அறிமுகம்:-
பெண் என்னும் பெயர் விலங்குகளில் அண்டத்தையும் தாவரங்களில் சூூலங்களையும் கொண்டிருக்கும் இனத்தை குறிக்கும். மனிதரில் பெண்கள் ஒரு குலம். உளவியல் என்ற பதம் மனித மனம் செயற்படுவதைக் குறித்தும் மனத்தின் வெளிப்பாடுகளுக்கான குணம், நடத்தை குறித்து ஆராயும் அறிவியல் துறை ஆகும். முரண்பாடு என்பது ஒன்று அல்லது ஒருவர், குறிப்பிடப்படும் ஒன்றின் அல்லது ஒருவரின் நிலைக்கு எதிராக இருத்தல்; மாறுபடுதல் ஆகும். அவ் வகையில் இக் கட்டுரையானது வடக்கு மாகாணத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களையும் உளவியல் முரண்பாடுகளையும், பிரச்சினைகளும் சிரமங்களும் மிகுந்த நிலையில் ஏற்படும் உளவியல் நெருக்கடிகளையும் ஆராயும்.
தொடருரை:-
இலங்கை சமூகத்தில் ஆண்களைவிட பெண்களே சனத்தொகையில் கூடிய அளவு உள்ளனர். ஆண்களை விட, பெண்கள் வருமான உழைப்பாளர் மற்றும் குடும்பப் பராமரிப்பாளர் என்ற முறையில் இவர்கள் இரட்டைச் சுமையைக் கொண்டுள்ளனர். பல குடும்பங்களில் பெண்களே பிரதான வருமான ஈட்டாளர்களாக காணப்படுவதோடு, அதற்கு மேலாக சமைத்தல், கணவனைப் பராமரித்தல், விறகு சேகரித்தல், எவ்வித வேலையும் செய்யாத கணவனை பாதுகாத்தல்;, நீர் சேகரித்தல், வீட்டுப்பராமரிப்பு, குழந்தைகளைப் பராமரித்தல், வயது சென்றோர்களைப் பராமரித்தல், துணி துவைத்தல், சகோதரர்களைப் பராமரித்தல்
முதலிய செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தொழில் நாட்களில் எவ்வித ஓய்வு நேரத்தையும் அநுபவிப்பதில்லை. அதிகாலை முதல் நள்ளிரவு வரை அதிகமான வேலைப்பலுவிற்குட்படுகின்றனர். இதனால், நித்திரையின்மையால் இவர்களது உடல்நலனும் பாதிப்படைகின்றது. வேலைத்தளங்களிலும் பாதைகளிலும் துன்பங்களுக்கு உட்படல் என இன்னோரன்ன துன்பங்களைப் பல்வேறு விடயங்களிலும் நாளாந்தம் அநுபவிக்கின்றனர்.
குடும்பத்தில் ஆண்களே தொடர்ந்தும் தீர்மானங்களை மேற்கொள் பவர்களாகக் காணப்படுகின்றனர். பிள்ளைகளின் கல்வி, தொழில், வீட்டதிகாரம், வீட்டுத்துறை கொள்வ னவு, குடும்பநிலை உறவு பேணல், வீட்டுப்பொருளாதாரத்தை;ப் பேணல் முதலிய விடயங்களை ஆண்களே நடைமுறைப்படுத்துகின்றனர். சமுதாயச் சடங்குகள், கலாசார நிகழ்வுகள், தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் அரசியல் முதலிய துறைகளில் பெண்களின் ஈடுபாடு மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது.

இலங்கையில் இவ்வாறாக பொதுவாக பெண்கள் எதிர் கொள்ளும் உடல் – உள முரண்பாடுகள் காணப்பட்டாலும் வடக்கு மாகாணத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் உள நெருக்கடிகள் அதிகமே. உள் நாட்டு யுத்தத்தினால், இலங்கை முழுவது பாரிய பின்னடை கண்டதுடன், உயிர்ச் சேதமும் மற்றும் பொருளாதார சேதமும் ஏற்பட்டன. யுத்தம் இறுதியாக நடந்து முடிந்த வடக்கு மாகாணத்தில் பெண்கள் உளவியல் ரீதியாக பாரிய முரண்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இவ் மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் 36334 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8435 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5961 பேரும் வவுனியா மாவட்டத்தில் 6712 பேரும் மன்னார் மாவட்டத்தில் 5903 பேரும் ஆக மொத்தத் தொகையாக 63345 பெண்களைத் குடும்பத்லைவர்களாக கொண்ட குடும்பங்கள் உள்ளன.
வடக்கு மாகாணத்தில் இவ்வாறு பெண்களைத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள் பொருளாதாரச் சுமையைச் சுமக்க முடியாது அதிக அளவான பெண்கள் நுண்கடன்களைப் பெற்று அதனை மீளச் செலுத்த முடியாது வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகி, சமூகப் பிறழ்வு – தற்கொலை – என்று தவறான பாதைக்குச் செல்கின்றனர். இதனை 2018 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் ஒருவர் கடுமையாக எச்சரித்திருந்தார். கடனை மீள செலுத்த முடியாது தானும் நஞ்சு அருந்தி பச்சை பாலகர்களுக்கு நஞ்சை பருக்கி இறக்கின்றனர். இன்று வடக்கு மாகாணத்தில் பெண்களோடு சேர்ந்து, சிறுவர்களும் பாரிய உள நெருக்கடிகளுக்கு உள்ளாகி எமது இன விருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். சான்றாக, 2021 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் தரம் ஒன்றில் புதிதாக இணைந்த மாணவர் தொகை வீழ்ச்சியைக் குறிப்பிடலாம். பத்து பாடசாலைகளில் எவரும் விண்ணப்பிக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு 16820 மாணவர்களும் 2021 ஆம் ஆண்டு 15703 மாணவர்களும் தரம் ஒன்றில் இணைந்துள்ளமை மாணவர்கள் வீழ்ச்சியைக் காட்டுகின்றது. இதற்கு எண்பது வீதத்திற்கும் அதிகமான அரச பணியில் இருக்கும் பெண்கள் பொருளாதாரச் சுமைக்கும் வேலை பளுவிற்கும் உள்ளாகி குழந்தைகளை ஒன்றுக்கு மேல் பெற்றுக்கொள்ள வெறுப்படைகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் யுத்தம், இயற்கையாக, கணவனால் கைவிடப்பட்டு, கணவனின் ஊனம், கணவன் காணாமல் போயிருத்தல் முதலிய பல்வேறு காரணிகளால், கணவனை இழந்த பெண்களை அரச அதிகாரிகள் முதல் சாதார குடிமகன் வரை பாலியல் தொல்லைகளைப் புரிவதால், அவர்கள் உளச் சவால்களுக்கு உள்ளாகின்றனர். விதவைகளைச் சமூக நிகழ்வுகளிலிருந்து தள்ளி வைப்பதால், தங்களால் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என தாழ்வுச்சிக்கல் மனப்பாங்கு ஏற்பட்டு பரிதவிக்கின்றனர்.
கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, வாழ்விடம், போஷணை மட்டம் முதலியவற்றால், பாதிக்கப்பட்டு குறையூட்டத்தை அடைந்து, உழைப்பிற்கேற்ற வேதனம் இல்லாமலும் அதனால், போதியளவு நித்திரை இன்மையால், வாழ்க்கையில் வெறுப்பு, ஞாபக மறதி, காரணமில்லாமல் கோபப்படல் முதலிய உள முரண்பாடுகளுக்கு உள்ளாகின்றனர். தமிழ்ப் பெண்கள் அன்று தொடங்கி இன்று வரை சீதனக்கொடுமைக்கு உள்ளாகி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். வடக்கு மாகாணத்தில் கல்வி கற்ற சமூகம் முதல் பாமரர் வரை ஆண் சமூகத்தைச் சேர்ந்த பலரும் சீதனம் கேட்டுப் பெண்களுக்கு உளச் சிக்கல்களைக் கொடுத்துவருகின்றனர். வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகம் நடைபெறுகின்றமையைக் காணலாம். இன்றைய நிலையில் நீதி மன்றங்கிளில் பல விவாகரத்து வழக்குகள் இதை பறை சாற்றும். திருமணமாகிய பின்பும் கணவன்மார் பலர் சீதனம் கேட்டு மனைவிமாரைத் துன்புறுத்தி அவர்களுக்கு உள ரீதியான பாதிபபை ஏற்படுத்தி, தற்கொலைகளுக்கும் வழி சமைத்துள்ளனர். இவ்வாறன கொடுமைகளைக் கேள்வியுற்ற பெண்கள் பலர் முதிர் கன்னிகளாக உறவினர்களுடனும் தனிமையிலும் தாம்பத்திய வாழ்வை வெறுத்து வாழ்கின்றர். எமது சனத் தொகை சரிவுக்கு இதுவும் ஒரு காரணம்.

பெண்கள் குடும்பங்களுக்குத் தலைமை தாங்குவதற்கான பிரதான காரணங்களாக பினவருவனவற்றைக் குறிப்பிடலாம்:- போர், கணவன் நோய்வாய்ப்பட்டிருத்தல், கணவனின் அங்கவீனம், கணவனைப் பிரிந்திருத்தல், கணவன் தடுப்பில் இருத்தல், கணவன் வெளிநாட்டில் இருத்தல், கணவனின் மரணம், கணவனின் போதைவஸ்து பாவனை, திருமணம் முடிக்காமை, குடும்ப வருமானத்தில் கணவனின் பங்களிப்பு இன்மை, பிள்ளைகளைத் திருப்திப்படுத்துவதற்காகவும் சமூக அந்தஸ்துக்காகவும் போலியாக கணவன் மனைவியாக வாழ்தல். இவ்வாறான பெண்கள் வடக்கு மாகாணத்தில் சமூகத்திலிருந்து அந்நியமயமாதல் வாழ்வை மேற்கொள்வதால், எதிர் கால வாழ்க்கை பற்றிய நம்பிக்கையின்மை மன நிலையுடன் வெண்டா வெறுப்பாக வாழ்க்கையைத் தொடர்கின்றனர். இவர்களுக்கு உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற் கொண்டு, சமூக நீரோட்டத்துடன் இணைத்து, மறு மணத்தை வலியுறுத்துவதன் மூலம் அந்நிய மயமாதலைக் குறைக்க முடியும்.
ஆண்பையன் அழக்கூடாது,| பெண்பிள்ளை மரமேறக்கூடாது| முதலிய விதிமுறைகள் மக்கள் மத்தியில் பதிய வைக்கப்படுகின்றன. இவை அனைவருக்கும் பொதுவான உண்மையாகும். ஆனால், இத்தகைய சிந்தனைகள் காலத்திற்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளன் ஒரே காலத்தில் வர்க்க, சாதி, இன, மத வேறுபாட்டிற்கு ஏற்ப வெவ்வேறு மதிப்பீடுகள் காலாகாலம் இருந்து வந்துள்ளன. ஆனால், ஆண்மை – பெண்மை என உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்கள், அவற்றுக்கு வழங்கப்படும் மதிப்பீடுகள் தொடர்ந்து வருகின்றன. அவற்றைத் தீர்மானிக்கும் பல்வேறு கருத்தியலில் மதம், அறிவியல், அரசியல், கல்வி ஆகிய துறைகள் முக்கியமான பங்காற்றுகின்றன. என்ற கருத்திற்கு ஏற்ப வடக்கு மாகாணத்தில் வர்க்க ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பெண்கள் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாவதைக் காணலாம். சான்றாக, சாதி விட்டு வேறு சாதியில் காதலித்துத் திருமணம் புரியும் பெண்களைப் பிரித்து வைப்பதையும் அவர்களை உள – உடல் ரீதியாக துன்புறுத்துவதைக் காணலாம்.
மேலும் விடயங்களை அடுத்த இதழில் பார்போம்…
