இதழ் 21

சத்தமில்லா ச(காப்)தம்

“என் அப்பா ஒரு மூட்டை புத்தகம் கிடைப்பதாக இருந்தால் என்னையும் விற்றுவிடுவார்”

நா.முத்துகுமார்,அனிலாடும் முன்றில்


வாசகர்கள் அனைவரையும் காலத்தை கடந்து அழைத்துச்செல்ல வேண்டிய பெரும் பணியொன்று துமி குழுவினரால் என்னிடம் சில நாட்களுக்கு முன்னர் ஒப்படைக்கப்பட்டது.இது குறுகிய நேரத்தை கொண்ட ஆனால்  ஆயிரமாயிர மூளைகளின் ஆற்றலைக் குழைத்து அனைவருக்கும் அன்னமாக ஊட்டும் அன்பாலயம் பற்றிய பயணம்.உங்கள் முன் தோன்றியுள்ள காலச்சக்கரத்தின் மாயக்கண்ணாடி வழியே மெதுவாக நுழைந்து மறுபக்கத்தின் வழியே குறிஞ்சி மண்ணில் உங்கள் வலது காலை  அரவமில்லாமல் எடுத்து வைத்து என்னை பின் தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


தற்போது நாங்கள் கொ.பி 1 இல் இருந்து பயணித்து கொ.மு 99 இற்கு காலசக்கரத்தின் வழியே நூறு ஆண்டுகள் பின்னோக்கி பயணித்துள்ளோம். குறிஞ்சி மலைகளைத் தாலாட்டி விட்டு தவழந்து வரும் தென்றல்  உங்கள் களைப்பை போக்கியிருக்கும் என்று நம்பிக்கையில் அதோ அங்கே பாருங்கள்!,கொழும்பு ‘ரெஜினா வலவ்வ’ என்ற காணியும் கட்டடமும் வாங்கப்பட்டு  ‘கொலேஜ் ஹவுஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டு பல்கலைக்கழகக் கல்லூரியானது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதை எண்ணி பல்வேறு உள்ளங்கள் ஆனந்ததில் கண்ணீர் மல்கி கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் அவர்களுக்கு இப்போது தெரிந்திருக்காது ” இந்த கண்ணீர் துளிகளுக்கு பரிசாக பிற்காலத்தில்  இதே மண்ணில் அருணாசலம், இராமநாதன், அக்பார், ஜயதிலக்க, மார்க்ஸ், ஜேம்ஸ் பீரிஸ், டீ. ஆர் விஜயவர்தன என்ற அவர்களது பெயர்களை தாங்கிய வண்ணம் கதவுகள் திறந்தாலும் கூண்டை விட்டு அகல மறுக்கும் இளம்பறவைகளின்  விடுதியாய் மாறி விடும் என்பதை”.
சரி இப்போது இங்கே பாருங்கள் மாகவலி பாய்ந்து வருகின்றது அல்லவா இங்கே தான் தனக்கே உரித்தான “துரைவிதி”க்கு அமைய கட்டட நிர்மாணிப்புத்துறையே அசந்து போகும் வண்ணம் அசைந்தாடும் வகையில்  ஒற்றைத்தூணில் பாலத்தை கட்டியெழுப்ப  பேராசிரியர் துரைராஜா ஜயா அவர்கள் இன்னும் பதின்மூன்று ஆண்டுகளில் மண்ணில் அவதரிக்க போகின்றார்.”ஆம் அது என்ன வானத்தில் எதோ பறந்து போகின்றதே ” அது தானே தற்போது உங்கள் மனதில் தோன்றியுள்ள குழப்பம். அது சேர்.பொன்.அருணாசலத்தினுடைய மகன் பத்பநாபவினுடைய ஆத்மா.இதற்கு மேல் நாம் இங்கு நின்றால் மீண்டும் காலச்சக்கரத்தின் வழியே முன்னோக்கி செல்ல முடியாமல் போகலாம் எனவே ” உடனடியாக புறப்படுங்கள் ” மீண்டும் கொ.பி 1 இல் சந்திக்கலாம் அங்கே ” இந்த காட்சியை எதற்காக எங்களுக்கு காட்டினாய் ” என்ற உங்கள் கேள்விக்கான பதிலுடன் நிச்சயம் காத்து நிற்பேன்.
அந்த மரணம் அகச்சலவை செய்யும் சிறைச்சாலையிற்கான அடிக்கல்லை நாட்டிவிட்டுச்சென்றது.அந்த சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்தால் உங்களுக்கு  முளைக்கும் சிறகுகள் துனையோடு நீங்கள் ஒரே மூச்சில் ஈராயிரம் காத தூரமும் பாயலாம் ஈரேழு உலகங்களையும் சுற்றி வரலாம்.முன்வந்தவர் முன்செல்க பின் வந்தவர் பின் செல்க என்ற வரைமுறையற்ற மரணம் இளம்வயதிலேயே அருணாசலம் பத்பநாபாவை தன்னிடம் ஈர்த்துக்கொண்டது.அவரது நினைவாக சேர்.பொன்.இராமநாதன் அவரது நூற்ச்சேர்க்கையை வழங்கிய அந்த கணம்தான் எல்லாமே இருந்தும் அமைதியாக நூற்றாண்டில் காலடியெடுத்து வைக்கும் பேராதனை நூலகத்தின் பிறப்பிற்கு காரணமாயிற்று.இந்த பிறப்பிற்கு வழிசமைத்த இறப்பை சரித்திரமாக்கி நன்றி பாராட்டும் வகையில் இங்கு இலக்கம் 1 தொடக்கம் 1401 வரையான நூல்கள் அருணாசலம் பத்பநாபா அவர்களுடைய  நூற்சேர்க்கையாகும். 


1921 ஏப்ரல் 8 பத்பநாபா நூற்சேர்க்கைகளுடன் அறை முழுவதும் புதையல்களோடு அன்று ஆரம்பித்து  “More Open than Usual” என்ற வாசகத்தோடு இன்றும் கதவை திறந்து காத்திருக்கும் பேராதனை நூலகம் இன்னும் சொற்ப நாட்களில் செஞ்சுரியை அடிக்க போகின்றது.கொலேஜ் ஹவுஸ் கட்டடத்தின் ஓர் அறையில் தன் முதல்  இன்னிங்ஸை ஆரம்பித்து  ‘வில்லா வெனிசியா’ என்ற இரண்டு மாடிக் கட்டடத்தில் இரண்டாம் இன்னிங்ஸையும்,1952ம் வருடம் பேராதனை கலைப்பீட அறையில் மூன்றாம் இன்னிங்ஸ்யும் ஆடி முடிக்க 01.07.1960 இல் அத்தனை பொக்கிஷங்களையும் கஜானாவாக நூலகத்திற்கான ஆறு மாடிக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.இலங்கையில் அச்சடிக்கப்படும்/வெளியிடப்படும் சகல நூல்களினதும் சட்டப்படியான நூற் பிரதிகள் (Legal deposit) என்று அழைக்கப்படுகின்ற  ஐந்து பிரதிகளில் ஒன்றை 1951  முதல் பேராதனை பல்கலைக்கழக நூலகத்திலும் வைக்கப்பட்டே வருகின்றது. இதன் மூலம் சட்டப்படி ஒரு பிரதி சகல தமிழ், சிங்கள, ஆங்கில நூல்களிலும் இங்கு உள்ளன. இதில் கிட்டத்தட்ட 4,50,000 நூல்கள் உள்ளன. 1951க்கு முன் இவை இங்கிலாந்து நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.


இங்கு 61 மொழிகளில் நூல்கள் உள்ளன. 1961 முதல் பல்கலைக்கழகத்தில் அரபி மொழிக் கற்கை ஆரம்பிக்கப்பட்ட பின் அரபி மொழி நூல்களும் உள்ளன.  நுண்கலை, தொல்லியல், செப்பேடு, சிற்பங்கள், ஓலைச்சுவடிகள், ஏடுகள் இச்சேர்க்கையில் காணப்படுகின்றன.எழுத்தாணியால் ஏற்ப்பட்ட வலிகளை தாங்கிகொண்டு  எழுத்துக்களை சுமந்த பெருமை ஓலைச்சுவடிகளுக்கு உண்டு அத்தகைய 5,200 ஓலைச் சுவடிகள் இங்கு  16 மொழிகளில் காணப்படுகின்றன 1302 ஆம் ஆண்டு ஓலைச்சுவடியே மிகவும் பழமையானது. இவ்வாறான ஓலைச்சுவடி சேர்க்கையே பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தை மார்தட்டி பெருமைக் கொள்ள செய்கின்றது.


21 ம் நூற்றாண்டில் தொழிநுட்பத்தோடு போட்டிபோட்டுக்கொண்டே காலடியெடுத்து வைத்து  1992 முதல்  கணணி மூலமான நூல்பதிவுகள்,2001 கிளை நூலகங்களை இணைக்கும்  இணைய தொடர்புகள் , 2002 தொடக்கம் Alice for windows மென்பொருள் பாவணை, 2016 டிஜிட்டல் நூலக அபிவிருத்தி ,2020 இல் 30,000 சதுர அடிக் கொண்ட ஆறுமாடி புதிய கட்டிடம் திறப்பு என தமிழைப்போல காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்ட அறிவுப்பசியை போக்கும் பேராதனை அன்னை எம் தமிழ்தாய்க்கும் குறையொன்றும் வைக்கவில்லை.1921 ஆம் ஆண்டு முதல்  150,000 வரையிலான தமிழ் நூற் சேர்க்கையும் இங்கு காணப்பட்டு வருகிறது. இலங்கை சேகரிப்பு, சட்ட ரீதியான வைப்பு  தமிழ் நூல்கள் ஆகியவற்றோடு தனியான தமிழ் நூற் பிரிவுகள், இரவல் பகுதியிலும் தமிழ் நூல்கள் உண்டு. 


இன்று  இந்த மணிமகுடத்தில் 12,000 மாணவர்கள் 7,000 பட்டப்பின் படிப்பு மாணவர்கள் 3,000 உத்தியோகத்தர்கள் என ஏறத்தாள 22,000 இரத்தினங்கள் அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன.மேலும் 2020 முதல் கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்நூலக அங்கத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. உங்களிடமிருந்து விடை பெற முன்னர் இங்கு நான் நன்றி கூற மிகவும் கடமைப்பட்ட ஒருவர்  1942 இலங்கை பல்கலைகழகத்தின் முதலாவது நூலகராக பணியாற்றிய ரெஜினன்ட் ஸ்டீபன் வரிசையில் எட்டாவது நூலகராக 2015 முதல் பணியாற்றி வரும் ஆர்.மகேஸ்வரன் அவர்கள்.அவருடைய கட்டுரையில் உள்ள தரவுகளை உசாத்துணையாகக் கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் துமி மின்னிதழ் தொடங்கி எத்தனையோ மின்னிதழ்கள் மின்புத்தகங்கள் தொட்டவுடனேயே வாசிக்க கிடைத்தாலும் ஒரு மழலையைப்போல எம் கைகளில் தவழச்செய்து  அட்டைப்படத்தை வருடியவாறே காகிதங்களை புரட்டுகையில் வருகின்ற நாற்றத்தை நுகரும் வேளையில் எம்மோடு அலுக்காமல் உரையாடுகின்ற புத்தகங்களிற்கு அவை ஈடாகுமா என்றால் அது  கேள்விக்குறிதான்.நகர மறுக்கும் நிமிடங்களில் புத்தகத்துக்குள் புதைந்துவிட பிராவாகிக்கின்ற வெள்ளத்தில் நீங்களும் மூழ்கிவிடுங்கள் நீச்சலை அது நிச்சயம் கற்றுத்தரும்.

Related posts

ஈர நிலங்களின் மீது ஈரம் வேண்டும் – 03

Thumi2021

ஆசிரியர் பதிவு – கஞ்சனாக இருங்கள்!

Thumi2021

தனிப்பெரும் துணையே!

Thumi2021

Leave a Comment