இதழ்-24

‘பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் ரீதியான சுரண்டல்களின் வெளிப்பாடாக சிறிதுவெளிச்சம் சிறுகதை’

-பிரசாந்தி ஜெயபாலன்-

பெண்ணியம்

பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்சமத்துவம், பெண்முன்னேற்றம் ஆகிய முன்னேற்றகரமான கருத்தியல்களை உள்ளடக்கியதாகவே பெண்ணியச்சிந்தனை தோற்றம் பெறுகின்றது. பெண்ணியம் என்பதனைக் குறிக்கும் ‘Femenism’ என்ற ஆங்கிலச்சொல் 19ஆம் நூற்றாண்டளவிலேயே முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது. அதாவது சமூகத்திற் பெண்ணின் சமத்துவம் நிராகரிக்கப்பட்டமையும், புறக்கணிக்கப்பட்டமையும் நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சிகளைக் கொண்டிருந்தாலும் 1960ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே செயற்பாட்டு நிலையில் பெண்ணிய இயக்கம் எழுச்சி பெறத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்தே பெண்ணியத்திறனாய்வு வளர்ச்சிபெறத் தொடங்கியது. ஒரு படைப்பினை பெண்ணியத்திறனாய்வின் அடிப்படையில் ஆய்வுசெய்யும்போது முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்பது தொடர்பான தெளிவு அவசியமாகும். இவ்வகையில் பெண்ணியம் தொடர்பான விளக்கங்களாக பின்வருவனவற்றை நோக்கலாம்.

Teenage girl raped and abused by Facebook "friend" - Tamil News -  IndiaGlitz.com

1) சமூகத்திலும், வேலைத்தளத்திலும், குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்களின் உணர்வுநிலைகளும் இந்நிலையை மாற்றுவதற்கு பெண்களும், ஆண்களும் மேற்கொள்ளும் உணர்வுபூர்வமான நடவடிக்கைகளும் பெண்ணியம் ஆகும்.

2) பெண்ணியம் என்பது பால்ரீதியான பாகுபாட்டையும் பாலடிப்படையில் பேதப்படுத்தப்படுவதையும் புரிந்துகொண்டால் மட்டும் போதாது. மாறாக செயற்பாட்டுடன் இணைந்து ஆணாதிக்கத்திற்கு சவாலாய் அமையவேண்டும்.

3) காலங்காலமாகப் பல்வேறு காரணங்களினால் நசுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும்வரும் பெண்ணினத்தின் உரிமையிழப்பின் மீட்டுருவாக்கமே பெண்ணியத்தின் மைய இழையாகும். பெண்ணினத்தைச் சுற்றிச்சூழ்ந்துள்ள ஒடுக்குமுறைக் கோட்பாடுகளையும் அடக்குமுறை அம்சங்களையும் வேரறுக்கும் பணி இதன்பாற்பட்டதாகும்.

பெண்ணியத்திறனாய்வு

பெண்ணியத்திறனாய்வு என்பது பெண்ணியச்சிந்தனைகளின் அடிப்படையில் இலக்கியங்களினூடாகப் பெண்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதனூடாகப் பெண்விடுதலையைக் கோருகின்ற திறனாய்வுமுறையாகும். இவ்வாறான பெண்ணியநோக்கினை அடிப்படையாகக்கொண்டு இலக்கியங்களில் இடம்பெறுகின்ற பெண்படிமங்களை ஆய்வு செய்தலே பெண்ணியத்திறனாய்வில் முனைப்புப்பெறுகின்றது. ஆண்களின் கண்ணோட்டத்திலே பெண்பாத்திரங்கள் உருவாக்கப்படுதலும், பெண்கள் பற்றிய மரபுவழிக் கண்ணோட்டங்களை மேலும் மீளவலியுறுத்தி நிற்றலும் இதன் உடனடி அவதானிப்புக்களாக அமைகின்றன.
இவைதவிர மார்க்சியக் கண்ணோட்டத்திலும் பெண்ணியத்திறனாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ‘மார்க்சியம் விளக்கிய பறித்தற்கோட்பாடு (Exploitation Theory) பெண்ணியத்திறனாய்வாளர்களின் பயன்பாட்டிற்குரியதாகின்றது. அதேவேளை பெண்கள் பறிப்பிற்கு உள்ளாக்கப்படுதலை மார்க்சியம் தனிச்சிறப்புடன் விளக்கிக்காட்டவில்லை என்ற அவதானிப்புக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.’ என்ற சபா.ஜெயராசாவின் கூற்றும் குறிப்பிடத்தக்கதே. மார்க்சியத்தை அடியொற்றியே பெண்ணியத்திறனாய்வில் ‘பாலியற்பறிப்பு’ என்ற எண்ணக்கரு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விதமாக கலைஇலக்கியப்பரப்பில் பெண்ணியத்திறனாய்வு புதிய சிந்தனைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இத்துறையில் பயன்படுத்தப்படும் பால்நிலை என்ற எண்ணக்கருவைக் கூறலாம். உளவியல் நடத்தையியல், சமூக பண்பாட்டியல் முதலியவற்றுடன் பாலியலைத் தொடர்புபடுத்தி விளக்கும் எண்ணக்கருவாக இது உருப்பெற்றுள்ளது.

90% Bengaluru girls fear abuse in public spaces- The New Indian Express

பாலியற்சுரண்டல்

பாலியல் உணர்வு உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானதே ஆயினும் மனிதனே அதனைத்தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கின்றான். பாலியல் துன்புறுத்தல் என்பது பாலியல் முனைப்போடு செயற்படுத்தப்படும் விரும்பப்படாத நடத்தை ஆகும். சமூகசீர்கேடுகள் மலிந்துள்ள இன்றைய உலகிலே பெண்கள் மீது மட்டுமல்லாமல் ஒருசில ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீதும் பாலியல் துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன என்பது கசப்பான உண்மையே. எனினும் குறிப்பாக பெண்கள் மீது ஆண்களால் மேற்கொள்ளப்படும் உடல்ரீதியான சேட்டைகள், பாலியல் நோக்கோடு பேசப்படும் கீழ்த்தரமான வார்த்தைகள் முதலான பல பாலியல்ரீதியான துன்புறுத்தல்களே இங்கு பாலியற்சுரண்டல்களாக நோக்கப்படுகின்றன. இது வயது வேறுபாடின்றி ஆண்களால் நிகழ்த்தப்படும் ஒரு வன்முறையாகும். பெண்களைக்கவர்ச்சிப் பொருட்களாகவும், நுகர்பண்டங்களாகவும், போகப்பொருளாகவும் கருதும் மனப்பான்மை ஆண்களிடையே பரவலாக நிலவிவருகின்றது. இதனாலேயே இலாபத்தைக் குறிக்கோளாகக்கொண்ட வர்த்தகச்சந்தையில் பெண்கள் வணிக நுகர்பொருட்களாக்கப்படுகின்றார்கள். இவ்வாறாக வீட்டிலிருந்து உலகவர்த்தகச்சந்தைவரை பெண்கள் மீதான பாலியற்சுரண்டல்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதனை மையப்படுத்தி கவிதை, சிறுகதை, நாவல் போன்ற பல இலக்கியங்கள் படைக்கப்பட்டுவருகின்றன.

Women molested in Kolkata Bus in front of husband – My CMS

சிறிதுவெளிச்சம்

கு.ப.ரா எனச்சிறப்பாக அறியப்படும் கும்பகோணம் பட்டாபிராமய்யர் ராஜகோபாலன் தமிழ்ச்சிறுகதைத்தளத்தின் முன்னோடிப் படைப்பாளிகளுள் ஒருவராவார். பாலியலைப்பச்சையாக எழுதுகின்றார் எனக்குற்றம் சுமத்தப்பட்ட இவரது பெரும்பாலான சிறுகதைகள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் ரீதியான சுரண்டல்களின் வெளிப்பாடாக அமைந்து, அதனூடாகப் பெண்களை விடுதலையை நோக்கி ஆற்றுப்படுத்தி அவர்களுக்கு எதிராக அநீதிகளை இழைக்கின்ற ஆண்களுக்கும் ,சடங்கு சம்பிரதாயங்களுடனான ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நீதிபுகட்டுவனவாக அமைகின்றன. இவ்வாறாக அமைகின்ற இவரது புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றே இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சிறிதுவெளிச்சம் ஆகும்.

முதலில் கதைச்சுருக்கத்தை நோக்கின், பொதுவாக நம் தமிழ்ச்சமூகத்தில் பெண்கள் தம் கஸ்டங்களை மூடிமறைப்பதில் வல்லவர்களாகவும், தம் இன்னல்களை வெளியே தெரியவிட மறுத்து மௌனமாக அழுபவர்களாகவுமே விளங்குகின்றனர். இக்கதையிலும் இதேபோன்ற ஒரு பெண்ணான சாவித்திரியும், அவளது கணவன் கோபாலய்யரும் மணமாகி சில மாதங்களின் பின் ஒரு வீட்டில் குடியிருக்கின்றனர். எதிர் அறையில் ஒரு எழுத்தாளர் வாடகைக்கு இருக்கின்றார். வேலைக்குச்சென்ற கணவன் நள்ளிரவான பின்னர் வந்து கதவைத்தட்டுவதும், அவள் தூக்கக்கலக்கத்தில் எழுந்துசென்று திறப்பதும், அவன் அவளை அடித்து உதைப்பதும் நாளாந்த வழக்கம். ஒருநாள் வழமைக்கு மாறாக அவளும் எதிர்த்துப்பேசியதால், சண்டை முற்றி எழுத்தாளன் தலையிட்டு, போலீசில் புகார்சொல்வதாக மிரட்ட கணவன் சீறிக்கொண்டு வெளியேபோக சாவித்திரி கதவைத் தாழிட்டுக்கொண்டாள்.

சிறிதுநேரத்தால் எழுத்தாளனிடம் வந்து அவனது அறைவிளக்கை அணைத்துவிட்டு தன் மனக்குறைகளை அவனிடம் பகிர்ந்துகொள்கின்றாள். அந்நேரம் அழகும் இளமையும் ததும்ப யௌவனத்தின் உன்னதசோபையுடன் இருந்த அவளை இந்நரக வாழ்விலிருந்து மீட்டுத் தன்னுடன் அழைத்துச்செல்வதாக அவன் கூறியும் அவள் அதை ஏற்கமறுக்கின்றாள். அந்நேரம் அவளது மனப்பாரம் குறைந்தநிலையில் அவனுடன் சற்றுநெருக்கமாக சாய்ந்திருந்தவள் திடீரென ‘அம்மா போதுமடி’ எனப்பதறி ‘இந்தச்சிறிதுவெளிச்சம் போதும், விளக்கை அணைத்துவிட்டுத் தூங்குங்கள்’ எனக்கூறிச் சென்றுவிடுகின்றாள். ‘போதும்’, ‘எது போதும் என்றாள்? தன் வாழ்க்கையா? துக்கமா? தன் அழகா? என் ஆறுதலா? அல்லது இந்தச்சிறிது வெளிச்சமா? எனக்கதையை முடிக்கும் கு.ப.ரா இவ்வினாக்களுக்கான விடைகளை வாசகர் மனதிற்கேற்றவாறு முடிக்கும்படி விட்டுச்சென்றுள்ளார் எனக்கருதலாம்.

இவ்விதமாக இக்கதை முழுவதும் அற்புதமான மனோதத்துவமும், இழையோடும் மனிதாபிமானமும், பெண்களைச்சுரண்டும் ஆண்களின் பாலியற் பலவீனமும், ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்விடுதலைச்சிந்தனையும், அவ்வாறு விடுதலைபெற முடியாமல் பெண்களைக்கட்டிப்போடும் சமூகக்கட்டமைப்பும் முதலான பல விடயங்கள் பொருத்தமான வார்த்தைகளாலும், அவ்வார்த்தைகளிடையே புதைந்து பல்வேறு அர்த்தங்களைத்தரும் மௌனங்களாலும், ஆச்சரியமான மனித இயல்புகளாலும் புலனாகின்றன. இதில் வரும் சாவித்திரி என்ற பெண் என்றும் இறவாத பாத்திரமாக அன்றும் இன்றும் மட்டுமல்லாமல் இனிவரும்காலங்களிலும் பிரதேச, இன, மத வேறுபாடின்றி அனைத்து சமூகங்களிலும் வாழ்ந்தவள், வாழ்கின்றவள், வாழ்வாள் என்ற அடிப்படையில் இங்கு முதன்மை பெறுகின்றாள்.

ஆண்கள் எப்போதும் சுயநலவாதிகளாக, தம் தேவை தீர்ந்தவுடன் விலகிப்போகின்றவர்களாக, பெண்களை எப்போதும் போகப்பொருட்களாகவும், நுகர்பண்டங்களாகவும் பார்ப்பவர்களாக உள்ளனரேதவிர அவர்களுக்கும் ஒரு மனம் உண்டு அதிலே சிறு விருப்புவெறுப்புக்கள் உள்ளன என்பதைச்சிந்திப்பதே இல்லை என்பது இக்கதையில் தெளிவாக எடுத்தியம்பப்படுகின்றது. ‘என் புருசன் என்னை அனுபவித்துக் குலைத்திருக்கின்றான். நான் சுகம் என்பதைக் கண்டதே இல்லை’ என்ற சாவித்திரியின் துயர்கலந்த வரிகளின் ஊடாக இதனை உணரலாம். அத்துடன் மணமான புதிதில் அவளோடு சுகித்திருந்தவன் அவள்மீதான இச்சை தீர்ந்ததும் வேறுபெண்ணை நாடிச்செல்வதும், நள்ளிரவில் மீண்டுவந்து அவளை உதைப்பதும் பாலியற்சுரண்டலின் வெளிப்பாடாகவும், ஆண்களின் வக்கிரப்புத்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளது.

இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் தான் ஆண்கள் மீது பெண்களுக்கு நம்பகத்தன்மை தோன்றுகின்றது. ஆண்களை நம்பமறுக்கின்ற பெண்களின் வலிசுமந்த உள்ளத்தினை ‘மிருகஇச்சை மிகைப்படும்போது என்னிடம் கொஞ்சுவீர்கள், இச்சை ஓய்ந்ததும் முகம்திருப்பிக் கொள்வீர்கள்’ எனத்தன்னை ஏற்கத்துணிந்த எழுத்தாளனை மறுக்கின்ற சாவித்திரியின் மனத்தைரியம் பெண்கள் இத்தகைய பாலியற்சுரண்டல்களை இனங்கண்டு அவற்றிலிருந்து விடுபடமுயல்கின்றமையை உணர்த்துகின்றது. மேலும் இத்தகைய கொடுமைபுரியும் கணவனைவிட்டு பிரிந்து வாழ்கின்ற சுதந்திரம்கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றமை இங்கு தெளிவாகப்புலனாகின்றது. எவ்வாறெனில் பெண்கள் மணமான பின்னர் பிறந்தவீட்டார் அவர்களை ஏற்பதில்லை. அதாவது மணமான பெண்ணொருத்தி கணவனுடன் வாழமுடியாத நிலையில் அவனை விடுத்து புகுந்தவீட்டிலிருந்து பிறந்தவீட்டிற்கு வந்து வாழ்தல் என்பது சமூகத்தில் கேலிக்குரியதாகவும் அவளும் அவளது வாழ்வும் பிறரது வாய்க்கு அவலாகிப்போகின்ற நிலமையுமே இன்றைய சமூகத்தில் காணப்படுகின்றது. அத்துடன் பிறந்தவீட்டில் வேறு மணமாகாத பெண்கள் இருந்தால் அவர்களது வாழ்வும் கேள்விக்குறியாகிவிட சமூகம் இதுபோன்ற பெண்களை ‘வாழாவெட்டி’ என முத்திரைகுத்தி ஒதுக்கிவிடுவதைக் காணலாம். இதனையே கு.ப.ரா ‘காக்கை குருவி போல் தான் மனிதர்களும், இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழையவிடுகின்றதா பட்சி’ என்ற சாவித்திரியின் கூற்றினூடாக உணர்த்துகின்றார்.

Phone number to pollachi issue affected women for complaint | Tamil Nadu  News

இதனாலேயே மனமும் உடலும் உண்மை அன்பிற்காய் ஏங்கி ஆறுதல்தேட முனையும்போது தானே வந்து நீட்டப்பட்ட கரத்தைப்பற்ற முடியாது, சமூகத்தை ஏற்கத்துணிவின்றி இந்தச்சிறிதுவெளிச்சமே போதுமெனக்கூறி அவள் விலகிக்கொள்கின்றாள். ஆனால் இன்றும் பல சாவித்திரிகள் இத்தகைய சந்தர்ப்பங்களில் மனப்பாரம் குறைக்கச்சென்று மீண்டும் மீண்டும் மீளமுடியாத குழியில் விழுவதைக் காணலாம். இதற்கு உதாரணமாக இளவரசி டயானாவின் வாழ்க்கையைக் கூறலாம். எனவே பெண்கள் இத்தகைய துயர் தரும் வாழ்விலிருந்து விடுபட்டு தனியே வாழ முனைந்தாலும் இந்த சமூகம் அவர்களை வாழவிடாது இன்னலுக்குள்ளாக்குவதை நாம் காணலாம். ஆண் உறவற்ற பெண்மை எங்கும் இல்லை என்பதுடன் ஆணை மறுக்கின்ற துணிச்சல் பெண்ணுக்கும் பெண்ணை மறுக்கின்ற துணிச்சல் ஆணுக்கும் இல்லை என்கின்ற நிதர்சனமான தத்துவப்பின்னணியில் இக்கதை படைக்கப்பட்டுள்ளது உண்மையே. ஆயினும் ஒட்டுமொத்தமாகப் பெண்களைப் பாலியல் ரீதியாக சுரண்டுகின்ற ஆண்வர்க்கத்தையும், அவர்களால் ஒடுக்கப்படுகின்ற பெண்களின் பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில் இக்கதை அமைந்துள்ளது சிறப்பானதே ஆகும். பொதுவாக கு.ப.ராஜகோபாலனின் கதைகள் அனைத்தும் பெண்ணிய நோக்கில் ஆராயப்பட்த்தக்கவகையில் காணப்படினும் அவற்றுள் சிறப்பாக பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் ரீதியான சுரண்டல்களை வெளிக்கொண்டு வருவதாக சிறிதுவெளிச்சம் என்ற சிறுகதை அமைவதைக் காணலாம்.

Related posts

ஏகாதிபத்தியம் – 01

Thumi2021

அம்மா என்று யார் அழைப்பது?

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 20

Thumi2021

Leave a Comment