இதழ்-24

ஐபிஎல் திருவிழா

மும்பை இந்தியன்ஸ்


2008 இல் ஏலத்திற்கு முன்னரே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள் சச்சின் டெண்டுல்கரை எடுத்து சச்சின் இந்தியன்ஸ் ஆனது மும்பை. சனத் ஜயசூரிய, லசித் மலிங்க, ஷோன் பொலக்(2008), டுவைன் பிராவோ, ஹர்பஜன் சிங், ரொபின் உத்தப்பா(2009), டுமினி(2009), சாகிர் கான் (2009) போன்றோருடன் களம் இறங்கிய அணிக்கு முதல் இரு சீசனிலும் (2008,2009) அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கவில்லை. 2010 இல் இந்தியாவின் ரோபின் சிங் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கிரண் பொல்லார்ட் ஏலத்தில் 750,000 டொலர்களுக்கு வாங்கப்பட்டார். இறுதிக்கு முன்னேறி இறுதி போட்டியில் தோற்ற அணி, 2011 மற்றும் 2012 இல் பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் இவர்களுக்கு ஐபிஎல் கோப்பை தனதாக்கிக் கொள்ள முடியவில்லை. 2013இல் ஜோன் ரைட் தலைமை பயிற்சியாளராகவும் இந்தியாவின் அனில் கும்ளே வழிகாட்டி (Mentor) யாகவும் நியமிக்கப்பட்டு, வெற்றிகரமான தலைவராக வலம் வந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் க்கு அணித்தலைவர் பதவி வழங்கப்பட்டது. முதல் ஆட்டத்தில் இரு ஓட்டங்களால் பெங்களூருவிடம் தோற்றாலும் அடுத்த மூன்று ஆட்டங்களிலும் பெற்றது. பாண்டிங்-டெண்டுல்கார் (Pon-Dulkar) ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர். ஆனால் அவர்களின் இணை அவ்வளவு சிறப்பாக அமைய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின் ராஜஸ்தான் உடன் 92 ஓட்டங்களுக்கு சுருண்டது மும்பை. அடுத்த ஆட்டத்தில் டெல்லியுடன் தோல்வி, ரிக்கி பாண்டிங் ஆரம்ப வீரராகவும் வரவில்லை, துடுப்பாடவும் வரவில்லை. பாண்டிங்கின் துடுப்பு பேசவில்லை எனவே அணித்தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகி ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். பின் ரோகித் சர்மா தலைமை தாங்க அணி, முதல் முறையாக ஐபிஎல் மகுடம் தரித்தது. அடுத்த வருடம் (2014) பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி, 2015இல் ஜோன் ரைட் Talent Scout தலைமை பொறுப்பை ஏற்க புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டு ஐபிஎல் கிண்ணம் வென்றது. பின் 2017,2019,2020 களிலும் கிண்ணத்தை தன்வசமாக்கிய மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் வரலாற்றில் அதிக தடவை கிண்ணத்தை வென்ற அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது. பாண்டிங் 2016 இல் ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விலக, 2017 இல் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனே (இதுவரை) தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேபிடல்ஸ் (டேர்டெவில்ஸ்)


வீரேந்திர சேவாக் (2008, 2011, 2012 களில்) தலைமையில் கம்பீர் (2009, 2010 இல் தலைவர்), கிளென் மக்ராத், ஏ பி டி வில்லியர்ஸ், திலகரட்ன டில்ஷான், டேவிட் வார்னர், டானியல் விக்ரோரி, டிக் நானிஷ், அமிட் மிஸ்ரா, தினேஷ் கார்த்திக் என்று தங்கள் அணியின் பெயரிலுள்ள டேர்டெவில்ஸ் என்ற சொல்லுக்கு ஏற்றால் போல் வீரர்களுடன் களம் கண்டது டெல்லி டேர்டெவில்ஸ். முதல் இரு சீசனிலும் (2008, 2009) அரையிறுதிக்கு முன்னேறிய அணி அடுத்த இரு வருடங்கள் (2010, 2011) முன்னேறவில்லை. அதுவும் 2011 இல் கடைசி இடம். 2012 இல் அன்ட்ரி ரஸ்ஸல், கேவின் பீட்டர்சன், ரோஸ் டெய்லர், மஹேல ஜெயவர்த்தனே, கிளென் மக்ஸ்வெல் என்று புதிய வீரர்களை எடுத்து மோர்னே மோர்கல் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் முதலிடம் பிடித்து பிளே ஓப் சுற்றில் இரு ஆட்டங்களிலும் தோற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். 2013 இல் மஹேல ஜெயவர்த்தனே தலைமையில் மீண்டும் கடைசி இடம். பின்னர் பீட்டர்சன் (2014) டுமினி (2015,2016) சாகீர் கான் (2017) என்று தலைவர்களையும் ராகுல் டிராவிட் (2017), பட்டி உப்டன் (2016) ஹரி கிறிஸ்டன் (2015) என்று பயிற்சியாளர்களையும் அடுத்தடுத்து மாற்றி எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. 2010 இல் பஞ்சாப் செய்த தவறை இவர்கள் 2013 இல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 இல் டிராவிட் இந்திய ஏ மற்றும் இளையோர் அணியின் பொறுப்புகளில் இருப்பதால் விலக முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அத்துடன் இதுவரை ஜிஎம்ஆர் குழுமம் மட்டும் உரிமையாளராக இருந்த அணிக்கு ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் 50 வீத பங்குகளை வாங்கினர். 2019 இல் டெல்லி கேபிடல்ஸ் ஆக பெயர் மாற்றப்பட்ட அணியை, ரிக்கி பாண்டிங் – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி, 2012க்குப் பின் முதல் தடவையாக பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறியது. பின் அடுத்த வருடம் 2020 இல் அதே கூட்டணி வரலாற்றில் முதல் முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வருடம் ஐயர் காயம் காரணமாக விலக இளம் வீரர் ரிசாப் பந்த் தலைமையில் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக தொடர களம் கண்ட அணி இதுவரை நடப்பு சாம்பியன் மும்பை, சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (டெக்கான் சார்ஜர்ஸ்)


ஆரம்பத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் என்று களம் கண்ட அணி. டெக்கான் சார்ஜர்ஸ் அணி, இந்திய வீரர் விவிஎஸ் லக்ஸ்மன், ஆஸி வீரர்கள் அடம் கில்கிறிஸ்ட் மற்றும் அன்ட்ரூ சைமன்ட்ஸ், தென்னாப்பிரிக்கா வீரர் ஹெர்ச்சல் கிப்ஸ், பாகிஸ்தானின் அப்ரடி, இலங்கையின் சமிந்த வாஸ், இந்திய இளம் வீரர்கள் ரோகித் சர்மா, ஆர்பி சிங், பிரக்யான் ஓஜா போன்ற முன்னணி வீரர்களுடன் 2008 களம் கண்டது: முடிவு கடைசி இடம். 2009 இல் மிகப் பெரும் மாற்றங்கள்; CEO ஆக ரிம் ரைட், தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் டெரன் லீமன், தலைவராக ஆஸ்திரேலியாவின் அதிரடி நட்சத்திரம் அடம் கில்கிறிஸ்ட். வீரர்களிலும் புதிதாக ஆஸி வீரர் ராயன் ஹாரிஸ், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பிடரல் எட்வேட்ஸ் மற்றும் டுவைன் ஸ்மித் போன்ற மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 2009 இல் புதிய ஐபிஎல் சாம்பியனானது டெக்கான். 2010 இலும் அரையிறுதிக்கு முன்னேறியது. 2011 இல் அடம் கில்கிறிஸ்ட், ரோகித் சர்மா, சைமன்ஸ்ட், ஆர் பி சிங் போன்ற வீரர்களை வெளியேற்றி இலங்கை யின் குமார் சங்கக்காரா வின் தலைமையில் கமரூன் வைட், டெல் ஸ்ரெயின், இசாந் சர்மா, டானியல் கிறிஸ்டியன் , ஜேபி டுமினி, சிகார் தவான், அமித் மிஷ்ரா போன்ற வீரர்களுடன் களம் இறங்கிய அணி; ஏழாம் இடம் பிடித்தது (10 அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது). பின் அடுத்த வருடம் (2012) எட்டாம் இடம் பிடித்தது (9 அணிகள்). பின் 2012 இல் சன் குழுமத்தினால் வாங்கப்பட்டு 2013 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்ற புதிய அணியானது. 2008 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணியை கட்டமைப்பதில் பங்காற்றிய கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த், இந்த புதிய சன்ரைசர்ஸ் க்கு 2013 இல் பங்காற்றி இருந்தார். தற்போது டொம் மூடி (இயக்குனர்), விவிஎஸ் லக்ஸ்மன் (துடுப்பாட்ட வழிகாட்டி) மற்றும் முத்தையா முரளிதரன் (பந்து வீச்சு வழிகாட்டி) ஆகியோர் உள்ளனர். டெக்கான் சார்ஜர்ஸ் அணி யின் தக்க வைத்துக் கொண்ட வீரர்களுடன் டரன் சமி, திசார பெரேரா, சுதீப் தியாகி, கிளென் மக்கே, நாதன் மக்கெலம் போன்ற வீரர்களையும் இணைத்துக் கொண்டு; அணித் தலைவராக சங்கக்காரா முன் ஆட்டங்களிலும் கமரூன் வைட் பின் ஆட்டங்களிலும் செயற்பட 2013 இல் களமிறங்கிய சன் ரைசர்ஸ் பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்று வெளியேற்றும் ஆட்டத்தில் தோற்றது. பின் 2014 மற்றும் 2015 களில் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறவில்லை. 2016 இல் டேவிட் வார்னர் தலைமையிலான அணி ஐபிஎல் சாம்பியனாக முடி சூடியது. அணி வீரர் புவனேஸ்வர் குமாரும் அதிக விக்கெட் எடுத்த வீரருக்கான ஊதா நிற தோப்பியை வெற்றி கொள்ள, வார்னர் அதிக ஓட்டங்களை எடுத்த வீரருக்கான செம்மஞ்சள் நிற தோப்பியை இரண்டாம் இடம் பிடித்து விராட் ஹோக்லி யிடம் இழந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றுவரை தொடர்ச்சியாக பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 2018 இல் இறுதி போட்டி வரை சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் க்கு எதிராக தோற்றது: வார்னரின் தடை காரணமாக 2018இல் கேன் வில்லியம்சன் அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களூர்

2008 இல் ஏலத்திற்கு முன்னரே ராகுல் டிராவிட் இந்த அணியின் Icon Player ஆக அறிவிக்கப்பட்ட நிலையில் அனில் கும்ளே, ஜக் கலிஸ், டெல் ஸ்ரேயின், மார்க் பௌவுச்சர், சாகீர் கான், கமரூன் வைட், ரோஸ் டெய்லர், மிஸ்பா உல் ஹக் மற்றும் அன்றைய இளையோர் இந்தியாவின் வெற்றி தலைவன் விராட் கோஹ்லி போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தது. முடிவு: வெறும் நான்கு ஆட்டங்களில் வென்று ஏழாம் இடம் பிடித்தது. நியூசிலாந்தின் வெற்றிகரமான தலைவர் ஆதர்ஷ நாயகன் மார்ட்டின் குரோவ் Chief Cricket Officer ஆக இருந்து அணி யின் மோசமான பெறுபேற்றால் பின் விலகினார். 2009 இல் கெவின் பீட்டர்சன், ரொபின் உத்தப்பா, இளம் வீரர் மனிஷ் பான்டே போன்ற வீரர்களை எடுத்து இறுதி போட்டி போட்டி வரை சென்று டெக்கான் சார்ஜர்ஸ் க்கு எதிராக தோற்றது. கெவின் பீட்டர்சன் ஆரம்ப ஆட்டங்களில் தலைமை தாங்கி சர்வதேச போட்டிக்காக விலக கும்ளே மற்றைய ஆட்டங்களில் தலைவராக செயற்பட்டார். 2010 இலும் கும்ளே தலைவராக தொடர அரையிறுதிக்கு முன்னேறியது. 2011 இல் ஏபிடீ வில்லியர்ஸ், திலகரட்ன டில்ஷான், கிறிஸ் கெய்ல், டானியல் விக்ரோரி, மீண்டும் சாகீர் கான், சௌரவ் திவாரி, டெர்க் நானஸ் என்று பெரிய அதிரடி பட்டாளங்களுடன் களம் கண்டது ரோயல் சலஞ்சேர்ஸ், இறுதி போட்டி வரை சென்று தோற்றது. பின் 2015 மீண்டும் பிளே ஓப் 2016 இறுதி போட்டி வரை சென்று தோற்றது. 2017,18,19 களில் பிளேப் ஓப் சுற்றுக்கு தகுதி பெறாத ரோயல் சலஞ்சேர்ஸ் 2020 இல் மீண்டும் பிளே ஓப் இனை எட்டி பார்த்தது. இதுவரை மூன்று தடவை இறுதி ஆட்டங்களில் தோல்வி (2009,2011,2016), மூன்று தடவை பிளே ஓப் சுற்றுகளில் தோல்வி (2010,2015,2020) தலா இரு முறை கடைசி இடம் மற்றும் கடைசிக்கு முதல் இடம் பிடித்து இருக்கிறது. கடந்த 13 வருடங்களில் ஒரு முறையேனும் தனது முதல் மூன்று ஆட்டங்களில் வெற்றி கொள்ளாத ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களூர் அணி, இம்முறை 2021 இல் முதல் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நான்கு அணிகளும் (மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான்) சேர்த்து பார்த்தால் 10 தடவை சாம்பியனான அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையாவது ரசிகர்களின் ஈ சாலா கப் நம்தே கனவு நிறைவேறுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

சிங்ககிரித்தலைவன் – 23

Thumi2021

மரங்களோடு வாழ்வார் விவேக்!

Thumi2021

எனக்கு கொரோனாவா? -02

Thumi2021

Leave a Comment