(அம்மா நாயகனின் அறைக்குள் நுழைகிறார்.)
அம்மா : அறிவு
நாயகன் : என்னம்மா?
அம்மா : தனிய இருந்து யோசிச்சிட்டு இருக்குறியே என்னாச்சுடா?
நாயகன் : அம்மா நான் உனக்கு சொன்னாலும் புரியாது. போமா.
(அம்மா நாயகன் அருகில் இருக்கின்றார்.)
அம்மா : அது. நீங்க எல்லாம் பேசிக்கிட்டு இருந்தீங்கல்ல. அத பற்றி எனக்கு ஒன்னு சொல்லனும்னு தோனுது அறிவு. அது உன்கிட்ட சொல்லலாமா? வேணாமானு? தெரிலே. ஆனாலும் சொல்றன்.
நான் ஒரு முப்பது வருசமா வீட்டு வேலை பார்த்திட்டு இருக்கிறன் எல்லோடா. ஒரு இருபது வீட்டில வேலை பார்த்திருப்பன். அங்க எல்லாம் சில ஆம்பிளைகள் ஒரு மாதிரி பாப்பானுங்கள். எனக்கு என்னடா இது நம்ம முதலாளிங்களே இப்படி பாக்கிறாங்கனு ரொம்ப வருத்தமா இருக்கும். ஆனா தலையெழுத்துனு என் வேலைய பார்க்க போயிடுவன். ஆனா ஒரு நாள் ஒரு முதலாளி என் மேலே கைய வைக்க பார்த்தான்டா. எனக்கு பகீர்னு இருந்திச்சு. அடப்பாவி, நான் விசுவாசம இருக்க வேண்டியது என் வேலைக்கு தானேடா? உனக்கு எல்லாம் நான் ஏன் விசுவாசமா இருக்க வேணும்னு நினைச்சுக்கிட்டு அவன் கை என்மேல பட முன்னம் ஒரு முறை முறைச்சன் பாரு அவன் பயந்திட்டான்டா. (புன்னகையோடு) அவன் என்னை பார்த்து அப்படி பயந்தான். என்னை வேலைய விட்டெல்லாம் தூக்கேல. அதுக்கப்புறம் பொண்டாட்டிட்ட சொல்லிடுவேனோ? வெளிய சொல்லிடுவேனோனு? அப்படி பயந்து செத்தான். நான் ஹாலுக்கு போனா கிச்சனுக்குள்ள போவான். கிச்சனுக்குள்ள போனா வெளியேயே போயிடுவான். சொல்லப்போனா முதல விட இன்னும் மரியாதையா பார்த்தான்டா.
நான் ஏன் தெரியுமா சொன்னன்? நம்ம விசுவாசம் எதுவரைக்குனு கோடு போடுறது நம்ம கையில தான்டா இருக்கு. வேற எவன் கையிலயும் இல்ல. அது நமக்கு படியளக்கிற முதலாளிய இருந்தாலும். நம்ம வாங்குற சம்பளம் நாம செய்ற வேலைக்கு தான்டா. அது அந்த முதலாளி செய்ற தப்ப எல்லாம் மறைக்கிறதுக்கான லஞ்சம் இல்லை.
என்னவோடா தெரிஞ்சத சொன்னன்.
நாயகன் : எம்மா..
அம்மா : என்னடா?
நாயகன் : எம்மா….
அம்மா : (அழுத்தமா) என்னடா?
நாயகன் : எம்மா எம்மா எம்மா
யாருமா நீ? இவ்வளவு நாள் எங்கம்மா இருந்தாய்? அப்படி ஒரு விசயத்த சொல்லி இருக்கிறாய்மா இன்னைக்கு நீ.
புடிச்சிட்டன் புடிச்சிட்டன் புடிச்சிட்டன் புடிச்சிட்டன்….
(அறையை விட்டு மகிழ்ச்சியுடன் நாயகன் வெளியே ஓடுகிறார்.)
நாயகன் : ஏ…. கண்டு பிடிச்சிட்டன்…