இதழ்-24

அம்மா என்று யார் அழைப்பது?

யாரந்த படுபாவி?
ஆலமரத்தை அறுத்து வீழ்த்தியவன்? – என்
ஆருயிரை வீழ்த்தி நசுக்கியவன்?

மனிதர்களே…
தவமிருந்து மகவைப் பெறுவது
நீங்கள் மட்டும் தானா?
உங்கள் முன்னோர்கள் நாங்கள்!
எங்கள் வம்சாவளிதான் நீங்கள்!
தவமிருந்து பெற்ற மகன்
அனுமனாவான் என்று நினைத்திருந்தேன்.
எமனிடம் அனுப்பி விட்டீர்களே?

ஆடும் கொப்பில் தாவ கற்றுக் கொடுத்துள்ளேன்
அறுந்து விழும் கொப்பில் தாவ கற்றுக் கொடுப்பதற்குள்
அறுத்து விட்டீர்களே ஆலமரத்தை!
அபிமன்யு போல
அரை வித்தைக்காரனாய்
அன்பு மகன் ஆருயிரை விட்டானே!

இரவில் திரிவது ஆபத்தானது!
இரவில் திரிபவை அதனிலும் ஆபத்தானது!
இரவில் வந்தவர்களே…
இதயத்தை இரவல் வாங்கியா வந்தீர்கள்!
குறட்டைகளும் கொசுக்களும் மட்டும்
பேசிக்கொண்டிருந்த நேரம் ஒன்றில்
குசு குசுத்தன சில மனிதக்குரல்கள்!
அசதியாய் ஆளுக்கொரு கொப்பில்
ஆழ்ந்து தூங்கியிருந்தோம்.
அசதியில் விழுந்துவிடாமலிருக்க
வால்களால் கொப்புக்களை பற்றியிருந்தோம்!

வால்களை வென்றன வாள்கள்!
இதயத்தை அறுப்பது போல
இயந்திர வால்கள் மரத்தை அறுத்தன.
வாலை விடுவிப்பதற்குள்
வாள் மரத்தை விடுவித்தது!
தரையில் மாறி மாறி
விழுந்தன கொப்புக்கள்!
விழுந்தோம் நாம்!
இல்லை இல்லை…
வீழ்த்தப்பட்டோம்…
வித்தை தெரிந்தவர்கள்
மயிரிழையில் மீண்டனர்..
மற்றவரெல்லோரும் மாண்டனர்…

மாண்டவரில் அவனும் ஒருவன்!
ஆம் என் மகனும் ஒருவன்!
மீண்டவரில் நானும் ஒருத்தி!
காலாவதியாகிவிட்ட எனக்கு
வாழ்வளித்த இறைவா!
காலமே தொடங்காத அவனின்
வாழ்வழித்தது முறையா?

முதுகிலும் கழுத்திலும் வயிற்றிலும்
சுமந்து அவனை பாதுகாத்தவள் நான்
நான் பக்கத்தில் இருக்கும் போதே
பறித்து விட்டீர்களே…

மனிதர்களே உங்களைப்போல நாங்கள்
பாசத்தால் பேரம் பேசுவதில்லை..
தாய்மை என்பது கொடுப்பது
கொடுத்ததற்காய் பிறகு கேட்பது அல்ல..
தூய அன்பு பிரதிபலன் கருதாது!
அவனாய் அவன் அலுவல்கள்
பார்க்காத பருவம் வரை தான்
நாங்கள் வழிகாட்டிகள்
பிறகு பார்வையாளர்கள்…
அதனால்த்தானோ என்னவோ
முதியோர் இல்லங்களும் எமக்கில்லை!
மூதாதையர் எங்களிடம் கற்பதற்கு
உங்களுக்கு இன்னும் நிறைய இருக்கிறது!

நட்டவர்கள் அழிக்கலாமாம்!
மரங்களை நட்டது நீங்கள் மட்டும்தானா?
விதை நாங்களும் போட்டிருக்கிறோம்!
இயற்கை எங்களுக்கும் தான்!

அன்னையர் தினம் வருகிறதாம்…
என்னை அம்மா என்று யார் அழைப்பார்?
இறைவா…
மனிதனை மன்னிக்காதே…
மனிதத்தை மறந்தவனை
மறந்தும் மன்னிக்காதே!

Related posts

வழுக்கியாறு – 18

Thumi2021

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

நவீன வேதாள புதிர்கள் 03 – காணி நிலம் தந்தோம்

Thumi2021

Leave a Comment