இதழ்-23

வழுக்கியாறு – 17

பின்னூட்டல் பொறிமுறை (feedback)

வழுக்கியாற்று வடிநிலப்பகுதியில் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமானது முழுத் தொகுதியையும் இயக்கும் பிரதான மூலமாக திகழ்வதுடன் கட்டுப்படுத்தி மேலாளுகை செய்வதாகவும் அமைகின்றது.
பிரதேசத்தில் வெள்ள அளவானது அதிகரிக்கும் பொழுது வெள்ளநீர்க் கதவுகள் திறக்கப்படுகின்றது இதனால் வெள்ளநீர் அடுத்த பகுதிக்கு செல்வதனால் உயர்ந்த பகுதியில் உள்ள வெள்ளமானது குறைக்கப்படுகின்றது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் தொகை குறைவடைகின்றது ஆனால் வெள்ள நீர்மட்டத்தை உயர் அளவில் பேணுவதன் மூலம் நிலத்தடி நீர் கொள்ளும் தன்மை மற்றும் குளங்களில் நீர் தங்கும்; கால அளவு என்பன அதிகரிக்கும். இதன் மூலம் நெற் செய்கையின் அளவு அதிகரிப்பதுடன் கோடைகால மரக்கறி செய்கை பரப்பளவும் அதிகரிக்கின்றது. இதனால் பயிர் நிலங்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்பதனால் விளைச்சலின் அளவும் அதிகரிக்கின்றது. அத்துடன் இயற்கை தாவர மற்றும் விலங்குகளின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கின்றது.

குளங்களில் நீர்கொள்ளும் திறன் அதிகரிப்பதனால் குளம் வற்ற எடுக்கும் கால அளவும் அதிகரிக்கும் இதனால் குளங்களில் மாரிகாலங்களில் இனப்பெருக்கம் மூலம் உருவாகும் மீன் குஞ்சுகள் வளர்வதற்கான கால அவகாசம் கிடைக்கின்றது இதனால் மீன் பிடிப்பவர்கள் பெறும் மீன் விளைச்சலின் அளவும் அதிகரிக்கின்றது இதனால் அவர்கள் பெறும் வருமானத்தின் அளவும் அதிகரிக்கின்றது.
விவசாய உற்பதி அதிகரித்து விளைச்சல் அதிகரிப்பதனால் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கின்றது அத்துடன் விவசாய நிலங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதனால் அவர்களின் வாழ்வாதாரமும் மேம்பாடடைகின்றது.

வெள்ள நீரின் அளவு குறைவடையும் போது மேற்குறித்த இயக்கங்கள் பின்னோக்கியதாக நகர்வதினால் ஒட்டுமெத்தமாக வடிநிலப்பகுதியின் உற்பத்தித்திறன் குறைவடைகின்றது இதன் மூலமாக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைகின்றது. ஆனால் வெள்ளநீரை தேக்கும் அளவை அதிகரிப்பதனால் வெள்ள நீரால் ஏற்படும் அனர்த்தத்தினால் பாதிப்படையும் மக்கள் தொகையும் அதிகரிக்கின்றது.

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் வேலைவாய்ப்புக்களை அதிகம் நாடுவதனால் வழமையான சூழல் இயக்கத் தொடர்பானது தகர்வுப்பாதையை எதிர் நோக்கி உள்ளது.

வழுக்கியாறு சமூக சூழல் தொகுதியின் நீண்டகால நிலைப்படுத்துகை (sustainability)

நிர்ப்பாசனத் தொழில்நுட்பம்
நீண்ட நீர்ப்பாசனக்கால்வாய் அமைப்புக்கள் குளங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதனால் குளங்களில் உள்ள நீரை நீண்ட துரங்களுக்கு எடுத்துச்செல்ல முடிவதுடன் ‘சீலாப்பட்டை’ என்ற பனை ஓலையால் இழைக்கப்பட்ட கூடை போண்ற அமைப்பு கால்வாயில் ஓடும் நீரை வயல் நிலங்களுக்குப்பாச்ச ஏறக்குறைய 1970 க்கு முன்னர் பயன் பட்டது. சீலாப்பட்டையின் இரு அந்தங்களையும் இருவர் பிடித்து நீரை அள்ளி இறைத்தனர். அத்துடன் கிணறுகளில் இருந்து நீரை மேலுயர்த்தவென துலா மற்றும் சூத்திரம் என்பன பயன் படுத்தப்பட்டன. இதில் துலா என்பது மனித வலு மூலமும் சூத்திரம் எருது மாடுகளின் வலுவினாலும் இயக்கப்பட்டன. துலாவானது பனை மரத்தினால் செய்யப்பட்டிருக்கும் எளிய நெம்பு வகையை சார்ந்த ஒரு பொறி ஆகும். விவசாய கிணறுகளில் பொருத்தப்பட்டு இருந்த துலாவானது வீட்டுப்பாவனை கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்தப்படும் துலாவை விட அளவில் பெரியதாகவும் அதனை இயக்க இரண்டு மனித வலுவும் தேவைப்பட்டது. ஒருவர் ஆடுமரத்தின் மீது நிற்பார் அவர் துலா மிதிப்பவர். மற்றயவர் கயிற்றுடன் இணைக்கப்பட்ட பட்டையால் நீர் அள்ளுபவர் இவர் கொடி பிடிப்பவர் எனப்பட்டார். பட்டை எனப்படுவது சீலாப்பட்டையை அமைப்பில் ஒத்த அளவில் சிறிய அமைப்பாகும்.

சூத்திரம் எனப்படுவது துலாவை விட மேம்படுத்தப்பட்ட பற்சில்லு மற்றும் சங்கிலிகளால் அமைக்கப்பட்ட ஒரு சிக்கலான பொறியாகும். இதில் தனி வாளிச் சூத்திரம், பல வாளிச் சூத்திம் என இரண்டு வகை உண்டு.

1950க்கு பிற்பட்ட காலத்தில் ஜதரோ காபன் எண்ணெய்களில் இயங்கும் நீர்ப்பம்பிகளின் வருகையைத் தொடர்ந்து சூத்திரம் மற்றும் துலா என்பவற்றின் பாவனை குறைவடையத்தொடங்கி இன்று காண்பதற்கரிதாகி விட்டது. இன்றைய காலங்களில் மின்சார நீர்ப்பம்பிகள் பரவலாக பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

(ஆறு ஓடும்)

Related posts

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும் – 03

Thumi2021

ஐபிஎல் திருவிழா

Thumi2021

ஆசிரியர் பதிவு – பிளாஸ்டிக் எனும் கொடூர அரக்கன்

Thumi2021

Leave a Comment