மாற்றங்களை ஏற்றுக்கொள்!
முகலன் தான் கேட்ட கேள்வியில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதைப்போல பரிதாபமாக மகாநாமரைப் பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தத்தை விளங்கிக்கொண்ட மகாநாமர்,
‘மகனே… ஒரு மரக்கலத்தில் பறக்கின்ற கொடி எமது அதிகாரத்தையோ அந்தஸ்தையோ வெளிக்காட்டுவதை தாண்டி எமக்கான பாதுகாப்பை வழங்கும் வகையில் இருப்பது தான் முக்கியம்…”
என்று கூறிமுடிப்பதற்குள் முகலன் எதோ கேட்பதற்கு எத்தனித்தான்… அவன் தோள்களைப்பற்றி
‘எமது நாட்டின் கொடி எமக்குப் பாதுகாப்பை வழங்காதா? என்று தானே கேட்க முற்படுகிறாய்… இந்தக் கடலைக்கடந்து தமிழகம் செல்லும் எமக்கு எங்கள் நாட்டுக் கொடியைக் காட்டிலும் பாதுகாப்பு தர வல்லது இந்தக்கொடி தான்… பரந்த தமிழகம் முழுவதும் இப்போது களப்பிரர் கைகளில்… எம்நாட்டை கைக்கொண்டு ஆண்ட பாண்டியர் தேசமும் இப்போது அவர்கள் வசம் தான்… என் ஒற்றர்கள் அனுப்பிய செய்திப்படி பௌத்தம் சொல்லும் நெறிகளுக்கு அவர்கள் என்றும் தலைசாய்த்தவர்கள்… எந்த தேசத்தில் இருந்து வந்தாலும் பௌத்த துறவிகளுக்கு அவர்கள் பாதுகாப்பும், புகலிடமும் தந்து காக்கும் பண்பைக் கொண்டவர்கள்…
இந்தக் கொடி அபய முத்திரை கையில் கொண்டு எமக்கு அருளும் போதி மாதவன் பெயரால் எமக்கு அபயமளிக்கும் கொடி… காவி தரித்தவர்களை காக்கும் கொடி ..”
என்றவர் தள்ளி நின்ற வீரன் ஒருவனுக்கு எதோ சைகை செய்தார்…
‘ஐயனே… தங்கள் ஆழ்ந்த அறிவினால், ஒரு அரசையே அமைக்கவல்லவர் என்பதை இலங்கை பூமி அறியும்… உங்கள் தயவால், என் தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுப்பேன்…”
முகலனின் முகத்தில் கோபம் கொப்பளித்தது…
‘மகனே… பொறுமைகொள் காலம் எல்லாவற் றுக்கும் ஒரு தருணத்தை எமக்காக தரும்… அதற்காகக் காத்திரு…
இடையிடையே வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்…”

மரக்கலத்தின் கீழே சென்று ஒரு ஓலைப்பெட்டியுடன் வந்த வீரன் மகாநாமரிடத்தில் பணிந்து நின்றான்… மகாநாமர் அந்தப் பெட்டியைத் திறந்தார்…அதற்குள்ளே காவி ஆடை ஒன்று மடித்துவைக்கப்பட்டிருந்தது…
முகலனும் மற்றவர்களும் மகாநாமரின் மாற்றத்தையும் உணர்ந்து கொண்டவர்களாய் அவரை வணங்கி நின்றனர்…
இந்த மாற்றங்கள் மரக்கலத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது… தாம் பிரிந்து வரும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒரு மாற்றத்துக்கு அத்திபாரமிடப்படுவதை அவர்கள் அறிந்திருக்க முடியாது… அந்த மாற்றத்தின் நாயகனாக காசியப்பன் அனுராதபுரத்து அரண்மனையின் மாடத்தில் சாளரத்தின் ஊடாக வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தான்… அவன் உடல் தான் அங்கு வைக்கப்பட்டிருந்ததே தவிர உள்ளம் முழுதும் எங்கோ ஓரிடத்தில் நிலைகொண்டிருந்தது… அவன் நினைத்தது போல மணிமுடியும் அரியாசனமும் கிடைத்துவிட்ட போதும் இன்னும் ஏதோஒன்றை அடையாதவன் போல அவன் விறைத்துப்போய் அமர்ந்திருந்தான்… அவன் அமைதியை வெகுநேரமாய் கலைக்க விரும்பாத மிகாரன் மாடத்தின் வாசலிலேயே காத்து நின்றான்… நீண்ட நேரமாகியதால் பொறுமையிழந்த அவன்…
‘மைத்துணருக்கு ஏதும் ஆழ்ந்த யோசனையோ…?”
என்றபடி உள்ளே நுழைந்தான்…
‘வர வேண்டும்… மீகாரா… எப்போது வந்தீர்… சென்ற விடயம்..?”
என்று ஆவல் ததும்ப கேட்ட காசியப்பனின் விழிகள் வாசலைத் துழாவியது…
‘நான் வந்து நாழிகையாகிறது… உம்மை இடைஞ்சல் செய்ய வேண்டாமே என்று வெளியே நின்றேன்… போன விடையம் பாதி வெற்றி தான்… உன்னிச்ச உடன் வருவதாகவே இருந்தான்.. எனினும் அவன் தாயாருக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால், இரு நாட்கள் தாமதமாகவே…”
‘இல்லை மீகாரா… இனியும் தாமதிக்க முடியாது… நானே புறப்படுகின்றேன்… வீரர்களை தயார் நிலையில் இருக்க சொல்..”
எழுந்து தன்னை தயார்ப்படுத்திக்கொண்ட காசியப்பனை மீகாரன் அன்போடு தழுவி
‘மைத்துணா… பொறுமை கொள்… பொறுமை கொள்.. காலம் எல்லாவற்றுக்கும் ஒரு தருணத்தை எமக்காக தரும்… அதற்காகக் காத்திரு… இடையிடையே வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்…”
என்றான்… காசியப்பன் அவனை அணைத்தபடியே சிரித்தான்…
‘மைத்துனரே மாற்றங்கள் யாவும் என்னிடமிருந்தே தோன்றட்டும்… உங்கள் துணையுள்ளவரை என்னால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் வெற்றிபெறும்!”
‘என் வாயை அடைக்க தெரிந்தவன் நீ… உன் பாராட்டுதலுக்காக ஒரு பரிசு வைத்திருக்கிறேன் பார்…”
என்றவன் தன் இடையில் செருகியிருந்த துணிச்சுருள் ஒன்றை எடுத்து காசியப்பனிடம் கொடுத்தான்… அதை ஆவலோடு வாங்கி விரித்த காசியப்பனின் முகத்தில் புதிதாய் ஒரு பூ மலர்ந்ததை புன்னகையோடு வரவேற்றான் மீகாரன்… அந்த துணியில் காசியப்பன் முன்னரே கண்ட ஓவியம்…அந்த ஓவியத்தின் மூலையிலே மிகச் சிறிதாக, ‘பாதி நீங்கள் மீதி லீலா” என பொறிக்கப்பட்டிருந்தது!
லீலாதேவியின் சௌந்தரியம் அவன் முன்னே நிழலாடியது…
கலை காண்போம்…
