இதழ்-23

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம்….!!!

“இது ஒரு பொன்மாலை பொழுது

வானம் மகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்”

வெளியில் மாலை மயங்க ஆரம்பித்திருக்க, இவனோ  ஹெட்செட்டினூடாக ஹரிஹரன் எனும்  காந்தத்தை காதுகளில் ஒட்டி விட்டு எழுதிக்கொண்டிருக்கிறான்.

ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஆறுகள் அருகிலே குடியேற்றத்தை அமைத்ததிலிருந்து மனித நாகரிகத்தின் எழுச்சி ஆரம்பிக்கிறது. முதல் முதலில் சிறப்படைந்த நாகரீகம் யூப்பிரட்டீஸ் , டைகிரீஸ் என்ற இரு நதிகளையும் அண்மித்த மொசப்பதேமியா நாகரீகம் ஆகும். அதாவது தற்போதைய ஈராக். இங்கு வாழ்ந்த சுமேரியர்கள் தான் முதன்முதலில் நாட்காட்டியினை வடிவமைத்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின் வந்த இன்னொரு உயர் நாகரீக மக்களான எகிப்தியர்களும்  நாட்காட்டி ஒன்றை கொண்டிருந்தனர். அமெரிக்க பழங்குடியின மாயா இனத்தவர் வடிவமைத்த நாட்காட்டி, உலகின் பல முக்கிய நிகழ்வுகளை எதிர்வு கூறுவதாய் இருந்தது.

//ஜன்னலில் தெரியும் நிலவுடனே

சண்டை போட்டது நினைவில்லையா

மரம் செடி கொடியிடம் மனசுக்குள்

இருப்பதை சொல்லியது நினைவில்லையா//

ஹரிஹரன் கெட்செட்டிலிருந்து இறங்கி செவி கால்வாயிலிருக்கும் காற்றில் கலந்து செவிப்பறை மென்சவ்வை முட்டி மோதி செவிச்சிற்றென்புகளில் ஏறி நடந்து நீள்வட்ட ஜன்னல் வழியாக நத்தைச்சுருளுக்குள் நுழைந்தார்.

நினைவில்லையா நினைவில்லையா என்று காந்தக்குரலோன் கேட்க, மூளையம் இவன் மரத்தோடு, நிலவோடு, புத்தகங்களோடு தன் காதலை பேசிய கதையை மீள ஞாபகப்படுத்தியது.

“உன் விழியில் விழுந்தேன்

விண்வெளியில் பறந்தேன்

கண்விழித்து சொர்ப்பணம் கண்டேன் உன்னாலே”

அவள் நினைவுகள் படையெடுக்க ஆரம்பிக்கிறது. அவள் சிரிப்பும் காந்தக் கண்களும் நினைவில் நங்கூரம் எறிந்தது.

“சிரிக்கும் போது கண்ணில் மின்னல்

தெறித்து ஓடுதே அதுவா”

சிதறும் சிரிப்பில் அணுங்கும் குழந்தையாய் புன்முறுவல் பூக்கும் போது விரியும் உதடு, சிவக்கும் கன்னம்,  சிமிட்டும் கண் மடல்கள், இதழ் பிரிந்த அதிர்வு, மடல் வழி தாவி கண்மணி  நுழைகையில் ஒளிரும் கண்களுக்கு சொந்தக்காரி அவள்.

//ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும்

புன்னகை செய்வாய் அதுவா அதுவா அதுவா?//

பொங்கிப்பெருகும் மன உலையை அடக்கிக்கொண்டு தன் எழுத்துக்கு வந்தான்.

கி.மு 7 ஆம் நூற்றாண்டில் உரோமானியர்கள் பயன்படுத்திய நாட்காட்டி பத்து மாதங்களை கொண்டதாக இருந்தது. இந்த நாட்காட்டியின் படி வசந்த கால மாற்றங்கள் சரியாக அமையாததால் கி.மு 46 இல் கிரேக்க பேரரசர் ஜூலியஸ் சீசரின் ஆணைப்படி மேலும் இரு மாதங்கள் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள் கொண்ட புதிய நாட்காட்டி உருவாக்கப்பட்டது. இது  ஜூலியன் நாட்காட்டி  எனப்பட்டது. தொடர்ந்து 16 நூற்றாண்டுகள் ஐரோப்பா எங்கும் இதுவே பயன்பாட்டில் இருந்தது.

1582 இல் அப்போதைய திருத்தந்தையான  பதின்மூன்றாம் கிரகொரியினால் ஜூலியன் நாட்காட்டியில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு புதிய நாட்காட்டி  உருவாக்கப்பட்டது. அது தான் இன்று பயன்பாட்டில் உள்ள “கிரகோரியன் நாட்காட்டி”. இதன்படி, இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டு நாட்காட்டியின் முதலாமாண்டு. இதன் தொடர்ச்சி தான் 2021.

//இரவில் இரவில் கனவில்லையா

கனவும் கனவாய் நினைவில்லையா

அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்

நான் சொல்லாமல் தவிக்கின்றேன்//

மீண்டும் ஹரிஹரன் இவனை இடையூறு செய்து அவளிடம் அழைத்து சென்றார். இரவுகளில் தூக்கம் தொலைப்பதால் கனவுகள் இல்லை. கனவில் கண்மணியாள் தரிசனமும் இல்லை.

“கோயிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன்

கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்”

இப்படியாக அவளுக்கு பின்னால் திரிந்து கொஞ்சமாய் நெருங்கி போதுமாய் அலம்பி, தன்னை அவளிடம் கையளிக்க பலவாறாய் முயற்சி செய்தவன். ஆனால் அவளிடம் இன்னும் தன் காதலை சொல்லவில்லை.

//செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே

உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா

கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்

மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா//

காதலை தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, அவள் மறுப்பு சொல்லிவிடுவாளோ என்ற பயத்திலேயே அட்ரெனலின் கொப்பளிப்புடனேயே காலத்தை கடத்திக்கொண்டிருந்தவன்.

“சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன்

காதல் சுகமானது”

மீட்ட நினைவுகளுக்கு ஒரு பெரு மூச்செறிந்து விட்டு எழுத்தை தொடர்ந்தான்.

கி.மு 638 இல் இரண்டாம் கலிபா உமரினால் இஸ்லாமிய நாட்காட்டி உருவாக்கப்பட்டது. இது ஹிஜ்ரி நாட்காட்டி எனப்படும். வளர்பிறையில் தலைப்பிறையை காண்பதுடன் ஆரம்பித்து அடுத்த தலைப்பிறை வரை ஒரு மாதம். ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களை கொண்ட  சந்திர நாட்காட்டி ஆகும். முதலாவது மாதம் முஹர்ரம். இறுதி மாதம் துல்ஹஜ். மொத்தம் 12 சந்திர மாதங்களில் 9ஆம் மாதம் ரம்ழானும்  12ஆம் மாதம் ஹஜ் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டியின் முதலாவது வருடம் ஹிஜ்ரத். அது நபி மக்காவில் இருந்து மதீனாவிற்கு இடம்பெயர்ந்த ஆண்டு. ஹிஜ்ரத் என்றால் இடம்பெயர்தல்.

எழுதிக்கொண்டிருக்க, வெளியிலிருந்து அம்மா அழைத்தாள்.

டேய்! கோவில்ல  மருத்துநீர் குடுக்க வெளுக்கிட்டாங்கள். கெதியா போய் வாங்கிக்கொண்டு வா.

அம்மா அழைத்ததோடு மீண்டும் எழுத்தில் கவனம் கலைய ஹரிஹரன் பற்றிக்கொண்டார்.

//பூ என்ன சொல்லுமென்று காற்றறியும்

காற்றென்ன சொல்லுமென்று பூவறியும்

நான் என்ன சொல்ல வந்தேன் நெஞ்சில் என்ன

அள்ளி வந்தேன் ஒரு நெஞ்சம் தான் அறியும்//

நாளை சித்திரை வருடப்பிறப்பு. காலை எழுந்து மருத்து நீர் வைத்து முழுகி கோவிலுக்கு போய் வந்து பின் உறவினர் வீடுகளுக்கு சென்று வந்து கைவிஷேடம் வாங்கி, போர்த்தேங்காய் அடித்து, தலையணை சண்டை பிடித்து என்று சிறுவனாய் இருந்த போது இருந்த புதுவருட சந்தோஷத்தை நினைத்து பார்த்தான். இன்றோ,

“வலியா சுகமா தெரியவில்லை

சிறகா சிறையா புரியவில்லை”

என்று காதல் தகிப்புடனேயே எழுதிக்கொண்டிருக்கிறான்.

அவளும் இவனது ஒரே ஊர் தான். இருவருக்கும் பல வருட பழக்கம். இவனுக்கோ அது காதலாய் மலர்ந்து பூத்து குலுங்குகிறது. அவள் இன்னும் அதே அண்ணா தான்!

//எண்பது பக்கம் உள்ள புத்தகம் எங்கும்

கவிதை எழுதிய நினைவில்லையா – எழுதும்

கவிதையை எவர் கண்ணும் காணும் முன்பு

கிழித்தது நினைவில்லையா//

இப்படி தன் ஒரு தலை காதலியை நினைத்து கவிதைகள் கிறுக்கியவனிடம், தனது பல்கலைக்கழக சஞ்சிகைக்காக ஒரு கட்டுரை எழுதித்தர கேட்டாள் அவள். அவளுக்காக தான்  “நாட்காட்டியின் வரலாறும் புதுவருடப்பிறப்பும்” என்ற இந்த கட்டுரையை இப்பொழுது எழுதுகிறான்.

“ஹப்பி நியூ இயர் ஹப்பி நியூ இயர் வந்ததே

அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே”

இவன் எழுத்துக்களுக்கு அவள் ரசிகை. அதிலிருந்து தான் அவர்களுக்கு இடையிலான உரையாடலின் ஆரம்பம். அவளுக்கு சொல்ல வேண்டிய தகவல்களை வேறு வேறு பதிவுகளில் சேர்த்துவிடுவான். பின்னர் அதை பற்றி அவளுடன் அளாவுவான். இதுவோ அவளே தனக்காக எழுதக் கேட்டது. எழுதி கொடுத்தால், நீண்டதொரு காதல் அரட்டை காத்திருக்கிறது. அதற்காக தொடர்ந்தான்.

இந்து  நாட்காட்டி காலவோட்டத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளானவை. வானியல் அறிஞர்களான ஆரியபட்டா, வராகமிகிரர்  வடிவமைத்த பஞ்சாங்கம் என்ற அடிப்படையில் இவை அமைந்தவை. இது பஞ்ச அங்கங்களாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகிய அலகுகளை கொண்டுள்ளது. இது பிரபவ இல் தொடங்கி அட்சய வரையில் 60 வருடங்களை கொண்டது. இந்த அறுபது வருடமும் மீண்டும் மீண்டும் சுழற்சியாக வரும். சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்வது புதுவருடமாக கொண்டாடப்படுகிறது. இந்த சித்திரைக்கு பிலவ எனும் 35 ஆவது ஆண்டு பிறக்கிறது.

//வானவில் என்ன சொல்ல வந்ததென்று

மேகமே உனக்கென்ன தெரியாதா

அல்லி பூ மலர்ந்தது ஏனென்று

வெண்ணிலவே உனக்கென்ன தெரியாதா//

அவன் அவளுக்காகவே எழுதிக்கொண்டிருந்தாலும் பாடிக்கொண்டிருக்கும் மதுரக்குரலோன், வரிகளினால் அவன் கவனத்தை கலைக்கிறார்.

//உன்னை சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா

என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா//

இந்த வரிகள் காதுகுள் இறங்கும் போது எழுதுவதை நிறுத்தி அமைதியாகி ஆனந்த ரசனை கீற்றை கடந்தான். மீண்டும்,

“நித்திரையில் இருக்கும் தமிழா

சித்திரை அல்ல உனக்கு புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே

அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழருக்கு

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

பார்ப்பனியர்களினால் இடைச்செருகப்பட்டதே அறுபது ஆண்டுகள். அதை நிராகரித்து தமிழருக்கு தனி ஆண்டுமுறை வேண்டுமென்று தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் எழுச்சியின் போது பாரதிதாசன் பாடிய பாடல் இது.

“தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா

தரணியை நீ வெல்லடா”

பார்ப்பனிய எதிர்ப்பின் அடிப்படையில்,1935ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர்கள் கூடி ஒரு புதிய முடிவுக்கு வந்தார்கள். தமிழறிஞர் மறைமலையடிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கடைப்பிடிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இது திருவள்ளுவர் ஆண்டு. தமிழக அரசில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. கி.மு31 வள்ளுவர் பிறந்த வருடமென கொள்ளப்படுவதால், அதுவே வள்ளுவர் ஆண்டின் முதல் ஆண்டு.

இன்று 2021+ 31 = 2052வது திருவள்ளுவர் ஆண்டு.

“பூமியே சுழல்வதாய் பள்ளிப் பாடம் சொன்னதே 

இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது”

காதல் சுழலில் சுற்றிக் கொண்டிருந்தவன், இப்பொழுது காதலிக்காக பூமியும் கோள்களும் சுற்றுவதை கணிக்கும் நாட்காட்டி பற்றி எழுதிக் கொண்டிருக்கிறான்.

புதுவருடத்தில் இவனுக்கும் புதுவாசல்கள் திறக்குமா? அவளுக்கு இவன் எழுத்தின் மேல் இருக்கும் காதல் இவன் மேலாக மாறுமா?

“சித்திரை மாதம்  மார்கழி  ஆனது

வா  நீ வா என் அதிசய  பூவே  வா

நீ வா நீ வா என் அழகிய தீவே  வா”

Related posts

இறையாண்மை – 04

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 23

Thumi2021

ஐபிஎல் திருவிழா

Thumi2021

Leave a Comment