இதற்குரிய அடிப்படைகாரணமாக எமது கமக்கட்டமைப்பு,மூலதனம்,விவசாய உற்பத்தி போக்கு என்றவாறாக அணுகலாம்.அதாவது இக்காலகட்டத்தில் விவசாய உபகரணங்களில் ,முதலீட்டு மட்டங்கள், ஊழிய நடைமுறைகளின் சீராக்கம்,குறிப்பான நிலம்சாரந்த சமூக உறவுகள் என்பனவற்றை எமது பகுதிகளின் விவசாயிகளின் செழிப்புக்கு அக்காலகட்டத்தில் பங்களித்த காரணிகள் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.இவ்வாறாக பல்வேறுபட்ட ஒத்துழைப்புகளுடன் நிகழ்ந்தேறிய எம்மவர்களின் விவசாயரீதியான எழுச்சியானது தற்போது பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கின்ற நிலைமையில் காணப்படுகின்றது.சிறப்பாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உணவுப்பாதுகாப்பானது மிகவும் சிக்கல் நிலைகளுக்கு சென்று திரும்புகின்ற ஆயிடைப்போக்கை காண்பிக்கின்றன.கடந்த வருடங்களை எடுத்துக்கொண்டால் தொடர்ச்சியாக பெருமழை பொய்த்துப்போக பெருமளவான வயல் மற்றும் விவசாய நிலங்கள் அழிவடைந்தன.இவ்வருடம் மாறாக பெருமளவான,மிதமிஞ்சிய மழையினுடைய கிடைப்பனவினால் நெல்வயல்களும்,விவசாயப்பயிர்களும் அழிவடைந்துள்ளன.
இவ்வாறான சூழலியல் தோற்றப்பாடுகள் எமது பகுதி மக்களை காய்கறிகளில் கூட தென்னிலங்கையை நமபியிருக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கிவிடும்.இதனால் எமது உள்ளூர் வாழ்வியல் மற்றும் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகும்.எம்பகுதிகளில் பொதுவாக ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது நுகர்வுக்கான ஒரு கலாச்சாரமே காணப்படுகின்றது.எனவே எமது பிரதேசங்களிலும் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டியதும்,அதிகரித்த உற்பத்திகளை சந்தையில் நிலைக்க வைக்க வேண்டியதும் அவசியமாகும்.காலநிலைக்காரணிகள்,அரசியல் சூழ்நிலைகள் என்பனவற்றை தாண்டி எமது சூழலின் விவசாய உற்பத்திப்போக்குக்கான ஓர் தன்னார்வ கட்டமைப்பினை உருவாக்கி,அதன்வாயிலாக அனைத்து தரப்புகளையும் உள்வாங்கி,தத்தமது பொருளாதார நலன்களை மட்டுமன்றி உற்பத்தியாளர்,இடைநிலை வியாபாரிகள்,நுகர்வோர் என்போருக்கிடையில் சுமூகமான உறவைப்பேணுவதுடன்,அனைவரது பொருளாதார நிலைமைப்பாடுகளையும் ஆராயந்து,கருத்தில்கொண்டு ஓர் சமூகமாக ஒன்றுபட்ட தீர்மானங்களை உற்பத்திப்பொருள் சார்பாக தீர்மானித்து செயற்படுத்தல் அவசியமாகும்.
தரைத்தோற்றக்கட்டமைப்புகள் காலநிலைமாற்றத்தினால் ஏற்படுகின்ற அதீத விளைவுகளை எதிர்கொள்ள தயாரில்லாமை,குளத்து நீரை ஆதாரமாக கொண்ட விவசாயிகள் மிதமிஞ்சிய மழைக்கிடைப்பனவினால் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கினாலும், வரட்சி காலங்களில் நீரின்றி அவதியுறல்,இவ்வாறான சவால்கள் மாவட்டம் தோறும் விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பொதுப்பிரச்சினையாகும். இன்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் விவசாயிகள் சந்தைப்படுத்தலில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர், வீதியில் நெல் மூட்டைகளை வைத்துக்கொண்டு சரியான விலைப்பெறுமதியுடன் தமது நெல்லை கொள்வனவு செய்வதற்காக வியாரிகளை எதிர்பார்த்திருக்கும் விவசாயிகள் காணப்படுகின்றனர்.போதிய பரவலாக்கப்பட்ட சந்தைப்படுத்தல் இல்லாதவிடத்து விவசாயி தனியார் கொள்வனவாளர்களுடன் திண்டாடவேண்டிய நிலை ஏற்படுகின்றது.இன்னும் ஒரு பகுதியான விவசாயிகள் விளையும் நெல்லினை வயல்களிலேயே வைத்து விற்பனை செய்துவிடுகின்றனர்,அவர்களிடம் குறித்த கேள்வி விலை வரும் வரை நெல்லை உலரவைத்து, களஞ்சியப்படுத்தி, சந்தைப்படுத்துவதற்கான இயலுமை இல்லாமையினால் இவ்வாறான தோற்றப்பாடு நிகந்தேறுகின்றது.அரசின் கவனத்திற்கு இவ்வாறான தோற்றப்பாடுகள் கொண்டுவரப்பட்டு,நெல் கொள்வனவு நிலையங்கள் ஊடாக அரசு நெல்லை கொள்வனவு செய்யப்படும் என்ற தீர்வு காலகாலமாக கூறப்பட்டாலும்.அனைத்து பகுதிகளிலும் இச்செயற்பாடு வெற்றியளிப்பதில்லை,கொள்வனவு செய்வதற்கான தாமதங்கள்,நிர்வாக ரீதியான இழுபறி நிலமைகளே களத்தில் காணப்படுகின்றன.அறுவடையென்பது காலநிலை போன்று தீர்மானிக்க முடியாத ஒரு விடயமல்ல,எனவே உரிய அதிகாரிகள்,அமைப்புகள்,கொள்வனவாளர்கள் முன்கூட்டியே கலந்துரையாடி தீர்மானங்களை வகுத்து செயலாற்ற முடியும்.இவ்வாறாக செயலாற்றுவதன் ஊடாக விவசாயம் சார்ந்த அனைவரது நலன்களையும் பேண முடியும்.
அரச நெல் கொள்வனவு பற்றி விவசாயிகளிடம் வினாவும் போது,நெல் சமகாலத்தில் சந்நைப்பெறுமதியில் விற்பனையாகின்ற விலையினை கொடுத்து வேண்டுவதில்லை என்ற,குறைபாடு நிலவுகின்றது.எமது சூழலில் பல்வேறு துறைகளை எடுத்து ஆராய்கின்ற போது பல்வேறுபட்ட சவால்கள் காணப்படுகின்றன,விவசாயமும் அதற்கு விதிவிலக்கானது ஒன்றல்ல.கடந்த காலங்களில் விவசாய நிலங்களில் வேலைக்கு சென்ற பல கூலித்தொழிலாளர்கள் வேலையற்று காணப்படுகின்றனர். காரணம் பல்வேறு தவணைமுறைக்கட்டணங்களூடாக கடன் வழங்கும் நிறுவனங்களால் விவசாய இயந்திரங்கள் பெருமளவாக இலாப நோக்குடன் விற்றுத்தீர்க்கப்பட்டுள்ளன.இச்செயற்பாட்டின் வாயிலாக பல கூலித்தொழிலாளர்கள் வேலையற்றவர்களாயிருக்கிறார்கள்.உதாரணமாக இவ்வருடத்தை எடுத்துக்கொண்டால் கையினால் அருவி வெட்டிய விவசாயிகள் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு சொற்ப அளவானவர்களே காணப்படுகின்றனர்.முன்னைய காலங்களில் பல தொழிலாளிகள் வயல்களில் அருவி வெட்டுக்கென அழைக்கப்பட்டு வேலை செய்வார்கள்,தற்போது அவ்வாறில்லை,காரணம் அருவி வெட்டும் இயந்திரங்களின் புழக்கம் அந்தளவுக்கு வியாபித்துக்காணப்படுகின்றமையே ஆகும்.கையினால் அருவி வெட்டுவதனால் நெல்லின் இழப்பு குறைவு,வைக்கோலின் தரம் போன்ற அனுகூலங்கள் காணப்படுகின்ற போதிலும் வேலைப்பழு,நேரவிரயம் போன்ற பிரதிகூலங்களும் ஏற்படுகின்றன.இதன் வாயிலாக நில உரிமையாளர்கள் இயந்திரப்பாவனையையே பெரிதும் விரும்புகின்றனர்.இதனால் கூலித்தொழிலாளிகள்,குறிப்பாக பெண் கூலித்தொழிலாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிப்புறுகின்றன
விவசாயத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது வரவேற்கத்க்க விடயமாகும்.அதேசமயம் விவசாயத்தினை இயந்திரமயமாக்கலில் சரியானவோர் கொள்கையும் பிரதேசங்களுக்கு ஏறறவாறாக வகுக்க வேண்டியது அவசியமாகும்.இதனூடாக வருங்காலத்தில் இயந்திர வளப்பயன்பாட்டுக்கும்,தொழிலாளர் வளத்துக்கும் இடையே உறுதியான சமநிலையை பேணமுடியும்.உற்பத்தியாளர்களையும்,நுகர்வோரையும் பாதிக்காதவாறு செல் உட்பட அனைத்து விவசாய உற்பத்திப்பொருட்களுக்குமான விலைக்கொள்கை வகுப்பு அவசியமாகும்.பல்வேறு சவால்களை ,நாட்டு சூழ்நிலைகளால் ஏற்பட்ட இடர்களை எதிர்கொண்ட சமூகம் என்றரீதியில் அரச தரப்பிடமிருந்து சலுகைகள் கிடைக்கப்பெற வேண்டியதும் அவசியமாகும்.ஏற்கனவே முன்னைய பகுதிகளிலகுறிப்பிட்டவாறாக நீர் முகாமைத்துவம் மற்றும் நீர்பாசன யுக்திகள் சம்மந்தமாக சிந்தித்து காலநிலை சார்ந்த சவால்களை வென்றெடுத்தல் வேண்டும்.
விவசாயத்திற்கான ஆற்றலும்,ஆர்வமும் இருந்தும் காணி இன்றி கூலி வேலைகளுக்கு செல்லும் மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுத்து அவர்களை தொழில்வருமானமுள்ள உற்பத்தியாளர்களாக பரிணமிக்க செய்ய வேண்டிய காலப்பெறுப்பும் எம்மிடேயே காணப்படுகின்றது.அதே சமயத்தில் எம் விவசாயிகளிடம் செயற்படுத்தப்படுகின்ற முறையற்ற செய்கைமுறைகள்,அதிகளவான நிதியை உள்வாங்குகின்ற யுக்திகள் என்பனவற்றை ஆராய்ந்து அவற்றிற்கான மாற்றுத்திட்டங்களையும் முன்வைத்து நடைமுறைப்படுத்தல் வேண்டும்.முறையாக ஆராயப்பட வேண்டிய விவசாய நடைமுறைகள் பல,எம்மவர்களிடையே காணப்படுகின்றன.எமது யாழ்குடாநாட்டில் உள்ள நிலத்தடி நீர் உவர்த்தன்மை அடையக்கூடியதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.இதற்கு பல காரணங்களை நாம் அடுக்கிச்சென்றாலும் பிரதான முக்கிய காரணியாகவுள்ளது யாதெனில் கணக்கிலடங்காதவாறாக நிலத்தடி நீரை இழுத்து எடுப்பதாகும்.நிலத்தடி நீரை உடனடியாக நீர்ப்பம்பிகளை கொண்டு இழுத்தெடுக்கும் போது,தொடர் செயற்பாட்டின் விளைவாக நன்னீருக்கு பதிலாக கடல்நீர் ஊடுருவி கிணற்றுக்குள் செல்வதற்கான வாய்புண்டு.ஏராளமான பயிர்ச்செய்கையை மேற்கொள்வதனால் நீர் கிணறுகளிலிருந்து எடுக்கப்படுவதும் , அதற்கு பதிலாக கடல்நீர் ஊடுருவுவதும்,தவிர்க்க முடியாத நிகழ்வாக மாற்றம் கண்டுள்ளது.
எமது பகுதிகளில் பல கிணறுகள் நீருக்காக பாவிக்கப்பட்டு உவர்த்தன்மையுடையதாக மாற்றம் பெற்ற சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.மண்வளமும்,நீர்வளமும் ஒன்றோடு ஒன்று ஒன்றிணைந்து பலன் தருவதன் ஊடாகவே சிறப்பான விவசய செய்கையினை மேற்கொள்ள முடியும்.எம்மவர்களிடையே பரவலாக செய்கை பண்ணப்படுகின்ற நெல்,புகையிலை,வெங்காயம்,மிளகாய்,கத்தரி,தக்காளி,கோவா,குரக்கன்,பாசிப்பயறு,உழுந்து,எள்ளு,நிலக்கடலை,மரவள்ளி,உருளைக்கிழங்கு,வெற்றிலை,பீற்றூட் மற்றும் ஏனைய மரக்கறி மற்றும் மரக்கறியல்லாப்பயிர்கள் வெவ்வேறான நிபந்தனை தோற்றப்பாடுகளையும், செய்கை முறைமைகளையும் கொண்டிருந்தாலும்,அதற்குரய சகல சூழலியல் வளங்களை வழங்கி தாங்கி நிற்கக்கூடிய இயலுமை எமது விவசாய சூழலியலுக்கு உண்டு.
ஆராய்வோம்………