருந்தாள். மகிழாந்தகனின் தீவிர தேடலில் மாளிகையிலிருந்த மாருதவல்லியைக் கண்டுகொண்டான்.

‘மூடனே மிக்கபிள்ளை, நீயே உன்னை மூடன் என்று நிரூபித்துவிட்டாயே’ மிக்கபிள்ளையை நோக்கி ஏளனமாய்ச் சிரித்தான் மகிழாந்தகன்.

தன் கடைசி தந்திரமும் தோல்வியுற்ற பதற்றத்திலிருந்த மிக்கபிள்ளையை தன் வாளினால் சிறைபிடிக்க வருணகுலத்தானிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை.

மாருதவல்லியையும், சிறைப்பிடிக்கப்பட்ட மிக்கபிள்ளை ஆராச்சியையும் ஏற்றிக்கொண்டு இரு புரவிகளும் நல்லூர் நோக்கி பயணமாகத் தொடங்கின. மாருதவல்லி தொடர்ந்தும் மௌனம் கலையாதவளாகவே புரவியில் அமர்ந்திருந்தாள். அவள் அச்சமிகுதியில் இருப்பதாய் எண்ணி இருவரும் அவளை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

காரிருள் மெள்ள விலகத்தொடங்கும் வேளையில் ‘மாருதவல்லி மீட்கப்பட்டாள்; மிக்கபிள்ளை சிறைப்பிடிக்கப்பட்டான்; தஞ்சைவீரரே இதை நிகழ்த்திவிட்டார்’ என்கிற செய்தி ஊரெங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது.

புலரும் பொழுதோடு போட்டியிட்டு கொண்டு எத்தனை வேகமாக இரண்டு புரவிகளும் விரைந்தாலும் அந்த வேகத்திலும் அந்தக்காட்சியைக் காண வீதியோரங்களில் மக்கள் குழுமத்தொடங்கினர்.

தங்களிற்கு அது கௌரவமாகவே தெரிந்தாலும் மாருதவல்லிக்கு அது சங்கடத்தை உண்டுபண்ணுகிறது என்கிற உணர்வினால் வருணகுலத்தானும் மகிழாந்தகனும் எங்கும் தாமதியாது நல்லூர்க்கோட்டை நோக்கி அதி வேகமாக விரைந்து கொண்டிருந்தனர்.

குதிரைகள் கோப்பாய் நகருக்கு வந்ததும் மக்கள் கூட்டம் இன்னும் அதிகமாகவே இருந்தது. அதிவேகத்திலும் அந்தக் கூட்டத்தில் ஒரு முகத்தை வருணகுலத்தான் இரகசியமாய்த் தேடிக்கொண்டுதான் இருந்தான்.

அவன் தேடினால் மட்டும் அத்தனை பெரிய கூட்டத்தில் கிடைத்துவிடுமா என்ன? ஆனால் கிடைத்தது. அதுதானே அதிசயங்களின் இரகசியம். எதிர்பார்த்த அந்த முகங்கள் கண்டுகொண்டன.

ஒளிந்து மறைந்து நீரை நாடி நீளும் வேர்களாக அவன் பார்வை சித்திராங்கதாவை நோக்கி நீண்டது. அவன் பார்வையின் தாகம் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த அவளுக்குத் தெரியாதா? தெரியும். தாகத்தை அறியாத தண்ணீரா? ஆனால் தாகத்திற்கும் தண்ணீருக்கும் இடையில் பெருங்கூட்டம் இருந்தது. கண்டிப்பான கடமைகள் இருந்தது. பார்வையை தவிர அந்த நான்கு கண்களும் வேறு எதையும் பரிமாற்றிக் கொள்ளவில்லை. அதற்கான அவகாசமும் அவர்களிடம் இருக்கவில்லை.

‘வந்த வேலை மறந்து நாட்டியத்திற்கு நன்றி கூற இவ்வளவு அவசரமாய்ப் புறப்பட்டு வந்ததேனோ?’ என்று சித்திராங்கதா கேட்ட கேள்விக்கு பதில் கூறிவிட்டது போல் வருணகுலத்தானிற்கு ஒரு திருப்தி இப்போது ஏற்பட்டது. தன் கடமையை தான் மறக்கவில்லை என்பதை இச்செயல் அவளிற்கு இவ்வேளை நினைவுபடுத்தும் என தனக்குத் தானே எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்டான்.

பூமியைப் போர்த்தியிருந்த கரும்பட்டுப் போர்வையை வைகறை வந்து முழுவதுமாய் விலத்தி விட்ட வேளையில் வீரர்கள் கோட்டையை வந்தடைந்தனர்.

இரவு முழுவதும் விளக்கொளிகளின் தடுமாற்றத்தோடு விழித்திருந்த நல்லூர்க்கோட்டையில் அரசவை அதிகாலையிலே கூடியிருந்தது.

மாருதவல்லியைக் கண்டதும் மந்திரி ஏகாம்பரனார் தன்னிலை மறந்தார். தன் பெரிய உருவத்தையும் மறந்து ஓடி வந்து மாருதவல்லியை ஆரத்தழுவி கண்ணீர் மழை பொழிந்தார். அவையில் இருந்த அனைவரும் தம் நெஞ்சை இறுகப் பிடித்துக்கொண்டே அந்தக் காட்சியை கண்டிருக்க வேண்டும். அத்தனை அளவு வேதனையின் உச்சமாய் அது அமைந்திருந்தது.

அசையாது நின்ற சங்கிலியன் கண்களிலிருந்தும் நீர் அருவியாய்ப் பெருகிக்கொண்டிருந்தது. வாய்ச்சொல்லினால் நன்றிகள் போதாத அளவிற்கு அவரது நீர் நிரம்பிய கண்கள் வருணகுலத்தானை நோக்கின. வருணகுலத்தானும் அந்த நன்றிகளை ஏற்றுக்கொண்டது போல் அரசனுக்கு ஆறுதலளித்தான்.

இன்னும் வாய்பேசாது நின்றுகொண்டிருந்த மாருதவல்லியை மெள்ள அணைத்தபடியே மகாராணி மஞ்சரிதேவியார் அந்தப்புரத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.

அந்நேரம் சங்கிலிகளால் கட்டப்பட்ட கைதியாய் மிக்கபிள்ளையை அரசவையில் கொண்டு வந்து நிறுத்தினான் மகிழாந்தகன்.

‘அரசே, இவனிற்கு கொடுக்கப்படும் தண்டனை ஈழத்தில் இனி பெண்களை தொட நினைப்பவனின் உள்ளத்தையே பயங்கொண்டு பதற வைக்க வேண்டும்’ என்றான் மகிழாந்தகன்.

‘அவ்வாறே சேனாதிபதி; இந்த மாபாதகன் இப்போதே ஊரின் நடுவில் கழுவில் ஏற்றப்படவேண்டும். இவன் உயிர் துடிபட்டு துடிபட்டு பிரிய வேண்டும். இந்த ஊரே அதைக் காண வேண்டும். ம்….. இப்போதே ஆகட்டும்’
என்று தேக்கி வைத்த கோபத்தையெல்லாம் தெறிக்கவிட்டபடி இடித்துரைத்தான் சங்கிலியன்.

ராஜமந்திரியார் ஏகாம்பரனார் கண்களில் தெரிந்த கோபமும் அரசனின் ஆணையையே வழிமொழிவதாய் இருந்தது.

இந்த சமயத்தில் வருணகுலத்தான் பேசத் தொடங்கினான்.
‘வேந்தே, சிறிது பொறுமை காக்க வேண்டுகிறேன். மிக்கபிள்ளை பறங்கியர் பால் கூட்டுச்சேர்ந்தே இவ் அநியாயத்தை நிகழ்த்தினார். அன்றில் அவர் ஓர் ஆளுமைமிக்க வீரர் என்பதை நாம் மறத்தலாகாது. பறங்கியர் செயலால் நம் திறம்மிக்க வீரரை நாமே அழித்து விடுவது ஏற்புடையதாய்த் தோன்றவில்லை அரசே, அத்தோடு பறங்கியரின் இனிவரும் திட்டங்களை முறியடிக்க நமக்கு மிக்கபிள்ளை பெரிதும் தேவை என்று கருதுகிறேன்’ என்று பேசி முடிப்பதற்குள் மகிழாந்தகன் குறுக்கிட்டான்.

‘யாரை வீரன் என்கிறீர்கள் வருணகுலத்தாரே, பெண்ணைக் கவர்ந்து சென்ற கோழையையா? இவனையெல்லாம் ஆண்மகனேயில்லை என்று அவனியர் சொல்ல வேண்டும். எம் பெண்களிற்கு அச்சத்தைக் காட்டிய பாதகனால் எமக்கு என்ன ஆதாயம் இருந்தாலும் அவனை நாம் விட்டுவைக்கலாகாது அரசே’ தன் கருத்தையும் ஆணித்தரமாய் முன்வைத்தான் மகிழாந்தகன்.

‘மகிழாந்தகரே, மாருதவல்லியைக் கவர்ந்தது மிக்கபிள்ளை தீட்டிய திட்டமாக இருந்தால் இவனது மரணத்தோடு அதை வென்றுவிட்டதாய் நாம் கொள்ளலாம். ஆனால் இது பறங்கியர் திட்டம் என்றே தோன்றுகிறது. மிக்கபிள்ளை பறங்கியர் பயன்படுத்திய சாதனம் மட்டுமே. முடிவு எதுவாயினும் இழப்பு எதுவும் தமக்கில்லாத பறங்கியனின் யுத்தி இதுவாகும். முறையான காரணத்தை நாம் அறியாது மிக்கபிள்ளையை நாம் கழுவிலேற்றுவதாலும் இழப்பு என்பது எமக்குத்தான். அந்தக் காரணம் அறியும் வரையாவது நாம் காத்திருக்க வேண்டும் சேனாதிபதி’

‘ஆனால் இவன் உயிரோடு இருப்பதால் மட்டும் அந்தக் காரணம் தெரிந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் என்ன வருணகுலத்தாரே? இவனை நம்மவன் என்று நாம் ஒருபோதும் நம்ப இயலாது. இவன் இப்போது பறங்கியரது டொம் லூயிஸ். இவன் எந்த உண்மையையும் எம்மிடம் கூறப்போவதில்லை’

‘இவனிடமிருந்து அந்த உண்மையை பெற்றுக்கொள்ளும் உபாயம் நானறிவேன் அரசே, அதுவரை இவன் உடலில் உயிரிருக்க வேண்டும். தயை கூர்ந்து பொறுமை காக்க வேண்டுகிறேன்’ என்றான் வருணகுலத்தான்.

‘வருணகுலத்தாரே, மாருதவல்லியை பேராபத்திலிருந்து மீட்டு வந்தவர் தாம் என்பதால் தங்களின் வார்த்தைகளை நான் முழுவதுமாய் நம்புகிறேன். ஆனாலும் என் நெஞ்சில் கனன்று எரிகின்ற நெருப்பு இவன் உயிர் பிரியும் வரை அணையாது. அதுவரை என்னால் அணைக்கவும் இயலாது’ என்றான் சங்கிலியன்.

‘அரசே, தாங்கள் கூறுவது உண்மையானதே, ஆனால் இப்போது நமது பெரிய சவால் பறங்கியனே. அவனை ஒழிக்க மிக்கபிள்ளையை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது கட்டாயமானதாகும். அதுவரை பொறுமை காக்க வேண்டும். பிறகு தாங்கள் எண்ணப்படியே இவனைத் தண்டிக்கலாம்.’

அதுவரை எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்த மிக்கபிள்ளை இப்போது சிரித்தான். அதே உதட்டினை ஓரமாக்கிய ஏளனச்சிரிப்பு. அதன் அர்த்தம் அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை.

‘அதுவரை இவனை என்ன செய்வது வருணகுலத்தாரே’ என்று தன் இயலாமையோடு கோபத்தை வெளிப்படுத்திக் கேட்டான் மகிழாந்தகன்.

‘அதுவரை நம் இரகசிய சிறையில் இவனைப்பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு’ என்று முன்வந்தார் மந்திரி ஏகாம்பரனார்.

தக்கசமயத்திற்கு காத்திருந்த மகிழாந்தகன் தொடர்ந்தான்.

‘யார் தாங்களா? தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாதாள சிறையில் காத்தவராயன் கதை என்னவாயிற்று என்று அறிவீர்கள் அன்றோ, இனியும் எவ்வாறு துணிச்சலோடு இப்படிக் கூறுகிறீர்கள் ராஜமந்திரியாரே’

‘சேனாதிபதியாரே, காத்தவராயன் விடயத்தில் நிகழ்ந்தது என் தவறுதான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் மிக்கபிள்ளை விடயத்தில் அவ்வாறு நிகழாது. அதி உச்ச பாதுகாப்போடு மிக்கபிள்ளை இரகசிய சிறையில் அடைக்கப்படுவான். இரகசிய சிறை பற்றிய தகவல் தங்களிற்குகூடத் தெரியாதே. அங்கிருந்து எவ்வகையிலும் எவராலும் தப்பமுடியாது’ என்றார் ராஜமந்திரியார் உறுதியாக

ராஜமந்திரி என்ன கூறினாலும் அதை ஏற்கும் நிலையில் சேனாதிபதி அப்போது இருக்கவில்லை. காத்தவராயனின் ஈட்டிப்பாய்ச்சலுக்கும் மிக்கபிள்ளைக்கும் சம்பந்தமே இல்லை என்று மிக்கபிள்ளை கூறியது ஒருவேளை உண்மையாய் இருக்குமோ என்கிற சந்தேகமும் அவனை ராஜமந்திரியாரின் சொற்களை நம்ப அனுமதிக்கவில்லை.

‘மன்னிக்க வேண்டும் அரசே, ராஜமந்திரி சொல்வதை நான் இனி நம்புவதற்குத் தயாரில்லை. காத்தவராயனுக்கும் ராஜமந்திரியாருக்கும் இரகசிய தொடர்பிருப்பதாய் எனக்கு அன்றே சந்தேகம் இருந்தது. கங்கேசந்துறை செல்லும் வழியே நானே அதைக் கண்ணூடு கண்டு கொண்டேன். அத்தோடு காத்தவராயனிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மிக்கபிள்ளை கூறுகிறான். உண்மை எதுவென்று மட்டும் எனக்குப் புரியவில்லை அரசே’

‘அரசே காத்தவராயனை நான் சந்தித்தது தற்செயலே. அது குறித்து நான் சேனாதிபதியிடம் ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டேன். இராச்சியத் துரோகி மிக்கபிள்ளைகளின் வார்த்தைகளை உண்மை என்று நம்பி என் வார்த்தைகள் மீது அவையில் சந்தேகத்தை உண்டுபண்ணுவது அத்தனை அழகல்ல அரசே’ என்றார் ராஜமந்திரியார்.

அமைதியாய் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சங்கிலியன்
‘காத்தவராயன் சிறையிலிருந்து தப்பியது எவ்வாறென்று தெளிவாய் அறியேன். மாருதவல்லியை காணாத பதற்றத்தில் நான் அது குறித்து அதிகம் இலட்சியம் செய்யவில்லை. ஆனால் மிக்கபிள்ளை விடயத்தில் அவ்வாறு நிகழாது என்பதை நான் உறுதியாய் நம்புகிறேன். ஏனெனில் நம் இரகசிய சிறையிலிருந்து தப்புவது என்பது எவராலும் இயலாத காரியம். ஆதலால் வருணகுலத்தார் வேண்டுகோளினை ஏற்று இவனை இப்போதைக்கு இரகசிய சிறையில் அடைக்கிறேன்.வீரர்களே.. ம்…’
என்று ஆணையிட்டான்.

நடப்பன யாவும் மகிழாந்தகனிற்கு ஏற்றுக்கொள்ளமுடியாத கோபத்தை உண்டு பண்ணியது. யாரை நம்புவது? யார் உண்மையானவர்கள்? அரசர் இப்படி கண்மூடித்தனமாக ராஜமந்திரியாரை நம்புவானேன்? என்ற கேள்விகளிற்கு எல்லாம் பதில் புரியாமல் பெருங்குழப்பத்துடனே அவன் அவையிலிருந்து வெளியேறி விட்டான்.

அதே குழப்பங்கள் வருணகுலத்தானுக்குள்ளும் இருந்தது. ஆனால் அந்த உண்மைகளை ராஜமந்திரி ஏகாம்பரனார் மூலம் அறிந்து கொள்வது சாத்தியமற்றது என்பதையும் வருணகுலத்தான் புரிந்து கொண்டான்.

அன்று மாலையே சங்கிலிய மகாராஜரை தனிமையில் சந்திப்பதற்கான வேளைஒன்றை ஏற்படுத்திக்கொண்டு வருணகுலத்தான் அந்த உண்மையை தெரிந்து கொள்ள முயற்சித்தான். முயற்சியில் வெற்றியும் கண்டான் .

உண்மை வெளிக்கும்…

Related posts

இறையாண்மை – 01

Thumi2021

ஆசிரியர் பதிவு

Thumi2021

ஒரு துண்டுப் பலாக்காய் – சிறுகதை

Thumi2021

Leave a Comment