உங்கள் பல்லினை கழட்டும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை
உங்கள் பல்லானது சொத்தை அடைந்துவிடின் அல்லது உடைந்து போய்விடின் அந்த பல்லினை சில சமயங்களில் நிரப்பி வைத்திருக்க முடியும். பற்சொத்தையானது அல்லது பல்லின் உடைவானது அப்பல்லின் பல்மச்சைக்குச் சென்றுவிட்டால் சாதாரணமாக நிரப்ப முடியாது.
இருப்பினும் அப்பற்களை வேர் முறை சிகிச்சை செய்வதன் மூலம் வலியின்றி அடைத்து வைத்திருக்க முடியும். வேர்முறை சிகிச்சை பற்றி அடுத்த பதிப்புகளில் பார்ப்போம்.
அவ்வாறு வேர்முறை சிகிச்சை மூலம் அடைக்க முடியாது போன பற்களையும் வலி தருகின்ற சில ஞானப்பற்களையும் அகற்றுவதத்திற்கு நேரிடும். அவ்வாறு அகற்ற நேரிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் பற்றியும் பற்களை அகற்றிய பிற்பாடு கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் பற்றியும் இன்றைய பதிவில் பார்ப்போம்.
பல்லினை அகற்றும் முன்பு கவனிக்க வேண்டியவை
- உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் ஏதும் இருப்பின் பல் அகற்றும் முன்பு வைத்தியரிடம் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்.
உ+ம்:
-உயர்குருதி அமுக்கம்( Hypertention)
-சக்கரை வியாதி(Diabetes mellitus)
-இதயம் தொடர்பான நோய்கள்(Cardiac Diseases)
-சிறுநீரக நோய்கள்
-மூச்சு பிரச்சனைகள் (ஆஸ்த்துமா)
-செயற்கை இதயவால்வு (Prosthetic valves) பொருத்தபட்டவர்கள்
-தைராய்டு அதிகம் சுரப்பவர்கள் (Hyperthyroidism)
-மனநலம் குன்றியவர்கள்
[உங்கள் கிளினிக் கொப்பியை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்] - நீங்கள் மாத்திரைகள் ஏதும் பாவிப்பதுண்டானால் வைத்தியரிடம் தெரிவிக்க வேண்டும்
உ+ம்: Inhalers, Insulin, GTN, Aspirin
[அவசர நிலைமைகளில் பாவிக்கும் மருந்துகளை கொண்டு செல்லவேண்டும்] - இதற்கு முன்பு பல் அகற்றிய போது தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்றப்பட்டு இருந்தால் வைத்தியரிடம் சொல்ல வேண்டும்.
பல்லினை அகற்றிய பின்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.
- வாயினுள் வைக்கப்பட்டுள்ள பஞ்சினை அரை மணித்தியாலம் கடித்து வைத்திருக்க வேண்டும்.
- பல் கழட்டிய நாள் அன்று முழுவதும் எச்சிலை விழுங்க வேண்டும். தொடர்ந்து எச்சிலைத் துப்பிக் கொண்டே இருப்பின் பல் அகற்றிய இடத்தில் இருந்து இரத்தம் தொடர்ந்து வெளியேறும். இரத்தம் தொடர்ந்து வெளியேறும் பட்சத்தில் உங்களுடைய பல் வைத்தியர் அல்லது அருகிலுள்ள வேறு வைத்தியரின் உதவியை நாடவும்.
- பல் கழட்டிய நாளன்று வாயைக் கொப்பளித்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
- பல் கழட்டிய இடத்தினை நாக்கு அல்லது விரலினை விட்டு துலாவக்கூடாது. நாக்கு அல்லது விரலினால் காயத்தினை துலாவும் பொழுது நாக்கு அல்லது விரலில் உள்ள கிருமி காயத்தினுள் சென்று காயம் ஆறுவது தாமதமாகும்.
- காயம் மாறும் வரை சூடான சாப்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
பல் அகற்றிய நாள் அன்று உறிஞ்சு குழாய் [straw] மூலம் ஆகாரங்களை அருந்துதல் தவிர்க்கப்பட வேண்டும். - வைத்தியரினால் வழங்கப்பட்டுள்ள மாத்திரைகளை நேரம் தவறாது எடுக்க வேண்டும்.
- வழங்கப்பட்டுள்ள மாத்திரைகளை உட்கொண்டபின் ஒவ்வாமை [Allergy] ஏதும் ஏற்படுமாயின் அருகிலுள்ள வைத்தியசாலையில் காட்டவும்.
- குறைந்தது ஐந்து நாட்களுக்கு ஆயினும் சிகரெட் வெற்றிலை மற்றும் மதுபானம் எடுக்கக்கூடாது.
- பல் அகற்றப்பட்ட இடத்தில் தையல் போட்டிருப்பின் இரண்டு வாரங்களுக்குள் தையலினை அகற்ற வேண்டும்.
- சிலருக்கு சிறிய வீக்கம், வலி 2 தொடக்கம் 3 நாள் வரை இருக்க கூடும் பயப்பிட தேவையில்லை.
- வாயினை திறக்கும் அளவு குறைந்துள்ளதாயின் வைத்தியரின் உதவியினை நாடவும்.