யாழ்ப்பாணத்தில் ஈரநிலங்கள்
கடற்கரை சார் ஈரநிலங்களான நாவாந்துறை, கல்லுண்டாய் வெளி, பொம்மை வெளி, காக்கை தீவுப் பகுதிகள் திண்மக் கழிவுகளால் நிரப்பப்பட்டு அதன் சீரழிவிற்கு காரணமாகின்றன. எனவே இவ்வாறான ஈரநிலங்களில் சில பகுதிகளை மேடுறுத்தித்தான் யாழ்ப்பாண நகரம் கூட உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணக் கடல்நீரேரிப் பகுதிகளில் காணப்படும் முறையற்ற மீன்படி முறைகளும் கடல்நீரேரியின் சீரழிவிற்கு காரணமாக காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் கடல்நீரேரிக்கு குறுக்காக பண்னைப்பாலம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இருந்த மீனினங்கள் அமைக்கப்பட்ட பின்னர். பாலத்தின் கிழக்கு பகுதியில் அருகியதாக கூறப்படுகின்றது.
மாலை வேளைகளில் நாவாந்துறை, அராலி, கல்லுண்டாய் வெளியினூடாக செல்லும் ஒருவருக்கு மனோரம்மியமான சூரிய அஸ்தமனத்தினையும், கண்டல் தாவரங்களுடன் கூடிய காட்சியை தரிசித்தாலும் மறுபுறத்தில் வேதனை தரக்கூடிய வகையில் திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டு ஈர நிலங்கள் சீரழிவிற்க்கு உள்ளக்கப்படுகின்றன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கையின்படி யாழ்ப்பாணக் கடல்நீரேரியும் அது சார்ந்த கடற்கரை ஈரநிலங்களும் மத்திம அளவில் (Moderate) சீரழிவுக்குட்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
ஈரநிலங்களின் அழிவு
மனிதன் மேல் ஈரநிலத்திற்கு உள்ள ஈரம் ஈரநிலத்தில் மனிதனுக்கு இல்லை இதனால் மிகப்பெரிய அழிவை சந்திக்கின்றன. சுற்றுலா தளங்களை உருவாக்குதல், மற்றும் மனிதனின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஆகியனவும் நமது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளும், தொடர்தேர்ச்சியான பராமரிப்பு இன்மையும் இந்த நிலங்களை பாழ்படுத்தி வருகின்றன. எனவே இந்த நிலங்களை பாதுகாக்கவும் அதன் பயன்களை மக்களிடம் கொண்டுசெல்லவும் ஒவ்வொரு மனிதனும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது கட்டாயமானதாகும்.
சதுப்புநில முகாமைத்துவ மூலோபாயமானது (Wetland Management Strategy – WMS) உலகளவில் பயன்படுத்தப்படும் அடிப்படை கொள்கைளை ஆதாரமாகக் கொண்டது. இவற்றில் சதுப்பு நிலங்களை மதிநுட்பத்துடன் எவ்வாறு பயன்படுத்துவது என்பதே பிரதானமானது. மக்களின் நலனை கேந்திரமாகக் கொண்டு பேணுவது என்பது சதுப்பு நிலங்களின் இயற்கை சூழலை பாதுகாத்து மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று எல்லைக்குள் முகாமைத்துவம் செய்வதாகும். மதிநுட்ப பயன்பாடு என்பது ரம்சார் உடன்படிக்கையின் மத்திய கொள்கையில் ஒன்றாகும்.
ஏனைய அடிப்படை கொள்கைகளாவன, நிலம், நீர்,நேரடி வளப்பாதுகாப்பு என்பன சாதாரண முறையில் பாதுகாக்கும் அதேநேரம், பல்துறைசார் செயற்பாடுகளை துறைகளினூடாக செயற்படுத்தவேண்டியதாக காணப்படுகிறது. மேலும் நகர மற்றும் நகரை அண்மித்த சதுப்பு நிலங்களுக்கான சிறந்த திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தை பின்பற்றுவது ஆகும்.
ஈர நிலங்களை பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி நம் எல்லோரது மனங்களிலும் வருகின்ற பொதுவாகதொரு கேள்வியாகும். அவற்றிற்கென சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்ற சில செயற்றிட்டங்கள் முக்கியமானவையாகும்.
புதிய ஈரநிலங்களை அடையாளங்காணல்
உலகளாவிய ரீதியல் இதுவரை அடையாளம் செய்யப்படாமல் அதிகளவிலான ஈரநிலங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான சதுப்புநிலங்களை அடையாளம் செய்து பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். சதுப்பு நிலங்களில் கண்டறிந்த, உய்த்தெடுக்கப்பட்ட பலன் மற்றும் மதிப்புகளை மதிநுட்பமான பயன்பாட்டு, செழிப்பான அபிவிருத்தி, மனித நலன் என்பவற்றுக்கு அடிப்படையாக காணப்படுகிறது. இவ்வனைத்து மதிப்புகளும் இனங்காணப்பட்டு தீர்மானங்கள் எடுக்கும்போது பயன்படுத்தவேண்டும்.
சதுப்பு நிலங்கள் வேறு தேவைகளுக்காக அழிக்கப்படுவதனைத் தவிர்த்தல்
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஏக்கர் கணக்கிலான சமுப்புநிலங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலங்கள் மென்மேலும் அழிவடையாமல், தரம் குறைவடையாமல் தவிர்த்தல் வேண்டும். இதற்கென தன்னார்வ அமைப்பக்களை ஊக்குவிப்பதுடன் அரசுசார் நிறுவனங்கள் தமது கட்டமைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஈரநிலங்களை அழிவிலிருந்து மீட்டல்
மண்ணில் காற்று குன்றும் போது அதற்கு ஈடு செய்யும் வண்ணம் தாவரங்களும் இந்த ஈர நிலங்களில் உள்ளன. உவர் நீர்ச்சதுப்பு நிலங்களில் கண்டல் தாவரங்களைக் காணலாம். சிறுகண்டல், நரிக் கண்டல், கிண்னை, தில்லை, கடல் நீர் முள்ளி, வெண்கண்டல். கண்டல். நீர்த் தேங்காய், சாமுந்திரி, திப்பரத்தை காரான் பன்னம், யானைக்கண்டல் என்பன குறிப்பிடத்தக்கன.
தரம் குறைந்த, சதுப்பு நிலங்களை மீட்டு மீண்டும் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதனூடாக சுற்றுச்சூழல் செயற்பாட்டை சீர்படுத்தி சமூக,பொருளாதார மதிப்புக்களை அதிகரிக்கச் செய்ய முடியும்.
ஈரநில மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடல்
மதிப்புக்களை அடையாளங்காணல் மற்றும் மதிநுட்ப செயற்பாடு என்பவற்றை கருத்திற்கொண்டு பலவேறு பங்குதாரர்களுடன் இணைந்து பங்கேற்பு அணுகுமுறையினூடாக செயற்படல். அதாவது உலகம் முழுவதும் காணப்படுகின்ற முக்கியத்துவம்மிக்க சகல ஈரநிலங்களையும் அழிவிலிருந்து மீட்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல்
உலக நாடுகள் ஒவ்வொன்றும் நாடுகள் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சட்டங்களை வலுவுள்ளதாக உருவாக்கிச் செயற்படுத்துவதன் மூலம் ஈரநிலங்களைப் பாதுகாக்க முடியும். சட்டக்கருவிகள் மற்றும் முகாமைத்துவ நிறுவனங்கள் என்பன சதுப்பு நில முகாமைத்துவ மூலோபாயத்திற்கு பொருந்துவதாக அமைய வேண்டும். ஈர நிலப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களையும் அகற்றி வேறுவழியின்றி குடியிருப்பவர்களுக்கு மாற்று வசிப்பிடவசதி ஏற்படுத்துதல் வேண்டும்.
மாநாடுகள், ஆய்வுகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
பாழாகிவரும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் பரப்புவது, இதற்காக உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இதுவே ராம்சார் பிரகடனம் எனப்படுகிறது. இவ்வுடன்படிக்கையை சுமார் 168 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
சதுப்பு நிலங்களின் அவசியம், சூழலியல் மாற்றங்களால் சதுப்பு நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இத் தினம் அனு~;டிக்கப்படுவதுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாவரப் போர்வையை பாதுகாத்தல்
அலையாத்தி தாவரங்களின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்துவதன் மூலம் அவற்றை அழிவிலிருந்து மீட்டுக்கொள்ளலாம். அத்துடன் அழிக்கப்பட்ட தாவரங்களுக்கு பதிலாகவும் கூடுதலாக கடல்தாவரங்களை மீள்நடுகை மூலம் உருவாக்குதல்.
பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவித்தல்
ஈரநிலங்கள் உள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவித்து அப்பிரதேசங்களில் ஈரநிலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோரை சட்டத்தின் முன்நிறுத்துவதன் மூலமும் ஈரநிலப்பகுதிகளைப் பாதுகாக்கலாம்.
நகரக்கழிவுகளை கொட்டுவதைத் தவிர்த்தல்
ஈரநிலப்பிரதேசங்களில் நகரக்கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தொலைவான இடங்களில் அவற்றை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தோ அல்லது கூட்டு உரம் தயாரிப்பதற்கோ பயன்படுத்தலாம். இதன் மூலம் ஈரநிலப்பகுதிகளில் திண்மக்கழிவுகள் சேர்வதனைக் குறைக்கலாம்.
தொழிற்சாலைகளை வேறுபகுதிகளில் அமைத்தல்
ஈரநிலங்கள் உள்ள பகுதிகளில் அமைந்து காணப்படுகின்ற தொழிற்சாலைகளினால் வெளியேற்றப்படுகின்ற கழிவுகள் ஈரநிலங்களில் சேர்வதனைக் கட்டுப்படுத்தவேண்டுமாயின், அத்தகையத் தொழிற்சாலைகளை வேறுபகுதிகளில் அமைத்தல் வேண்டும்.
அனைவரும் பிரதேச இன மத மொழி பேதங்களைக் கடந்து சூழல்சார் அக்கறையுள்ளவர்களாக மாறுவதனூடாக ஈரநிலங்களைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்கு மிகச்சிறந்ததொரு சூழலை வழங்க முடியும்.