இதழ்-23

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும் – 03

பொதுவாக உளநெருக்கீடுகள் என்று வருகின்றபோது, பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்ற கருத்தியல் உண்டு. பெண்கள் தமது சமூக பழக்கவழக்கங்களால், அதிகளவு குடும்ப மற்றும் உறவினர்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த இணைப்பு பல காரணிகளால் வலுக்கட்டாயம் அறுக்கப்படும்போது – இடைவெளி – ஏற்படும்போது அவளது உள்ளம் ஊனம் அடைகின்றது. வடக்கு மாகாணத்தில் பெண்கள் தனிக்குடித்தனம் செல்லும் போது, வாழ்க்கைக்கு தன்னைத் தயார்படுத்தல் இல்லாத நிலையில் பல இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது.

இம் மாகாணத்தில் பெண்கள் சுரண்டப்படுவதைக் கண்கூடாகவே காணமுடியும். குடும்ப பொருளாதரத்தின் நிமிர்த்தம் கல்வியைத் தொடரமுடியாத யுவதிகள் பல்பொருள் வாணிபம், விசேட அங்காடி, அறக்கட்டளை அங்காடி, புடைவைக்கடை, நகைமாளிகை, சாப்பாட்டுக்கடை, மருந்தகம், அச்சகம், தனியார் கல்விநிலையங்கள், முன் பள்ளிகள், பத்திரிகை நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் முதலிய இடங்களுக்கு தொழில் தேடி செல்கின்றனர். வேலை பழக்குதல் என்று கூறி ஊதியம் இல்லாமல் வேலை வாங்குதல், சேமநலநிதி கட்டப்படாமல் வேலை வாங்குதல், குறை ஊதியத்தில் கூடிய உழைப்பு, என சிறு முதலாளிமார்கள் அவர்களைச் சுரண்டி அவர்களின் உடல் வலு – கட்டு – குறைந்தவுடன், நடுத்தெருவில் விடுகின்றனர். இதனால் அவர்கள் உடல் – உள நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர். சிலர் வழித்தடுமாறி பாலியல் தொழிலுக்கும் விழுகின்றனர்; கட்டாயம் இழுக்கப்படுகின்றனர்.

மறுபக்கத்தில் இலங்கையில் பெண்கள் பொதுவாக கல்வியில், கலைகளில், காவற்துறை, வைத்தியத்றை, நிதித்துறை, விஞ்ஞானத்துறை, சட்த்துறை, தொழில்நுட்பத்துறை, நீதித்துறை, விளையாட்டுத்துறை என அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆணுக்கு நிகராக சிறந்து விளங்கினாலும் வடக்கு மாகாணத்தில் சிசுக்கொலை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள் ஒழிந்தபாடில்லை. இதற்கு கருத்தியல் – உளவியல் – ரீதியான மாற்றம் வேண்டும். இல்லாவிடின் மாறாது.

தற்போது வடக்கு மாகாணத்தில் விஸ்திர்க்கப்பட்டுள் சிக்கல் விபசார விடுதிகளில் இளைஞர் – யுவதிகள் உல்லாசமாக இருத்தல் ஆகும். இதில் ஈடுபடும் இளைஞர்களில் அதிகமானோர் ஏற்கனவே திருமணமானவர்கள். ஆனால் யுவதிகளில் அநேகர் திருமணமாகாதவர்கள். இதற்கு பெண்கள் எதிர் கொள்ளும் பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணமாக உள்ள போதும், ஆடம்பரத்தேவையும் நவீன தொழில்நுட்பவசதிகளும் தொலைக்காட்சி நாடகங்களும், விளம்பரங்களும் முக்கியமான பங்காற்றுகின்றன.

தமிழ் அரசியல் அடிவருடிகளும் கட்சி உறுப்பினர்களும் காலந்தோறும் வடக்கில் பெண்களை இனவாதத் தீயைக் கக்கி பெண்களை நசுக்கியே வந்துள்ளனர். முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வாதாரம் மிகவும் கீழ் நிலையில் உள்ளமையை மாற்றியமைப்பதற்கு வழிவகைகளை உருவாக்காது சந்தர்ப்ப அரசியல் நடத்தி வருவது நகைப்புக்கு உரியது. சரியான அரசியல் வழிகாட்டியும் தலைமைத்துவமும் இன்மையால் இந்த முன்னாள் பெண் போராளிகள் அநாதரவா விடப்பட்டுள்ளனர். தமிழ் அரசியலில் அதிகார வர்ககம் சார்ந்த அரசியலே அன்று தொடங்கி இன்று வரை நடந்து வருகின்றமையே இதற்கு காரணம்.

பணியகங்களில் சேவையாற்றும் ஆணுக்கு ஊதியம் கிடைக்கின்றது. அவ்வாறு பணியாற்றுகின்ற ஆணுக்கு, சகல வசதிகளையும் செய்யும் பெண்கள், வீட்டிலிருந்து செய்யும் செயற்பாடுகளுக்கு பணரீதியான மதிப்புக்கள் கிடைப்பதில்லை. பல வீட்டுப் பணிகளை ஓய்வே இல்லாமல் செய்யும் இவ்வாறன பெண்கள் வடபகுதியில் அதிகமே. அவர்களே பெண் பிறப்பை வெறுக்கின்றனர்.

பொருளாதாரத்தில் பின்னிலையில் உள்ள குடும்பங்கள் தங்களின் பெண்பிள்ளைகளை வயது முதிர்ந்த ஆடவர்களுக்குத் திருமணம் முடித்துவைத்தல், வெளிநாட்டு மோகத்தால் பதிவுத்திருமணம் செய்து விட்டு நீண்ட நாட்கள் காத்திருத்தல், அங்கு சென்றவர்கள் ஏமாற்றம் அடைதல், வாழ்வை வெறுத்தல், பிணமாக திருப்பி அனுப்பப்படல் இவ்வாறாக திருமணம் தடைப்படல், பொருந்தா திருமணம், ஒழுக்கப் பிறழ்வுகள், பாலியல் சுரண்டல், குடும்பப் பிரிவு, தனிமையில் துன்புறல் என நெருக்கடிகளை எதிர் கொண்டு தற்கொலைக்குச் செல்கின்றனர்.

முடிவுரை
‘பெண்ணுக் குள்ளே ஞானத்தை வைத்தான் – புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ – பாரதியாரின் மணிமொழி. அந்தவகையில் பெண்களின் ஞானத்தை அழிப்பதன் விளைவே இயற்கை அழிவும் தொற்று நோய்களும் மனித இனத்தை பிரம்மிக்கவைக்கின்றன. எனவே, வடக்கு மாகாணத்தில் மேலே காட்டியதைப்போல பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களும் உளவியல் முரண்பாடுகளும், பிரச்சினைகளும் சிரமங்களும் மிகுந்த நிலையில் ஏற்படும் உளவியல் நெருக்கடிகளும் ஏராளம். இடையிடையே அவற்றுக்கான சில தீர்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் நல்லிணக்க ஆணைக்குழு பெண்கள் தொடர்பாக வைத்துள்ள திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம் உளவியல் முரண்பாடுகளை ஓரளவுக்குக் குறைக்கலாம். வடக்கு மாகாணத்தில் ஐ.நா. சிறுவர் கல்விக்கான நிதியம் பெண்கள் வலுவூட்டல் சட்டத்தில் உள்ளடங்கும் ஐந்து வலுவூட்டல் மட்டங்களான நலன் பேணல், அடைதல், விழிப்புணர்வைக்காட்டல், கட்டுப்பாடு, பங்குபற்றல் ஆகியவற்றை 2021 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திலிருந்து பூரணமாக நடைமுறைப்படுத்தினால் கட்டாயம் பெண் விடுதலை – சுதந்திரம் – கிட்டும். இவ்மாகாணத்தில் பெண்களுக்குக் குடும்பத்திலும் பொது இடங்களிலும் வேறுபடுத்திக்காட்டும் சம்பிரதாய விதிமுறைகளையும் சமூக விதி முறைகளையும் நீக்குதல் வேண்டும். பெண்களின் பூரண சுதந்திரத்திற்கு பெண்கள் மத்தியில் தங்களைப் பற்றியுள்ள தவறான கருத்தியலில் இருந்து ஒவ்வொரு பெண்ணும் விடுபடுதல் வேண்டும். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் வடக்கு மாகாணப் பெண்கள் எதிர் காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பிரகசிக்க வேண்டுமாயின் நீங்கள் யாரால்? எப்படி? சுரண்டப்படுகின்றீர்கள் என்பதை உணர்ந்து உங்கள் விடுதலை – சுதந்திரம் – நோக்கிப் புறப்படுங்கள்.

உசாத்துணைகள்

  1. பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் விபரங்கள், சமூகசேவைத் துறை, வடக்கு மாகாணம், 2018.
  2. வடக்கு மாகாணத்தின் தரம் ஒன்றின் கல்வி, மாகாணக்கல்வித் திணைக்களம், வடக்கு மாகாணம். 2021.
  3. மங்கை.அ., (2005), பெண்ணிய அரசியல், கங்கு வெளியீடு, வரிசை – 05, சென்னை, பக்கம் – 23.
  4. எங்கல்ஸ்.பீ., குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், மூன்றாம் பதிப்பு, மாஸ்கோ. பக்கம் – 91.
  5. சரோஜா.சி., (2013), வடமாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மகளிர் அபிவிருத்தி நிலையம், யாழ்ப்பாணம். பக்கம் – 03.
  6. கணேசலிங்கன்.செ.,(2001), பெண்ணடிமை தீர, ஐந்தாம் பதிப்பு, பாரி நிலையம், சென்னை. பக்கம் -132.
  7. சண்முகலிங்கம்.க., (2006), மனித உரிமைகளும் அபிவிருத்தியும், அகவிழி-3,டொறிங்டன் அவெனியூ, கொழும்பு. பக்கம் – 60.
  8. தேவகௌரி, ‘பெண்கள் மாறாநிலை பாத்திரங்கள்’, புனர் ஜீவிதம் – சஞ்சிகை, கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம். பக்கம் – 14.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 19

Thumi2021

ஐபிஎல் திருவிழா

Thumi2021

சுயமார்புப் பரிசோதனை

Thumi2021

Leave a Comment