இதழ்-24

யுத்தங்கள் தோன்றட்டும் ; ரத்தங்கள் சிந்தட்டும்

மனித சமுதாய வளர்ச்சியில் 18ஆம் நூற்றாண்டுகளில் கைத்தொழில் புரட்சி ஆரம்பிக்கிறது. கிபி 1750 – 1850 வரையான கைத்தொழில் புரட்சி காலம் அதுவரை இருந்த அரசாட்சி முறைமையிலான உலகத்தின் சமூகக் கட்டமைப்பை மாற்றி முதலாளி –  தொழிலாளி என்ற இரு வர்க்கமாக பூமி நெடுகக்கோடு கிழித்தது.

“ஒருவன் ஒருவன் முதலாளி

உலகில் மற்றவன் தொழிலாளி”

அண்டத்தை படைத்து அத்தனையையும் ஆக்கிவிட்ட முதலாளி வேடிக்கை பார்த்தபடியிருக்க, பணம் படைத்த முதலாளிகளின் இராச்சியம் ஆரம்பித்தது. அளவில் மிகச் சொற்ப அளவிலே இருந்த முதலாளி வர்க்கம் முழு உலகின் அத்தனை நிலத்தையும் ஏனைய வளங்களையும் சொந்தம் கொண்டாட, பெரும்பான்மையாக இருந்த தொழிலாளி வர்க்கம் உணவுக்கே திண்டாட வேண்டியிருந்த காலம்.

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

அவன் யாருக்காகக் கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான்

இல்லை ஊருக்காகக் கொடுத்தான்”

இயற்கை பொதுவாக கொடுத்த வளங்கள் ஒரு தரப்பில் சேர, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களிடம் கைகட்டி சேவகம் செய்தது பாட்டாளி வர்க்கம்.

//பணக்காரன் குடி ஏற பாட்டாளி வீடு

கட்டுறான் கல்லாலே மண்ணாலே

ஆனாலும் அவனுக்கோர் வீடில்ல யாரு

கேக்குறா துக்கம் சொன்னாலே

பல பேரு தான் உடுத்த நெசவாளி நூல

நெய்யுறான் பொன்னான கையாலே

அட ஆனாலும் அவனுடுத்த வேட்டி இல்ல யாரு

கேக்குறா துக்கம் தான் சொன்னாலே//

தொழிலாளி வர்க்கத்தை சக மனிதனென்றே கருதாது அவனது உழைப்புக்கு உரிய ஊதியம் வழங்காது அவன் உழைப்பை சுறண்டி அவர்களை தாம் வளர்க்கும் மிருகங்கள் போலவே நடத்தியது முதலாளி வர்க்கம்.

அமெரிக்காவை ஆக்கிரமித்த நாடுகள், அதனை செப்பனிட ஆபிரிக்க அடிமைகளை கப்பல் கப்பலாக அமெரிக்காவுக்கு கொண்டு வந்தார்கள்.

“உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே

உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே”

அமெரிக்க நிர்மாணம் நிறைவடைந்ததும் அந்த அடிமைகளை சந்தையில் விலைபேசி விற்றார்கள். அடிமைகளின் பலத்தை கொண்டு அடிமைகளுக்கான கிராக்கி எகிறியது. நிறைய அடிமைகளை வைத்திருப்பவர்கள் சமூகமட்டத்தில் உயர் அந்தஸ்து உடையவர்களாக கருதப்பட்டனர்.

தமது அடிமைகளுக்கு உடை, உணவு, இருப்பிடம் வழங்காது கொடுமைப்படுத்தினார்கள். குதிரை தொழுவத்திலேயே கிடந்த அவர்களை பல சமயங்களில் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார்கள். தொடர்ந்த நிறவெறி, பல்லாயிரம் கறுப்பின அடிமைகளின் உயிரை குடித்ததோடு அடிமை முறைக்கு எதிராக போராடிய ஆபிரகாம் லிங்கன் , மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்ற தலைவர்களையும் துப்பாக்கிக்கு இரையாக்கியது.

“ரத்தம் இங்கே வேர்வையாக கொட்டி விட்டது; உயிர் வற்றி விட்டது

காலம் இங்கே ஊமை கையை கட்டி விட்டது; கண்ணீர் ஊற்று விட்டது”

இந்தியத் துணைக்கண்டத்தில் முதலாளி- தொழிலாளி எனும் வர்க்கவேறுபாடு, மதம் மற்றும் கடவுளுடன் பிணைக்கப்பட்ட வலுவான சாதியக் கட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. மானிட அடிப்படைத்தேவைகளை தொழில்களாக பிரித்து உழைக்கும் மக்களை பிறப்பால் பிரிவினைப்படுத்தி சாதிகள் உருவாக்கப்பட்டன. மேலைநாட்டுச் சுரண்டல் அந்நேர உழைப்பை சுரண்டுவதாய் இருக்க, சாதியோ சந்ததி சந்ததியாய் உழைக்கும் மக்களின் உரிமைகளை பறிப்பதாயும் உணர்வுகளை நசுக்குவதாகவும் இருந்தது.

//அட சாமியோ சாமி அப்படி இருந்திட்டா காமி

கூலியோ கூலி எங்கள நம்பித்தான் பூமி

பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்//

இப்படியான விடுதலை சிந்தனையே வளராத காலம் அது. அடிமைகளாக பிறந்து பிறப்பால் வரும் தொழிலையே செய்து அப்படியே மடிவது தான் எங்கள் வாழ்க்கை என்று அந்த மக்களே நம்பி வாழ்ந்த காலம்.

“உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம்

ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்

சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்

தர்ம நீதி மக்கள் ஆட்சி வாழ்கவென்றே ஆடுவோம்”

உலக மக்கள் அழுது அழுது கண்களும் காய்ந்து அபயம்  வேண்டி கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருக்க, இருண்டு கிடந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்ற ‘பொதுவுடமை’ எனும் அகல்விளக்கோடு வந்தார் கார்ல் மார்க்ஸ்.

“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை – நீங்கி

வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை”

‘உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்ற அறைகூவலோடு வெளியான ‘கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை’ அத்தனை உழைக்கும் மக்களிடமும் தமது அடிமை நிலை பற்றிய விழிப்புணர்வையும் அவர்கள் சுரண்டப்படுவது பற்றியும் எடுத்துக்கூறி உரிமைகளை பெறுவதற்கு விடுதலை போராட்டங்களுக்களின் அவசியத்தை முன்வைத்தது.

“உழைக்கும் தோழர்களே ஒன்று சேருங்கள்

உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்

மேடு பள்ளமில்லா சமுதாயம் காண

என்ன வழி என்று கண்டு சேருங்கள்”

ஜரோப்பாவில் பற்ற வைக்கப்பட்ட கம்யூனிசத்தீ காட்டுத்தீ போல் கண்டம் தாண்டி கண்டம் விரைவாக பரவியது. ‘கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை’ பல மொழிகளிலும் அச்சிடப்பட்டது. பைபிளுக்கு அடுத்ததாக உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக அது மாறியது. மக்களுக்குள் விடுதலை உணர்வு பிறந்தது.  உலகெங்கும் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பித்தது.

“எரிமலை எப்படி பொறுக்கும்

நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

சிங்க கூட்டம் நிமிர்ந்தால்

துன்ப சிறையின் கதவு தெறிக்கும்

நாம் கண்ணீர் விற்கும் ஜாதி

இனி அழுதால் வராது நீதி”

19ஆம் நூற்றாண்டில் மேலைநாடுகளில் வேகமாக வளர்ந்த தொழிற்சாலைகள் எங்கும் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிராக பல நாடுகளில் எதிர்ப்பு குரல்கள் கிளம்பியது. இங்கிலாந்தில் ஆரம்பித்த எதிர்ப்பு பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா என்று அத்தனை நாடுகளிலும் செங்கொடி ஏந்தி உண்ணாவிரத போராட்டங்களும் எதிர்ப்பு பேரணிகள் மறியல்களுமாக உலகெங்கும் பரவியது.

“நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு

அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு

வறுமையின் நிறமா சிவப்பு

அதை மாற்றும் நிறமே சிவப்பு”

1856ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கட்டிட தொழிலாளர்கள்  8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து நடத்திய போராட்டத்தில் முதன்முதலாக தொழிலாளர்கள் சார்பில் வெற்றியை பதிவு செய்தனர்.

“வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்

கொள்கை வெல்வதே நான் கொண்ட இலட்சியம்”

செங்கொடி ஏந்திய தொழிலாளர் படை இந்த வெற்றியோடு உற்சாகமடைந்து போராட்டங்கள் மேலும் வலுவேறிய நிலையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் இணைந்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்கள்.

இந்த இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியதுடன் மே,1 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.

//நித்தமும் பாடுபட்டு உழைக்கும்

யாவரும் ஓரினம் தான்

சத்திய வார்த்தை இதை

நமக்கு சொல்லுது மே தினம் தான்

நாமெல்லாம் வேலை நிறுத்தம் செஞ்சா தாங்காது நாடு முழுதும்

நாம் இன்றி என்ன நடக்கும்

நம்ம கை தாண்டா ஓங்கி இருக்கும்//

1200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கெடுத்த இவ் வேலை நிறுத்தத்தால் அமெரிக்க பெருமுதலாளிகள் அரண்டு போனார்கள். ரயில் சேவை முடங்கியது. சிக்காக்கோ நகரில் அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த இந்த போராட்டத்தில் நுழைந்த காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் பல தொழிலாளர்களும் தலைவர்களும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டதோடு, அமெரிக்கா முழுவதும் அது கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

//அஞ்சாம தொழில செஞ்சா

நம்ம யாராச்சும் அசைப்பானா

ஒண்ணாக இருந்தாக்கா

இங்கே வாலாட்ட நெனைப்பானா//

பின்னர், 1889ம் ஆண்டு பாரிசில் கூடிய சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர வேலையை சட்டமாக்கியதோடு, சிக்காக்கோ போராட்டம் நடந்த மே 1 ஐ உழைப்பாளர் தினமாகவும் பிரகடனப்படுத்தியது.

“மே தினம் உழைப்பவர் சீதனம்

மே தினம் உழைப்பவர் சீதனம்”

கல்வி வளர்ச்சியோடு மேலை நாடுகளில் மனிதம், ஜனநாயகம் வளர்ந்தாலும் இந்திய துணைக்கண்டத்தில் பிறப்போடும் கடவுளோடும் பூட்டப்பட்ட சாதி இன்றும் பெரும் மனநோயாக தொடர்ந்த படியே இருக்கிறது.

“எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆள

சோத்தில் நாம கையை வைக்க சேத்தில் வைப்பான் கால

சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு

நாலு நாளு லீவு போட்டா நாறிப் போகும் ஊரு

முடி வெட்டும் தொழில் செய்யும்

குலந்தான் இல்லையேல் நமக்கெல்லாம் ஏது அழகு

நதி நீரில் நின்று துணி துவைப்பவன் இல்லையேல்

வெளுக்குமா உடை அழுக்கு

எந்த தொழில் செய்தாலென்ன

செய்யும் தொழில் தெய்வமென்று

பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே”

உடல் உழைப்பை சுரண்டிய முதலாளித்துவம் இன்று அறிவியற் தளத்தில் தனது சுரண்டலை ஆரம்பித்திருக்கிறது.  காலம் மாற உழைக்கும் மக்களின் வடிவம் மாறியிருக்கும் பொழுது சுரண்டல் வடிவமும் மாறியிருக்கிறது.  அம்பேத்கரும் பெரியாரும் மீண்டும் பிறந்து வந்தாலும் நான் பெரியவன் நீ தாழ்ந்தவன் என்ற மனநோய் குணமாகாத வரை உரிமைப் போராட்டங்கள் இன்னும் அவசியமாகிறது. வர்க்க முரண்பாடுகள் தான் மானிட குல வரலாறு என்பதை உழைப்பாளர் தினம் மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறது.

//உழைப்பாளி இல்லாத நாடு தான்

எங்கும் இல்லேயா

அவன் உழைப்பாலே பிழைக்காத

பேருதான் எங்கும் இல்லேயா//

Related posts

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

திரைத்தமிழ் – வேலைக்காரன்

Thumi2021

வழுக்கியாறு – 18

Thumi2021

Leave a Comment