இதழ்-23

திருக்கோணேச்சரம் – வரலாற்றுப் பின் நகர்வு (14.04.1624)

ஒரு மனிதனால் இந்தப்பெரிய உலகில் வாழவல்ல அதியுச்ச காலம் நூற்றியிருபது ஆண்டுகளாம். ஆனால் இந்த உலகம் உருவாகி பலகோடி ஆண்டுகள் கடந்துவிட்டன. அத்தனை ஆண்டுகளிலும் தோன்றி அழிந்து போன எத்தனையோ பேரின் உழைப்பினாலே இன்று நாம் காணும் இந்த உலகம் இவ்வளவு வளர்ந்து நிற்கிறது. ஏன் இப்போது நாம் ஒவ்வொருவரும் கூட எமக்கான வாழ்நாளில் எம் அடுத்த தலைமுறைக்காக இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தவே முயன்று கொண்டிருக்கிறோம். அந்த வகிபாகமாகவே இலக்கியங்களையும் இயந்திரங்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றோம்.

யாழ்ப்பாண நூலகம் வெந்தழலில் எரிந்த அந்த கரியநாளில் அந்நாள் வாழ்ந்த எம்முன்னோர் கூட்டம் நூலக வாசலில் நின்று மார்பிலும் தலையிலும் அடித்து அடித்து குளறிய காட்சியை கண்டு நெகிழ்ந்த ஓர் ஆங்கில எழுத்தாளர் இம்மக்கள் தம் எதிர்கால தலைமுறை மீது கொண்ட அக்கறையையும் அவர் தம் அறிவின் உச்சத்தையும், கல்வி நாட்டத்தையும் கண்டு வாயடைத்து வியந்ததாய் எழுதி வைத்துள்ளார்.

எம்முன்னோர்தம் இது போன்ற செயல்களே அடுத்ததலைமுறைக்கான தமிழ்கூறு நல்லுலகை கட்டியமைப்பதில் உள்ள ஆர்வத்தை அறைகூவுகிறது.

இதே போலொரு தருணம். ஆனால் இப்போதல்ல. கிட்டத்தட்ட நானூறு வருடங்களிற்கு முன்.
ஈழத்தில் கோகர்ணம் என்றழைப்பட்ட நிறைகடல் அரவும் கோணமாமலையில் 1624ம் ஆண்டு சித்திரை முதலாந்திகதி நடந்த அந்தக்கரிய சம்பவத்தையும் இப்போது கொஞ்சம் நினைவு கூறுவோம்.

காலப்பெருங்கடலில் கற்பனை என்கிற பேராயுதம் கொண்டு கொஞ்சம் பயணித்துப் பாருங்கள். மூன்றுபுறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் வனப்பும் செழிப்பும் மிகுந்து பிரமாண்டமாய் ஓங்கி நிற்கும் கோணநாதரின் கோபுர அழகைக் காண்பீர்கள். வாருங்கள் உங்களை அன்றைய பிரமாண்ட ஆலயத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.


சித்திரைக்கொண்டாட்ட இரதோற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 600 பாகம் நீளமும் 80 பாகம் அகலமும் கொண்ட இராஜ கோபுர வாசலில் இருந்து ரதம் புறப்பட ஆயத்தமாகிறது.

தற்போது ஆலயம் இருக்கும் கோட்டைப்பகுதி முழுவதும் சேர்த்து அன்று மூன்று பெரும் ஆலயங்கள் காணப்பட்டன. அவை, மாதுமை அம்பாளின் பிரமாண்டமான கோயில், ஸ்ரீநாராயணர் கோயில், மலையுச்சியில் மாதுமை அம்பாள் சமேத கோணேசர் கோயில் என்பனவாகும்.

மலையடிவாரத்திலிருந்து நாம் செல்லத் தொடங்கும் போது மலையின் வடக்கேயும், தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது. இப்பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு பரந்த சமதரையாகக் காணப்படுகின்றது. இச்சமதரையின் தென்திசையிலேயே மாதுமை அம்பாளின் பிரமாண்டமான கோயில் அமைந்திருக்கிறது. மாதுமையம்பாள் எழுந்தருளிய கோயில், மிக உயர்ந்த கோபுரத்தோடு கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டிருக்கிறது. (தற்காலத்தில் கச்சேரியும், அரசாங்கப் பணிமனைகளும் உள்ள இடமே, அன்று மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த இடமாகும்) உள்ளே சென்று தரிசித்தால் கற்பக்கிரகத்தில் அம்பாளுடைய சிலாவிக்கிரகமும், ஏனைய பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் அமைந்திருக்கின்றன.

மாதுமை அம்பாள் ஆலயத்திற்கு வடகிழக்கே தான் பாபநாசதீர்த்தக்கேணி அமைந்திருக்கிறது. இந்தத் தீர்த்தம் நீள்சதுர வடிவில் கருங்கற்களாலான படித்துறைகளைக் கொண்டிருக்கிறது. கடல் மட்டத்துக்கக்கீழ் ஆழமுடையதாகக் காணப்பட்டமையினால் வற்றாத நீருற்றாகக் காணப்படுகிறதாம். கோயிலுக்குச் செல்லும் மக்கள் எல்லோரும் தீர்த்தமாட இதனையே பயன்படுத்துகிறார்கள். ஆதலால் தீர்த்தோற்சவத்தன்று சுவாமி தீர்த்தமாட என வேறொரு பாபநாசக்கிணறு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கேணிக்கு வடக்குப் பக்கமாகத் தீர்த்த மண்டபம் ஒன்று காணப்படுகிறது. சுவாமி தீர்த்தமாடிய பின் இம்மண்டபத்தில் எழுந்தருளுவதால், இதனை ஆஸ்தான மண்டபம் என்றழைப்பார்களாம்.

மாதுமை அம்பாளின் ஆலயத்தை சுற்றியுள்ள பரந்து விரிந்த சமதரையிலே உள்ள தேரோடும் வீதிக்கு கோணநாதரின் ரதம் வந்தடைகிறது. மடங்களும், மாடங்களும் ஏராளம் நிறைந்து உள்நாட்டு, வெளிநாட்டுப்பக்தர்கள் சூழ கோணநாதர் ஆரவாரமாய் ரதமேறி வருகிறார். காணுங்கள்.

கோணேசப் பெருமானுடைய இரதம் மாதுமை அம்பாள் ஆலயதைச் சுற்றி வந்து, மலையடிவாரத்தைத்தாண்டி, தற்காலத்தில் பட்டணமாக மாறியுள்ள பிரதேசங்களை வலம் வந்து, வடதிசைக்கரையோரமாகவுள்ள வீதிவழியாகக் கோணேஸ்வரத்தை மீண்டும் அடைவராம்.
மாதுமையம்பாள் ஆலயத்துக்கும், பாவநாச தீர்த்தம் இருந்த இடத்திற்கும் மத்தியில் ஒரு பாதை ஏறிச்செல்கிறது. அது வழியே செல்லும்பொழுது, மற்றுமொரு சமதரை காணலாம். அங்கும் கிழக்கு நோக்கியதாய் உயர்ந்த கோபுரத்தைக் கொண்ட இன்னுமொரு ஆலயம் காணப்படுகிறது. ஆனால் இக்கோயில் அமைந்திருக்கும் சமதரை மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த சமதரையை விடச்சிறியது. இச்சமதரையின் கிழக்கு, செங்குத்தான மலைப்பாறைகளைக் கொண்டதாகவும், வடக்கேயும் தெற்கேயும் சரிவான மலைச்சாரல்களை உடையதாகவும், மேற்கே முரட்டுப் பாறைகளைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.

இதுவே குளக்கோட்டு மன்னனால் எழுப்பப்பட்ட ஸ்ரீநாராயணர் கோயிலாகும். கற்பக்கிரகத்தில் ஸ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலா விக்கிரகம் பிரதிட்டைசெய்யப்பட்டிருக்கிறது.
(இன்று காவல்துறையினரின் குடியிருப்பு, கிளிவ் கொட்டேஜ் என்பவற்றோடு இரண்டாவது உலகமாகயுத்த காலத்தில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்புப் பீரங்கி அமைந்துள்ள நிலப்பகுதியே அன்று நாராயணர் ஆலயம் இருந்த இடமாகும். ஐந்து அடிஉயரமான ஸ்ரீ நாராயணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகிய விக்கிரகங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு இத்திருவுருவங்கள் சீர்செய்யப்பட்டு கோணேசர் கோயிலில் இன்று வைக்கப்பட்டள்ளது)

ஸ்ரீ நாராயணமூர்த்தி ஆலயத்திற்கு வடக்குப் பக்கமாக இன்னொரு பாதை செல்கிறது. இப்பாதை வழியே பயணித்தால் கிழக்குப் பக்கம் உயர்ந்த சரிவும், மேற்குப் பக்கத் தாழ்ந்த சரிவும் காணப்பட்டவாறு கரடுமுரடான ஒரு கற்பாதை தெரிகிறது. மலையின் இயற்கை அமைவிற்கேற்ப பாதைகள் உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்படுகின்றன. ஆனால் இடைக்கிடை சில கருங்கற்படிகளுத் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்பாதை வழியே பயணித்து இராவணன் வெட்டை அடையும்போது, குறுகிய ஆழமான பள்ளம் ஒன்று தென்படுகிறது. இதைக் கடந்துதான் தொடர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது. குளக்கோட்டு மன்னனே இப்பள்ளத்தை நிரப்பும் திருப்பணியைச் செய்துள்ளானாம். இராவணன் வெட்டைக் கடந்து சென்றால் மலையுச்சியில் மூச்சு வாங்கியபடி ஒரு சமதரையைக் காணமுடிகிறது. இச்சமதரையிலேயே பிரதான மாதுமையம்பாள் சமேத கோணேசர் ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது.

தெட்சணகைலாசம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் சமேத கோணேசப்பெருமானும், கருவறையில் சிவலிங்கத் திருமேனியும் (பாணலிங்கம்) பிரதிட்டை செய்யப்பட்டிருக்கிறது.
வழக்கமாக இந்த ஆலயத்தின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினமணிகளின் பிரகாசம், தூரக் கடலில் செல்லும் கடற்பயணிகளுக்கும், மாலுமிகளுக்கும் கலங்கரை விளக்கமாகப் பயன்படுகிறதாம்.

இரதோற்சவம் ஆலயத்தைக் கடந்து நகரிற்குள் சென்று கொண்டிருந்த சமயம் மக்கள் கூட்டத்தில் ஒரு சலசலப்பு கேட்கத் தொடங்கியது. அந்தணர்களிடையே எங்கோ கைகலப்பு உண்டானதாக மக்கள் பரவலாக பேசிக்கொண்டிருந்தனர். ஆலய நிர்வாகத்தாரும் பொது மக்களும் உண்மையில் நிகழ்வது என்னவென்றறியாமல் தடுமாறி ஓடிக்கொண்டிருக்கின்றனர். அந்தணர்கள் யாவரும் ஆலயத்திற்குள் வந்து ஒளிந்து கொண்ட பின்னரே உண்மை ஓரளவு புரியத்தொடங்கியது. கைகலப்புகள் நிகழ்ந்தது அந்தணர்களிடையேயல்ல. அந்தணர் வேசமிட்டு வந்த சில அந்நியர்களாலே என்று.

‘யாரவர்கள்? பறங்கியர்கள்.. இங்கே வந்துவிட்டார்களா? இங்கும் வந்துவிட்டார்களா?
ஐயையோ.. ஆலயச் சொத்துக்களை சூறையாட த்தான் வந்திருக்கிறார்களா? வித்தியாசமான ஆயுதங்கள் வைத்திருக்கிறார்களே.. ஆலயத்தை இடித்து விடப்போகிறார்களா? ஐயோ.. கோணநாதரே இந்த அநியாயத்தை காண்பீரோ.. ஏதுஞ் செய்ய மாட்டீரோ? நாம் என்ன செய்வோம்? எங்ஙனம் ஆலயத்தை காப்போம்? வல்ல இறையே எம் உயிரே பிரிந்தாலும் ஆலயத்தை பறங்கியன் கைவைக்க அனுமதியோம்.” இவையெல்லாம் கூட்டத்தில் பதறி சிதறி ஓடிய மக்களின் குரலோசைகள்..

எவ்வளவு கொடூரமனம் படைத்தவர்களாய் இருந்தாலும் பிரமாண்ட அந்த கோணேசர் ஆலயத்தை முழுவதும் சரித்துவிட வந்த போர்த்துக்கேய தளபதி கொன்ஸ்ரன்ரைன் டீசா ஆலய கட்டுமான பேரழகைக் கண்டு வாயடைத்து நின்றான். அழிக்க மனமில்லை. ஆனால் அழித்தே ஆகவேண்டுமென ஆணை. மதவெறி. ஒரு முடிவு செய்தான். இந்தப்பேரழகை அழித்து சரிக்க முன் ஓவியமாக தீட்டி வைக்க விரும்பினான். வரைந்தான். பிறகு கோயிலை இடித்துத் தரைமட்டமாக்க தொடங்கினான்.

இதற்கிடையில் அங்கு நின்ற மக்களும் அந்தணர்களும் அச்சமிகுதியில் இருந்தாலும் தாம் உயிர் பிழைத்தால் போதும் என ஓடி ஒளியாமல் இயன்றவரை ஆலய பெருஞ்சொத்துக்களையும் சிற்பங்களையும் மறைவாக எடுத்துக்கொண்டு தம்பலகாமம் பிரதேசத்தை நோக்கி இரகசியமாக வேகமாக ஓடினார்கள். கோணநாதரை ஆபத்திலிருந்து காக்க அவர்களிற்கு வேறு வழி தெரியவில்லை. இன்றைய தூரக்கணக்குப்படி ஏறத்தாள இருபத்தைந்து கிலோமீற்றர்களை அதிவேகமாக ஓடிக்கடந்து கோணநாதரையும் ஆலயச்சொத்துக்களையும் அறங்காவல் செய்தனர். இன்று அவ்விடமே தம்பலகாமம் ஆதிகோணேசர் ஆலயமாக திகழ்கிறது. ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பின்னும் கூட மலையுச்சியில் வெறும் வெளியில் கோணநாதரை அவர்கள் வழிபட மறக்கவில்லை. கோணேசப் பெருமானின் ஆலயத்தை அழித்தாலும் நித்திலம் கொழிக்கும் கோணமாமலையில் பெருமானின் இருப்பையழிக்க எவராலும் முடியாது என்கிற உறுதியான நம்பிக்கையோடு தொடர்ந்து மலைப்பூசை நடத்திவந்தனர்.
அன்று அவர்கள் ஆற்றிய அருஞ்செயலாலே இன்று இராவணன்வெட்டிற்கு அண்மையில், உச்சியின் சமதரையில் மட்டுமாவது முப்பத்து மூன்றடி சிலையோடுள்ள கோணேசர் ஆலயமாக எமக்கு எஞ்சிநிற்கிறது. காலத்திற்குக்காலம் ஏற்பட்ட அரசியற் காரணங்களால், ஆலயத்தின் நிலப்பகுதியில் அரசகட்டிடங்களும், காவற்படைகளும் நிலைகொண்டுவிட்டன.

கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது போர்த்துக்கேய படையின் தளபதி இங்கு கைப்பற்றிய சுவடுகளையிம் ஓவியங்களையும் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி வைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் இன்றும் வைக்கப்பட்டுள்ளது.

எம்முன்னோர் தம் மகத்தான பணியை நாம் அறிகையில் நம் அடுத்த தலைமுறைக்காய் நாம் ஆற்றும் பணிகள் குறித்த கேள்விகள் எம்மை மௌனிக்க வைக்கிறது என்பதே உண்மையாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தில் கோகர்ண விகாரையை உடைத்துவிட்டே கோயிலைக்கட்டினார்கள் என்கிற அபத்த வாதங்களையும் கேட்டு பொறுமை காப்பதும், குப்பைகளை அகற்ற அங்கு நடராஜர் சிலைகளை கொண்டு போய் வைத்து ஈனச்செயலாற்றுவதும் எம் அடுத்த தலைமுறை மீது நாம் கொள்ளும் அக்கறையின்மையினையே காட்டுகிறது.

எம் முன்னோர்களும் நம்மைப்போன்றவர்களே, எம்மை விட நாகரீகம் காணாத உலகில் வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்கள் யாருக்காக உழைத்தார்கள்? நமக்காக உழைத்தார்கள். நாம் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கூடாது

நம் சங்கடமான மௌனங்கள் எப்போதும் இங்கு சம்மதத்தின் அறிகுறியாகவே எடுத்துக் கொள்ளப்படுவது எவ்வளவு பெரிய அவலம்?
வரலாற்றினைனை நாம் தெரிந்து கொள்வது எம் மூத்த இனத்திற்கு நாம் காட்டும் நன்றி மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கான நம் பொறுப்பும் ஆகும்.

ஓர் இனத்தின் இறந்தகாலம் பெருமையுடையதாய் இருக்கலாம் . அந்தப்பெருமை இறந்தகாலத்தோடு நின்றுபோனால் அது அந்த இனத்தின் மலட்டுத்தன்மையையே காட்டும்.

சிந்தியுங்கள்!

Related posts

நவீன வேதாள புதிர்கள் 02 – மடங்குகளை மடக்கு

Thumi2021

வழுக்கியாறு – 17

Thumi2021

ஈழச்சூழலியல் – 10

Thumi2021

Leave a Comment