தொகுதியினது பராமரிப்பு (System Maintenance)
பிரதான கால்வாயும் அதில் அமைந்த குளங்களும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் அதேவேளை உப கால்வாய்களும் அதனுடன் இணைந்த குளங்களும் மற்றும் சுயாதீனமாக அமைந்த குளங்களும் கமநல சேவைகள் திணைக்களம் மூலமும் பராமரிக்கப்படுகின்றன. இவற்றை மேற்பார்வை மற்றும் புதிய செயற்திட்டங்களை செயற்படுத்தல் என்பன பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் மூலமும் நடைமுறை படுத்தப்படுகின்றன. புராதன காலம் மற்றும் ஆங்கிலேயர் காலம் முதல் 1995 வரையான காலப்பகுதிவரை பிரதேசமக்களது பங்களிப்பானது மிக உயர்வாக காணப்பட்டது ஆனாலும் 1995இல் இப்பகுதிகளில் இடம் பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக மக்கள் தமது வாழிடங்களில் இருந்து இடம்பெயர நேரிட்டமையால் இப்புராதன முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய தொகுதியானது பாழடைவுக்கு உள்ளானது.
கால்வாய்களும் குளக்கட்டுகளும் போர் அரண்களாகவும் பதுங்கு குழிகளாகவும் பயன்படுத்தப்பட்டதுடன் சமதரை நிலங்களாக காணப்பட்ட விவசாய நில தரைத்தோற்ற அமைப்பானது போர்க் காரணங்களுக்காக மாற்றி அமைக்கப்பட்டது. இப்பகுதியில் போர் முடிவுற்று மக்கள் மீள குடியமர்ந்த போது குளங்களும் கால்வாய்களும் பாவிக்கமுடியாத வகையில் காணப்பட்டது. எனவே பிரதேச செயலகங்கள்இ நீர்ப்பாசனத்திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன இத்தொகுதியை மீள் புணருத்தானம் செய்வதில் பங்கெடுத்துக் கெண்டன. அரச நிறுவனங்களின் பங்கு பங்குபற்றல் கிராம வாசிகளின் பங்களிப்பை நலிவடையச்செய்தது.
வெளிநாட்டு நிதி உதவியில் இயங்கிய UNICEF, GTZ மற்றும் NORAD போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் 1997 தொடக்கம் 2000 வரையான காலப்பகுதியில் இப்பகுதியில் இயங்கியதுடன். மக்கள் அந்நேரத்தில் எதிர் நோக்கிய பிரச்சனைகளான தூய குடிநீர், மருத்துவம், உணவு, வாழிடம் மற்றும் வாழ்வாதாரம் என்பவற்றை மேம்படுத்துவதில் பிரதான பங்கு வகித்தன. உள்நாட்டுப் போரானது மக்களின் வாழ்வியல், பழக்கவழக்கம், வாழ்வாதாரம் என்பன மாறுவதில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் பிரதான பங்கு வகித்தன.
விவசாய சமேளனம், மாதர் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், கூட்டுறவுவர்த்தக நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூர்த்திக் குழுக்கள், இளைஞர் கழகங்கள், கிராமஅபிவிருத்திச்சங்கங்கள், சுற்றுச்சூழல் சுகாதாரக்குழுக்கள், ஆலய பரிபாலன சபைகள் என்பன முக்கியமான சமூகம்சார் குழுக்களாகவும் சட்டரீதியாக பிரதேச செயலகத்தால் பதிவு செய்யப்பட்டும் காணப்படுகின்றன. இவற்றை விட சட்ட ரீதியாக பதிவுசெய்யப்படாத விவசாயிகள் குழுக்கள், விவசாய கூலியாளர்கள் குழுக்கள் மற்றும் கோயில் தொண்டர் சபைகள், கிராமிய இளைஞர் குழுக்கள் என்பனவற்றை இவ் வழுக்கியாறு வடிநிலப்பகுதியில் பரவலாக அவதானிக்க முடிகின்றது. அயலவர்கள் ஒன்றாக இணைந்து அவரவரது வீடுகளில் நடைபெறும் மங்கல, அமங்கல நிகழ்ச்சிகளின் போது பங்குபற்றுவதுடன் அவர்கள் சமூகரீதியிலான அமைப்பியலில் கிட்டத்தட்ட ஒத்த ஒற்றுமையை (Homogenous) காட்டுகின்றார்கள்.
விவசாய சமேளனம், மாதர் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், கிராமஅபிவிருத்திச்சங்கங்கள் என்பன பொதுவாக கிராம மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் கிராமிய உள்கட்டுமான அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், விளையாட்டுக்கழகங்கள், சமூர்த்திக் குழுக்கள், இளைஞர் கழகங்கள், சுற்றுச்சூழல் சுகாதாரக்குழுக்கள் என்பன சுற்றுச்சூழலை சுத்தமாக பேணுதல் மற்றும் சிரமதான நடவடிக்கைகள் மூலம் தொகுதியை வினைத்திறனாக்கல் முதலிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதன்மூலம் சமூகவியல் இயக்கத்தை பேனக்கூடியதாக உள்ளது.
காலத்திற்கு காலம் பிரதேச செயலகங்களில் மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் கூட்டங்கள் மூலமும் வழுக்கியாறு சூழற்தொகுதியின் பராமரிப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் முதற்கட்டமாக எடுக்கப்படுகின்றன. இக்கூட்டங்களில் வழுக்கியாறு சூழற்தொகுதியில் உள்ள பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கிராம சேவையாளர்கள், பிரதேச செயலகங்களின் திட்டமிடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அலகைச் சேர்ந்த பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், பிரதேச சமூகவியலாளர்கள், விவசாய சமேளனங்கள் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் என்பவற்றின் நிர்வாக உறுப்பினர்கள். கம நல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என்போர் கலந்து கொள்கின்றனர். கடந்த 2017ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மூலமாக தேசிய சமாதானம் மற்றும் மீள்கட்டுமானத்திற்கான செயலணிக்கு ஊடாக கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் குளங்கள் மற்றும் கால்வாய்களின் புணரமைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதேசத்தில் காணப்படும் அரச நிறுவனங்கள் கிராம மக்களுக்கான சேவைகளை வழங்குவதுடன். வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச்சந்தைகள் பிரதேச பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
(ஆறு ஓடும்)