இறையாண்மை அரசின் மூலக்கூறுகளில் முக்கியமானதாகும். இறையாண்மை இன்றி அரசு செயல்பட முடியாது. இறையாண்மை தான் அரசை இதர சங்கங்களில் இருந்து உயர்வானதாகக் காட்டுகிறது.
இறையாண்மை என்கிற கருத்தை அறிமுகப்படுதியப் பிறகுதான் தற்கால அரசு முழுமை பெற்றதாகக் கருதப்படுகிறது.
இறையாண்மை, தற்கால அரசியலில் முக்கியத்துவம் பெற்றாலும் அரசியல் அறிவியலின் தந்தை என்று கருதப்படும் அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
அரிஸ்டாட்டில், இறையாண்மையை அரசின் “உயர்வான அதிகாரம்” என்று கூறியிருக்கிறார்.
இடைக்காலத்தில் ரோமன் சட்ட வல்லுனர்களும் இந்த கருத்தை அதிகமாக அறிந்திருந்தனர். ஆனால் ஜீன் போடின் என்பவர் தான் தன்னுடைய “குடியரசைப்பற்றிய ஆறு நூல்கள்” என்ற நூலில் இறையாண்மை என்ற கருத்தை முதன்முதலாக முறைப்படியாக பயன்படுத்தினார்.
இறையாண்மை என்ற சொல்லானது லத்தின் மொழியில் `சூப்பரானஸ்’ என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
அதன் பொருள் “உயர்வானது” என்பதாகும். இறையாண்மையின் முழுமையான பொருளை அறிந்து கொள்வதற்கு அதுகுறித்து அரசியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ள விளக்கங்கள் உதவியாக இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
ஜீன் போடின் கருத்துப்படி இறையாண்மை என்பது குடிமக்களின் மீது சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத, தொடர்ந்து செலுத்தப்படும் உயர்வான அதிகாரம். அதனை அரசு பயன்படுத்துகிறது.
பொல்லாக் அவர்கள், இறையாண்மை என்பது உயர்வான அதிகாரம், அது தற்காலிகமானதோ, மற்றவர்களுக்கு அளிக்கக்கூடியதோ, ஒரு சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதோ கிடையாது. உலகில் வேறு எந்த அதிகாரத்துக்கும் பதில் அளிக்கக்கூடியதோ, மாற்றக்கூடியதோ அல்ல என்கிறார்.
பர்ஜர் அவர்கள் இறையாண்மை என்பது முழுமையானது. வரையறை இல்லாத அதிகாரத்தை மக்களின் மீதும் மற்றும் உள்ள சங்கங்களின் மீதும் செலுத்தக் கூடியதாகும், மக்களிடம் இருந்து பணிவைப் பெறுவதற்கான முழு அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.
லாஸ்கியின் கருத்துப்படி இறையாண்மை என்பது சட்டப்படியாக, தனிமனிதர்களின் மீதும் அல்லது குழுக்களின் மீதும் செலுத்தப்படும் அதிகாரமாகும். இது மக்களை பணிய வைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.
மேலே கூறப்பட்ட விளக்கங்களில் மாறுபாடுகள் இருந்தாலும் இறையாண்மை என்பது உயர்வான அதிகாரம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இறையாண்மையின் அடிப்படைக் கருத்தானது, அதிகாரம், சட்டம் இயற்றுவது, கட்டளை பிறப்பிப்பது, அரசியல் முடிவுகளை எடுப்பது, தனி நபர்கள் மற்றும் உள்ள இதர சங்கங்களையும் தன் ஆட்சி எல்லைக்குட்பட்டவர்கள் மேல் செலுத்துவதாகும்.
இறையாண்மையை இரண்டு விதமாக பிரிக்கலாம். அவை,
அ) உள் இறையாண்மை
அதிகாரத்தைப் பயன்படுத்துபவர் உள்நாட்டில் இருக்கும் தனி நபர்கள் மற்றும் சங்கங்களின் மீது அதிகாரத்தை செலுத்த அதிகாரத்தை பெற்றவர் ஆவர்.
ஆ) வெளி இறையாண்மை
அதிகாரத்தை செலுத்துபவர்கள் மீது இதர நாட்டவரோ அல்லது சர்வதேச சங்கங்களோ அதிகாரத்தை செலுத்தாமல் சுயமாக செயல்படுவதாகும். தற்கால அரசானது நாட்டின் உள்விவகாரங்களில் உயர்வான அதிகாரத்தையும், மற்ற வெளிநாட்டு அரசாங்கத்தின் கட்டுபாடு இல்லாமலும் இருப்பதாகும்.
இறையாண்மையின் தன்மைகள்
- சட்ட அடிப்படையில் இறையாண்மை முழுமையானது.
- இறையாண்மை நிலையானது. அரசு இருக்கும் வரையில் இறையாண்மையும் இருக்கும். அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் போது இறையாண்மை அழிந்து விடுவதில்லை. ஆனால், அரசாங்க அதிகாரத்தைப் பெறுபவர்களிடம் கொடுக்கப்படுகிறது.
- அடுத்து அரசின் இறையாண்மையானது அரசு எல்லைக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் பொருந்துவதாகும்.
- இறையாண்மையை மாற்ற இயலாது. அரசு அழிந்தால் தான் இறையாண்மையும் அழியும்.
- கெட்டல் (Gettel) அவர்களின் கதிருத்துப்படி, “இறையாண்மை முழுமையாக இல்லாவிட்டால் அரசு இருக்க முடியாது. இறையாண்மையை துண்டுபோட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு இயங்குவது போன்றதாகும்”.
ஆனால் கூட்டாட்சி என்ற கருத்து தோன்றியவுடன், டாக்குவில், வீட்டன் மற்றும் கேலக் போன்ற அறிஞர்கள் இரண்டு இறையாண்மைகள் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இறையாண்மை பிரத்தியேகமானது. அரசு மட்டும் தான் இறையாண்மை அதிகாரத்தைப் பெற்று சட்டப்படியாக மக்களைப் பணிய வைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.
இறையாண்மையின் அனைத்து தன்மைகளும் சட்ட இறையாண்மை என்ற கருத்துக்கும் வித்தியாசமானதாகும். அவை முழுமையான முடியாட்சியினால் பிரதிபலிக்கப்படுகிறது. மக்களாட்சி, கூட்டாட்சி, பன்மை மற்றும் அரசியலமைப்பின்படி அமையாத அரசாங்கங்களில், இறையாண்மை அதிகாரம் எவற்றில் அல்லது எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிவது கடினமாகும்.
பெயரளவிலான இறையாண்மை:
பெயரளவிலான இறையாண்மை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதாகும். இது மன்னரின் அல்லது அரசரின் செயல்படுத்தப்படாத அதிகாரத்தைக் குறிப்பதாகும். கொள்கையளவில் அரசர் இன்றும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். ஆனால், நடைமுறையில் இறையாண்மை அதிகாரம் மற்றவராலோ அல்லது பலராலோ செயல்படுத்தப்படலாம்.
பெயரளவு இறையாண்மை என்பது அதிகாரத்தின் அடையாளமாகவே மட்டும் இருக்கும். பெயரளவுக்கான இறையாண்மை அதிகாரம் உடையவராக பிரிட்டன் நாட்டு அரசர் உள்ளார். அரசர் பெயரளவிற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். அவர் உண்மையான இறையாண்மை அதிகாரம் செலுத்தவில்லை. உண்மையான அதிகாரங்கள் அனைத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படுகின்றன.
இந்தியாவிலே குடியரசுத் தலைவர் பெயரளவிலான இறையாண்மையையும் பிரதமர் தலைமையில் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர்கள் உண்மையான அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்கள்
இந்த பத்தி தினமணியில் வெளிவந்த இறையாண்மை என்றால் என்ன எனும் கட்டுரையினை தழுவி மாற்றங்களுடன் இலங்கைக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.
சாரல் தூறும்………….!!!!!