இதழ் 20

சிங்ககிரித்தலைவன் – 20

வரலாற்றைத் திரும்பிப்பார் மகனே!

இலங்கை ஒரு புண்ணிய பூமி…

இலமூரியா என்ற குமரியை தின்று ஏப்பம் விட்ட கடல் மிச்சம் வைத்த உச்சிக்கொண்டை…

பேரிடர் ஏதும் அண்டாமல் கடவுள் காக்கின்ற சின்னத் தீவு! இந்தியத்துணைக்கண்டத்தில் தொங்கிக்கொண்டிருந்தாலும், தன் தன்னிறைவில் தானே எழுந்துநிற்கின்ற வல்லமை கொண்ட நாடு!

எல்லாம் இருந்தும், காலாகாலமாகத் அதன் அரியணைக்காக நடந்த போட்டிகளாலும், குழப்பங்களாலும், அந்நிய ஆக்கிரமிப்புக்களாலும், தன்னை நிலைப்படுத்தமுடியாமல் திணறியவண்ணமே இருந்தது!

இந்துசமுத்திரத்தின் முத்து என்று வரலாறு தன் குறிப்பேட்டில் பதிந்துகொண்ட இலங்கை ஒளியிழந்துபோயிருந்தது! அதற்கு ஒளிகொடுக்கும் ஆற்றல் யாரிடம் உள்ளதோ..?

காசியப்பன் அரியணையேறிய நாளில் இருந்து அவனை மக்கள் தம் மீட்பராக எண்ணியிருந்தனர்… அவனால் நாடு ஒளிபெறும் என்று நம்பினர் அல்லது நம்பவைக்கப்பட்டிருந்தனர்…

ஆனால் அரச வம்சத்தவர் சிலருக்கு தமக்கு ஒளிதரும் தலைமை தம்மை விட்டு தூரப் போவதாகத் தோன்றியது…

மேற்கு நோக்கி ,இந்துசமுத்திரத்தின் பாக்குநீரிணையில் இரண்டு பாய்மரக்கலங்கள் அருகருகே நகரத்தொடங்கியிருந்தன… தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட கொடிகள் மரக்கலங்களின் உச்சியில் தாம் பிரிந்து போகும் இலங்கை மண்ணைப்பார்த்து சோகமாகக் கையசைத்தபடியே மாந்தை துறையிலிருந்து அந்தப்பயணம் ஆரம்பித்திருந்தது… தென்மேற்குப்பருவப்பெயர்ச்சிக்காற்றின் தாக்கம் சென்ற மாதமே குறைவடைந்திருந்ததால், பெருந்துடுப்புக்களின் துணையும் சேர்ந்து, மிதமான வேகத்திலேயே அவை கடலில் சென்றுகொண்டிருந்தன…  மரக்கலங்கள் மகாநாமரையும் முகலனையும், அவர்களோடு காசியப்பனுக்கு பயந்து வந்த அரசவம்சத்தினர் சிலரையும் சிங்கள வீரர்கள் சிலரையும் சுமந்துகொண்டு,  துறையிலிருந்து புறப்பட்டிருந்தன…

ஆனால் தூரத்தில் பாறைப்பாங்கான தென்னை மரங்கள் நெருங்கி வளர்ந்திருந்த, பிட்டியில் சில வீரர்கள் இந்தப்பயணத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததை கலத்தில் இருந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை!

“இந்தக்கடல் அமைதியானது…வளங்களை அள்ளி அள்ளித் தருவது… நாம் விட்டுப்பிரியும் இலங்கைக்கு  எம்முன்னோர்களை வடக்கே இருந்து சுமந்து வந்தது… பார்த்தாயா முகலா… இந்தக்கடல் தான் வடக்கே விரியும் பெருநிலத்திற்கும் எம் நாட்டுக்குமான தொப்புள்கொடி…” மரக்கலத்தின் மேலே அமர்ந்திருந்த மகாநாமர் தன்னருகே அமர்ந்து கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த முகலனின் தோளில் தன் கையை ஆதரவாகப் பற்றி கூறினார்…

“தாத்தா… இந்தக்கடலால் தானே பாண்டியர்களும் வந்திருப்பார்கள்…வெகு காலத்துக்கு முன் புலகத்தன் என்ற பாண்டியன் இந்தக்கடலால் வந்து தானே வலகம்ப அரசனைக்கொன்று எங்கள் நாட்டை ஆளத்தொடங்கினான்… உங்கள் காலத்தில், அனுராதபுரத்தை ஆண்ட இராசரட்டை பாண்டியர்கள் (சூல வம்சம், 37ஆம் பரிச்சேதம், 202-247) வந்ததும் இந்தக்கடல் வழியே தானே… ” என்று முகலன் கூறி முடிப்பதற்குள், “மௌரிய குலத்திலகம் உன் தந்தை தாதுசேனனால் கொல்லப்பட்ட கடைசிப் பாண்டியன்   பிட்டியனின் குலத்தவர் தப்பிச்சென்றதும் இந்தக்கடலால் தானப்பா…”

“இன்று நாங்கள் தப்பிச்செல்வதைப் போலவா..?”

முகலனை நம்பிக்கையாளனாக மாற்ற வேண்டி, தாதுசேனரின் வரலாற்றை சொன்ன மகாநாமருக்கு முகலன் இப்படிக்கேட்டது சற்று கவலையைத்தந்தாலும், தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டவராக,

“மகனே முகலா… இதனைத் தோல்வியாகக் கொள்கின்றாயா? நாங்கள் தான் இன்னும் வெற்றிக்காக எந்த முயற்சியும் செய்யவில்லையே… உன் பிள்ளைப்பருவத்தில் நீ அதிகம் கேட்ட கதைகளை நினைத்துப்பார்… உன் தந்தை தாதுசேனன் செய்த முயற்சிகளையும் முயன்றும் பெற்ற தோல்விகளையும் அறியாதவனா நீ ..? இருபத்துஏழு ஆண்டுகாலம், எம் ஆட்சியை இழந்த வரலாறு… ஏழு பாண்டியர்களையும் அனுராதபுரத்தை ஆள விட்டு நாம் மகாவலிகங்கையின் தெற்கே சென்று மறைந்து வாழ்ந்தோமே… அந்த வரலாறு… இரண்டு தடவை  படைதிரட்டிச்சென்று உன் தந்தை தோல்விகண்ட வரலாறு… மேலும் இரண்டு போர்களைச் செய்தும், பாண்டியர்களான, திரிதரனையும், தாட்டியனையும் போரில் கொன்றும், இருதடவையும், உன் தந்தையால் அனுராதபுரத்தில் நிலைகொள்ளமுடியாமல் போன வரலாறு… தளராமல் அதே வருடமே படைகொண்டு சென்று பிட்டியனைக் கொன்று அரியணையேறிய வரலாறு… (களப்பிரர் ஆட்சியில் தமிழகம் – மயிலை சீனி.வேங்கடசாமி)  எல்லாம் உன்பின்னே விரிந்து கிடக்கிறதே…! அந்த வரலாற்றைத் திரும்பிப்பார் மகனே… முயற்சிக்காமலே தோல்வியை உணர்வது கோழையின் பண்பு! நீயோ வீரனின் மகன்!”

முகலனின் பிறமண்டையில் அடித்துச்சொன்னதைப்போன்ற வார்த்தைகளால் வெட்கமும், நம்பிக்கையூட்டிய பேரனாரின் வார்த்தைகளால் தெளிவும் பெற்று அவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்! அவனை ஆதாரவாகத் தூக்கி,

“மகனே என்னை வணங்குவதிலும், காற்றில் அந்தோ அசையும் தர்மத்தின் சக்கரத்தையும், பொதிமாதவனின் உபதேசங்களையும் வணங்கு! புத்தம் சரணம் கச்சாமி (நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன்)…தர்மம் சரணம் கச்சாமி(நான் தர்மத்திடம் சரணம் அடைகிறேன்)…சங்கம் சரணம் கச்சாமி(நான் சங்கத்திடம் சரணம் அடைகிறேன்)… என்று ஓதி வாழும் பௌத்த சனங்களின் போற்றுதலுக்குரிய மும்மணிகளையும் பாதுகாக்க உன்னை திடப்படுத்திக்கொள்!”

முகலன் புத்துயிர் பெற்றான்! நிமிர்த்து காற்றில் அசையும் மும்மணிகளின் குறியீடான தர்மசக்கரம் தாங்கிய கொடியைப்பார்த்தான்… அது அமைதியாக காற்றில் மிதந்துகொண்டிருந்தது! திடீரென அவனுக்குள் ஒரு ஐயம் உண்டாக, சில நொடிகள் அந்தக் கொடியிலேயே, அவன் பார்வை குத்திநின்றது!

“என்ன முகலா இலயித்துவிட்டாய்..?”

“ஐயனே… சிறியவன் மனத்துள் ஒரு கேள்வி உள்ளது… ஏன் நாம் எம்கலங்களில் எமது அனுராதபுரத்தின் கொடிகளையேற்றவில்லை? ஆட்சி போனாலும் அரசவம்சத்து அந்தஸ்தை நாம்விட்டுக்கொடுக்கலாமா?”

முகலனின் கேள்விகளால் மகாநாமர் புன்னகைத்தார்… அவர்மட்டுமல்ல அந்தக்கொடியும் காற்றில் அசைந்தபடியே புன்னகைத்தது…!

கொடி பறக்கும்…

Related posts

சித்திராங்கதா – 20

Thumi2021

ஈழச் சூழலியல் – 07

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 17

Thumi2021

Leave a Comment