இதழ் 22

ஆசிரியர் பதிவு – முட்டாள்களா நீங்கள்?

அடுத்தவனை ஏமாளியாக்கி விடுவதும், நாம் ஏமாளியாகாமல் தப்பிப்பதும் தான் இந்த ஏப்ரல் முதலாம் திகதியின் குறிக்கோள்களாக்கப்பட்டிருக்கிறது. இன்னொருவனை ஏமாற்றி முட்டாளாக்குவது தரும் சந்தோஷம் ஏற்கப்படக் கூடியதா? சிந்தித்துப் பாருங்கள். இதற்காக ஒரு தினத்தை உருவாக்கியிருப்பார்களா? நிகழ்கால கேள்விகளுக்கான சரியான பதில் இறந்த காலத்திடம் நிச்சயமாக இருக்கும். ஆனால் அதற்கு அந்த இறந்த காலம் இறக்காமல் இருக்க வேண்டும். முட்டாள் தினத்தின் வரலாற்றை இறந்த காலம் எப்படி சேமித்திருக்கிறது? வாருங்கள்! பார்க்கலாம்!

16ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஏப்ரல் முதலாம் திகதி, புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அப்போதைய ஜூலியன் நாட்காட்டியிலும் இவ்வாறு தான் இருந்துள்ளது. பின் 13ஆம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர், 1582 பெப்ரவரி 29ஆம் திகதி புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் ஜனவரி முதலாம் திகதி புத்தாண்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனை ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் உடனடியாக ஏற்கவில்லை. எனினும் ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி போன்ற நாடுகள் இந்த நாட்காட்டியை 1582 அக்டோபர் முதல் பயன்படுத்த தொடங்கின.

இதனையடுத்து 1752இல் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் புதிய நாட்காட்டியை ஏற்காத அதாவது ஏப்ரல் முதலாம் திகதியை புத்தாண்டாக கொண்டாடும் நாடுகளையும், நபர்களையும் கிண்டல் செய்வதற்காக ‘முட்டாள்கள் தினம்’ என ஏப்ரல் முதலாம் திகதி அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காலத்திற்கேற்ப நடந்த ஒரு மாற்றத்தை எல்லோரும் ஏற்கும்படியான மாற்றமாக மாற்றுவதற்காகவே இந்த தினம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எமது சமுதாயத்திலும் முட்டாள் தினங்கள் தேவைப்படுகின்றன. பிற்போக்குத் தனமான பல வழக்கங்களில் இருந்து நாம் மாறியிருந்தாலும் இன்றும் பல மாற்றங்கள் இந்த சமூகத்தில் நடக்க வேண்டி இருக்கிறது. சாதி இன மத ஏற்றத்தாழ்வுகள் இந்த சமூகத்தின் வேர்வரை பரவியுள்ளது. கொலை, களவு, கற்பழிப்பு, வன்முறை என்பன மலிந்துவிட்டது. சமூக அக்கறை, ஒற்றுமை என்பன கேள்விக்குறியாகிவிட்டன.

இதுபோன்ற கட்டுக்களிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் இந்த கட்டுக்களுக்குள்ளேயே முடங்குப்போய் இருப்பவர்களை முட்டாள்களாக காட்சிப்படுத்துங்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது காகிதங்களை விட்டு வாழ்வியலுக்குள்ளும் வர வேண்டும்.

முட்டாள் என்கிற சொல்லுக்கு சக்தி அதிகம். முட்டாள்களைத்தவிர யாரும் முட்டாள்களாக இருக்க விரும்ப மாட்டார்கள்.
முட்டாள்களைத் தவிர யாரும்
முட்டாள்தனங்களை செய்ய விரும்ப மாட்டார்கள்.

எனவே, நாட்காட்டிகளுக்கு நடந்தது நமது சமூக மாற்றங்களுக்கும் நடக்கும்.

நம்புவோம்..
நடப்போம்…
நடத்துவோம்….

Related posts

ஈரநிலங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

Thumi2021

நான் ஒரு முட்டாளுங்க!

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 22

Thumi2021

Leave a Comment