இதழ் 22

ஈழச் சூழலியல் – 09

சுற்றுலாத்துறை

ஈழப்பரப்பினுடைய சுற்றுலாத்துறையானது முன்னர் ஆராய்ந்தவாறான
காரணங்களால் சரிவடைந்து, தற்போது வழமைக்கு திரும்ப எத்தனிக்கின்ற தருவாயில் அண்மைக் கால கட்டத்தில் சுற்றுலாப்பயணிகளினுடைய வருகையை ஆராய்வோமாக இருந்தால், எந்தவிதமான பாரதூரமான பிரச்சினைகளும் இல்லாத 2018ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 11 லட்சத்து 8ஆயிரத்து 293 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்ட 2019ம் ஆண்டு அதே காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 71ஆயிரத்து 465 ஆகும். எனினும் கொரணா அச்சுறுத்தல் காணப்பட்ட 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாத இறுதி வரை, இலங்கைக்கு 71ஆயிரத்து 370 சுற்றுலாப்பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளனர். எமது நாடு சுற்றுலாத்துறையில் ஓர் நீண்ட வரலாற்றினை கொண்ட நாடாகும். இலங்கை சுற்றுலாத்த்துறை அதிகாரசபையின் தரவுகளின் படி 1971 ஆம் ஆண்டு ஈழப்பரப்புக்கு 39 ஆயிரத்து 654 சுற்றுலாப்பயணிகளே வருகை தந்துள்ளனர். அந்த ஆண்டில் மாத்திரம் வழமையாக 3.4 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளது. அன்றிலிருந்து 2019ம் ஆண்டு அதாவது கொரணா அச்சுறுத்தலுக்கு முன்னர் 19 லட்சத்து 13 ஆயிரத்து 702 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவ்வாண்டு சுற்றுலாத்துறையின் மூலம் 3606.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. ஈழ வரலாற்றில் அதிகளவான சுற்றுலாப்பயணிகளை உள்ளீர்த்த ஆண்டாக 2018ம் ஆண்டு பதிவாகியுள்ளது. 2018ம் ஆண்டில் 23லட்சத்து 33ஆயிரத்து 796 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதுடன், 4380.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமும் கிடைத்துள்ளது.

எமது நாடும் பன்னாட்டு சுற்றுலா நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் போட்டித்தன்மை கொண்ட நாடாகவே காணப்படுகின்றது. இலங்கை சுற்றுலா அதிகார சபையானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்பும் வேலைத்திட்டமாக பல செயற்திட்டங்களை வகுத்தது. அதன்கீழ் ஈழத்தின் மிகச்சிறந்த கரையோரங்களாக அறியப்பட்ட கிழக்கு மாகாணத்தின் முதன்மை பொழுதுபோக்கு மையங்களான அறுகம்குடா, பாசிக்குடா மற்றும் திருகோணமலையில் நிலாவெளி, புறாத்தீவு, கின்னியா போன்ற பல இடங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அதே போன்று ஈழத்தின் தென்பகுதியில் மாத்தறை ஹிக்கடுவை, மிரிச, அம்பாந்தோட்டை போன்ற பல இடங்களை சுற்றுலாத்துறை மையங்களாக மெருகூட்டி அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென சுற்றுலாத்தளங்களை மெருகூட்டல் மற்றும் அபிவிருத்தி வேலைப்பாடுகளோடு மட்டும் நின்றுவிடாமல், வருகின்ற சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்றாற்போல் பௌதீக வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் வேண்டும். உதாரணமாக தங்குமிடவசதிகள், போக்குவரத்து, ஓய்விடங்கள், சாலைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கு என விசேடமான விழாக்களை ஒழுங்கமைக்க முடியும். சுற்றுலாப்பயணிகளுக்கென, அவர்களை கவரும் விதமாக சூதாட்ட விடுதிகளை சட்டபூர்வமாக்க பராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சூதாட்ட விடுதிகள் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவென உருவாக்கப்பட்டுள்ளன.எனினும் எமது நாட்டை பொறுத்தவரையில் எமது பாரம்பரியங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பாடசாலைகள், பொதுஇடங்கள், வழிபாட்டிடங்களுக்கு அருகில் அமையாதவாறு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இப்படியான விடுதிகள் பரவலாக்கப்படாமல் இருப்பதும் அவசியமாகும். அத்தோடு இறுக்கமான கட்டுப்பாடுகளோடு நிர்வகிக்கப்படவும் வேண்டும்.

சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கென உருவாக்கப்படும் தங்குமிட வசதிகள் அழகிய சூழலில் அமைக்கப்பட்டாலும், வாகன இரைச்சல்கள், அசுத்தமான சுழல், திருடர்கள், போதைப்பொருள் பிரச்சினைகள் இல்லாத இடங்களாகவும் பாதுகாக்க வேண்டும். அத்தோடு சுற்றுலா மையங்களாக விளங்கும் புனித ஸ்தலங்கள், வழிபாட்டிடங்கள், தொல்பொருட்காட்சியங்கள் தமக்கேயுரித்தான தனித்துவ மகிமையோடு விளங்குவதை உறுதி செய்தல் வேண்டும். ஈழத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவென அரசும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றது. சர்வதேச தொலைக்காட்சி ஊடகங்க;டாக இலங்கையினுடைய சுற்றுலா வருகையினை ஊக்கப்படுத்தல், சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக சர்வதேச மாநாடுகளை தாயகத்தில் ஒழுங்குபடுத்தல், உலகக்கிண்ணப்போட்டிகள் மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை தாயகத்தில் நடாத்த வழிவகுத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவென இளைஞர்களிடையேயும் தத்தமது பிரதேசங்களை அழகுபடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தல் சிறப்பாகும். கடந்த வருடம் முகப்புத்தகங்களின் வாயிலாக எழுந்த சிந்தனையினால் தத்தமது பிரதேசங்களில் சுவரோவியங்களை வரைந்து அழகுபடுத்தல் தன்னார்வமாக நாடாளவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெற்றது. இவ்வாறான தோற்றப்பாடு ஓர் சமூகத்தின் தன்னார்வ சிந்தனை எழுச்சியாகும். இப்படியான செயற்பாடுகளை அரச மற்றும் தனியார் அமைப்புகளும் ஊக்குவித்தல் அவசியமாகும். ஈழத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும் போது பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டி நிற்கின்றமை வரலாறுகளில் இருந்து புலப்படுகின்றது.

சுற்றுலாத்துறை என்பதை வரைவிலக்கணப்படுத்துவோமாயின், ஜக்கிய நாடுகள்சபை உலக சுற்றுலாத்துறை நிறுவனம் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகிறது. ‘சம்பளம் பெற்றுக்கொள்ளும் எந்த செயற்பாட்டுடனும் தொடர்பில்லாத, பொழுதுபோக்கு வணிகம் மற்றும் வேறு நோக்கங்களுக்காக, 24 மணித்தியாலங்களுக்கு குறையாமலும், ஒரு வருடத்திற்கு மேற்படாமலும் தமது சுற்றுசூழலுக்கு வெளியே சென்று அங்கு தங்குதல் ஓர் சுற்றுலாச் செயற்பாடாகும்.” சுற்றுலாத் துறையானது ஓர் சேவைத்துறை செயற்பாடாக ஸ்பெயின், பிரான்ஸ், மெக்சிக்கோ போன்ற பல நாடுகளில் காணப்படுகின்றது. இருந்தபோதிலும் உலகின் பல பகுதிகளில் அறிவுத்துறையுடன்
தொடர்புபடும் வணிகமாக சுற்றுலாத்துறை மாறிவிட்டமை குறிப்பிடத்தக்கது. உலகமானது உயர்தரத்திலான பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பனவற்றை நோக்கிச்செல்வதால் சுற்றுலாத்துறையானது பொருளாதார ரீதியாக மிகுந்த வளவாய்ப்புகளை கொண்டதாக மனித செயற்பாடுகளால் வழிப்படுத்தப்படுகின்றது. சமூக, அரசியல், மற்றும் பொருளாதார ரீதியான ஒன்றிணைப்பின் பலமான குறிகாட்டியாகவும் சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. அவ்வகையில் எமது ஈழப்பரப்பும் தகுந்த பங்களிப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘இலங்கைக்கு விஜயம் செய்யுங்கள்” 2011 நிகழ்ச்சிதிட்டம் புதிய சந்தைகளிலிருந்து சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கு, பெரிதும் உதவியது. சீனா, ர~;யா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு போன்ற தோற்றம் பெற்று வரும் சந்தைகளிருந்தான அதிகரித்த வருகைகள் 2011ல் காணப்பட்டது. 2011ல் ஈழத்தின் 08 தனித்துவமான தொனிப்பொருட்களின் கீழ் சுற்றுலாத்துறையானது விருத்தி நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது.


குறிப்பாக கடற்கரை, பாரம்பரியம், இயற்கை வனப்பு, கானக விலங்குகள், விழாக்கள் ,விளையாட்டு மற்றும் துணிகர சாகசங்கள், மகிழ்ச்சி மற்றும் சாராம்சங்கள் என்பனவற்றின் கீழ் இடம்பெற்றன. புதிய உற்பத்திச்சாதன அபிவிருத்திக்கான செயற்பாடுகள் அம்பாந்தோட்டை தொடக்கம் யாழ்ப்பணம் வரை விரிவுபடுத்தப்பட்டன. ஈழத்தினை சுற்றுலாத்தளமாக உலக அரங்கில் பிரச்சாரப்படுத்தும் போது எம்நாட்டின் அரிய சொத்தாகவும், உலகின் எட்டாவது அதிசயமாகவும் திகழும் சிகிரியா பயன்படுத்தப்படுகின் றமை சிறப்பம்சமாகும். சுற்றுலாப்பயணிகளின் வருகையின் போது பிரதேசம் சார்ந்த பாரம்பரிய அடையாளங்களை சுற்றுலாப்பயணிகளுக்கு பிரச்சாரப்படுத்தல் அவசியமாகும். மேலும் சுற்றுலாப்பயணிகளினூடான இடைத்தொடர்புகள் மூலமாக ஈழத்தினுடைய கலாச்சாரம் உலகரங்கில் பிரசித்தி பெறல், பல்கலாச்சார அறிவு, ஈழத்தினுடைய கலைநுட்பம் வெளிப்படல், கலை வடிவமைப்புகள் பிரசித்தியடைதல், சுதேச பண்பாட்டு அம்சங்களை பாராட்டுதல், பண்பாடுகளை பரிமாறுதல், இன ரீதியான புரிதல்கள் ஏற்படுத்தப்பட்டு உலக சமாதானத்திற்கு வழிவகுத்தல், மொழி தொடர்பான அறிவுகளின் பரிமாற்றம் போன்ற பல நன்மைகள் கிடைப்பனவுக்கு எட்டும்.

ஆராய்வோம்………

Related posts

கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் இந்தியாவுடன் போட்டியிடலாமா? (கிரேக் சப்பல் சொல்வதென்ன?) – 02

Thumi2021

பார்வைகள் பலவிதம்

Thumi2021

தாஜ்மஹாலின் பேர்த்தி – 02

Thumi2021

Leave a Comment