Uncategorized இதழ் 20

மங்கையே மாதரே…..!

18, 19ம் நூற்றாண்டுகளில் கேரளாவில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் முக்கியமானது,

தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பகத்தை மறைக்கும் மேலாடை அணிந்தால் வரி மற்றும் பெரிய மார்பகம் என்றால் அதிக வரி.

“மூடி வைத்த முயல் மூச்சு

முட்டுதடி மீட்க என்ன வழியோ”

என்று இன்றைய கவிஞனெல்லாம் எழுத,    மார்பை மறைத்தாலே வரி எனும் இந்த கொடுமையை  “நங்கெலி” எனும் பெண் கடுமையாக எதிர்த்தாள். ஒருநாள் அவளிடம் வரி வசூலிக்க அதிகாரிகள் வர, வருகிறேன் என்று உள்ளே சென்று இரண்டு மார்பகங்களையும் அறுத்து வாழையிலையில் வைத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு உயிரை விட்டாள்.

Nangeli Documentary From Amala Paul Aadai Video Out Now

அதிலிருந்து “தோள்சீலைப்போராட்டம்” வலுப்பெற்று இந்த அடக்குமுறை முடிவுக்கு வந்தது.

“ஏறு ஏறு ஏறு

நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு

உன்னை பெண்ணென்று

கேலி செய்த கூட்டம் ஒரு நாள்

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு”

பெண் என்றால் காதல், கவிதை, கொண்டாட்டம் என்கின்றன இலக்கியங்கள். ஆனால் உண்மையில் பெண் என்றால் போராட்டம். பிறந்ததிலிருந்து தன் உடலோடு, உறவுகளோடு, சமுகத்தோடு என்று அவளது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள போராடிக் கொண்டேயிருக்கிறாள். பல தடவைகள் தோற்றுத்தான் போகிறாள். இருந்தும் போராட்டத்தை கைவிடுவதில்லை.

“உலகத்தின் வலியெல்லாம்

வந்தால் என்ன உன் முன்னே

பிரசவத்தின் வலியை தாங்க

பிறந்த அக்னி சிறகே எழுந்து வா”

மாதவிடாய் வலியையும் அதனால் தனது சாதாரண இயங்குநிலை குழப்பம் கொடுக்கும் வலியையும் தாங்கிக்கொள்பவளுக்கு, ‘இயற்கையான உடற்செயற்பாடு அசுத்தமானது’ என்று அவளை தீண்டத்தகாதவளாக வீட்டில் இருக்கும் சாமியறையினுள் நுழையவே காலம்காலமாய் அனுமதியை மறுக்கிறது மதங்களும் இந்த சமூகமும்.

//மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்

மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,

வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார், அதை

வெட்டி விட்டோ மென்று கும்மியடி! //

பூமியையும் உயிர்களையும் படைத்த கடவுள், மண்ணிலிருந்து மனிதனை தனது சாயலில் படைத்தார். ஆதாம் என அவனுக்குப் பெயரிட்டார்.

“கடவுள் மனிதனை படைத்தானா

மனிதன் கடவுளை படைத்தானா

இரண்டு பேரும் இல்லையே

ரொம்ப தொல்லையே”

அவன் வசிக்க அழகிய ஏதேன் தோட்டத்தை கடவுள் உருவாக்கிய பின் அத்தோட்டத்தில் வாழும்  விலங்குகள், பறவைகளுக்கு ஆதாமை பெயர் சூட்டும்படிக் கூறினார். அப்போது அங்கிருந்த எல்லா உயிர்களும் ஜோடி ஜோடியாக இருப்பதை கவனித்த ஆதாம், தனக்கு மட்டும் ஒரு ஜோடி இல்லையே என ஏங்கினான்.

“காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்”

இப்படி ஆதாமை மகிழ்விக்க விரும்பிய கடவுள்,  ஆதாமை நன்றாகத் தூங்க வைத்து அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த விலா எலும்பினால் ஒரு பெண்ணை உருவாக்கினார். அந்தப் பெண்ணை அவனுக்குத் தோழியாக்கினார். அவள் தான் ஏவாள்.

பைபிளும் குரானும் சொல்லும் மனிதர்கள் தோன்றிய கதை இது.

“ஏவாளை ஆதாமின் விலா என்பிலிருந்து படைத்தார்” என்பதிலிருந்து “ஆணுக்குள் பெண் அடக்கம்” என்று காலம் காலமாக போதிக்கப்பட்டு வருகிறது. அதன் நீட்சி,

“அம்மியத்தான் மிதிக்கணும் அது

சொல்லி வைச்ச சடங்கு

புருசன மதிக்கணும் அவன்

சொல்லுக்கு நீ அடங்கு”

என்று ஆணாதிக்கமாக நீள்கிறது. பெண் ஆண்களிலும் உடலமைப்பில் மென்மையானவள். இதனால் மதங்களும் சமுகமும் ஆணுக்கு சேவை செய்யும் பாவையாகத்தான் பெண்ணை நோக்குகிறது.

“செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுக்க தயங்கிறியே

நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே”

உடை போட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானித்தவர்கள் தான் எப்படி உடை உடுத்த வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கிறார்கள். அவள் மார்பகங்களின் வடிவம் தொடங்கி தலைமுடி கூட வெளியே தெரிந்துவிடாது முழுதாக மூடு என்று சொல்வது ஒரு தரப்பு

‘சேலை உடுத்த வேண்டுமா பிகினி போட வேண்டுமா என்பது அவளது விருப்பம் – உரிமை.’ ஆனால் இதை ஏற்க இன்றும் சமுகம் தயாராகவில்லை!

//ஏட்டையும் பெண்கள் தொடுவது

தீமையென் றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்;

வீட்டுக் குள்ளே பெண்ணைப்

பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்//

பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டையேறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமையாக்கல், கோயிலுக்கு அடிமையாக்கல் என பல வழிமுறைகளில் பெண்களின் உரிமைகள் வச்சிக்கப்பட்டனர்.

//பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்

பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;

எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்

இளைப்பில்லை கணென்று கும்மியடி//

சொத்துரிமை, கல்வியுரிமை, வேலையுரிமை, பேச்சுரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகள் தற்பொழுதும் பெண்களுக்கு மறுக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. கல்வியுரிமைக்காய் போராடி குண்டுகளை வாங்கிக்கொண்ட மலாலா அதுக்கு சான்று .

//மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்//

என்றான் பாரதி. ஆனால் காதல் தோல்வி என்றாலே அந்த பழியை பெண் மேல் தான் பதிவு செய்கின்றது ஆணினம்.

“பொம்பளைங்க காதலைத்தான்

நம்பி விடாதே நம்பி விடாதே”

என்றும்

“பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்”

என்றும் சித்தன் தொடங்கி பக்கத்து வீட்டு சுப்பன் வரையில் பெண்ணின் அறிவை ஆளுமையை கையாள முடியாத போது அவளை பேயென்று சொல்லி நகர்ந்து விடுகிறார்கள்.

“பெண்கள் கூட்டம் பேய்கள் என்று

பாடம் சொன்ன சித்தர்களும்

ஈன்ற தாயும் பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே”

இன்னும் வகுப்பில் ஒரு பெண் அதிக புள்ளிகள் பெற்றுவிட்டால்,

‘போயும் போயும் ஒரு பெட்டை கூட எடுத்திட்டாளே!’

யாரேனும் ஆண் பயந்த சுபாவம் உடையவர் என்றால்,

‘அவன் ஒரு பெட்டைடா!’

தொடர்ச்சியாக வசவுகளில் இருக்கும் ‘தேவடியாள் தொடங்கி மூன்றெழுத்து கெட்ட வார்த்தை’ வரை பெண்ணைத் தான் சாடுகிறது சமூகம்.

//வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!

மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;

கலிய ழிப்பது பெண்க ளறமடா!

கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்//

வரலாற்றில், காலம் காலமாய் ஆண் கட்டமைத்து வைத்திருக்கும் விம்பங்களை “உடுத்திக்கொண்ட பொருள்” தான் பெண். எப்படி பேச வேண்டும் , என்ன உடை அணிய வேண்டும், எப்படி சிரிக்க வேண்டும்,  எப்படி ஆசைப்பட வேண்டும் , எப்படி சிந்திக்க வேண்டும் என்று தொடங்கி  “மனிதன் எனும் ஆணின்” தேவைகளை தீர்த்துக் கொள்ள, பகிர்ந்து கொள்ள பயன்படும்  இன்னொரு  உடல் பெண்.

“எனக்கென  உணர்ச்சிகள்

தனியாக இல்லையா”

என்று சினிமா காதலில் மட்டுமே பாடும் பெண்ணின் நிஜ வாழ்வு உணர்ச்சிகள் அத்தனையும் அடுப்படிக்குள் அடங்கி ஒடுங்கிப்போயே கிடந்திருக்கிறது.

“பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி”

அழகு என்பது பெண்ணின் தோல், மார்பகங்கள், இடை, பிட்டங்கள், கால், கை, கண் எனும் அங்கங்களை சார்ந்தது என்றும் அவற்றை ரசிப்பது கவிதை என்றும் அழகியல் வர்ணனை, உடலெனும் பொருள் இரண்டும் சேர்ந்த பாலியல் பொம்மையாக நடத்தப்பட்டிருக்கும் பெண்ணுக்கு தான் “கற்பு” என்ற கற்பனை கடிவாளத்தையும் போட்டிருக்கிறது ஆண் வர்க்கம்.

//கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,

இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;

வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்//

திருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த கண்ணகி, கோவலனுக்கிடையே மாதவி வருகிறாள். மாதவியின் அழகிலும் நடனத்திலும் மயங்கி கண்ணகியை விட்டு பிரிகிறான் கோவலன். பின் சொத்துக்கள் அத்தனையும் இழந்து கண்ணகியிடம் வரும் கோவலனை, ஏற்றுக்கொண்டு மதுரைக்கு வருகின்றாள் கண்ணகி. மதுரையில் சிலம்பு திருடியதாக கோவலன் கொல்லப்பட கற்பில் சிறந்த கண்ணகி மதுரையை எரித்தாள். இது சிலப்பதிகாரம்.

எவ்வளவு அபத்தம் இது? கணவன் இன்னொருத்தியிடம் சென்றாலும் அவனையே நினைத்து வாழ வேண்டும்! மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்! இதற்கு பெயர் கற்பு? கற்பு என்பது பெண்கள் மேல் சுமத்தப்பட்ட இன்னொரு அடிமைத்தழை. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற ஆண்களின் வசதிக்காக உருவான வஸ்து.

//பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி

பேணி வளர்த்திடு மீசன்;

மண்ணுக்குள் ளேசிலமூடர் – நல்ல

மாதர றிவைக் கெடுத்தார்//

அவள் படிக்க ஆரம்பித்த போது கொடுமைகளுக்கு எதிராக குரல்களை எழுப்பினார்கள். ஆரம்பத்தில் குரல்வளைகள் நசுக்கப்பட்டன.

//நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!//

பலரது கல்விக்கண்கள்  திறக்க தொடர் போராட்டங்கள் பல பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றன. ஆண்களிலும் பாரதி, கார்ல் மார்க்ஸ், பெரியார் போன்ற பெண்மையை கொண்டாடும் மனிதர்கள் பிறந்தார்கள். அவர்களும் இணைந்து மாதரின் உரிமைக்காய் போராட்டங்கள் கண்டனர்.

அவள் நிலைமை மாற ஆரம்பித்தது. இன்று பல துறைகளில் அவள் சாதித்துக்கொண்டிருந்தாலும்  சமைப்பது , உடுப்பு துவைப்பது, வீடு கூட்டி பெருக்குவதெல்லாம் பெண்களுக்கேயான தனியுடைமை என்ற  சட்டங்கள் முழுதாக மாறும் போது உலகம் இன்னும் அழகாகும்.

//கண்க ளிரண்டினி லொன்றைக் – குத்திக் காட்சி கெடுத்திடலாமோ?

பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்

பேதமை யற்றிடுங் காணீர்//

தையலை உயர்வு செய்

தரணியும் குதூகலிக்கும்.

பெண் என்றால் மகிழ்ச்சி.

Related posts

உலக மகளிர் தினம்

Thumi2021

Standards For Trouble-Free edubirdie review essaysrescue Advice

Thumi2021

அவளுக்கு காது குத்தவில்லை!

Thumi2021

Leave a Comment