இதழ் 22

சிங்ககிரித்தலைவன் – 22

கீழக்கரை வரவேற்றது

தென்தமிழ்நாட்டின் கீழக்கரைத் துறைமுக நகரம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வெளிநாட்டு மரக்கரங்களும் வியாபாரிகளும் கடற்கரையெங்கும் விரவியிருந்தனர்…
சங்கெடுக்க நீரில் மூழ்குபவர்களும், மீன் பிடிக்கும் வள்ளங்களும், கடலின் அழகை இன்னும் கூட்டியது.. நீண்ட கடல் தன் அலைக்கரங்களால் கரையை தழுவித்தழுவிச் சென்றது…

மகாநாமரும் முகலனும் பயணித்த மரக்கலமும் சீலகாலன் தலைமையில் வந்த மரக்கலமும் சிறு இடைவெளிகளில் நங்கூரங்கள் இடப்பட்டிருந்தன… ஐந்தாறு சிறு வத்தைகளில் மரக்கலங்களில் வந்தவர்கள் கரையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருந்தனர்… கடற்கரையில் சிறு சிறு கூடாரங்கள் அமைக்கப்பட்டு பொருள் அங்காடிகள் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன… வத்தைகளில் வரும் பொருட்களை இறக்கவும் வத்தைகளுக்கு பொருட்களை ஏற்றவும், வத்தைகளையும் சிறு வள்ளங்களையும் செலுத்தவும் குழுக்களாக கூலியாட்கள் கூடாரங்களில் தங்கியிருந்தனர்.கடல் வணிகத்தில் முக்கிய நகரமாக விளங்கிய கீழக்கரை, மகாநாமரையும் அவரோடு சென்றவர்களையும் கடல் நீர் தெளித்து வரவேற்றது…

‘நீண்ட காலத்துக்கு முன்னர் இந்தக்கரையில் இருந்து தான் ராம சேனை எங்கள் நாட்டினை வந்தடைந்ததா?”

முகலன் வத்தையில் இருந்து இறங்கியும் இறங்காததுமாக மகாநாமரை வினவினான்.

‘இல்லை மகனே… இங்கிருந்து வடக்காக சென்றால் அந்த இடத்தை அடையலாம்… ஆனால் நாம் தங்கப்போவது இங்குதான் ஆகையால் மரக்கலங்களை இங்கே செலுத்தி வந்தோம்…”

சீலகாலன் மகாநாமர் அருகில் வந்து வணங்கி,

‘ஆசானே… அதோ… தர்மச்சக்கரம் பொறித்த கொடி பறக்கும் கூடாரம் தெரிகிறது…”

என்றவன் தொலைவில் தன் கையை நீட்டிக்காட்டினான்… மகாநாமர் முகலனை நோக்கி, ‘வீரர்கள் தயாரா?” என்று வினவினார்.

‘தாங்கள் கூறியதைப்போல், எம் வீரர்களைத் தம் ஆயுதங்களை மரக்கலத்திலேயே வைத்து விட்டு வருவதற்கு பணித்திருக்கிறேன்… ஆயுதங்கள் தவிர்ந்த ஏனைய உடமைகளை அவர்கள் சுமந்து வருகின்றார்கள் ஐயனே…”

வீரர்களும் ஏனையவர்களும் அந்த கூடாரத்தை நோக்கி நடக்கத்தொடங்கினர்… கடற்கரையில் நின்றவர்கள் இந்தக்கூட்டத்தை ஏற இறங்கப்பார்த்தனர்… சிலர் மகாநாமரின் தோற்றத்தைப் பார்த்து, யாத்திரிகர் போலும் என்று தமக்குள்ளே பேசிக்கொண்டனர்… இவர்கள் கூடாரத்தை நெருங்கவும், கூடாரத்தின் உள்ளே இருந்து ஒரு புத்த துறவி வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது…. வெளியே வந்தவர், மகாநாமரை வணங்கிக்கொண்டே,
‘வர வேண்டும் ஆசானே… வரவேண்டும் … இரண்டு நாட்களாக தங்களின் வரவுக்காக காத்திருக்கின்றோம்… பயணம் இனிதாக அமைந்ததா….? ஓலையில் அவசரம் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தீர்களே… நாட்டு நிலைமை எப்படி?…. பாருங்கள்… உங்களை உள்ளே அழைத்து அமரக்கூட சொல்லாமல் ஏதேதோ கேட்க்கின்றேனே… முதலில் உள்ளே வாருங்கள்…” என்ற அந்த துறவியை நோக்கி

‘இல்லை உத்தமரே… நீங்கள் எம் மீது கொண்ட அதீத அன்பின் வெளிப்பாடல்லவா இது…? அகம் மிக மகிழ்ந்தோம்… ஆண்டவன் அருளால் உங்கள் தொடர்பு வாய்க்கப்பெற்றது யாம் செய்த பாக்கியமே… வாருங்கள் உள்ளே செல்வோம்”

என்ற மகாநாமர் அந்த துறவியின் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச்சென்றார்… அங்கே தரை விரிப்பில் மற்றவர்கள் அமர்ந்துகொள்ள மரத்தால் ஆன மேடை அமைப்பொன்றில் மகாநாமர் அமரவைக்கப்பட்டார்… இவர்களை உள்ளேயும், ஏனையவர்களை அருகிலிருந்த கூடாரத்தினுள்ளும் அமரும் வகையில் சில பணியாளர்களை வைத்து ஏற்பாடு செய்தார் அந்த துறவி… சிறிது நேரத்தில் எல்லாம் வந்தவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது… களைப்பால் சிலர் கூடாரத்தினுள்ளேயே கண்ணயர்ந்து போனார்கள்… முகலனும் தான்!

மாலை சூழ்ந்தது… கடல் அடிவானில் சூரியன் மெல்ல மெல்ல இறங்கிக்கொண்டிருந்தான்… ஒரு சங்கு ஓங்கி ஊதப்பட்டது! அந்த ஒலியைத்தொடர்ந்து மேலும் மேலும் சில சங்குகள் ஒலித்தன… துறைமுகம் தன்னை ஓய்வுபடுத்தப்போகிறது என்பதற்கான கூறியீடு அது! அந்தச் சங்கொலி கேட்டு முகலன் திடுக்குற்று விழித்துக்கொண்டான்… கூடாரத்தை அவன் கண்கள் துளாவியது… மகாநாமர் அமர்ந்திருந்த மேடை வெறுமையாய் கிடந்தது… எதோ உணர்வு வரப்பெற்றவனாக எழுந்து கூடாரத்தின் வெளியே வந்தான்…

வியாபாரிகளும் மக்களும் பயணிகளும் தத்தம் இருப்பிடங்களை நோக்கி நகரத்தொடங்கியிருந்தனர்… முகலனின் கண்கள் மகாநாமரை தேடிற்று… அந்தப்பெருங் கடற்கரையில் எங்கே பார்ப்பது என்று அறியாது அவன் அங்கும் இங்குமாக நடக்கத்தொடங்கியிருந்தான்… அவன் பின்னே ஒருத்தி தலையில் கூடையொன்றை சுமந்தபடி பின்தொடர்வதை அவன் அவதானித்தாலும் அவளிடம் பேச்சுக்கொடுக்கவில்லை… சற்று தூரம் சென்ற முகலனை அவள் பார்த்து சிரித்தாள்… அவன் அவளை நெருங்கி எதோ கேட்க முற்பட்டு தடுமாறி நின்றான்… அதற்கு அவள் அழகு அல்லது இவனின் பதற்றம் காரணமாகியிருக்கவேண்டும்… அனால் அவளோ முகலனைப் பார்த்து, சிரித்து,

‘வாருங்கள் நீங்கள் தேடுபவரிடம் அழைத்துச்செல்கிறேன்…” என்றாள்….

தடுமாறிய முகலன்…
‘நான்…நீங்கள்…என்னை…”

என்று உளறத்தொடங்கினான்… அவள் இன்னும் பலமாகச்சிரித்து…

‘எல்லாம் அறிவேன் இளவரசே…வாருங்கள்…”
என்றாள் …
இவனும் மறுமொழி பேசாது அவள் பின்னே போனான்…

இன்னும் போவான்…

Related posts

பார்வைகள் பலவிதம்

Thumi2021

அந்திமழை நிகழ்விது!!!

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 19

Thumi2021

Leave a Comment