இதழ் 21

தாஜ்மஹாலின் பேர்த்தி

கவிதையோ, கட்டுரையோ, காவியமோ பிறக்க வேண்டுமென்றால் நான் வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் அவ்வாறு பிறந்தவை தற்காலிகமாகவேனும் நிலைக்க வேண்டுமென்றால் நான் வேண்டும். கனவுகளையும் கற்பனைகளையும் தாள்களில் வழியிலாவது நிஜமாக்கும் ஒரு கவிஞனின் எழுத்தாணி நான்.

ஒளரங்க சீப். அக்பர் வழியில் வந்த மொகலாயப்பேரரசன். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் சாஜகானின் புதல்வன். கலைகளுக்குள்ளும் காதலுக்குள்ளும் மூழ்கி தாஜ்மஹாலை தன் கண்ணீரால் தினந்தோறும் கழுவிக்கொண்டிருந்தான் சாஜகான். காதலில் திழைத்தவனின் விதி பிழைத்தால் அவன் வாழ்க்கையில் மீண்டும் பிழைத்ததாக சரித்திரம் இல்லையென நிறுவுவதற்கான ஒரு வாழ்க்கையை சாஜகான் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் வாழ்ந்து கொண்டிருந்தான் என்பதை விட செத்துக்கொண்டிருந்தான் என்பது தான் உண்மை.

மொகலாயப்பேரரசின் கருவூலம் நிர்மூலமாகிக் கொண்டிருந்தது. காதலால் கலை வளர்ந்தது. கலையால் கஜானா காலியானது. தாஜ்மஹாலுக்காக அதாவது தன் காதல் மனைவியின் கல்லறைக்காக மக்கள் பணத்தை மன்னன் பயன்படுத்தியதாக ஆங்காங்கே புரட்சிகள் வெடித்தன. பல தார சக்கரவர்த்தி என்பதால் சிம்மாசனத்துக்காக புத்திரர்கள் மோதுண்டனர். அவர்களை அடக்கி அரியணை ஏறினான் ஒளரங்க சீப். தேசத்து நிதியை சமாதி கட்டியதற்காக தந்தையை அந்த சமாதிக்குள்ளேயே ஒளரங்க சீப் சிறை வைத்ததாக பேசிக்கொண்டார்கள். ஆனால் அதற்கு முன்பதாகவே சாஜகானின் உலகம் அந்த மும்தாஜ் மஹாலுக்குள் முடங்கி விட்டது.

மொகலாயப்பேரரசின் கைதி சாஜகானால் பேரரசன் ஒளரங்க சீப்பிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. உடனடியாகவே அது நிராகரிக்கப்பட்டது. தாஜ்மஹாலுக்கு அருகில் தனக்கொரு சமாதி மஹால் வைக்கக் கேட்டான் முன்னாள் மன்னன். மக்கள் பணத்தில் வீண் செலவென்று மறுத்தான் இன்னாள் மன்னன். தன் சிறைக்கூடத்துக்குள்ளேயே சமாதி வைக்கப்பட்டானாம் சாஜகான். ஆம், தாஜ் மஹாலில் தான் காதலர்கள் இருவரும் மீளாத்துயில் கொள்வதாக சொல்லப்படுகிறது.

தாஜ்மஹாலின் பேர்த்தியைச் சொல்லப் போவதாக சொல்லிவிட்டு தாஜ்மஹாலைப்பற்றி ஏன் சொல்கிறேனென்று தானே யோசிக்கிறீர்கள்? தந்தையின் கலையை மட்டுமல்ல தந்தையின் காதலையும் மதிக்காதவன்தான் அந்த மதம் பிடித்த ஒளரங்க சீப். அவனைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதைப்பற்றி தெரிந்திருந்தும் ஒருத்தி அதை மறந்து விட்டாள். யார் அவள்? அவள்தான் இந்த கதையின் நாயகி!
தாஜ்மஹாலின் பேர்த்தி! ஜெகபுன்னிசா!
கலையும் காதலும் ஒதுக்கப்பட்ட ஒளரங்கசீப்பின் அரசவையில் கவிதைகளுக்கு மட்டும் தடைவிலக்கு அளித்திருந்தான். கவிதைகளை அவன் கலையாக ஏற்கவில்லைப்போலும். சமாதி ஒன்று கலையாகி உயிர் வாழும் அந்த தேசத்தில் கலையானது கவிதை வடிவிலாவது நிலைகொண்டதாய் சந்தோசப்பட்டேன்.

மொகலாயப்பேரரசின் ஆஸ்தான கவிஞன் அகில்கானின் கவிதைகளால், இல்லை! இல்லை! காதலால் அரசவையே திளைத்துக்கொண்டிருந்தது. உயிரிலும் உணர்விலும் காதல் நிரம்பாத ஒருவனால் இவ்வாறு கவி புனைய முடியாதென்று அவனது எழுத்தாணியான எனக்கே தெரிகின்ற போது அரசவை பிரதானிகளுக்கு தெரியாதா என்ன? வழமையாக கவிதைகளை அரசவையில் அடித்தொண்டையால் முழங்குபவன் இன்று ஆழ்மனதால் முனகினான்.

‘என்ன அகில்கான்? காதலிக்கிறாயா? உன் இதயம் வேறெங்கோ துடிப்பதாகவும், வேறொரு இதயமே உனக்குள் துடிப்பதாகவும் தெரிகிறதே அகில்கான்? “
எள்ளலோடு கேட்டான் அரசன்.

காதலை வெறுப்பவன் எப்படி காதலை நகைக்கிறான் என்றுதானே நினைக்கிறீர்கள். பிற்போக்குத்தனமானவர்களின் பிரதிநிதி தான் ஒளரங்க சீப். வெளிப்படையாக காதலை எதிர்க்க விருப்பமில்லாதவன். பக்கத்து நாட்டில், பக்கத்து வீட்டில், பக்கத்து தெருவில் காதல் இருக்கலாம். அதை அவன் ரசிப்பான். ஆனால் அவன் நாட்டில், அவன் தெருவில், அவன் வீட்டில் காதல் இருந்தால் கொதிப்பான். எப்படி கொதிப்பான் என்பதை அறிய கதையின் இறுதி வரை காத்திருங்கள்.
ஒளரங்க சீப்பை பொறுத்த வரை அகில்கானின் காதல் பக்கத்து வீட்டுக்காதல். ஆனால் அது அவன் வீட்டுக் காதல் என்பதை காதலர்களிருவரும் நானும் மட்டுமே அறிவோம். அரசன் கேட்டது போல அகில்கானின் இதயம் வேறெங்கோ துடிக்கவில்லை, ஒளரங்க சீப்பின் அந்தப்புரத்தில்த்தான் துடித்துக்கொண்டிருந்தது. அந்தப்புரத்துக்கும் கவிதைகள் கேட்க வேண்டுமென்றுதான் ஆரம்பத்தில் கவிதைகளை முழங்கினான் அகில்கான். ஆனால் இப்போதெல்லாம் அந்தப்புரத்தில் ஒத்திகை பார்க்கப்படும் கவிதைகள் தான் அரசவையில் அரங்கேற்றப்படுவதால் முனகினாலே அவனுக்கு போதுமானதாக இருக்கிறது. அந்தப்புரத்துக்கு வெளிப்படையாகப்போகும் ஒரே ஆண் ஒளரங்கசீப்! அந்தப்புரத்துக்கு இரகசியமாகச் போகும் ஒரே ஆண் அகில்கான்!

தன் மகளைத்தான் அகில்கான் காதலிக்கிறான் என்பது தெரியாமலே, அகில்கானின் காதல் கவிதைகளை எள்ளி நகையாடிக் கொண்டிருந்தான் ஒளரங்க சீப். காதலிக்கிறாயா என்ற காதலியின் தந்தையின் கேள்வியால் அச்சப்படவில்லை அகில்கான். பெருமைப்பட்டான். பால் வெண்மை என பால் சொல்லித் தான் தெரியவேண்டுமென்று இல்லை. தேன் இனிமை என தேன் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்று இல்லை. மயில் ஆடுமென்று மயில் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்று இல்லை. குயில் கூவுமென்று குயில் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்று இல்லை. அது போல அகில்கானின் காதலும் சொல்லாமலே தெரிந்து கொள்ளப்பட்டது. அதுவும் அவனது காதலியின் தந்தையால்! இது அவனது காதலின் ஆழத்தையே காட்டி நிற்பதாக கர்வப்பட்டான் அகில்கான். சந்தனத்தின் வாசத்தை மூடி வைத்தால் போதுமா? அகில்கானின் காதலின் வாசம் அரசவை எங்கும் நிறைந்து அனைவரது சுவாசத்திற்குள்ளும் கலந்தது.

அரசவையில் பரவிய காதல் வாசம் அந்தப்புரத்தையும் அரசல் புரசலாக தளுவிச்சென்றது. திருடனுக்கு தேள் கொட்டிப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு திருடியின் நிலையில்த்தான் ஜெகபுன்னிசா இருந்தாள். என்ன இது? காதல் திருட்டாகுமா? காதலிப்பவர்கள் திருடர்களாவார்களா? ஆம்!

எது திருட்டு? ஒருவரின் அனுமதியில்லாமல் அவருக்குரியதை தமக்குரியதாக்குவது திருட்டு என்றால் காதலும் திருட்டுத்தான்! ஜெகபுன்னிசாவும் அகில்கானும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்ட போதே அவளை அவனும், அவனை அவளும் அவர்கள் அனுமதியின்றியே தமக்குரியதாக்கி விட்டார்கள். மூளை அலசி ஆராய முன்னமே இதயங்கள் இடம் மாறிவிட்டன. காதலை முற்போக்குத்தனமென்றாலும் அதிலும் சில பிற்போக்குத்தனங்கள் இருக்கத்தானே செய்கின்றன. ஆண்கள் தான் காதலை முதலில் சொல்ல வேண்டுமென்ற எழுதப்படாத விதியை அகில்கானும் மீள எழுதினான். அன்றிலிருந்து இருவரும் திருட்டுத்தனமாக சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். என்னது திருட்டுத்தனமா? ஆம்! யாரும் அறியாமல் செய்வதால் திருட்டுத்தனம் என்கிறேன். ஆனால் திருட்டு குற்றமில்லை, காதலும் குற்றமில்லை.

மாசற்ற ஜெகபுன்னிசா கண்களில் பதற்றத்தாலும் பயத்தாலும் பாசி போல் தூசிகள் விழுந்து நீர்த்துளிகளை நிறைத்தன. தன் காதல் கதை தந்தையின் காதுகளுக்கு எட்டினால்… அப்பப்பா… நினைக்கும் போதே குளமாகிவிட்டது அவள் குமுத விழிகள். நனைந்து கொண்டிருந்த அந்தப்புரத்துத் தரைகளில் ஒரு திடீர் அதிர்வலைகள். தன் கவிதைகளை ஏற்றது போல காதலையும் அரசர் ஏற்பாரென்கிற புகழ் போதையில் இரகசியமாக வரவேண்டிய அகில்கான் குதித்து குதித்து வந்தான். எல்லோரும் ஆழ்ந்து உறங்கும் நேரமென்பதால் அவன் குதூகலம் யாரையும் எழுப்பவில்லை. ஆனாலும் அந்தப்புரத்தில் ஏதோ சலசலப்பு என்ற செய்தி ஒளரங்க சீப் காதுகளுக்கு எட்டியது. அரசியல் சூழ்ச்சிகளை எப்படி எதிர்கொள்வதென்று யோசித்துக்கொண்டு இருந்தவனுக்கு அந்தப்புரத்துக்குள்ளும் சூழ்ச்சிகள் நடப்பதாய் அறிக்கை கிடைத்தது. அவ்விடம் நோக்கி விரைந்தான்.

இப்படிக்கு,
அகில்கானின் எழுத்தாணி

Related posts

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 18

Thumi2021

கம்பனில் அறம்

Thumi2021

Leave a Comment