ஈரநிலங்களின் முக்கியத்துவம்
சூழலியல், பொருளாதார சமூக ரீதியில் மனிதனுக்கு மறைமுகமாக பல்வேறு பங்களிப்புக்களை வழங்குகின்றன.
வெள்ள அபாய நிலையினைக் கட்டுப்படுத்துதல்
அதிக நீர்வீழ்ச்சியின் போது பெறப்படும் நீரை உள்வாங்கி வெள்ளம் வராமல் தடுக்கிறது. மாரி காலங்களில் தொடர்ச்சியாக மழை பொழிகின்ற போது ஏற்படுகின்ற வெள்ள அபாய நிலையினைக் கட்டுப்படுத்துகின்ற ஓர் இடமாக ஈரநிலங்கள் காணப்படுகின்றன. ஆற்றோரங்களை அண்டிக் காணப்படும் வில்லு நிலங்கள் ஆறு வெள்ளப்பெருக்கு நிலைக்குட்படும் போது வெள்ள அபாயநிலையினைக் கட்டுப்படுத்துகின்றன.
விவசாய நடவடிக்கைகளுக்கு சாதகமாகக் காணப்படுதுல்
வண்டல் கலந்த நீரானது ஈரநிலங்களினூடாக செல்கின்ற போது கடற்கரை சதுப்புநிலத்தாவரங்கள் போன்றவற்றால் தடுக்கப்பட்டு வண்டல்களை படிய வைக்கின்றன. வயல் மற்றும் ஏனைய விவசாய நிலங்களினூடாக உணவு உற்பத்தி செய்வதற்கு ஈரநிலங்கள் துணைபுரிகின்றன. பொதுவாக ஈரநிலங்கள் செறிவான வளமுள்ள பகுதிகளாகக் காணப்படுவதனால் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடங்களாகக் காணப்படுகின்றன.
வீட்டுத்தோட்டங்களின் மகரந்த சேர்க்கைக்கு துணை புரிகின்ற பகுதியாகவும் ஈரநிலங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன.
வடிகாலமைப்பு அல்லது வீட்டுப்பாவனைக்கான கிணறுகளுக்கு நன்னீரை வழங்கல்.
நீரை தூய்மையாக்குதல் இந்த நிலங்களின் முக்கிய பயனாகும். மேற்ப்பரப்பு நீர்களில் கரைந்துவரும் இரசாயனங்களை நீக்கும் ஒரு வடிகட்டியாக இது செயல்பட்டு தரைக்கீழ் நீரின் தரத்தை பாதுகாக்கிறது.

அழகிய மற்றும் மருத்துவ தாவரங்களை வளர்த்தல்
ஈரநிலங்கள் பெறுமதிவாய்ந்த மருத்துவத் தாவரங்களை அதிகமாகக் கொண்டிருக்கும் உயிரினச் சூழற்தொகுதியாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாக ஈரநிலங்கள் மருத்துவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
உள்ளக காற்றின் வெப்பநிலையை கட்டுப்படுத்துதல்
உலக வெப்பநிலை சீர்ப்பாட்டுக்கான காபனை சேமித்தல் மற்றும் பிரித்தல் பணியை செவ்வனே செய்தல். ஒரு பிரதேசத்தின் இடம்சார் காலநிலை (Topo- Climate) நுண் காலநிலை (Micro Climate) ஆகியவற்றின் தன்மைகளை பேணுவதிலும் இவை முக்கியமான பங்களிப்பினையே செய்கின்றன. இதனால் மிதமான வெப்பநிலை நிலவுவதற்கும் மனித சௌகரிய நிலையை ஏற்படுத்தவும் இவை காரணமாகின்றன.
பொழுதுபோக்கு மற்றும் கல்வி வாய்ப்புகளை வழங்குதல்
சம்பிரதாயபூர்வமான நம்பிக்கைகள், ஆன்மீக மற்றும் கலாசார விடயங்களுக்கு பங்களிப்பு வழங்கல் என்பற்றுடன் கூடிய உல்லாசத்துறைசார் நன்மைகள் ஈரநிலங்களின் மூலம் கிடைக்கின்றன.
புயற்காலங்களில் ஏற்படும் கரையோர மண் அரிப்பை தடுக்கின்றன
கடற்கரையோரங்களை அண்டிக் காணப்படுகின்ற ஈரநிலங்கள் கண்டல் தாவரச் சூழற்தொகுதியினை கொண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக கடலலைகளின் மூலம் கடற்கரைகள் அரிக்கப்படுவதனைத் தடுக்கின்றன.
பூச்சிகளை கட்டுப்படுத்தல்
ஈரநிலச் சூழற்தொகுதியில் காணப்படும் மருத்துவத் தாவரங்கள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்குத் துணைபுரிகின்றன.
நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின்சார உற்பத்தி
விவசாய உற்பத்திகளையும் நீர்ப்பாசன தேவைகளையும், குடிநீரையும் பெற்றுக் கொள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் என்ற பெயரிலும் நீர் மின்சாரத்தை பெறுவதிலும் பங்களிப்பினை வழங்குகின்றன.

கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக விளங்குகின்றது.
ஆறுகள் மற்றும் வில்லு நிலங்களை அண்டிக் காணப்படும் புற்தரைகள் கால்நடைகளின் மேய்ச்சல் தரவைகளாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாக ஈரநிலங்கள் கால்நடைசார் உற்பத்தி நடவக்கைகளில் முக்கியத்துவம் வாய்நத இடங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
மீனினங்களின் இனவிருத்தி
மீனினங்களின் இனவிருத்திக்கு ஏற்ற இடங்களாக உள்ளதோடு மீன்பிடி, உப்பு உற்பத்தி போன்றவைற்றில் கடல்சார் மற்றும் களப்பு, கடல்நீரேரிகளாவும் ஈரநிலங்கள் விளங்குகின்றன.
அழிவுக்குள் ஈரநிலம்
மானிட மற்றும் இயற்கைக் காரணிகளின் தாக்கங்கனிhல் ஈரநிலங்கள் அழிவடையும் போது பல்வேறு பிரச்சனைகள் தோற்றம் பெறுகின்றன.
வெள்ளப்பெருக்கு நீரின் தாக்கம்
மனிதனின் பொறுப்பற்ற நடவடிக்கைகளின் காரணமாக ஈரநிலங்கள் காணாமல் போகின்ற போது மழைக் காலங்களில் வெள்ள நீர் அதிகமாகி வெள்ள அபாய நிலை ஏற்பட வாய்ப்பாகின்றது. ஆற்றங்களைகளை அண்டி அண்மைக்காலங்களாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு இவ் அபாய நிலையினை மேலும் அதிகரிக்கின்றது.
உயிர்ப்பல்வகைமை பாதிப்படைதல்
தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற மானிட செயற்பாடுகளினால் ஈரநிலச் சூழற்தொகுதியின் உயிர்ப்பல்வகைமை பாதிப்படைகின்றது. நதிக்கரைகள், கடலோரங்கள் மற்றும் வனாந்தரங்களை அண்டிக் காணப்படும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகள் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகளினால் ஈரநிலச் சூழற்தொகுதியின் சமனிலை பாதிப்படைகின்றது.
ஈரநிலச் சூழற்தொகுதிகள் காணப்படும் இடங்களில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு, மணல் நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலமும் உயிர்ப்பல்வகைமை பாதிக்கப்பட்டு சூழலின் சமனிலைத் தன்மையில் குழப்பம் ஏற்படுகின்றது.
கண்டல்தாவரங்கள் அழிவடைதல்
கடற்கரைகளில் காணப்படும் கண்டல் தாவரங்கள் பல்வேறு தேவைகளுக்காக வருடநர்தம் அழிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. கடலோர அரிப்பினைக்
கட்டுப்படுத்தும்
பாரிய பணியினை நிறைவேற்றுகின்ற
கண்டல் தாவரங்கள் வலைகள் மற்றும் இறால் கூடுகளுக்கான தடிகளுக்காக கண்டல் தாவரங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
அளவுக்கு அதிகமான மீன்பிடி நடவடிக்கை
அளவுக்கு அதிகமான மீன் பிடி நடவடிக்கை ஈரநிலச் சூழற்தொகுதியில் பாரிய தாக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் தரமற்ற வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதும் வெடிமருந்துகளைப பாவிப்பதும் அதிகரித்து வருகின்றது.

முருகைக்கல் அழிவடைதல்
சட்டவிரோத மீன்பிடி மற்றும் படகு செலுத்தல் நடவடிக்கைகளினால் முருகைக்கல் பாதிப்படைகின்றது. மீன்பிடி நடவடிக்கைகளின் மூலம் முருகைக்கல் பல்லடியங்கள் பாதிப்படைகின்றன.
மண் அமிலமாதல் மற்றும் மண் உவராதல்
தொடர்ச்சியான பயிர் செய் நடவடிக்கைகளாலும் இரசாயனங்களாலும் மண் அமிலமாதல் அதிகரித்து வருகின்றது. அதிகளவில் செயற்கைப் பசளைகள் மற்றும் செறிவூட்டல் இரசாயனங்கள் மண் உவராதலில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
ஈரநிலங்களின் மாசடைவுகள்
தொடர்ச்சியான நகராக்க செயற்பாடுகள் மற்றும் கைத்தொழிற்சாலைகள் மூலம்
வெளியேற்றப்படும் கழிவுகள் ஈரநிலங்களை மாசடையச் செய்கின்றன.