இதழ் 22

சித்திராங்கதா – 22

முத்துமணி மாலை

நம் கதையின் நாயகியை நாம் விட்டுப்பிரிந்து வந்து வெகு நாளாகிவிட்டது போல் தோன்றுகிறதா? வருணகுலத்தானிற்கு வாள் வழங்கும் விழா நிகழ்ந்த அன்றிரவே மாருதவல்லி கடத்தப்பட்டாள். மறுநாள் அதிகாலையே மீட்கப்பட்டாள். சொல்லப்போனால் இரண்டு நாட்களளவு தான் ஆகியிருக்கும். ஆனால் என்னவோ நிறைய நாட்கள் போல் எண்ண தோன்றுகிறது. அவள் நளினம் கலந்த ரகளை அழகு எம்மைத் தேட வைத்திருக்கிறது. எமக்கே இந்த நிலை என்றால் எம் கதாநாயகன் நிலையை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

அஸ்வதமங்கலம் இப்போது கோப்பாய் நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. எதற்காக? அதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? கோப்பாய் அரசமாளிகையில் தங்கியிருக்கும் படைவீரர்களை சந்திப்பதற்காக என்று சொன்னால் நம்புவீர்களா?

கோப்பாய் நடனகூடத்தை வந்தடைந்தான் வருணகுலத்தான். அது என்ன அதிசயமோ தெரியாது. இந்த விடயத்தில் எல்லாம் அவன் ஊகிப்பது போலவே நடக்கிறது. தூங்க மறுத்து துடித்த அவன் கண்ணிமைகளிலும் ஏங்கித்தவித்த இதயத்திலும் நிலைகொண்டு நின்ற அந்த உருவம் இப்போது எதிரில் ஒரு சிற்பம் போல நின்றுகொண்டிருக்கிறது. விழிகளை மூடி மாயக்கண்ணணிடம் லயித்து நிற்கிறாள் சித்திராங்கதா.

அவள் விழிகள் திறந்துவிடக்கூடாதென இன்னுங் கொஞ்ச நேரம் கேட்டு கண்ணனிடம் மன்றாடினான் வருணகுலத்தான். அவள் இமைவாசல் திறக்கின்ற நொடியினை எதிர்கொள்வது வருணகுலத்தானிற்கு அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.

‘வந்த நோக்கம் என்னவோ?”
என்று அவள் கேட்டுவிட்டால் பதில் என்ன உரைப்பது என்பதை இதுவரை அவன் தயார்ப்படுத்தவில்லை. இனியும் அதற்கு அவனிடம் அவகாசம் இல்லை. கண்ணெதிரே நிலைகொண்டுள்ள சிற்பம் விழிதிறந்து விட்டால் இவன் மதி மழுங்கிப்போய்விடும். அதன் பிறகு அவள் பரிகாசத்தை பொறுத்துக் கொள்வதைவிட வேறு வழி இல்லை.

மாயக்கண்ணனிடம் வேண்டுவன வேண்டி முடிந்ததும் சித்திராங்கதா விழிகள் மெல்லத் திறந்தன. எதிரில் வருணகுலத்தானைக் கண்டாள். முதலில் திகைத்தாள். பிறகு நிதானித்தாள்.

‘மங்கையற்கண்ணன் கேட்ட வரத்தை உடனே கொடுத்துவிட்டானா?” என்று தானே முந்திக்கொண்டான் வருணகுலத்தான்.

‘என்ன கூறுகிறீர்கள் தளபதியாரே?”

‘இல்லை, மாயக்கண்ணன் அழகிய மங்கையர் கேட்கிற வரங்களை தமதியாது உடனே கொடுத்துவிடுவானாம். அதுதான் தங்கள் விடயத்திலும் அவ்வாறு நிகழ்ந்ததோ என்று கேட்டேன்.” என்றான் வருணகுலத்தான்.

‘ஓகோ..,” என்று கூறுவதற்குள் அவள் கட்டுப்படுத்தி வைத்திருந்த அந்த இரகசிய சிரிப்பு வெளிப்பட்டு விட்டது.

வந்த காரணம் என்னவோ ? என வினவுவள் என எதிர்பார்த்திருந்த வருணகுலத்தானிற்கு சித்திராங்கதாவின் இந்தச்சிரிப்பும் கூடுதல் நாணமும் ஆச்சரியமாக இருந்தது.

‘நான் எதற்காக இவ்விடம் வந்தேன் என்று தாங்கள் இதுவரை வினவவில்லை என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது” என்றான்.

‘தஞ்சையின் மாவீரர் ஈழச்சிறுதீவில் எங்கு வேண்டுமானால் பயணிக்கலாம் என்கிறபோது இச்சிறிய நடனகூடத்திற்கு வருவதற்கு காரணம் ஏதாவது நான் கேட்க வேண்டுமா என்ன? இருந்தால் தாங்களே அதைச் சொல்லலாமே?”

இந்தப்பதில் வருணகுலத்தானை மேலும் அதிசயிக்கவைத்தது.

‘நான் ஈழத்தின் சிப்பிகளிற்குள் விளையாத சில முத்துக்களை இங்கு தேடி வந்தேன்” என்றான்.

‘சிப்பிக்குள் விளையாத முத்துக்களா? முத்துச்சிப்பிகளே வேண்டுமானால் கேளுங்கள். இப்போதே தந்தை தருவித்துவிடுவார். ஆனால் அது என்ன சிப்பிகளில் விளையாத முத்துக்கள்? இதுவரை நானறியேன் அப்படி ஒன்றை”

‘தாங்கள் அறியாவிட்டால் அப்படியொன்றே இல்லையென்று அர்த்தமா?”

‘அப்படிச்சொல்லவில்லை. எம்மிடம் இல்லை. இவ்விடமும் அப்படி ஒன்றில்லை. தாங்கள் வேறெங்காவது விசாரித்துக் கொள்ளலாம.”

‘இவ்விடம் இருப்பதாகத்தானே தகவல் அறிந்தேன். ஒருவேளை..”
என்று வருணகுலத்தான் தொடரும் வேளை பெருவணிகர் எச்சதத்தர் அவ்விடம் வந்து சேர்ந்தார்.

‘வாருங்கள் தளபதியாரே… வாருங்கள்..
தாம் ஏன் இவ்வளவு தூரம் வரவேண்டும். ஆணையிட்டிருந்தால் நானே கோட்டைக்கு வந்திருப்பேனே..”

என்று பதைபதைப்போடு கூறியவாறே

‘நீ என்னம்மா தஞ்சைவீரரை இங்கு நிறுத்தியே உரையாடிக்கொண்டிருக்கிறாய், அவரை மனைக்குள் அழைத்து வந்திருக்கக் கூடாதா?”

என்று சித்திராங்கதாவைப் பார்த்துக் கேட்டார்.
தான் ஏதோ குற்றம் செய்துவிட்டது போல்

‘படைத்தளபதியாரே, தாம் இவ்வளவு தூரம் வர நேர்ந்த காரணம் ஏதும் அவசரமோ?” என்று கேட்டார் எச்சதத்தர். அவர் பதைபதைப்பு இன்னும் அடங்கவில்லை.

அப்போது சித்திராங்கதா குறுக்கிட்டாள்.
‘அப்பா, கோப்பாய் அரசமாளிகையில் படைவீரர்களை சந்திப்பதற்கு சென்று கொண்டிருப்பதாய்க் கூறினார். அதனால் தான் அவரை உள்ளே அழைத்துத் தாமதப்படுத்த விரும்பவில்லை. மற்றும்படி நீங்கள் பதற்றப்படும் படி ஏதுமில்லை.” என்று தந்தையைச் சாந்தமாக்கும் தொனியில் கூறினாள்.

தான் கூறாத இந்தப்பதிலை சித்திராங்கதா கூறியது வருணகுலத்திற்கு ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. தன் உள்ளெண்ணத்தை அவள் உணர்ந்து கொண்டாளோ என்கிற நினைப்பு ஒருவித கூச்சத்தையும் அவனிற்கு உண்டாக்கியது. அத்தோடு தான் தேடி வந்ததாய் சொன்ன சிப்பிகளில் விளையாத முத்துக்கள் பற்றியும் அவள் எதுவும் எச்சதத்தரிடம் கூறாமலிருந்ததால் அந்த முத்துக்கள் பற்றியும் அவள் அறிந்து கொண்டாளோ என்கிற நினைப்பும் வருணகுலத்தானை அவ்விடத்தில் மேலும் குறுக வைத்தது.

‘வீரத்தளபதியாரே, இச்சிறியேனின் விண்ணப்பமாய் தாங்கள் தயவு செய்து எம்மனைக்கு ஒருமுறை வந்து போக வேண்டுகிறேன். தம்மைப் போன்ற மாவீரரை உபசரிக்கும் சிறிய வாய்ப்பையேனும் இந்த வணிகனுக்கு தாங்கள் வழங்க வேண்டும்.”

எச்சதத்தரின் பணிவான வேண்டுகோளை வருணகுலத்தான் மறுக்கவில்லை. பெருவணிகரின் இல்லம் அழகியலின் இன்னொரு அடையாளம் எனலாம். அழகின் மாதேவி அங்கு இருப்பதாலோ என்னவோ அந்த இல்லத்திற்கென்று இத்தனை பொலிவு இருக்கிறது என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டான் வருணகுலத்தான்.

அறையிலிருந்து ஓர் அழகிய சிறு பெட்டியொன்றை அவசரமாக எடுத்துவந்த எச்சதத்தனார்

‘தளபதியாரே, என் மனவேட்கைக்காக தாங்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

என்று கூறியபடி அந்தப்பெட்டியை வருணகுலத்தானிடம் நீட்டினார்.

‘இவையெல்லாம் எதற்காக பெருவணிகரே, நான் என் கடைமை ஆற்றவே இவ்விடம் வந்தேன்.” என்று கூறி சித்திராங்கதாவை நோக்கினான். அவள் தலை குனிந்திருந்தது.

‘இல்லை வீரரே, இதனை கடைமை என்று நீங்கள் கருதினாலும் எம்மைப் பொறுத்தவரை இது பேருதவி. அன்று மாருதவல்லி கடத்தப்பட்ட இரவு நாமெல்லாம் எவ்வளவு அச்சமிகுதியில் இருந்தோம் என்பதை வார்த்தைகளால் சொல்லமுடியாது. எனக்கும் ஒரு புதல்வி இருக்கிறாள். அரச குடும்ப பெண்களிற்கே இந்நிலை என்றதும் நாமெல்லாம் துடிதுடித்துப் போனோம். ஆனால் அதிகாலையே தாம் ஆற்றிய வீரச்செயல் அறிந்து நாம் கொண்ட திருப்தி இருக்கிறதே அதற்கு எந்த சன்மானமும் ஈடாகாது தளபதியாரே, என் மனநிறைவிற்காய் தாம் இதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.” என்றார் எச்சத்தர்.

வருணகுலத்தானும் இனி மறுக்க விரும்பாதவனாய் அதனை ஏற்றுக் கொண்டான். அச்சிறு பெட்டியை திறந்து பார்க்கையில் அவனிற்கு உண்மையிலே ஓர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.

வெண்முத்து மாலை ஒன்று.
எத்தனை பொலிவு !

‘பெருவணிகரே, ஈழத்தில் நான் அடிவைக்க முன் முதலில் கண்டு தரிசித்தது ஒரு முத்துக்குளித்தலையே. காணக்காண வியந்து நின்றேன். மலையளவு குவிக்கப்பட்ட முத்துச்சிற்பிகளை கண்டு இத்தேசத்தில் எனக்கென ஒரு முத்து கிடைக்காதா என்று நான் ஏங்கியது உண்மை. ஆனால் இன்று என் கைகளில் எழில் மிஞ்சுகின்ற ஒரு வெண்முத்துமணி மாலை. என் நன்றிகளை நான் எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.”

‘தளபதியாரே, எனக்கெதற்கு நன்றி. இது எனது சிறிய நன்றிக்கடன் மட்டுமே. நம் சங்கிலிய மகாராஜா இதை விட பெறுமதியான எத்தனையோ பரிசுகளை தங்களிற்கு வழங்க காத்திருக்கிறார். அவர் தங்கள் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கைகளையே நாம் இப்போது காரியங்களாய்க் காண்கிறோம்.”

‘சங்கிலிய மகாராஜா எனக்கு அளவிற்கு அதிகமாகவே வழங்கிவிட்டார். இதோ இந்த அஸ்வதமங்கலத்தை பாருங்கள். இதைப் பார்க்கும் போதெல்லாம் இதை விட சிறந்த பரிசு வேறென்ன இருக்கமுடியும் என்றே தோன்றுகிறது. ஏன் தங்கள் புதல்வியார் கூட அரங்கேறும் முன்னே எனக்காக மேடை ஏறினார் என்று அறிந்தேன். இப்படி எல்லாவகையிலும் என்னை கடனாளி ஆக்குகிறார்கள், என் கடைமைகள் தான் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.”

தனக்காக மேடை ஏறினாள் என்று வருணகுலத்தான் கூறியது நீண்டநேரம் அமைதியாய் நின்று கொண்டிருந்த சித்திராங்கதா இப்போது மறுவாதம் செய்வாள் என்கிற எதிர்பார்ப்பில்த்தான். ஆனால் அவள் மௌனம் கலையாதவளாகவே நின்று கொண்டிருந்தாள்.

‘அப்படியெல்லாம் இல்லை தளபதியாரே, சித்திராங்கதா அரங்கேற்ற நாளிற்காய் பெரும் ஆவலோடு காத்திருந்தாள். அதுதான் முதலில் கொஞ்சம் தயங்கினாள். பின்னர் தங்களைப்போல் தலைசிறந்த வீரர்க்காய் தன் பிடிவாதத்தை விட்டு மேடையேறினாள்.”
என்று நகைத்தபடியே கூறினார் எச்சதத்தர்.

மெல்லிய கோபம் கலந்த முகத்தோடு தந்தையை நிமிர்ந்து பார்த்தாள் சித்திராங்கதா.

‘அப்பா பழைய கதை எல்லாம் இப்போது எதற்கு, அரங்கேற்றம் இன்னும் சில நாளில் அரசவையில் இடம்பெறத்தானே போகிறது? அதில் ஏதும் சிக்கல் தோன்றாமலிருக்க வேண்டும். முக்கியமாய் யுத்தம் என்று எதுவும் ஆரம்பிக்காதிருக்க வேண்டும். அதைக்கூறுங்கள் முதலில்”

‘அது எப்படியம்மா நாம் கூற முடியும்? நாம் நினைப்பது போலவா எல்லாம் நடக்கும், எம்மால் ஆவதென்பது அன்னை வீரமாகாளியிடம் வேண்டுவது மட்டுந்தானே?”

‘வீரமாகாளி மட்டுமல்ல அப்பா, மாவீரர்கள் நினைத்தாலும் அது முடியும்.”

‘தளபதியாரே, என் மகள் இப்படித்தான். கொஞ்சம் துடுப்பாகப் பேசுவாள். அவளிற்கு நாட்டியம் தான் சகலமும். அரங்கேற்றம் என்பது அவளைப் பொறுத்தவரையில் இன்னொரு பிறப்பு. அது நிகழ்ந்துவிட வேண்டும் என்கிற பதற்றம் நாள் நெருங்க நெருங்க அவளிடம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதுதான் இப்படியெல்லாம் பேசுகிறாள். தாங்கள் எதையும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.”

‘இல்லை எச்சதத்தரே, தங்கள் புதல்வி நாட்டியத்தில் கொண்ட காதலை நானே அன்று மேடையில் தரிசித்திருந்தேனே, இத்தகைய ஆடலரசியின் அரங்கேற்றம் எப்படித் தடைப்பட முடியும்? தாண்டவ நடராஜரே அந்த நாளிற்காய் காத்துக் கொண்டிருப்பாரே”
என்றான் வருணகுலத்தான்.

அந்த நேரம் சித்திராங்கதாவின் முகத்தில் அப்படியொரு மலர்வு எப்படி வந்ததென்றே தெரியவில்லை.

‘நான் விடைபெறுகிறேன் பெருவணிகரே, இனியும் என் கடைமைகளை நான் தாமதிக்கக்கூடாது அல்லவா”
என்று புறப்படத்தயாரானான் வருணகுலத்தான்.

‘இச்சிறியேனின் மனைக்கு தாங்கள் வந்ததை எண்ணி பெருமகிழ்வு கொள்கிறேன் தளபதியாரே, மிக்க நன்றி”

கடைசி தரிசனம் வேண்டி சித்திராங்கதாவின் கண்களை தேடினான். அந்தக் கண்கள் மிக தைரியமாக இவனை நோக்கி நின்றன.

கடினப்பட்டு விடைபெற்றான் வருணகுலத்தான்.

அந்த அரங்கேற்ற நாளிற்காய் அந்த நொடியிலிருந்து அவனும் காத்திருக்கத் தொடங்கினான்.

ஆனால் அதேநாளில் அரசவையில் வேறொரு விழா திடீரென ஏற்பாடு செய்யப்படுவதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்…

Related posts

நான் ஒரு முட்டாளுங்க!

Thumi2021

ஆசிரியர் பதிவு – முட்டாள்களா நீங்கள்?

Thumi2021

நவீன வேதாள புதிர்கள் 01 – நான்கு மூன்றுகள்

Thumi2021

Leave a Comment