இதழ்-23

எனக்கு கொரோனாவா?

அவரவர் அலுவல்களை மட்டும் பாருங்கள் என்று தான் அலுவலகம் என்று அதற்கு பெயர் வைத்திருக்க வேண்டும். ஒருநாளாவது அவ்வாறு அலுவலகம் இருக்க வேண்டுமென்று ஒவ்வொருநாளும் ஆசைப்படுபவன் நான். அன்றும் அப்படித்தான். ஆசைப்பட்டுக்கொண்டே அலுவலகம் வந்தேன். வாசலிலேயே என் வாயைப் பிளக்க வைத்துவிட்டான் வாயிலைக் காப்பவன். அவன் தான் செக்கு மாடு போல வாசலையே சுத்தும் செக்கியுரிட்டி.

‘சுந்தரமண்ணையின் மகனுக்கு கொரோனாவாம்.”

‘என்னையா சொல்றாய்? எப்படி வந்தது? யார் கொடுத்தது?”

மணமாகாதவளின் மகப்பேற்றுக் கதை கேட்பது போல என் கேள்வி இருந்ததை கேட்ட பின்புதான் உணர்ந்து கொண்டேன். என்ன செய்ய? சொல்லி விட்டேனே.. அவனும் கேட்டு விட்டானே.. இனி திரும்ப வாங்க முடியாது. இதை நான் யோசிப்பதற்குள் அவன் அதற்கு பதிலளித்திருந்தான். கொலை, களவு, கற்பழிப்பு போல இவை இப்போது அபத்தமான வார்த்தைகள் அல்ல, அன்றாட வார்த்தைகள்.

யாழ்ப்பாண நவீன சந்தையில் பி.சி.ஆர் எடுக்கப்போன கொத்தணியில் தொத்தியிருக்கிறதாம் சுந்தரம் அண்ணையின் மகனுக்கு. அவனை கோப்பாய்க்கு கொண்டு சென்று விட்டார்களாம். சுந்தரம் அண்ணையையும் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி இருக்கிறார்களாம். இன்று அவருக்கு பிசிஆர் எடுப்பார்களாம். பாடமாக்கி அதை ஒப்புவிக்கும் பச்ச பிள்ளை போல செக்யூரிட்டி சொல்லி முடித்தான். இதற்கு முதல் வந்தவர்களுக்கும் அவன் இதுபோல்தான் சொல்லியிருக்க வேண்டும் என்பது அவன் மூச்சு விடாமல் சொல்லி முடித்ததில் தெரிந்தது.

அப்படி என்றால் சுந்தரம் அன்னைக்கு கொரோனோவாக இருந்தால் எங்களையும் தனிமைப்படுத்தி விடுவார்கள் பிறகு எங்களுக்கும் கொரனோவாக இருந்தால்…. அப்பப்பா! நினைக்கவே நெஞ்சு பதைபதைக்கிறது. கடவுளே! தயவுசெய்து சுந்தரம் அன்னைக்கு நெகட்டிவ் ஆக வர வேண்டும். அவருக்கு கோரோனோ இருக்கக்கூடாது.

பார்த்தீர்களா! சுயநலமாக எனக்கு அதை தா இதைத் தா என்று கடவுளிடம் வேண்டியவர்களை அடுத்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வைத்துவிட்டது இந்த கொரோனா. எனது நடவடிக்கைகளைப் பார்த்து நானே சிரித்துக் கொண்டேன். எனது அலுவலகத்தை பார்க்க எனக்கே பயமாக இருந்தது. அலுவலக கட்டிட சுவர்களில் எல்லாம் கொரோனா கிருமிகள் நெளிவதாக தெரிந்தது.

கொரோனா வந்து இறந்தவர்களைவிட கொரோனா வந்துவிடுமோ என்கிற பயத்தில் இறந்தவர்கள் தான் அதிகம் போல. மேலதிகாரிகள் சிலர் வயதானவர்கள். இந்த செக்கியுரிட்டி தகவல் சொல்லும் தோரணையிலேயே பலருக்கு இதயத்துடிப்பு நின்றுவிடும். இதை அவனுக்கு விளங்கப்படுத்தி விட்டு எனது அறைக்கு சென்றேன்.

எனது அலுவலக அறை மேல் மாடியிலே உள்ளது. வழமையாக சுந்தரம் அண்ணை கீழே உள்ளவர்கள் எல்லோருக்கும் தேநீர் கொடுத்து விட்டு மேலேயுள்ள எங்களுக்கு தேநீர் கொண்டு வருவதற்குள் அது ஆறிப்போயிருக்கும். ஆனால் சூடு ஆறுவதற்கு முன் குடித்து விடுங்கள் என்று சொல்லி விட்டுப் போவார். நல்ல பண்பான மனிதர்! அவர் கொண்டு வரும் தேநீரில் சூடு அதிகமாக இல்லாவிட்டாலும் சாயம் அதிகமாக இருப்பதால் குடித்து விட முடிகிறது. ஆனால் அதற்குள் கொரோனா கிருமிகளும் இருந்திருக்குமா என்று நினைக்கும் போதுதான் பயமாக இருக்கிறது. அவர் தொட்ட இடங்களிலெல்லாம் கிருமியிருக்கும் என்று இல்லை. ஆனால் அவர் தொட்ட இடங்களை நானும் தொட வேண்டி இருக்கும். அங்கே சிலவேளை கிருமி இருக்கலாம். எனது அறைக்குள் போகவே பயமாக இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்கு நான் விடுமுறை எடுக்க முடியும். இன்று சில அவசரமான வேலைகளும் இருக்கின்றன. நான்தானே அதை செய்து முடிக்க வேண்டும்.

சீனாவில் கொரோனா ஆரம்பமான போது நாங்கள் அதை வெளிநாட்டு செய்தியாக கடந்து சென்றோம் உலகம் முழுவதும் அது மெல்ல மெல்ல பரவத் தொடங்கும் போதும் அது எங்களுக்கு வெளிநாட்டு செய்தி தான் ஆனால் இலங்கைக்குள் முதலாவது தொட்டாலே அடையாளம் காணப்பட்ட போது எங்கள் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது போல் பதைபதைத்துப் போனோம். அது மெல்ல மெல்ல கொழும்பை சுற்றி பரவத் தொடங்க பயந்து போனோம். பிறகு பழக்கப்பட்டுப் போனோம். யாழ்ப்பாணத்திற்கு வராதவரை உள்நாட்டு செய்தியாகவே அதையும் கடந்து போனோம். யாழ்ப்பாணத்திற்கும் வந்தது. ஆரம்பத்தில் பயந்தோம். இப்போது பழகிவிட்டோம். ஒரு கொரோனா நோயாளி இனங்காணப்பட்ட போதே நாடுகளை முடக்கியவர்கள் நாங்கள். இப்போது எத்தனையோ தொற்றாளிகள்? நாடுகள் முடங்கவில்லை. வீடுகள் மட்டும் முடக்கப்படுகின்றன. ஏனென்றால் ஒட்டு மொத்தமாக முடக்கினால் பல வீடுகளில் அடுப்பெரியாது. நாட்கணக்கில் நிவாரணம் கொடுக்கலாம். மாதக்கணக்கில் எப்படி கொடுப்பது? ஆக அரசுகளுக்கும் வேறு வழி இல்லை. கொரோனாவுடன் வாழப்பழகச் சொன்னார்கள்.

இவ்வாறு என் வேலைகளைப் பார்க்க விடாமல் கொரோனா நினைவுகள் என்னை கட்டிப்போட்டதை நினைத்த போது நேரம் மதியத்தை தாண்டியிருந்து. விரைவாக மதிய உணவை முடித்துவிட்டு என் வேலைகளை பார்க்கத் தொடங்கினேன். சில கடதாசிகளில் நான் கையெழுத்துப் போட வேண்டியிருந்தது. அந்த கடதாசிகளை கொண்டுவந்தவர்களுக்கு கொரோனா இருந்திருந்தால் , அந்த கிருமிகள் காகிதத்தில் இன்னும் உயிரோடிருந்தால்…

கதாசிரியரின் கற்பனைகளும் தோற்குமளவுக்கு என் கற்பனைகள் சிறகடித்துப் பறந்தன. எல்லா கடதாசிகளுக்கும் சனிடைசர் அடிக்க முடியுமா? எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டதும் விரைவாக என் கைகளுக்கு சனிடைசர் போட முடியும். அதுவரை என் கைகளை என் முகத்தில் வைத்துவிடக் கூடாது. அவ்வாறு நினைத்த போதுதான் என் மூக்கும் கடிப்பதாகப் பட்டது. சொறிய முடியவில்லை. என் கைகளுக்கு மனதால் விலங்கிட்டேன்.

கொரோனா சிந்தனைகளே கடிகார முள்ளை இயக்கியதால் நேரம் போனதே தெரியவில்லை. நாளை அலுவலகம் வருவது உறுதியில்லாத காரணத்தினால் தேவையான கோப்புகளை கொண்டு செல்ல யோசித்தேன். கோப்புக்களில் கொரோனா குடி கொண்டிருந்தால் நிலைமை விபரீதமாகி விடுமென்பதால் தவிர்த்தேன். மடிக்கணினியை மட்டும் மடக்கி வைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டேன்.

சகல உடைமைகளையும் வீட்டிற்கு வெளியிலேயே களைந்து விட்டு கிணற்றில் மோட்டரைப் போட்டு நன்றாக தோய்ந்து விட்டு எல்லா உடைமைகளுக்கும் சனிடைசர் அபிசேகம் செய்து விட்டு வீட்டிற்குள் சென்றேன். வயதான பெற்றோர். வயதுக்கே உரிய சில நோய்கள். வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவர்களுக்கு கொரோனாவை நான் கொடுத்துவிடக்கூடாதென்பதில் உறுதியாக இருந்தேன்.

ஏதாவது கிருமிகள் தொண்டையில் இருந்தால் எரிந்து போகட்டுமென்று சுடச்சுட சுடுநீர் குடித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அலுவலக நிர்வாகியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்புக்கள் அதிர்ச்சி தரலாம். ஆனால் எல்லா அதிர்ச்சிகளும் துன்பத்தை தருவதில்லை.

காத்திருங்கள்…

Related posts

நவீன வேதாள புதிர்கள் 02 – மடங்குகளை மடக்கு

Thumi2021

ஈழச்சூழலியல் – 10

Thumi2021

காற்றுக்கு பேர் என்ன?

Thumi2021

Leave a Comment