இதழ்-23

ஈழச்சூழலியல் – 10

எமது தாயகப்பகுதிகளை எடுத்து நோக்கினால் மிக அழகிய,தொன்மையான சுற்றுலாத்தளங்கள் காணப்படுகின்றன. நாட்டில் நிலவிய துரதிஷ்ட சூழ்நிலைகளால் ஏனைய மாகாணங்களை போன்று சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்த துறையாக இந்நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் பிரகாசாக்காவிட்டாலும், தற்போது எழுச்சியடைந்து வரும் துறையாக சுற்றுலாத்துறை தாயகப்பகுதிகளில் காணப்படுகின்றது. ஏறத்தாள 150க்கு மேற்பட்ட சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்கள் வடபகுதியில் இயங்குகின்றன. “எபெக்ஸ்” போன்ற பல நிறுவனரீதியான சுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

வடமாகாணத்தை பொறுத்தவரையில் அடையாளப்படுத்தப் படாதமலேயே பல்வேறு சுற்றுலாத்தளங்கள் காணப்படுகின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அண்மையில் சமூக வலைத்தளங்களின் ஊடாக பிரபலமாக பேசப்பட்டு பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை தன்னகத்தே வரவழைத்த இல்வாரையை குறிப்பிடலாம்.இவ்வாறாக இன்னும் பல்வேறு சுற்றுலா சிறப்பு மிக்க இடங்கள் அடையாளப்படுத்தப் படாமல் காணப்படுகின்றன. அவற்றை நாம் இனங்கண்டு , அழகுபடுத்தி , அவற்றை சுற்றுலா மையங்களாக அறிமுகம் செய்வதனூடாக எம்பகுதிகளில் சுற்றுலாச்சந்தை வாய்ப்பினை மேம்படுத்த முடியும். வட மாகாணத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும், ஈழத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்ற போதிலும், இவர்களால் அதிகம் பயணப்பட்டு பார்க்கப்படும் இடங்களாக மிகச்சில வரையறுக்கப்பட்ட இடங்களே காணப்படுகின்றன. இவ்வாறான தோற்றப்பாடு நிலவுவதனால் தாயகப்பகுதி சாரந்து சுற்றுலாத்துறையின் அடுத்த கட்டம் என்னது வினாக்குறியாக தொக்கி நிற்கின்ற சூழ்நிலை காணப்படுகிறது. வட பகுதியை நோக்கி வரும் சுற்றுலாப்பயணிகள் பொது நூலகம், யாழ் கோட்டை, சில ஆலயங்கள், கடற்கரைகள் என்பவற்றுடன் தமது சுற்றலாவை நிறைவுறுத்தி கொள்கின்றனர். எமது பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கென பல பெறுமதியான காடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக முல்லைதீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை, கயட்டைகாடு போன்றவற்றை குறிப்பிட முடியும். இவ்வாறான காடுகள் பல வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்ற சூழ்நிலையில், நாம் இவற்றை சுற்றுலாத்தளமாக வடிவமைத்து எமது தொன்மை, பெருமைகளை  ஊரறியச்செய்வதோடு, வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கும், எமது பெருவளங்களாகிய காடுகளின் இருப்பை பாதுகாப்பதற்கும் வழிசமைக்க முடியும்.மேலும் வட மாகாணத்தில் இருந்து மலை பார்ப்பதற்கும், மன்னர்களினுடைய இராசதானிகளை பார்ப்பதற்குமென என மக்கள் வெளி மாகாணங்களக்கு சென்று வருகின்றனர்.அதே சமயத்தில் வடக்கில் குருந்தூர்மலை என்று ஒன்று உள்ளதையும் அதன் மேல் எமது ஆதி சிவன் ஆலயம் மற்றும் பண்டைய தமிழ் மன்னர்களின் இராசதானி உள்ளதையும் அறிவதற்குரிய வாய்ப்புகள்,அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.இதே போல் கயட்டைப்பகுதியில் ஈழத்தின் எந்தக்காடுகளிலும் இல்லாத வித்தியாசமான அரியவகை மரங்கள் காணப்படுகின்றன. இவற்றை நாம் அடையாளப்படுத்தி ஆவணப்படுத்தி விளம்பரப்படுத்துவதன் ஊடாக பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வடமாகாணத்தில் பல்வேறு பதிகம் பெற்ற, வரலாற்று தொன்மை கொண்ட ஆலயங்கள் காணப்படுகின்றன. அவை தன்னகத்தே பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகின்றன. திரும்பும் திசையெல்லாம் ஆலய கோபரங்களால் ஆசிர்வதிக்கப்படும் அளவுக்கு பேறு வாயக்கப்பெற்ற பூமியில் வாழ்வமைந்த நாம் அவற்றை போற்றி காக்க வேண்டியது காலத்தேவை என்றாகிறது.இவ்வாறான ஆலயங்களுக்கு ஒரு சில எடுத்துக்காட்டாக நாற்புறமும் கடல்சூழ நின்று அருள்பாலிக்கும் நயினை நாகபூசனி அம்மன் ஆலயம், ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோயில், நகுலேஸ்வரம், செல்வச்சந்நிதி, வற்றாப்பளை அம்மன் ஆலயம் எனப் பல்வேறு ஆலயங்களை குறிப்பிடலாம். யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னன்,சங்கிலியனினுடைய வீடு, யமுனா ஏரி போன்ற நாம் பாதுகாத்து மெருகூட்ட வேண்டிய இடங்கள் இன்று எம்மவர்களாலேயே கையறு நிலையில் இருப்பது வருந்தத்தக்கதாகும். அதே போல் எமது தரைப்பகுதியின் பெருமளவான கரையோரங்கள் கடற்பட்டிகையினால் சூழப்பட்டுள்ளது. கசூரினா கடற்கரை,சாட்டி கடற்கரை, கோவளம் கடற்கரை, மணற்காடு கடற்கரை, தொண்டைமானாறு கடற்கரை, காங்கேசன்துறை கடற்கரை, தலையாட்டி கடற்கரை போன்ற பல கடற்கரைகள் சுற்றலத்தளங்களாக செயற்படும் இயல்தகவு கொண்டு காணப்படுகின்றன. மன்னாரை எடுத்துக்கொண்டால் பெரிய மடு ஆலயம், யோதாவாவி, வெளிச்ச வீடு, தலைமன்னார் கடற்கரை, ஒல்லாந்தர் கோட்டை போன்ற பல்வேறு சுற்றுலாத்தளங்கள் காணப்படுகின்றன. இன்று வரை ஆழம் அறிய முடியவில்லை எனக்குறிப்பிடப்படும் நிலாவரைக்கிணறு தன்னகத்தே பல்வேறு ஆச்சரியங்களை தக்க வைத்து காணப்படுகின்றது. வட பகுதியின் எழில் கொஞ்சும் சப்த தீவுகள் காணப்படுகின்றன. சிறப்பாக நெடுந்தீவினை எடுத்துக்கொண்டால் ஒரு முழுநாளை சுற்றுலாப்பயணிகள் அங்கே செலவிடக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தளமாக காணப்படுகின்றது. ஏறத்தாள ஒரு மணித்தியாலங்களக்கு அதிகளவான நேரம் கடலின் ஊடாக பயணம் செய்து அந்த தீவினை அடைய வேண்டும். நெடுந்தீவானது இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைகளும், முருகைக்கற் வேலிகளும், அங்குமிங்கும்,ஓடித்திரியும் குதிரைகளும்,முயல்களும், வியாபித்து விரிந்த நிற்கும் பெருக்குமரமும், ஆதாம் கால்தடமும், புறாக்கூடு்ம் ஒல்லாந்த கோட்டையுமென பல்வேறு சிறப்பான தளங்களை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. சுற்றுலாப்பயணிகள் அங்கே சென்று பகற் பொழதில் இடங்களை பார்வையிட்டு இராப்பொழுதையும் அங்கே கழிப்பதற்கான வசதிகள் காணப்படுகின்றன.ஆனாலும் சுற்றலாப்பயணிகளின் வருகைக்கு ஏற்றாற்போல் வீதிப்புனரைப்பு மேம்படுத்தப்படாமலும்,உள்ளூர் பௌதீக கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமலும் காணப்படுகின்றமை உரிய தரப்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். அங்கே வருகைதருகின்ற சுற்றுலாப்பயணிகளில் பெரும்பாலானோர் போக்குவரத்து ஒழுங்கமைப்பு குறித்து தமது வருத்தங்களை பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. உரிய நேர இடைவெளிகளில் படகு சேவைகள் இடம்பெறாமை, சேவையில் ஈடுபடுகின்ற படகுகளும் அடிக்கடி பழுதடைதல் போன்ற இடர்பாடுகள் காணப்படுகின்றன.

எமது தாயகத்தின் சுற்றுலாச்சந்தையின் கணிசமான பகுதியை கைப்பற்ற வல்ல நெடுந்தீவு சுற்றுலாத்தளமானது தகுந்த வகையில் பரிபாலிக்கப்பட்டு மேம்படுத்தபடுமிடத்து பல்வேறு அனுகூலங்களை பிரதேசம் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் மற்றும் பொருளாதாரரீதியாகவும் பெற்றுக்கொள்ள முடியும். நெடுந்தீவுப்பகுதியில் பெருமளவான மக்கள் மீன்பிடி,விவசாயம் ஆகிய துறைகளிலேயே தங்கியிருக்கின்றனர். விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வாழும் மக்களுக்கு மழைவீழச்சி பாரிய சவாலாக அமைகின்றது. வருடாந்த மழைவீழ்ச்சி என்பதே மிக சொற்ப அளவில் கிடைக்கப்பெறுவதனால் நீர்ப்பற்றாக்குறை காரணமாக உரியவாறு விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலமை காணப்படுகின்றது.இதனால் பல விவசாய குடிமக்கள் விவசாயத்தினை கைவிடுகின்ற நிலையில் உள்ளனர் அத்தோடு குடிநீர் கூட கடல்நீர் நன்னீராக்கல் திட்டத்தினூடாகவே பெற்றுக்கொள்கின்றனர். ஏறத்தாள ஓர் தன்னிறைவு அடைய வேண்டிய தீவு தத்தளித்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அப்பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதன் ஊடாக உள்ளூர்வாசிகளின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்த முடியும். அதே போல் நயினாதீவு, அனலை தீவு போன்றனவும் சிறந்த சுற்றுலா மையங்களாக காணப்படக்கூடிய பிரதேசங்களாகும். மிகச்செழிப்பான தீவாக காணப்படக்கூடிய அனலைதீவு சுற்றுலாவக்கு சிறந்த தளமாக காணப்படுகின்ற போதிலும் உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டிய தேவைப்பாடு பாரிய அளவில் காணப்படுகின்றது. அனலைதீவுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் குறைபட்டுக்கொள்ளும் விடயம் அங்கு ஒரேயொரு உணவகமே காணப்படுகின்றது,அங்கும் முற்கூட்டியே பதிவு செய்வதன் மூலமே உணவை பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.இவ்வாறான இடர்பாடுகள் நெடுந்தீவிலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறான சுற்றுலா வாய்ப்புகளை கொண்ட தீவுகளை அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவதோடு, அங்கு செல்வதற்குரிய படகு வசதிகள், போக்குவரத்து வசதிகள், தீவை சுற்றிப்பார்ப்பதற்கான ஒழுங்கமைப்புகள், உணவகங்கள், கழிப்பிடங்கள், தங்குமிட வசதிகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாகவே எமது சுற்றுலாத்தளங்களும் வெவ்வேறு இடங்களில் விளம்பரப்படுத்தப்படும். அதன் மூலமாகவே சுற்றுலாப்பயணிகளின் வருகையையும் குறித்த பகுதிகளும் அதிகரிக்க முடியும்.

ஆராய்வோம்…

Related posts

சுயமார்புப் பரிசோதனை

Thumi2021

வழுக்கியாறு – 17

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 23

Thumi2021

Leave a Comment