நம் அன்றாட வாழ்க்கையில் எங்கும் நிறைந்ததாக இருக்கும் பிளாஸ்டிக்கின் நன்மைகள் மறுக்க முடியாதவை. குறைந்த செலவில் இலகுவாக உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு எண்ணிலடங்காத தீமைகளை செய்கின்றன.
நாளொன்றிற்கு 7000 மெற்றிக் தொன் திண்ம கழிவுகள் இலங்கையில் உருவாக்கப்படுவதாகவும் அவற்றில் அண்ணளவாக 6% ஆனவை பிளாஸ்டிக் கழிவுகள் என்றும் சில புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அதாவது தினமும் 420kg பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகளாக சுற்றாடலுக்கு வீசப்படுகின்றன.
பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை மட்டுமல்ல அபிவிருத்தி அடைந்த தேசங்களிலும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை எரித்தால் வளி மாசடையும். புதைத்தால் இலகுவில் உக்காத காரணத்தினால் மண் மாசடையும். எனவே இலங்கை போன்ற நாடுகளில் குப்பை மேடுகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சேமிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சமீப காலமாக குப்பை மேடுகளும் நிரம்பி வழிகின்றன. எனவே மாற்று வழி தேட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம்.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக இலங்கையில் கழிவு முகாமைத்துவம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சமீபத்தில் இலங்கை அரசாங்கம் சில குறிப்பிட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு தடை விதித்திருக்கிறார்கள். ஒரு பிரபல தனியார் நிறுவனம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி தமது நிறுவன எல்லைக்குள்ளே வாகன தரிப்பிடத்திற்கான காப்பெற் வீதிகளை (plastic modified asphalt concrete) போட்டிருக்கிறார்கள். அதேபோல அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை பகுதியிலே மாநகரசபையினர் கழிவு பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி வீதிகளை அமைத்திருக்கிறார்கள். இவை எல்லாம் ஒரு சிறந்த சமிக்கைகளை எமக்கு காட்டுகின்றன. சுகாதாரத்திற்கு மிகவும் கேடான ஒரு விடயம் பிளாஸ்டிக். இவற்றை எப்படி அழித்தாலும் அது சூழலுக்கு மாசு ஆகவே முடியும்.
புராண இதிகாசங்களில் வரும் உலகத்திற்கு தீங்கு செய்கின்ற அசுரர்கள் சாகாத வரம் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களை அழிக்க முடியாத இறைவன் உலகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு வேறு உருவத்திற்கு அவர்களை மாற்றி உலகத்தை காப்பார். அது போல அழியா வரம் பெற்ற பொலித்தீன்களை வேறு வடிவங்களுக்கு மாற்றி சூழலுக்கு தீங்கற்றதாக மாற்றுகின்ற நடவடிக்கைகளை நடைமுறைக்கு கொண்டு வருவோமாக…