ஆண்டு தோறும் மார்ச் மாதம் 08 ஆந் திகதி இத்தினம் கொண்டாடப்படுகின்றது. தமது நாடுகளையும் சமூகங்களையும் மையப்படுத்தி வரலாறு படைத்த பெண்களைக் கொண்டாடவும் அவர்களின் கடமைகள், ஊக்கங்கள், இலட்சியங்கள், போன்றவைற்றைச் சுமந்து செல்லவும் இந்நாள் முனைகின்றது. சாதாரணமான வாழ்க்கை வாழும் ஒரு பெண் சமூக மாற்றத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பதையும் இந்நாள் உணர்த்துகின்றது.
உலக மகளிர் தினம் முதன்முதலாக அமெரிக்காவில் 1909 ஆம் ஆண்டு பெப்பிரவரி 28 ஆந்திகதி கொண்டாடப்பட்டது. அமெரிக்க சோசலிசக் கட்சியே அதற்குத் தலைமை வகித்தது. இதன் பின்னணி யாதெனில் 1908 ஆம் ஆண்டு நியூயோர்க் நகரத்தில் தையல் பணிபுரியும் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி தமது பணிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டு பேரணியொன்றை நடத்தினர். அப்பெண்கள் தமது வேலைத் தளங்களில் ஆண்களை விடக் குறைவாகப் பணியமர்த்தப்பட்டும் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டும் வந்தனர். அப்பெண்களை மேன்மைப்படுத்தவே அன்று இந்தத் தினம் கொண்டாடப்பட்டது.
மார்ச் மாதம் 08 ஆந் திகதி இந்தத் தினம் கொண்டாடப்படுவதன் பின்னணி 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சியில் தொடர்புற்ற பெண்கள் இயக்கத்தைக் கொண்டு அமைகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அதிகமான நாடுகள் மார்ச் 08 இனை மகளிர் தினமாகக் கொண்டாடின. 1975 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு தொடக்கம் ஜக்கிய நாடுகள் சபை மார்ச் 08 ஆந் திகதியை உலக மகளிர் தினமாகக் கொண்டாடி வருகின்றது.
இத்தினம் கொண்டாடப்படுவதன் ஒட்டு மொத்த நோக்கம் யாதெனில் பெண்களுக்கான சமத்துவமும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே.
இன்றைய உலகு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு முன்னேற்றங்களைக் கண்டுள்ள போதிலும் பால் நிலை சமத்துவத்தை எந்த நாடும் ஈட்டியதாகத் தெரியவில்லை. அதேவேளை, 2.7 கோடிப் பெண்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதில் ஆண்களைப் போன்று சமவாய்ப்பு கிடைப்பதற்கு சட்ட ரீதியான தடைகளை எதிர்கொள்கின்றனர். 2020 வரையில் 25 சதவீதத்திலும் குறைவான பெண்களே மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றங்களில் உள்ளனர். பெண்களில் மூன்றில் ஒருவர் பால் நிலை சம்பந்தமான அடக்கு முறையை இன்னும் எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர்.
இவ்வாண்டுக்கான (2021) மகளிர் தின தொனிப் பொருளாக “பெண்களின் தலைமைத்துவம்: கொவிட்-19 தாக்கிய உலகில் சம வாய்ப்புள்ள ஒரு எதிர்காலத்தை ஈட்டுதல்” (Women in leadership: Achieving an equal future in a COVID-19 world) என்பது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 கொள்ளை நோயிலிருந்து மீள்வதற்கும் சமவாய்ப்புள்ள எதிர்காலத்தை மென்மேலும் சீர்படுத்துவதற்கும் உலகம் முழுவதிலும் பெண்களும் சிறுமியரும் எடுக்கும் மகத்தான முனைப்புகளை இத் தொனிப் பொருள் கருதி நிற்கின்றது.
பெண்களின் தகுதி நிலைக்கான ஆணையத்தின் 65 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட தொனிப் பொருளுடன் இது தொடர்புபடுகின்றது. அதாவது பொது வாழ்வில் பெண்களின் செயற்றிறன் மிக்க ஈடுபாடும் தீர்மானம் எடுத்தல் திறனும், வன்முறை ஒழிப்பு, பால் நிலை சமத்துவம், சகல பெண்களுக்கும் வலுவூட்டுதல் என்பனவற்றுடன் சமமான ஊதியம் வழங்குதல், நிறுவனம் சாராத தனிப்பட்ட வேலைகளில் சமமான பகிர்வு, பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி, பெண்களுக்கு அவசியப்படும் மருத்துவ சேவைகள் போன்றனவும் உள்ளடக்கப்பட்டன.
இன்றைய கொவிட்-19 இன் நெருக்கடியான சூழ்நிலையில், பெண்கள் மருத்துவப் பணியாளர்களாகவும், ஆதரவு வழங்குபவர்களாகவும் புத்தாக்கம் கொண்டவர்களாகவும் சமுதாய ஒருங்கமைப்பாளர்களாகவும் முன்னணியில் நின்று செயலாற்றி வருகின்றனர். அவற்றுள் சிலர் தேசத் தலைவர்களாக இருந்து கொண்டு செயற்றிறன் மிக்க முறையில் இக்கொள்ளை நோயை எதிர்த்துப் போராடுகின்றமை மிகுந்த முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இந்நெருக்கடி நிலைமை பெண்களைத் தத்தம் பங்களிப்புகளின் முக்கிய கர்த்தாக்களாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளதுடன் மறுபுறம் அவர்களுக்கு அது ஒரு முறையற்ற சுமையையும் தோற்றுவித்துள்ளது.
கொவிட்-19 நோயை எதிர்கொள்வதற்கும் அதிலிருந்து மீள்வதற்கும் உரிய நடவடிக்கைகளைத் திறன்பட முன்னெடுப்பதற்குத் தலைமைத்துவத்திலுள்ள பெண்களும் பெண்கள் அமைப்புகளும் தமது அறிவு, திறன்கள், வலையமைப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் காட்டியுள்ளனர். முன்னெப்போதும் இல்லாதவாறு இன்று பெண்கள் பல்வேறு அனுபவமுடையவர்களாகவும் திட்டங்களைக் கொண்டவர்களாகவும் திறன் வாய்ந்தவர்களாகவும் விளங்குவதோடு சகலருக்கும் நலன் பயக்கும் தீர்மானங்கள், கொள்கைகள், சட்டங்கள் போன்றவற்றை அமுல்படுத்துவதற்கும் ஈடற்ற பங்களிப்பை நல்கியுள்ளனர்.
கொவிட்-19 நோயின் கோர விளைவுக்குப் பதிலடி கொடுப்பதில் வென்று தமது நாட்டின் சுகாதாரத்தையும் சமூக பொருளாதாரச் சரிவுகளையும் ஈடு செய்த பெரும்பாலான நாடுகள் பெண்களின் தலைமைத்துவத்துவத்தைக் கொண்ட நாடுகளாகும். இற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பெண்களின் தலைமைத்துவத்தைக் கொண்ட டென்மார்க், எத்தியோப்பியா, பின்லாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, நியூசிலாந்து, சுலோவாகியா போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். கொவிட்-19 இலிருந்து தம்மைத் துரிதமாக மீட்பதற்கு அவை மேற்கொண்ட வினைத்திறன் மிக்க தீர்க்கமான முடிபுகள் பரந்தளவில் அறியப்பட்டவை. மேலும் மக்களின் சுகாதாரம் சார்ந்த தகவற் பரிமாறல்களிலும் அந்நாடுகள் உண்மைக்கு உண்மையாகவே நடந்து கொண்டன.
இன்றும் உலகின் 20 நாடுகளில் பெண்கள் அரச தலைவர்களாகவும் மாநிலத் தலைவர்களாகவும் உள்ளனர்.
பெண்களின் பங்கேற்புக்கும் தலைமைத்துவத்துக்கும் இதுவரை காலமும் உள்ள தடைகளுக்கெல்லாம் மேலும் வலுச்சேர்க்கும் வண்ணம் கொவிட்-19 உருவெடுத்துள்ளதைக் காணலாம். வீட்டில் நடைபெறும் வன்முறைகள் என்றும் வீட்டுப் பணிப் பெண்கள் என்றும் வேலை வாய்ப்பின்மை என்றும் வறுமை என்றும் உலகம் முழுவதும் பெண்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இவை அதிகரித்த வண்ணமே உள்ளன. முன்னணியில் நின்று பணியாற்றும் பெரும்பான்மையான பெண்களையும் மீறி, கொவிட்-19 நோயை இல்லாதொழிப்பதற்கு தேசிய அளவிலும் உலகளவிலும் பெண்களின் பிரநிதித்துவம் விகித அளவில் குறைந்தே காணப்படுகின்றது. அவர்களின் தேவை பரந்தளவில் உணரப்படுகின்றது.
கொள்ளை நோய் பரவி பல துன்பியல் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெண்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்தவும் அவர்களுக்குத் தலைமைத்துவத்துக்குரிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் பல்வகையான திட்டங்கள், செயற்பாடுகள் போன்றவற்றில் அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். கொவிட்-19 நோயை இல்லாதொழிக்கும் கொள்கை உருவாக்கங்கள் நிகழ்ச்சித் திட்டங்கள் சகலவற்றிலும் பெண்களை ஒன்றிணைத்து செயற்படுவது இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து துரிமாக மீண்டெழத் துணைபுரியும். ஏனெனில் சமூக மட்டத்தில் ஒரு பெண்ணின் அர்ப்பணிப்பு மிகுந்த தாக்கம் செலுத்தும் தன்மை வாய்ந்தது.