இதழ் 21

இயற்கை மனிதனுக்காக மட்டுந்தானா?

ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வோர் அழகை இயற்கை தருகிறது. விட்டிலுக்கு கனலின் மேல் காதலைத் தந்தது. மின்மினிக்கு வெளிச்சம் தந்தது. ஊமைப்பறவைகளின் உதடு வழியே இனிய இசையைத் தந்தது. மலர்களிற்கு நாவையும் தந்து மௌனத்தையும் கற்றுக் கொடுத்தது. இளமைப் பழங்களிற்கு இன்சுவையைத் தந்து பின் அழுகி உதிரவும் செய்தது. எதற்காக இவையெல்லாம்?

பாதையோரம் ஒரு திராட்சைத் தோட்டம். ஊதாரித்தனமாய் காய்த்துக் குலுங்கின திராட்சைகள். வாடிக்கையாளர் எவருமின்றிப் போக நாளடைவில் மெல்லக் காயத்தொடங்கின பழங்கள்.
பாதை வழியே ஒரு வியாபாரி வந்தான்.
அவன் பார்வையில் காய்ந்த பழங்களெல்லாம் கருகிய பணங்களாக தெரிந்தன. மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டே தோட்டக்காரனைத் திட்டித் தீர்த்தான்.

காதலர்கள் வந்தார்கள்.
காதலியின் உதடுகளில் வைக்க ஒரு கனிந்த திராட்சையைத் தேடினான் காதலன். கிடைக்கவில்லை.
‘உன் உதடுகளின் சுவையினை ருசிக்கும் வாய்ப்பை இழந்தன இந்தப் பழங்கள்”
என்றான்.அவள் சிரித்தாள்.

ஒரு விஞ்ஞானி வந்தான்.
காய்ந்த திராட்சைகளைப் பறித்தான். ஆய்வுகூடத்திற்குப் போனான். தோலினை பிய்த்தான். கசக்கினான். ஆராய ஆரம்பித்தான்.

ஒரு கவிஞன் வந்தான்.
காய்ந்த பழங்களின் மொழியை நாசியினால் கேட்டான். குளிர்மையை கன்னத்தில் வைத்துப் பார்த்தான். ஆகா..! எழுத ஆரம்பித்தான்.

‘திராட்சை என்கிற திரவியமே
நீங்கள்
இயற்கையின் மென்கற்கள்
நற்சுவை நட்சத்திரங்கள்
செந்நிலவின் முப்பரிமாண துளிகள்

திராட்சைப் பூக்கள் ஒரு சாதி;
வண்டுகள் ஒரு சாதி;
எனவே
நீங்கள் கலப்புத்திருமணத்தில்
உருவான குழந்தைகள்
ஆதலாலோ தீண்டாமையாலே
வாடிவிட்டீர்கள்”

எழுதி முடிந்ததும் இலக்கமிட்டு பைக்குள் இட்டான்.

ஒரு விதவை வந்தாள்.
வாடிய திராட்சைகளை மெதுவாய்த் தொட்டாள். பெருமூச்செறிந்தாள்.
‘என்னை விட உங்களைத்தான் அதிகம் நேசித்தார் என் கணவர்.
உங்களைத் தேடியாவது வந்தாரா அவர்?”
என்றாள்.
கண்ணீர் சொரிந்து காய்ந்த கனிகளை ஈரமாக்கினாள்.

ஒரு பைத்தியக்காரன் வந்தான்.
ஒரு பழத்தின் அருகே வாய் வைத்து
‘கலோ கிழவி” என்றான்.
பிறகு பழத்தில் காதை வைத்துக் கேட்டான்.
அவன் முகம் மலர்ந்தது.

உடலுக்கு நோகாமல் நடந்தபடியே ஒரு சோம்பேறி வந்தான்.
‘ஐயோ திராட்சை… அநியாயமாய்ப் போய் விட்டதே, பரவாயில்லை. பழமாயிருந்தாலும் புளித்துத் தானிருக்கும்”
நோகாத நடையைத் தொடர்ந்தான்.

ஒரு நாட்டு வைத்தியர் வந்தார்.
‘இதன் மருத்துவ குணங்கள் அறிவோரோ யாராயினும்”
என்று கிடைத்தவரை பறித்து பையிலிட்டுக்கொண்டார்.

ஒரு இணையத்தள நிருபர் வந்தார்.
‘இந்த வரண்ட பழங்களைப் பற்றி
சுவாரஸ்யமாய்ச் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா?”

என்று தோட்டக் காரனிடம் கேட்டார். தோட்டக் காரன் தலையைச் சொரிந்தான். எடுத்த காணொளியையும் அழித்து விட்டு நிருபர் சென்றுவிட்டார்.

ஆசிரியர் ஒருவர் வந்தார்.
ஒரு பழத்தின் மீது நூற்றுக்கு நூற்றிநாற்பது என்றும் மற்றொரு பழத்தின் மீது நூற்றுக்குப் பதினைந்து என்றும் மதிப்பெண் இட்டுச் சென்றார்.

ஒவ்வொன்றையும் கண்ணால் எடைபோட்ட படி ஒருவர் வந்தார்.
காய்ந்த பழங்களைப் பார்த்துப் பதறினார்.

‘வீண்;வீண்; நிலம் வீண். இவற்றை நட்டதால் என்ன உபயோகம். இந்தத் தோட்டத்தை அழித்து நெல்லாவது பயிரிட ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று ஆவேசத்தோடு நடந்தார்.

ஒரு அறிவுஜீவி வந்தார்.
பழங்களை அலட்சியமாய்ப் பார்த்தார். முகம் சுழித்தார். கையிலிருந்த சிகரெட்டால் ஒரு உதிர்ந்த திராட்சையை தட்டினார். அதி கீழே விழுவதைப் பார்த்து அவ்வளவு திருப்தியோடு சென்றார்.

ஒரு குருவும் சீடனும் வந்தனர்.
சீடன் பழங்களைப் பார்த்து
‘அடடே! இப்படி ஆகி விட்டதே” என்று வருந்தினான்.

‘இதன் இளமைச்சுவை என்பது அறிவுமயக்கம். அநித்தியம். எல்லாம் இதுபோல் வாடி உதிர்ந்துவிடும். அழகு மோசடித் திருடன். உன்னை ஏமாற்றிக் கொள்ளையடித்து விடுவான். மாயையில் இருந்து தெளிவுபெறு” என்று குரு உபதேசம் செய்தார்.

ஒருவன் அவசர அவசரமாக வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். காய்ந்த பழங்கள் அவன் பார்வையில் படவில்லை.

ஒரு புகைப்படக் கலைஞன் வந்தான். முந்நூற்றருபது கோணத்திலும் முயன்று முயன்று பார்த்தான். எதுவோ ஒன்று குறைந்தது.

அந்நேரம் எங்கிருந்தோ ஒரு தும்பி பறந்து வந்தது. சிறகுகளால் பாடிக்கொண்டு அந்த வரண்ட குலையை வட்டமிட்டது. பிறகு பழம் உதிர்ந்து விடாதவாறு மிகமென்மையாய் அதன் மேல் ஏறி அமர்ந்தது. திராட்சை சிரித்தது.

உலர்த்த திராட்சை உயிர் கொண்டிருப்பதற்காய் திருப்தியுற்றது. புகைப்படக் கலைஞனுக்கு விடுபட்ட ஏதோ ஒன்று கிடைத்து விட்டது. புகைப்படம் அழகானது. நம் இதழின் அட்டையில் இம்முறை அச்சாகிறது.

ஆமாம். இப்போது சொல்லுங்கள். இயற்கை யாருக்காக? மனிதனுக்காக மட்டுந்தானா?

ஓஓ.. ஒரு சின்னஞ்சிறிய தும்பிப்பூச்சி எவ்வளவு பெரிய உண்மையை எமக்குக் காட்டிவிட்டு பறந்து செல்கிறது.

Related posts

தாஜ்மஹாலின் பேர்த்தி

Thumi2021

திரைத்தமிழ் – காப்பான்

Thumi2021

ஆசிரியர் பதிவு – கஞ்சனாக இருங்கள்!

Thumi2021

Leave a Comment