இதழ் 21

சித்திராங்கதா – 21

நங்கூர நம்பிக்கை

நம்பிக்கை என்பது எந்தப்புள்ளியில் ஆரம்பமாகிறது என்று யாராலும் விளக்கிச் சொல்ல முடியாது. அது ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு விதமாய்ப் பெருகி ஏதோ ஒரு இடத்தில் அசைக்கமுடியாத ஒன்றாக நிலைபெறுகிறது. இயற்கை மீதோ, இறைமீதோ, மனிதர்கள் மீதோ தோன்றிய- தோன்றுகிற நம்பிக்கைகள் யாவும் இவ்வாறே. நம்பிக்கை நங்கூரம் போல நிலைபெறுவது ஒன்றும் ஒரே நாளில் நிகழ்ந்துவிடும் சாதாரணமல்ல. ஒரே நாளில் அதை முழுவதுமாய் சரித்து விடவும் முடியாது.

ஆனால் அந்த நம்பிக்கையே ஓர் அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்ல வல்லதாகும் போது உள்ளத்தினுள் ஏதோ ஒரு புள்ளியில் இனம்புரியாதவோர் அச்சம் உருவாகத் தொடங்குகிறது. அதுவே அந்த நம்பிக்கையை அடியோடு அழித்துவிடும் பெருஞ்சந்தேகமாக பின்னர் உருமாறுகிறது.

சங்கிலிய மகாராஜாவுக்கு இராஜமந்திரி ஏகாம்பரம் தொண்டமனார் மீதுள்ள நம்பிக்கை அவ்வாறானதொரு அழிவின் பாதையோ என்கிற சந்தேகத்தின் தொடக்கப்புள்ளி வருணகுலத்தான் உள்ளத்தில் உருக்கொண்டிருந்தது.

மகிழாந்தகன் வார்த்தைகள் அதற்கு உரமிட்டுக் கொண்டிருந்தன.

நட்சத்திரங்களையும் மூடி மறைத்துக்கொண்டு கருமேகங்கள் கூடிநிற்க, நிழல் கூட துணை நில்லாத இரவின் பொழுதொன்றில் சங்கிலியனை தனிமையில் சந்தித்த வருணகுலத்தான் இது குறித்துக் கேட்டான். சங்கிலிய மகாராஜாவிற்கு மந்திரியார் மீதுள்ளது அசைக்கமுடியாத நம்பிக்கை தான். ஆனாலும் அசைத்துப் பார்க்க முயன்று பார்த்தான்.

‘மகாராஜா, என் வாக்கில் குற்றமிருந்தால் பொறுத்தருள வேண்டும். ஆனாலும் இந்தச் சந்தேகத்தை இப்போதாவது நான் தீர்த்துக் கொள்ள பெரும்பிரயத்தனம் கொள்கிறேன்’

‘கூறுங்கள் தளபதியாரே, ஏன் தயக்கம்? அறிந்த உண்மை நிச்சயம் உரைப்பேன்’

‘காத்தவராயன் வழக்கிற்கும் மிக்கபிள்ளைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லையோ என்று ஒரு குரல் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மிக்கபிள்ளை தந்திரக்காரன் தான். அவன் வார்த்தைகளை நம்பி நான் இதைக் கூறவில்லை. ஆனாலும் இந்த விடயத்தில் எனக்கு ஏதோ குழம்பமாகத்தான் இருக்கிறது. தாங்கள் அந்த உண்மையை அறிவீர்கள் போலும் என்று எனக்கு தோன்றுகிறது’

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சங்கிலியன் மௌனம் கலைத்துப் புன்னகைத்தான். வருணகுலத்தான் தோள்களைத் தட்டியபடியே
‘உண்மைதான் தளபதி. காத்தவராயனுக்கும் மிக்கபிள்ளைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’

‘அப்படியாயின்…?’

‘தாங்கள் நினைப்பது போலவே தான். காத்தவராயன் மந்திரியாரின் இரகசிய ஒற்றன். அவன் ஊமை என்பதால் அவனுடன் பேசுவதற்கு மந்திரியாரால் மட்டுமே இயலும்’

‘ஈட்டிப்பாய்ச்சல் திட்டமும் மந்திரியார் தீட்டிய திட்டமா?’

‘அது எமது திட்டம். ஆம். நானும் ராஜமந்திரியாரும் சேர்ந்து தீட்டிய திட்டம். எம்மைத்தவிர வேறு யாரும் அதை அறிய மாட்டார்கள்.’

‘எனக்கு ஒன்றும் விளங்கவில்லை அரசே’ என்று குழப்பத்தின் உச்சத்தில் கேட்டான் வருணகுலத்தான்.

‘சொல்கிறேன் தளபதி,
தாங்கள் இங்கு வந்திறங்கிய நாளில் கோலகலமாய் வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தேன். மக்கள் கூட்டம் தங்களை பெருநம்பிக்கையுடன் வரவேற்க வேண்டும் என்று கருதினேன். ஆனாலும் இனி நம்பிக்கை என்பதேயற்று பறங்கியனிடம் அடி பணிவதே சாலச்சிறந்தது என்கிற விசமப் பிரச்சாரங்களை மிக்கபிள்ளை போன்றோர் நாட்டில் தொடர்ந்து பரப்பிக்கொண்டிருந்தனர். அதை நம்பிய மக்கள் சிலர் குழப்பத்தில் இருப்பதாய் அறிந்தேன். தங்கள் வருகை யாழ்மாந்தர்க்கட்கு மீண்டும் புதுநம்பிக்கையை உண்டுபண்ணும் என்பதில் நான் எவ்வளவு உறுதியாய் இருந்தாலும் விசமப்பிரச்சாரங்களை மக்கள் விட்டு விலகி வருவதற்கு என்ன உபாயம் என்கிற சிந்தனையும் எனக்குள் இருந்து கொண்டிருந்தது. போரிட முன் எம் களைகளை நாம் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு முள்ளை முள்ளால் எடுப்பது போல் இப்படியொரு திட்டத்தை ராஜமந்திரியார் முன்வைத்தார்.

தங்கள் உயிரோடு விளையாடுவதிலும், மிக்கபிள்ளை மீது வீண்பழி போடுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் நான் இதனை முதலில் மறுத்தேன்.

ஆனால் விசமப்பிரச்சாரங்கள் அரச அதிகாரிகளிடம் பரவத் தொடங்கியது. ‘பறங்கியனிடம் அடி பணிவதை விட்டு மன்னர் முட்டாள்த்தனமாய் கருமமாற்றுகிறார்’ என்கிற பேச்சுகள் என் செவியையும் வந்தடைந்தன. இந்நேரம் தஞ்சைத்தளபதியாரின் வரவும் அநாவசியமானது எனவும் சிலர் நம்பத்தொடங்கினர். அது எத்துணை அவசியமானது என்பதை எடுத்துரைக்க மிக்கபிள்ளை போன்றோரின் விசமப்பிரச்சாரங்களில் இருந்து மக்களை விடுவிக்க மந்திரியாரின் திட்டமே சரியானது என்று நான் முடிவு செய்தேன்.

ஈழத்தின் பெருநம்பிக்கையாய் தங்களை அழைத்துவரும் போது மிக்கபிள்ளை இப்படியொரு ஈனச்செயல் புரிந்தான் என்கிற செய்தி நம்பிக்கையற்றுப் போன மனங்களில் புதிய வினாக்களை உண்டுபண்ணும். அந்த வினாக்கள் ஈழத்து மக்களின் கறை தோய்ந்த உள்ளங்களை இலக்கு நோக்கி தெளிவுபடுத்தும் என்று முழுமையாய் நம்பினோம்.’

எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டு அமைதியாகவே நின்றான் வருணகுலத்தான்.

‘தங்களது உயிரோடு விளையாடியதாய் தயவு கூர்ந்து எண்ணவேண்டாம் தளபதியாரே, தங்களை இந்தச்சிற்றீட்டி எதுவும் செய்துவிடக்கூடாது என்பதை உறுதியாக்கிக்கொண்டே இம்முயற்சியில் இறங்கினோம். தங்களை வரவேற்க ஈழத்தின் மாவீரன் மகிழாந்தகனை அனுப்பி வைத்தோம். ஆனாலும் இந்த இரகசியம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தமையால் மகிழாந்தகனிடம் கூட நாம் முன்னர் எதுவும் அறிவிக்கவில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை செய்தி ஒன்றை பெருவணிகர் எச்சதத்தர் மூலம் மகிழாந்தகனுக்கு தெரியப்படுத்தியிருந்தேன். அவரும் மன்னார் கடற்பகுதியில் பறங்கியர் பக்கம் பேச்சு அடிபட்டதாக இதனை மகிழாந்தகரிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தார். அத்தோடு மகிழாந்தகன் காண்கிற போதிலே காத்தவராயனை ஈட்டிப்பாய்ச்சல் நிகழ்த்த கூறியிருந்தோம். இவ்வாறு எந்தவகையிலும் தங்கள் பாதுகாப்பிற்கு குந்தகம் விளையாத வண்ணமே செயற்பட்டோம். மகிழாந்தகன் அந்த ஈட்டியை எப்படியும் தடுத்து தங்களை காத்துவிடுவான் என்பதில் எமக்கு துளியளவும் ஐயமிருக்கவில்லை. ஆதலாலே தைரியமாக இக்காரியத்தில் முன்னேறினோம்’ என்று சாந்தமான குரலில் கூறிமுடித்தான் சங்கிலியன்.

‘இப்போது தான் எல்லாம் புரிகிறது மகாராஜா,
அப்படியென்றால் காத்தவராயன் சிறையிலிருந்து தப்பவில்லை’

‘ம்… நானே தான் விடுவித்தேன். மாருதவல்லி குறித்து தகவல் ஏதும் அறிவதற்காக. அன்றி நமது பாதாள சிறையிலிருந்து தப்புவதும் தப்பியவரை விட்டு வைப்பதும் எப்போதும் நடவாத காரியம் தளபதியாரே’

‘புரிகிறது மகாராஜா, மந்திரியாரின் ராஜதந்திரங்களை எண்ணி நான் வியக்கிறேன். தஞ்சையில் ராஜகுரு கோவிந்த தீட்சதரை எனக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறார் ராஜமந்திரியார்’

‘உண்மைதான் தளபதி, அவருடைய ராஜ தந்திரங்களின் நோக்கம் நம் கற்பனைகளில் கூட சில நேரங்களில் எட்டுவதில்லை. காலம் கடந்துதான் எமக்குப் புரியத் தொடங்கும். காத்தவராயன் சம்பவம் நடந்தபின் ஊர்மக்கள் கூடியே காத்தவராயனை சிறைபிடித்து மகிழாந்தகனிடம் ஒப்படைத்தனர் என்கிற செய்தியை கேள்வியுற்றதும் தான் அவரது திட்டத்தின் வெற்றி எனக்கு முழுவதுமாய்ப் புரிந்தது.
ஆதலால் அவர்மீது நாம் எப்போதும் வீண்சந்தேகம் கொள்ளத்தேவையில்லை தளபதி, என் உள்ளத்திலும் ராஜமந்திரியார் மீது சந்தேகம் என்பது ஒருகாலும் உருவாகாது’

‘தெளிந்தேன் அரசே, ஆனால் இதனை மகிழாந்தகனிற்கும் தெரியப்படுத்தியிருக்கலாமே’

‘சொல்லியிருக்கலாம் தளபதி, ஆனால் மகிழாந்தகனிற்கும் இந்த உண்மை அன்றே தெரிந்திருந்தால் மிக்கபிள்ளை மீது ஆவேசமாய்ப் பழி விழுந்திராது. எல்லாம் நாடகபாணியில் இருந்திருந்தால் யாரும் அன்று நம்பியிருக்கமாட்டார்கள்’

‘உண்மைதான் அரசே, நான் கூட இதுவரை இப்படி ஒரு கோணத்தில் சிந்தித்திருக்கவில்லை’

‘ஆனாலும் இது இனியும் இரகசியமாகவே இருக்கட்டும் தளபதியாரே. அதுவே நல்லது என்று கருதுகிறேன்’

‘நிச்சயம் அரசே, தங்கள் ஆணையை நான் மீறமாட்டேன்’
கார்மேகம் முழுவதுமாய்க் கலைந்து விலகியபின் இருள்வானில் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கியன.வானத்தை ஒத்த தெளிந்த மனத்தோடு வருணகுலத்தான் அங்கிருந்து மந்திரிமனை நோக்கிச் சென்றான்.

ஒரு விடயத்தை எதிர்ப்பதா? ஏற்பதா? என்கிற குழம்பத்தின் தொடக்கத்தில் மக்கள் நிற்கிற போது அதனை எதிர்த்தே ஆகவேண்டும் என்கிற பக்கம் மிக்கபிள்ளை போன்றோரின் அடாவடியான செயல்கள் மூலம் வலுக்கட்டாயமான திணிப்பு நேருமாயின் மக்கள் இயல்பாகவே அந்த விடயத்தை எதிர்ப்பதை விட்டு ஏற்றுக் கொள்வதற்கு நேசம் கொள்வார்கள். வருணகுலத்தான் வரவையும் பறங்கியருக்கு எதிரான போராட்டத்தையும் மக்கள் ஏற்கவும் தயாராவார்கள். இந்த சத்திரிய தந்திரத்தையே ராஜமந்திரியார் முயன்று பார்த்திருக்கிறார். அதில் வெற்றியின் இலட்சணங்களையும் கண்டு கொண்டார். ஆனால் அது நிரந்தரமானதா என்பது தான் அடுத்த கேள்வி?

பதில்கள் வரும்…

Related posts

சத்தமில்லா ச(காப்)தம்

Thumi2021

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும்

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 21

Thumi2021

Leave a Comment