சுந்தரம் அண்ணைக்கு கொரோனாவாம்… எமது அலுவலகம் பூட்டப்பட்டதாம்… எல்லோரையும் வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தலில் இருக்கட்டுமாம்…
அலைபேசி அலறலின் சாராம்சம் இதுதான். அதிர்ந்து விட்டேன். சீனாவில் தோன்றிய கிருமி என் வாசல்வரை வந்துவிட்டது. யாருக்கு தெரியும்? வாசல் தாண்டியும் வந்திருக்கலாம். பிசீஆர் தான் பதில் சொல்ல வேண்டும். ஒருவனையும் அவனோடு தொடர்புபட்ட அனைவரது எதிர்காலத்தையும் எழுதும் பரிசோதனை பிசீஆர். இந்த முடிவு எதிரானால் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் நான் தனிமைப்படுத்தல் முகாமிற்கு செல்ல வேண்டும். என்னோடு தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதுதான் இப்போதைக்கு இலங்கையில் உள்ள கொரோனா சட்டம். ஆள் மாறி, அங்கம் மாறி, பக்கம் மாறி என்று அறுவை சிகிச்சையிலேயே ஆயிரம் மாறாட்டங்கள் நடைபெறும் மருத்துவ உலகில் எனது முடிவு என்று சொல்லப்படுவது எனது முடிவு தானா? தினமும் ஆயிரம் பேரை பரிசோதிக்கிறார்கள். பரிசோதனைக் குழாய்கள் மாறலாம். பரிசோதிக்கும் போது மாறலாம். முடிவுகளை அறிக்கைப்படுத்தும் போதும் மாறலாம். இருப்பவனுக்கு இல்லை என்றும் இல்லாதவனுக்கு இருக்கு என்றும் முடிவு வருமாக இருந்தால் அதன் விபரீதம் மொத்த சமூகத்தையே பாதிக்கும்.
அதற்காக நான் மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு எதிரானவனல்ல. இந்த கொரோனாவால் ஒட்டுமொத்த உலகமே ஓய்விலிருக்க ஓய்வின்றி இராப்பகலாக சேவையாற்றியவர்கள் அவர்கள். பலர் அச்சப்பட்டு ஓடி ஒளிப்பதற்கு காரணமாகும் பிசிஆரை அடிக்கடி செய்பவர்கள் அவர்கள். ஆனால் அவர்களகலும் இருக்கும் சில அலட்சியப்போக்காளர்களில்த்தான் பயம் எனக்கு. தாண்டிச்சென்ற வாகனம் கூட ரிவர்சில் வந்து இடித்துவிட்டுச் செல்லுமளவிற்கு என் நாளும் கோளும் என் வாழ்க்கையை தம்பாட்டிற்கு விளையாடிக்கொண்டிருந்த நேரம் அது. ஆயிரத்தில் ஒருவனாக யாரேனுமொரு அலட்சியவான் வாய்த்துவிட்டால் கொரோனா இருக்கிறதோ இல்லையோ எனக்கும் கொரோனாதான்.
என்னோடு வேலைசெய்பவர்கள் வீடுகள் சிலவற்றில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடு என்று சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். என்னைப்போன்ற சிலரது வீடுகளுக்கு எதுவுமே ஒட்டவில்லை. பிரகடனப்படுத்தப்பட்ட தொற்றாளிகளிலும், பிரகடனப்படுத்தப்படாத தொற்றாளிகளுக்கு வழமை போலவே சலுகைகள் அதிகம். அவர்கள் வெளியே திரியலாம். இவர்கள் வீட்டோடு சிறை வைக்கப்பட்டவர்கள். இப்போதெல்லாம் தேசத்துக்கு ஒரு சட்டங்கள், நகரத்துக்கு ஒரு சட்டங்கள், வீதிக்கொரு சட்டங்கள், வீட்டுக்கொரு சட்டங்கள், ஆளுக்கொரு சட்டங்கள். சில இடங்களில் தொற்று இனங்காணப்பட்டவரோடு தொடர்புடையவர்களுக்கான பிசிஆர் அவர்கள் இருவரும் இறுதியாக சந்தித்த நாளிலிருந்து பத்து நாளில் நடக்கும். சிலருக்கு பதினான்கு நாட்களில் நடக்கும். பரிசோதிக்கும் போதும் சிலருக்கு மூக்குக்குள் மட்டும் எடுப்பார்கள். சிலருக்கு
வாய்க்குள்ளும் எடுப்பார்கள். உலகையே முடக்கி வைத்திருக்கும் கிருமிக்கு இதுதான் முறை என்று ஒன்றை இன்று வரை எழுதாத விஞ்ஞானம் தோற்றுத்தானே போயிருக்கிறது.
இன்னும் பத்து நாட்களில் எனக்கு பிசிஆர் எடுப்பார்கள். வலிக்கும் என்கிறார்கள். இரத்தம் வரும் என்கிறார்கள். ஒருவருக்கு பாவித்த உபகரணங்களை அடுத்தவர்களுக்கு பாவிக்க மாட்டார்கள் என்றாலும் கையுறை மாற்ற மாட்டார்களாம். அப்படியென்றால் எனக்கு முதல் பரிசோதிப்பவருக்கு கொரோனா என்றால் எனக்கு கொரோனா இல்லாவிட்டாலும் பரிசோதிக்கும் போது வர சந்தர்ப்பம் இருக்கிறது. இதன் பிறகு தனிமைப்படுத்தல் மையத்திற்கு போக வேண்டுமாம். யாராக இருந்தாலும் போகத்தான் வேண்டுமாம். அங்கே எவற்றையும் என்னால் சமாளித்து விட முடியும். ஆனால் சாப்பாடு. மாமிசம் சாப்பிட்டு பழக்கமில்லாத எங்களுக்கு அங்கே உணவுதான் பிரதான பிரச்சனையாக இருக்கும். நோய்க்கான விசேட உணவுகள் என் பெற்றவர்களுக்கு அங்கே கிடைக்க வேண்டும்.
தனிமைப்படுத்தல் மையங்களில் விசேடமான சிகிச்சைகள் எதுவும் செய்யப்படாத போது தொற்றாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டவய்களை ஏன் அங்கே அனுப்புகிறார்கள்? அங்கே சென்று வந்தவர்களை சிறை சென்று வந்த குற்றவாளிகளைப் பார்ப்பதைப்போல பார்க்கிறது சமூகம். தொற்றாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்தி விடுங்களேன். ஓடித்திரிவார்கள் என்ற சந்தேகம் இருந்தால் வீட்டை சீல் வைத்து விடுங்கள். அரசுக்கும் செலவு மிச்சம்.
மனதளவில் ஏற்கனவே தனிமைப்பட்டிருந்த எனக்கு வெளிப்படையான இந்த தனிமைப்படுத்தல் மேலும் வேதனையளித்தது. நாட்களை கடினப்பட்டு நகர்த்தினேன். எதிர்பார்த்திருந்த பிசிஆர் பரிசோதனைக்கான நாளும் வந்தது. தனிமைப்பட்டு இருக்கச்சொன்னார்கள். வெளியிலே திரிய வேண்டாம் என்றார்கள். ஆனால் பிசிஆர் பரிசோதனைக்காக அவர்கள் இடத்திற்கு வரச் சொன்னார்கள். என்ன ஒரு முரணான சட்டங்கள்.
எந்த முக்கிய நிகழ்வுக்கு சென்றாலும் ஆலயம் செல்லாமல் சென்றதில்லை. கிருமி இருக்கிறதா என்ற ஐயத்தோடு ஆலயம் செல்வது அழகல்ல. ஆயத்தமானேன். வீதியின் கரையிலேயே நின்று இறைவனை இறைஞ்சினேன்.
“இறைவா, டெஸ்ட் ரிசல்ட் பொசிட்டிவ்வாக வர வேண்டும்.”
ஐயையோ ஏன் இப்படி வேண்டினேன். நெகடிவ்வாக வர வேண்டுமென்று தானே வேண்டியிருக்க வேண்டும். சகுனமே பிழைத்து விட்டதே.. கும்பகர்ணன் கேட்ட வரம் போல எனக்கும் நிகழ்ந்தால்…?? இறைவா.. மன்னித்துக் கொள் நல்லதே நடக்க வேண்டுமென வேண்டிவிட்டு புறப்பட்டேன்.
சொன்ன நேரத்துக்கு முன்பதாகவே சென்றால் என்னைத்தான் முதலாவதாக பரிசோதிப்பார்கள். கையுறை சிக்கல் வராதென நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு முன்பே பலர் நின்றிருந்தார்கள். வரிசையில் நின்றேன். பரிசோதிக்கும் போது எவருக்கும் அங்கே இரத்தம் வரவில்லை. ஒவ்வோருவருக்கும் பரிசோதித்து முடிய பரிசோதிப்பவர் புதிய கையுறைகளை மாற்றியதோடு சனிடைசர் மூலமும் கையை சுத்தப்படுத்திக் கொண்டார். சமூகவலைத்தள சேதிகள் பல வதந்திகள் என்பதை இந்த சம்பவமும் உறுதிப்படுத்தியது. பரிசோதனை முடிந்து வீடு திரும்பினேன். ஊசி போடுவதை விட சுலபமான ஒரு பரிசோதனை முறையை இந்த உலகம் பயங்காட்டி வைத்திருக்கிறது.
பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்தேன்.
அடுத்த நாள்…
முடிவு வந்தது..
என்னை முடித்து விடாத ஒரு முடிவு வந்தது…
இப்படிக்கு,
ஆயிரத்தில் ஒருவன்