இதழ் 22

முட்டாள்களை தேடிக்கொண்டே இருக்கிறோம்

உலகம் ஒரு நாடகமேடை என்பது எவ்வளவு உண்மை. சந்தைக்கும்பலில் தன் முகமும் முகவரியும் இழந்துவிட்டு நிற்கின்ற மனிதனை சமூகத்தின் ஓர் அகதியாய்க் காண்கின்ற நிலையே இவ்வட்டைப்படத்தில் ஓர் அவலமாய்த் தெரிகின்றது.

ஒவ்வொரு மனிதனும் அவன் வாழும் சமூகச்சூழலாலே சமைக்கப்படுகிறான். பிறருடைய சிந்தனை அவனைச் செதுக்குகிறது. செயல் அவனுக்கு வர்ணம் தீட்டுகிறது. அவன் படிப்படியாக வடிவெடுக்கிறான். சமூகத்தில் ஓர் அங்கமாக விரும்பியவன் சமூக சமுத்திரத்தின் ஒரு துளியாய் கரைந்து காணாமல் போகிறான்.

சிந்தித்துப் பார்த்தால் ஒன்றும் அறியாத சிறுபிள்ளைகளின் உலகமே வினோதமானதாய்த் தெரிகிறது. அதுவே உண்மையில் இனிமையானதாக இருக்கிறது. அந்த சொர்க்கத்தை இழந்துவிட்டுத்தான் பெரியவர்கள் ஆகினோம். எல்லாம் அறிவிக் கனி தின்றதன் விளைவு. அந்த அறிவுக்கனியே வேண்டாமென்று முட்டாளாய் இருந்துவிட்டால் வாழ்க்கை இன்னும் இனித்திருக்குமோ என்னவோ? அப்படியெல்லாம் வாழ முடியாதென்று அறிவு மீண்டும் வந்து வாதிடும்.

மனிதனது சிறுபிள்ளைத்தனத்தை ஏதோ ஒரு இடத்தில் அவனிடமிருந்து சமூகம் பிய்த்து எடுக்கிறது. அவனைப் பெரியவனாக்கும் பரிணாமத்தில் அவன் இன்பங்கள் குறித்து சமூகம் கவலைகொள்வதில்லை. சமூகத்திடம் இது போல் பேசினாலே ‘இதென்ன சிறுபிள்ளைத்தனம்” என்கிற கேள்வியே எழுகிறது.

ஆம் சிறுபிள்ளைத்தனம் தான். பெரிய மனிதர்களின் லட்சணம் தான் என்ன? அதன் உலகம் தான் ஏது? நமக்குத் தெரியாதா? வரட்சியான எந்திரயாகம். கால அட்டவணை உலகம். தன்னுடைய வயிற்றுக்குத் தானே இரையாகும் உலகம். தன் மேடைக்காக பிறருக்கு கல்லறை கட்டும் உலகம்.

தெருவெங்கும் ஓசை மிகுந்த உலகம். நகரமெங்கும் ஓயாத சத்தம் நிறைந்து வழியும். வியாபார இரைச்சல். அவசியமற்றவற்றையும் பார்க்கவேண்டிய – வாங்க வேண்டிய பண்பாட்டு பலாத்காரம். இருட்டிலும் விளக்கிட்ட விளம்பரங்கள். எல்லாம் முழுநேரமும் விற்கப்படுகிறது. கொள்கை, மானம், கற்பு எல்லாம்.

அலுவலக அவசரத்தில் அச்சத்தினால் வாயடைத்துப் போகின்ற உங்கள் மௌனம் எப்போதும் சம்மதத்தின் அறிகுறியாகவே எடுத்துக் கொள்ளப்படுவது எவ்வளவு கொடுமை! முட்டாள் குழந்தைகளாக இருந்தால் வீரிட்டுக் கத்தியிருப்பீர்கள்! சின்னச்சின்ன அத்துமீறல்களை அமைதியாய் அனுமதித்தது நாமெல்லாம்தான். காலப்போக்கில் வீதிகளையே காணாமல் ஆக்கிவிட்ட பின்னேதான் நாம் கவனிக்க மறந்த அத்துமீறல்கள் புரியத் தொடங்குகின்றன.

சம்பாதித்த வடைகளை எல்லாம் நரிகளிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பும் காக்கைகள் நிலையே இன்று நகர மனிதனின் நாகரீக நிலை.

முட்டாளாய் இருப்பது என்பது இன்றளவில் ஒரு வியாபாரச்சொல். அது எப்போதும் அடுத்தவனைச் சுட்டவே பயன்படுத்துகிறோம். நம்மைப்புத்திசாலி என்று காட்டுக்கொள்ள அருகில் சில முட்டாள்களை தேடிக்கொண்டே இருக்கிறோம். அதனால்த்தான் இங்கு புத்திசாலிகள் குறைவாகவும் முட்டாள்கள் அதிகமாகவும் இருக்கிறார்கள்.


ஆனால் முட்டாள்த்தனம் என்பது நிரந்தரமானதல்ல. தற்காலிகம். புத்தி வளரும் படிநிலைகளில் ஒன்று. அறியாமை என்பதே நிரந்தரமானது. அதுவே காலாகாலத்திற்கு கடத்தப்பட்டு வரவல்லது. அதிலிருந்தே விடுதலை பெற வேண்டுமே அன்றி முட்டாளாய் இருப்பதை விட்டு விட எண்ணுகையில் வாழ்வின் குழந்தைத்தனத்தை எங்கோ தொலைக்க முனைகிறோம் என்பதே உண்மை.

வாழ்க்கை இன்பமானது. சில சமயங்களில் சில நேரங்களில் கொஞ்சம் முட்டாளாய் இருங்கள்! முட்டாள்த்தனத்தை வெளிப்படுத்துங்கள்! கற்றுக்கொள்ளுங்கள்! வாழ்க்கை இன்னும் அழகாக மாறும். சொன்னது புரிந்ததா? புரியவில்லையாயின் வாழ்த்துக்கள். முட்டாளாக மாறத் தொடங்கிவீர்கள்.
இனி சர்வமும் இன்பமயம்!

Related posts

‘அயோத்தி’ – ஒரு மானுட நலனோம்பு மையம்

Thumi2021

இறையாண்மை – 03

Thumi2021

வழுக்கியாறு – 16

Thumi2021

Leave a Comment