இதழ்-23

சிங்ககிரித்தலைவன் – 23

உத்தம சிற்பி

முகலன் மந்திரித்து விட்டவனைப்போல அந்தக் கூடைப்பெண்ணின் பின்னால் நடந்து போனான்… அவளோ இடைக்கிடை அவனைத்திரும்பிப் பார்ப்பதும் புன்னகைப்பதும் நடப்பதுமாக தொடர்ந்தாள்… அவள் நடக்கும் போது வளைந்து வளைந்து ஆடும் அவள் இடையை ரசிப்பதும், பின்னிவிட்ட கூந்தலின் ஆட்டத்தைக் கணிப்பதுமாக இருந்த முகலன், அவள் திரும்பும் போதெல்லாம் கடற்கரையின் அழகை இரசித்தான் …

இப்போது இரவும் பகலும் தம்முள் கலந்து, மயக்கம் தரவல்ல மகவொன்றைப் பொழுதாய் பெற்றிருந்தன… அந்த பொன்னிறப்பொழுதில், கீழக்கரை ஜாலக்கரையாக மாயம் செய்தது… பாணன் ஒருவன் கரைவந்திருந்த படகொன்றின்மீதிருந்து,

‘ புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியில் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென
நல்லன வாயின தோழியென் கண்ணே..’ (ஐங்குறுநூறு.189)

என்று சங்கப்பாடலை யாழ் இசைத்துப் பாடத்தொடங்கியிருந்தான்… பகலெல்லாம் உழைத்துக் களைத்த சிலர் பாணனின் குரலில் மயங்கி அவனைச் சூழ அவன் குரலும் யாழிசையும் இன்னும் அதிகமாகிக் காற்றோடு கலந்தது! குளிர்ந்த காற்றும் பாணனின் பாடலும் கடலின் பரிசமும் முகலனின் கடந்த கால துன்ப வாழ்வை மறக்கச்செய்தது… உண்மையில் அவன் மந்திரித்து விடப்பட்டவன் போலத்தான் மாறியிருந்தான்!

Hindu temple - Wikipedia

அவளுடன் அவன் நீண்ட தூரம் நடந்து வந்து ஒரு கோயிலை அடைந்தான். அந்தக்கோயில் இப்போது தான் கட்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்… கருங்கல்லில் பீடமும் தூண்களும் நிறுத்தப்பட்டிருந்தது… அந்தத் தூண்களில் அழகிய அழகிய சிற்பங்கள் குறைவேலைகளாக செதுக்கப்பட்டிருந்தது.. சிலது முடிவடைந்துமிருந்தது… அதில் கையிலே கரும்பு ஏந்தி நிற்பதைப்போல வடிவமைக்கப்பட்டிருந்த பெண்ணொருத்தியின் சிற்பம், இந்தக்கூடைபெண்ணுடன் எவ்வளவு ஒத்துப்போகிறது என்ற ஆராய்ச்சியில் தான் தேடிவந்த மகாநாமரையே மறந்து போயிருக்கவேண்டும் முகலன்! ஒவ்வொரு தூண்களின் கலைவண்ணங்களையும் மங்கிய ஒளியில் பார்த்தபடியே நடந்தான் முகலன்…
அர்த்த மண்டபத்தில் இருந்து,

‘வா…முகலா…வா..’ என்ற மகாநாமரின் அழைப்பால் திடுக்குற்ற முகலன், தன்நிலையடைந்து குரல் வந்த திசையில், திரும்பினான்… சிறிய தீப்பந்தம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது… செதுக்கப்படாத கருங்கல் பாளத்தின் மேலே மகாநாமரும் உத்தமரும் அமர்ந்திருக்க அவர்களுக்குப்பின்னால் சீலகலனும் நின்றிருந்தான்… முகலன் அவர்களை நெருங்கிச் சென்று வணங்கினான்…

‘உத்தமர் தான் அமைக்கும் இந்த சிவாலயத்தை எனக்கு காண்பிக்க அழைத்துவந்தார்… இருவரும் பல விடயங்களை ஆலோசித்துக்கொண்டிருந்தோம்…நேரம் போனதே தெரியவில்லை… நீ அசதியாக உறங்கிக்கொண்டிருந்தாய்… உன்னை எழுப்ப விரும்பவில்லை… ஆமாம் உன்னை அழைத்து வந்த குழலி எங்கே..?’

‘ஓ … அவள் பெயர் குழலியா..?’ முகலன் தனக்குள் முணுமுணுத்தான்…

‘என்ன முகலா … அசதி தீரவில்லையா…? குழலியிடம் உன்னையும் இங்கே அழைத்துவர சொல்லியிருந்தேனே… வழியில் ஏதும் வம்பு செய்தாளா?’ என்று உத்தமர் கேட்க,

‘ஹம்… எங்கே… உங்கள் இளவரசருக்கு தான் பேச்சே வரவில்லையே… பிறகு எப்படி..? வழிமட்டும் தான் காட்டினேன் பெரியப்பா…’

என்று முகலனின் பின்னே, செதுக்கப்படாத தூணில் சாய்ந்து நின்றபடி குழலி தன் கூடையை மார்போடு அணைத்துக்கொண்டு கூறினாள்… முகலனுக்கு அவளைத்திரும்பிப் பார்க்க வேண்டும் போல் இருந்தாலும் மகாநாமரும் உத்தமரும் முன்னே இருப்பதால் தன் ஆசைக்குதிரைக்கு கடிவாளம் போட்டுக்கொண்டான்… முகலனின் கண்களில் வெட்கம் எட்டிப் பார்த்தது!
‘மகனே, முகலா … உத்தமரின் தம்பியின் மகள் தான் இந்தக் குழலி… குறும்புக்கார பெண்… என்னுடனேயே வம்பு செய்வாள்… கடந்த முறை இங்கு வரும் போது கைப்பாவை வைத்து விளையாடியவள்… கடகடவென வளர்ந்து விட்டாள்..’
அவளைப்பற்றி இன்னும் வினவி அறியவேண்டும் போல் இருந்தாலும், அது தருணமல்ல என்று தவிர்த்த முகலன்,

‘ஐயனே… உத்தமரோ… ஒரு பௌத்த துறவி… அவர் அமைப்பதோ இந்த அழகிய சிவாலயம்…குழப்பமாக இருக்கிறதே…’

உத்தமரும் மகாநாமரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தார்கள்… சீலகாலனும் சிரித்தபடியே, எரிந்துகொண்டிருந்த தீப்பந்தத்தில் இருந்து இன்னும் சில தீப்பந்தங்களை எரியவைத்து அப்பாலே சென்று தூண்களில் அவற்றை கொழுவினான்.
‘முகலா… நான் புத்தனை ஏற்றுக்கொண்ட ஒரு சிற்பி… என் ஆற்றலை நான் கலையாகவே காண்கின்றேன்… இதோ பார் நாம் அமர்ந்திருக்கும் இந்தக்கல், ஒரு சிவலிங்கமாகவோ, அல்லது ஒரு புத்தனாகவோ உருப்பெற வேண்டும் என்றால், இதோ என் உளியின் உழைப்பு தேவை… கல்லில் எந்தக் கடவுளை காண்பது என்று என் கலையே தீர்மானிக்கிறது… மதங்களின் மதத்தில் சிதையாத ஊர் இது! இந்த துறைமுகத்தை நிர்வகிக்கும் தலைவனின் ஆணையை ஏற்று இப்பணியை சில ஆண்டுகளாக செய்து வருகின்றேன்…’

உத்தமரின் முகமும் ஒரு ஒளிப்பந்தத்தை போல் பிரகாசித்தது…

‘மன்னிக்க வேண்டும் ஐயனே… தங்கள் கலை வாழும்… என் மனதுள் இருந்த ஐயம் தெளிந்து அறிவும் பெற்றேன்.’ என்றவன் அவரை வணங்கி நின்றான்!

உத்தமரும் மகாநாமரும் எழுந்து அவன் அருகில் வர அவன் வீழ்ந்து வணங்கினான்…
‘எழுந்திரு முகலா… கூடாரம் திரும்புவோம்.. இருள் சூழ்ந்து விட்டது…’ சீலகாலன் கையில் ஒரு சுடரை ஏந்தி முன்னே நடக்கத்தொடங்கினான்…

‘குழலி….’

தூணில் செதுக்கப்பட்டிருந்த சிலையொன்று உயிர்பெற்று, தூணில் இருந்து கழன்று, தொப்பென முன்னே குதித்து கூடையை ஆட்டிய படி நடக்கத்தொடங்கியது…

இன்னும் நடக்கும்…

Related posts

வழுக்கியாறு – 17

Thumi2021

சுயமார்புப் பரிசோதனை

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 19

Thumi2021

Leave a Comment