இதழ் 22

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும் – 02

நீதித்துறையும் சட்டத்துறையும் இலங்கையில் பெயரளவில் இருப்பதால், பாலியல் பலாத்காரம், வரதட்சணை, விபச்சாரம், கருச்சோதனை, குடும்ப வன்முறை, சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குதல், கருக்கலைப்பு, முறையற்ற பாலியல் தொடர்புகள் வடக்கு மாகாணத்தில் மலிந்துள்ளன. சான்றாக, புங்குடிதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவி வித்தியா ஆடவர்கள் பலரால், சின்னாபின்னமாக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். இதனால், பெண்கள் வீதியில் சுதந்திரமாக நடமாட அச்சமான , பயமான , மனநிலையைக் கொண்டுள்ளனர்.

தாயுரிமை தூக்கியெறியப்பட்டது பெண்ணினம், உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். வீட்டிலேயும் ஆட்சிச் சுதந்திரத்தை ஆண் கைப்பற்றினர். பெண்
இழி நிலைக்குத் தள்ளப்பட்டாள். ஆணின் காம இச்சைக்கு அடிமையானாள்;. கேவலம் குழந்தை பெறும் சாதனமாக ஆகிவிட்டாள். வடக்கு மாகாணத்தில் கல்வி கற்ற ஆடவர்கள் பணத்திற்காகவும் சமூகத்தில் அந்தஸ்திற்காக, குழந்தையைப் பெற மனைவியைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் பணம் கேட்டு கொடுமைப்படுத்துவதையும் விவாகரத்துப் பெறுவதையும் காணலாம். வடக்கு மாகாணத்தில் இவ்வாறன சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதனால், படித்த பெண்களும் பணக்கார பெண்களும் பலர் பலவிதமான உள நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையான சமூகமாக தமிழ்ச் சமூகம் திகழ்கின்றது. அந்த சமூகத்தில் பெண்களின் திருமணம், திருமணத்திற்காக வழங்கப்படும் சீதனம் – ஆடவர் மீது கொண்ட பயம் – என்பன இளம் பெண்களின் திருமணத்தைப் பிற்போட வைத்துள்ளது. இதனால், திருமண வயதைக் கடந்த பெண்கள் பலர் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ளனர். இவர்களுக்கு, வயதான பெற்றோர்களைப் பராமரித்தல், ஊனமுற்ற உறவினர்களைப் பாதுகாத்தல், அநாதைகளாக இருத்தல் என பொறுப்புக்கள் பல. பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்வதற்கு சென்றால், மொழி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் எதிர் கொள்ளும் சவால்கள், போக்குவரத்துப்
பொலிஸார் சிங்கள மொழியில் கதைத்து பணம் பறித்தல், நீதிமன்றங்களுக்குச் சென்றால், அந்தரங்கமான விடயங்களை எமது பண்பாட்டுக்கு மாறாக கேட்டல் என மேலதிக உளச் சுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று வடக்கு மாகாணத்தில் உள்ள முதலாளித்துவ
சமூகத்தில் பாலியல் பிரசாரமாக, பாலியல் விற்பனை பண்டமாக, பெண் விபச்சாரியாக – அடிமையாக – வாழ்தல், பெண்கள் பிள்ளைகள் பெறும் கருவியாக நோக்குதல் முதலிய கருத்தியலால் பெண்கள் உளவியல் முரண்பாடுகளுக்கு அதிக அளவில் முகம் கொடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் சோசலிச சமூகத்தில் எதிர் பார்க்க முடியாது. பாலியல் பிரசாரம் இல்லாத பாலினத்திற்கு அளிக்கப்பட வேண்டிய பங்கும் மதிப்பும் உணர்வுடன் வழங்கப்பட்டு, பெண் விபச்சாரியாக, அடிமையாக இல்லாமல் விடுதலைப் பெற்ற சுதந்திரமாக வாழ முடியும்.

அழகும், கவர்ச்சி, அழகு சாதனங்கள், தங்க ஆபரணங்கள், காதல் முதலியவற்றின் உண்மை நிலையைப் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும். புற அழகுக் கவர்ச்சியிலும் பார்க்க அக அழகைப் பெண்கள் வளப்படுத்த வேண்டும். ஷநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்ஷ , ஆளுமையும் சமத்துவமும் சிறந்தவை. முதலாளித்துவ விற்பனைப் பண்டங்களான அழகு சாதனப் பொருட்களில் மதி மயங்கி விடக்கூடாது. தமக்கு வசதியும் மகிழ்வும் தரக்கூடிய ஆடைகளை அணியலாம். ஆண்களின் பார்வைக்கு அணிவதைத் தவிர்க்கலாம். ஆண்களின் உடை பெண்களுக்கு வசதியும் சமத்துவமும் தரவல்லது.

வடக்கு மாகாணத்தில் அதிக அளவில் ஆடம்பர புடைவை மாளிகைகளும் தங்க மாளிகைகளும் முக ஒப்பனை நிலையங்களும் பெண்களை சிந்திக்க விடாமல் தடுத்து, தமது வணிகத்தை ஆபாசமான விளம்பரங்கள் மூலம் எமது சமூகத்தில் புகுத்தி பெண்களைப் போட்டி, பொறாமை சூழலுக்குள் தள்ளி அழகு என்ற பதத்தைப் பயன்படுத்தி உள நேயாளர்களாக்கியுள்ளனர். இதை பெண்களே, உணர்ந்து வெளியில் வந்தால், விமோசனம் உண்டு இல்லாவிடின் வெளி நாட்டு கழிவுப் பொருடகளை வி;ற்கும் இடமாக வடக்கு மாகாணம் திகழும்.

சமூகத்தில் பெண்களின் அந்தஸ்தும் அவர்களது வாழ்வியல் அம்சங்களும் மேம்படுதல் சமூக மாற்றத்தின் மிக முக்கியமான அம்சமாகும். வாழ்வியல் அம்சங்கள் மேம்படுதல் என்பதன் பொருள் பெண்களுக்கு சமவாய்ப்புக்களும் சமசந்தர்ப்பங்களும் வழங்கப்படுதல் ஆகும். இதன் மூலம் பெண்ணின்; உரிமைகளும் சுதந்திரமும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்யலாம். பெண்களின் கல்வி முன்னேற்றம், அவர்களின் சுகாதாரமும் ஆரோக்கிய நிலையும் மேம்படுதல் என்ற இரு விடங்களையும் எடுத்துக்காட்டக் கூடிய குறிக்காட்டிகள் சில உள்ளன.

வடக்கு மாகாணத்தில் ஒரு பெண் தாய்மையடைவதற்கு முன் அறிந்திருக்க வேண்டிய விடயங்களான:- பெண் சட்ட ரீதியாக 18 வயதைப் பூர்த்தியடைந்திருத்தல், தகுந்த உடல், உள, சமூக ஆரோக்கியத்தைப் பெற்றிருத்தல், குழந்தை வளர்ப்பிற்கு உரிய குடும்ப பொருளாதாரச் சூழ்நிலை, இரத்த உறவினரிடையே திருமணம் புரிவதால் சில பரம்பரை நோய்கள் அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுதல், குழந்தைகளுக்குக் குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு போலிக் அமிலம் கொண்ட மாத்திரைகளை உட்கொள்ளல், சிறிய வயதில் பெண்களுக்குப் போடப்படும் கருப்பைக் கழுத்துப் புற்று நோய் ருபெல்லா நேய்கள் தடுப்பூசிகளை உரிய வயதில் பெறல், கருத்தரிப்பதற்கு முன்னர் வைத்திய ஆலோசனைப் பெறல் முதலிய விடங்களில் சரியான விழிப்புணர்வுகள் இன்மையால், கருவுற்ற பெண்களும் குழந்தையை ஈன்றெடுத்த தாய்மாரும் சரியான தாங்குதிறன் இன்மையால் பல உள நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர்.

நவீன உலகில் அனைத்து உணவுகளும் வியாபாரத்தின் பொருட்டு, இரசாயன பதார்த்தங்கள் கலக்கப்படுகின்றன. பெண்கள் விரதம், நோன்பு முதலியவற்றின் விளக்கங்களைத் தவறுதலாக புரிந்த பெண்கள் தொடர்ச்சியாக உபவாசம் இருந்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண தவறுகின்றனர். இதனால், உடலுக்கு சக்தி, வளர்ச்சி, நோய் எதிர்ப்பு முதலியன தடைப்படுகின்றன. இவ்வாறான ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாத பெண்கள் பாலியலில் நாட்டமின்மை, கருவுறாமை, கருச்சிதைவு, இயற்கையாக சிசுக்கள் பிறக்காமல் சிசேரியன் சிகிச்சைக்கு உள்ளாகி வாழ்நாள் முழுவதும் துன்புறுதல் முதலிய உபாதைகளுக்கு உள்ளாகின்றமையால், வாழ்க்கையில் விரக்தியின் விளிம்பிற்குச் செல்கின்றனர்.

பொருளாதாhர ரீதியாக உழைத்து வாழும் பெண்கள் கூட உளவியல் ரீதியாக அடிமையாக வாழ்கின்றனர். அடிமை உணர்வுகள் – மூடநம்பிக்கைகள் – சிறுவயதிலிருந்தே ஊட்டப்பட்டவர்கள். உளவியல் ரீதியாக அடிமை உணர்வில் இருந்து விடுபட – சுதந்திர காற்றைச் சுவாசிக்க – முடியாதவர்களாக இருக்கின்றனர். பெண்கள் சிறந்த ஆளுமையுள்ளவர்களாக சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்களாக தீர்மானம் எடுக்கும் திறன் உள்ளவர்களாக உருவாக்குவதற்கு கல்வி அறிவுடன் சிறுவயதிலிருந்தே தன்னம்பிக்கை – உயர்வான எண்ணங்கள் – ஊட்டப்பட்டு, உளவியல் ரீதியான பலத்துடன், வளர்க்கப்பட வேண்டும்.

பருவம் அடையும் போது உடல் அடிப்படையில் பெண்ணைத் தனிமைப்படுத்தி, அந்நியப்படுத்தும், பயமுறுத்தும், கீழ் நிலைப்படுத்தும் குடும்பக் கருத்தியல் நேரடியாக நடைமுறைக்கு வருவதால், பெண்ணாணவள் உளவியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படுகின்றாள். இதனால், பொறுமை இழந்த இயற்கை பாகுபாடுகள் பார்க்காமல் கொரோனா மூலம் அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளது.

பெண் பருவமடைந்ததும் மாதவிலக்கு என்று கூறி மூலைக்குள் தள்ளப்படுகினறாள். மாதவிலக்கு நாட்கள் தீண்டாத்தகாத நாட்களாக்கி, அந்நாட்களில் அவள் அசுத்தமானவள் பலவீனமானவள், மங்கல நிகழ்வுகளிலிருந்து ஒதுக்கி வைத்தல், பூப்புனித நீராட்டு விழா என்ற பெயரில் பெண்ணை கேளிக்கைக்கு உள்ளாக்கி அறிவு சீரழிந்த பண்பாட்டைக் கட்டிக்காத்தல் என இன்னோரன்ன செயற்பாடுகளையும் சுமைகளையும் பெண்கள் மீது ஏற்றி அவர்கள் உளவியல் ரீதியாக சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

மேலும் விடயங்களை அடுத்த இதழில் பார்போம்…

Related posts

நவீன வேதாள புதிர்கள் 01 – நான்கு மூன்றுகள்

Thumi2021

இறையாண்மை – 03

Thumi2021

சித்திராங்கதா – 22

Thumi2021

Leave a Comment