மனிதகுலத்தைப் பண்பட வைப்பதில் அடிநாதமாக விளங்கும் இரு மதங்களின் நம்பிக்கை மூலம் வளம் பெற்ற ஒரு தெய்வீக நிலமே அயோத்தி. மனிதகுல வரலாற்றின் தோற்றுவாயையும் அதன் காலாதிகால போராட்டங்களையும் நற்பேறுகளையும் அது குறிக்கின்றது. இப்புனித பூமி எதிர்கால இந்தியாவில் எவ்வாறு அறியப்படும்? என்று நான் எண்ணினேன்.
2020 ஆம் ஆண்டாகும் போது, மனிதகுலம் வேண்டி நிற்கும் சேவைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு களங்கமற்ற சின்னமாகவும், தேசத்தின் இணக்கமுற்ற ஒருமைப்பாட்டுக்கான கலங்கரை விளக்கமாகவும் புனித பூமியான அயோத்தி மிளிர்வதை என் அகக்கண் கொண்டு பார்க்கிறேன். நவீன முன்னேற்றங்களைப் பிறப்பிடமாகக் கொண்ட பல்பரிமாண சிகிச்சை மையமாகவும் உடல், உள, ஆன்மீகம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்தையும் போக்கும் தலமாகவும் அயோத்தி அமைவதைக் கற்பனை செய்து பார்க்கின்றேன். அது நான்கு வகையான சிறப்பம்சங்களைக் கொண்டமைய வேண்டும்.
முதலாவது, சகல வயதினரும் பயன் பெறத்தக்க வகையிலான குறைந்த செலவுள்ள மருத்துவ நிலையமாக அது வளர்ச்சியுற வேண்டும். தேசத்தின் வறியவர்களும் மூத்தவர்களும் பயன்பெறும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் இல்லமாக அம் மருத்துவ நிலையம் தொழிற்பட வேண்டும். 70மூ ஆனோருக்கு இலவச மருத்துவம் என்னும் வகையில் இந்தியாவில் இதுவரையில் நடைமுறையிலுள்ள அம்முறைமையைக் கொண்டே அது தொழிற்படவும் வேண்டும். ஆண்டுதோறும் பார்வையிழக்கின்ற இலட்சக் கணக்கானோருக்குப் பார்வை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் நூற்றுக்கணக்கான வைத்தியர்களைக் கொண்ட அமைவிடமாகவும் ஊனமுற்றோரை இயங்க வைக்கும் பல்துறை நிபுணர்களைக் கொண்ட இடமாகவும் வாழ்வில் அல்லலுற்றோரை ஆற்றுப்படுத்தக் கூடிய தலமாகவும் அது திகழ வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், சித்த மருத்துவம், நாட்டு வைத்தியம், யோகாசனம் போன்றவற்றுடன் நவீன மருத்துவம் இணக்கம் கண்டு, தேவையறிந்து, திறன்பட மருத்துவ சிகிச்சை வழங்கும் மையமாகவும் அம்மண் அமைய வேண்டும்.
இரண்டாவதாக, வெகுசனத்தை அல்லல்பட வைக்கின்ற தேசிய சுகாதார பிரச்சனைக்கு தொழிநுட்ப ரீதியிலான தீர்வைப் பெற்றுத் தரத்தக்க உயர் தரத்திலான ஆய்வுகள் நடைபெறும் தலைசிறந்த இடமாக அது தோற்றம்பெற வேண்டும். உலகிலேயே 4ஆவது இடத்தில் மிகப் பெரியளவில் பொருளாதாரத்தை நாம் ஈட்டியிருந்த போதிலும், ஒவ்வொரு நொடியும் தேசத்தில் ஒரு பிள்ளை போசாக்கற்ற நிலையில் பிறப்பதையும், ஆயிரம் பிள்ளைகளில் 53 பிள்ளைகள் தமது முதலாவது பிறந்த நாளைக் கூட உயிருடன் கழிக்க முடியாத நிலைமையையும் நாம் இன்னும் கண்டு கொண்டுதான் இருக்கின்றோம். அதேசமயம், உலக சனத்தொகையில் பாதி காசநோயாளர்கள் இந்தியர்களே. குருதிச்சோகை நோய் உள்ள பெண்கள் உலகளவில் இந்தியாவிலேயே உச்சபட்சத்தில் உள்ளனர். சில மாநிலங்களில் இது 60மூ இலும் அதிகமாக உள்ளது. தூய நீர், போசாக்குள்ள உணவு போன்றவை பல இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் இன்னும் மிகுந்த சவாலாக இருந்து வருகின்றது. தேசிய நலன்களில் அதிமுதன்மை வாய்ந்தவையாக விளங்கும் இந்த சிக்கல் வாய்ந்த விடயங்களை வினைத்திறன் மிக்க முறையிலும் பரந்தளவிலும் குறைந்தளவு வளங்களைப் பயன்படுத்தி நிறைந்த பயன் விளைவிக்கும் வண்ணமும் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதில் மானுட நலனோம்பு மையம் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக அவை பின்தங்கிய கிராமங்களில் வாழும் 70 கோடிப் பேரையும் சென்றடைய வேண்டும். மனித குலத்தை ஆண்டாண்டு காலமாகத் தொற்றியுள்ள நோய்களுக்கான தடுப்பூசிகளைக் குறைந்த விலையில் மேம்படுத்தும் சர்வதேச ஆய்வு நிறுவனங்களுடன் உறவு பூண்ட நிலையமாகவும் அது அமைய வேண்டும்.
மூன்றாவதாக, மானுட நலனோம்பு மையம் உடலியல் நலனையும் ஆன்மீக நலனையும் ஒன்றிணைப்பதற்கு அதிமுதன்மை வழங்கவேண்டும். பல் சமய ஆன்மீகத் தலமாக அது தோற்றம் பெற வேண்டும். வண்ண வண்ணப் பூக்களும் பறவைகளும் காட்சி தரும் பசுமையான சூழலாக அது தோற்றம் பெற வேண்டும். அச்சூழல் மிகச் சிறந்த முறையில் ஆன்மாவைப் பக்குவப்படுத்தும் வண்ணமும் ஆன்மீகத்தை நெறிப்படுத்தும் வண்ணமும் அமைக்கப்பட வேண்டும். பல்வேறுபட்ட சமயங்களின் நெருக்கமான பிணைப்பால், அந் நலனோம்பு மையம் அனைத்து சமய நம்பிக்கைகளிலுமுள்ள அருஞ்சிறப்புகளை ஈட்டி அத்தகைய நல் விடயங்களைத் துவண்டு போகும் ஆன்மாக்களை ஆற்றுகின்ற அருமருந்தாகப் பயன்படுத்த வேண்டும். மேலும் மனிதர்கள் தெய்வீக நெருக்கத்தை அடையவும் தமது ஆன்மீக அகவுணர்வை விழிப்படையச் செய்வதற்குமான கல்விச் சாலையாகவும் அது இருக்க வேண்டும்.
மானுட நலனோம்பு மையத்தின் நான்காவது தூணாக, உலகில் உள்ள அனைவருக்கும் பெறுமதிமிக்க அறிவை அள்ளி வழங்கும் தளமாக அது அமைய வேண்டும். பன்முகம் கொண்ட நம்பிக்கைகளை ஒன்றிணைத்துப் புடமிடும் மையமாக அது விளங்க வேண்டும். அது தேசத்தையே பெருமை கொள்ளச் செய்யும் அளவுக்கு விழுமியங்களைக் கற்றறிந்து அவ்விழுமியங்களைப் பின்பற்றும் வண்ணம் இளையோரைத் தூண்ட வேண்டும். அயோத்தியில் மதங்களை ஒன்றிணைப்பது முடியுமா? ஊழலிலிருந்தும் ஒழுக்கக் கேடுகளிலிருந்தும் சிகிச்சையளிக்கப்பட்ட சமூக உருவாக்கத்தை அங்கு முன்னெடுக்கலாமா? என்பவையே எம் முன் உள்ள கேள்விகளாகும். மானுட நலனோம்பு மையம் அதி சிறந்த பண்பாட்டைக் கற்பிக்கும் கல்வித் திட்டத்தைப் பற்பல சமயங்கள் எனும் ஒளிக்கற்றை கொண்டு ஆய்வுக்குட்படுத்தும் இடமாக அமைய வேண்டும். மேலும் அதனை இளையோர் நடைமுறைப்படுத்தத்தக்க வகையில் திறன்பட அவர்களுக்கு அறிவூட்டவும் வேண்டும்.
அதனை உருவாக்குபவர்கள் யார்? அந்த நிலையம் அரசாங்க, தனியார், சமூகக் கூட்டு ஆதரவு கொண்டதாக உருவாக்கப்படவும் ஆளப்படவும் செயற்படுத்தப்படவும் வேண்டுமென்ற யோசனையை நான் முன்வைக்கின்றேன். அரசாங்கம், கட்சிகள், நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற படையினர், சகல சமூகங்களையும் சேர்ந்த அறிஞர்கள், ஏனைய பங்குதாரர்கள் என்று அனைவரும் இதில் ஒன்றிணைய வேண்டும். அரசாங்கமும் தனியார் துறையும் இந்த நிலையத்தின் அபிவிருத்திக்குத் துணை செய்ய வேண்டும். அந்த நிலையம் இன, மத, சாதி, நிற, பால், தேச பேதமைகளைக் கடந்த மானுட நலனோம்புகையின் தனியடையாளமாகத் திகழ வேண்டும்.
அறிவொளி வீசும் குடிமக்கள் பரிணாமம் அடையும் உலகின் தலை சிறந்த இடமாக அயோத்தியை அடுத்த பத்தாண்டுகளில் நாம் காணலாம். பயன் விளைவிக்கும் கல்வி வழங்கும் இடமாகவும் பல் சமயங்களும் ஒன்றிணைந்து தமது நெறிகளைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் பேதமையின் பிடிகளிலிருந்து விடுபட்ட எண்ணங்களைக் கொண்ட இடமாகவும் தேசிய மாற்றத்துக்கான ஆக்கத்திறன் வியாபித்த இடமாகவும் அது அமைய வேண்டும். எமது ஐக்கியம் மிக முக்கியமானது. ஏனெனில் நாம் அறிவார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப எத்தனித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை, எதிர் சக்திகள் எமது பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக அமைதிக்கும் செழுமைக்கும் எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு மாற்றமடைந்த அயோத்தி தேசத்தின் வருங்காலம் மீதும் அதில் வாழும் நூறு கோடி மக்கள் மீதும் மகத்தான தாக்கத்தை உண்டாக்கும். இன்றைய நிலையில் இது விளைவுகளை விபரிக்கும் தருணமாகவே இருக்கின்றது. அது மெய்ப்பட காலம் எடுக்கும். எமது தற்சமய செயற்பாடுகளைச் சீர் செய்வதே இப்போது எமக்குள்ள பெரிய வாய்ப்பாகும். அவை எமது கடந்தகாலப் பகையுணர்வுகளை மனதில் வைத்து ஆட்சி நடத்துவதை விடுத்து எமது எதிர்கால வேட்கைகளைக் கொண்டே அமைய வேண்டும். நாம் செய்த மனித நேயத்தை மேம்படுத்துகின்ற செயற்பாடுகளையே எமது வருங்கால தலைமுறை வணக்கஞ்செய்யும். சமாதானத்தையும் ஒத்திசைவையும் கூறுபோடும் செயற்பாடுகளையல்ல. ஆயிரம் வருடங்களாக முரண்பாடுகளுக்கு வழிகோலிய தலைமுறைகளைப் போலல்லாது சகோதரத்துவத்தையும் தெளிந்த அறிவையும் கொண்ட தேசத்தை நிலைநாட்டிய முன்னுதாரணம் மிக்கவர்களாக இன்றைய தலைமுறையினர் நினைவு கூறப்பட இருப்பது இன்றைய தலைமுறையினருக்கு இப்போது கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பாகும். அயோத்தியில் மானுட நலனோம்பு மையம் நிறுவப்படுவதற்கு இந்த இலையுதிர் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் எமது கடந்தகாலத்து இலைகளை உதிர வைத்து ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் மாபெரும் முயற்சியாக அமையும். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேயமும் தேசமும் செழிப்புற்று அனைத்து சமுதாயத்துக்கும் ஊக்கத்தை வழங்குவதாய் அது அமையும்.
அயோத்தியில் மானுட நலனோம்பு மையத்தை எவ்வாறு வளர்க்கலாம் என்னும் கருத்தை நாட்டு மக்களும் நாடாளுமன்றமும் மாநில மன்றுகளும் ஆராய்ந்து முடிவெடுத்தல் வேண்டும்.