இதழ்-23

சித்திராங்கதா – 23

அடங்காப்பற்று

வடக்கே யாழ்ப்பாண இராச்சியத்திற்கோ தெற்கே அனுராதபுர அரசுக்கோ கீழ்க்கரைக் கடலுக்கோ மேல் வானுக்கோ பின் வந்த பறங்கிக்கோ என்று எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் அடங்காமல் அடிபணியாமல் ‘அடங்காப்பற்று” என்கிற கர்வப்பெயர் கொண்டு கம்பீரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது அன்றைய வன்னியர் தேசம்.

வன்னி எனும் சொல் நெருப்பு எனும் பொருள் கொண்டே தமிழிலக்கியத்தில் பயின்று வரப்படுகிறது. அக்கினி குலத்தவர்களே வன்னியர்களும் வன்னிச்சியர்களும் ஆவர் என்று கதைகள் பலவாறாக கூறப்படுகிறது.

வன்னியர் ஈழத்தில் குடியேறியது பற்றி ஈழத்து நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் செய்திகள் உள்ளன.

இக்கதை வன்னியரின் முதலாம் குடியேற்றத்தினை குறிப்பதாய் நாம் கொள்ளுதல் பொருந்தும்.

வையாபாடல் வன்னியர் குடியேற்றம் பற்றிய வேறொரு கதையினை எடுத்துரைக்கிறது. அது
ஈழவேந்தன் செயதுங்க வீரவரராச சிங்கன் காலத்தில் நிகழ்ந்த கதை.

யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் மணிமுடி வேந்தன் முதலாம் சிங்கையாரிய சக்கரவர்த்தியையே கைலாசமாலை செயவீரன் என்கிற புனைபெயரில் குறிப்பிடுவதைக் கருதுங்கால் செயதுங்க வீர வரராசசிங்கன் என்று வையாபாடல் வர்ணிப்பதும் சிங்கையாரியச் சக்கரவர்த்தியையே என நாம் கொள்ளமுடியும்.

செயதுங்க வீரனுக்கு மதுரை மன்னன் மகள் சாமதுதியை மணஞ்செய்ய விருப்பம் தோன்றியது. தன் எண்ணத்தை தூதுவர் மூலம் மதுரை மன்னனுக்கு அனுப்பி வைத்தான் அரசன். மதுரை வேந்தன் தன் மகளுடன் அறுபது வாட்படை வன்னியர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். தான் மணம்முடிக்க இராசகுமாரியை அழைத்து வந்த வன்னியரை அழைத்து அடங்காப்பற்றிற்கு சென்று அதனைக்கைப்பற்றி ஆட்சி புரியுமாறும் யாழ்ப்பாண இராசதானிக்கு ஆண்டுதோறும் திறை செலுத்துமாறும் அரசன் பணித்தான்.

அவ்வாறே அடங்காப்பற்று வன்னியர் தேசமாக மாறியது. ஆண்டு தோறும் யாழ்ப்பாண இராசதானிக்கு பெறுமதிமிக்க செல்வங்களை வன்னிமன்னர்கள் திறையாக செலுத்திக்கொண்டிருந்தனர். காலப்போக்கில் அவ்வரி செலுத்தும் நாளே பெருவிழாவாக உருமாறியது. வன்னியர் எல்லோரும் கூடி யாழ் அரசவையில் அவ்விழாவை சிறப்பிப்பர். வன்னியர் விழா என்கிற பெருங்கொண்டாட்டமாய் அது நிகழும்.

வன்னியர் விழாவை இப்போது அவசரமாக நிகழ்த்தியாக வேண்டும் என மந்திரி ஏகாம்பரம் தொண்டமனார் சங்கிலிய மகாராஜாக்கு ஆலோசனை வழங்கினார்.

‘பறங்கியனை நோக்கி தாக்குதல் தொடங்க முன் எம்மண்ணிலே முளைத்த சில களைகளை அவசரமாக அகற்றியாக வேண்டும். அவ்வாறே இப்போது மிக்கபிள்ளை சிறையில் இருந்தாலும் இன்னொரு களையையும் நாம் உடனடியாக அகற்ற வேண்டிய தேவை இருக்கிறது. வன்னிமன்னன் வன்னியத்தேவனின் நிலைப்பாட்டை உணர்ந்து கொள்ள இப்போதே வன்னியர் விழாவை நடத்தியாக வேண்டும்.”
என்கிற மந்திரியாரின் வார்த்தைகளை சங்கிலியன் முழுவதுமாய் ஏற்றுக்கொண்டு வன்னியர் விழாக்கான உத்தரவை வெளியிட்டான்.

யாழ்ப்பாண இராச்சியத்திற்கு கீழ் வன்னி இராச்சியம் வலுப்பெற்ற வேந்தர்கள் எத்தனையோ பேரினால் பெருஞ்சிறப்பு பெற்றிருந்தாலும் காலத்திற்குக் காலம் சில விதிவிலக்கான வேந்தர்களும் வந்து மறைந்துள்ளனர். அத்தகைய ஒருவனே நம் கதைக்காலத்தில் இருந்த வன்னியத்தேவன்.

‘காக்கை வன்னியன்” என வரலாற்றாசிரியர்கள் கடுமையாக சாடும் இவனை கதைநாகரீக மரியாதை கருதி வன்னியத்தேவன் என்கிற பெயரில் நாம் வழங்குகிறோம்.

காகம் அப்படியென்ன பாவம் செய்த பறவையோ தெரியவில்லை. துரோகத்திற்கும் அதுவே அடையாளம். அசுத்தத்திற்கும் அதுவே அடையாளம். இரைச்சலிற்கும் அதுவே அடையாளம். ஏன்? அபசகுனத்திற்குக்கு கூட அதுதான் அடையாளம். வானில் பறக்கும் காக்கையின் நிழலை தரையில் காண்பது மனதில் தோன்றியுள்ள ஏதோ அச்சம் அவ்வாறே பலிக்கும் என சகுனம் சொல்வதாய் அக்காலத்தில் மக்களிடைய ஒரு உறுதியான நம்பிக்கை இருந்து வந்தது பற்றி போர்த்துக்கேய குவேரஸ் பாதிரியார் கூட தன்நூலில் வியந்து எழுதியுள்ளார்.

நாட்டிய கூடத்தில் அரங்கேற்றத்திற்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்த சித்திராங்கதாவிற்கு அவ்வாறானதொரு தரிசனம் கிடைத்தது. வானில் பறந்த காக்கையொன்றின் நிழலை அறியாது பார்த்துவிட்டாள். பதறி விட்டாள்.

நளினம் தடுமாறி தரையில் விழுந்தாள்.

எழுந்து தந்தையைத் தேடி ஓடினாள்.
‘அப்பா..அப்பா…”

‘என்ன மகளே? என்ன நேர்ந்தது? ஏன் இப்படித் தடுமாறி ஓடி வருகிறாய்?”

‘அப்பா வானில் எங்கோ பறந்து போன காக்கையொன்றின் நிழலை என் கண்களால் கண்டுவிட்டேன். காக்கையைக் காணவில்லை. இனி என்ன நேருமோ என்றெண்ணும் போது எனக்கு உள்ளம் நடுங்குகிறது அப்பா. என் மனதில் தோன்றிய அச்சங்களும் சந்தேகங்களும் உண்மை ஆகிவிடும் போலவே எனக்குத் தோன்றுகிறது.”

‘தைரியமாக இரு சித்திராங்கதா, அப்படி ஏதும் நிகழ்ந்துவிடாது. நல்லவற்றை மட்டும் நாட்டவல்ல அன்னை வீரமாகாளியின் அருள் உன்னுடன் இருக்கும் வரை நீ ஏன் பயங்கொள்கிறாய் மகளே. என் மகள் சித்திராங்கதா எவ்வளவு தைரியமானவள் தெரியுமா? இப்படி வீண் அச்சம் கொள்வது ஏனம்மா?”

‘தெரியவில்லை அப்பா, என் உள்ளம் சங்கடமாகவே இருக்கிறது.
அப்பா, எனக்கு இப்போதே வீரமாகாளி கோயிலுக்குப் போகவேண்டும் போல் இருக்கிறது. இல்லாது என் மனம் நிம்மதியடையாது.”

‘சரி மகளே , வா, நாம் இதோ இப்போதே நல்லைக்குப் புறப்படுவோம். உடனே புறப்படு மகளே”

சித்திராங்கதாவின் உள்ளத்தில் அந்த அபசகுன சம்பவம் எத்தனை பூகம்பங்களை உண்டுபண்ணியது என்பதை உங்களால் உணரமுடிகிறதா?

தன் வாழ்க்கையையே கலைக்காய் அர்ப்பணித்தவள் அவள். அபிநயங்களே வாழ்வின் நயம் என்று வாழ்பவள். அவள் அரங்கேற்றம் தடைப்பட்டுவிடுமோ என்கிற மெல்லிய அச்சமும் தவிப்பும் அதிகரித்துக் கொண்டே செல்லும் போது இப்படியானதொரு சிறிய அபசகுனச் சம்பவம் அவள் உள்ளத்தை எப்படி உருக்குலைய வைக்கும் என்பதை அவளைப்போன்றே கலைமீது தீராக்காதல் – அடங்காப்பற்று கொண்டவர்களாலே உணர முடியும்.
காத்திருங்கள்…

Related posts

திருக்கோணேச்சரம் – வரலாற்றுப் பின் நகர்வு (14.04.1624)

Thumi2021

ஈழச்சூழலியல் – 10

Thumi2021

சுயமார்புப் பரிசோதனை

Thumi2021

Leave a Comment