சினிமா பல கதைகளை, பல வரலாற்றை தத்ரூமாய் மனங்களில் பதிய வைத்துள்ளது. சினிமாவின் ஒவ்வொரு செயற்பாடுகளூடாகவும் பல ஆளுமைகளும் மரணத்தின் பின் வாழ்கிறார்கள். விவேக் அவர்களிடமிருந்து வேறுபடுகின்றார். சினிமாவால் சின்னக்கலைவாணர் விவேக்-ஆக சமூகம் அறிந்த ஆளுமையாயினும் , கலாம் அவர்கள் காட்டிய வழியில் மரங்கள் மீது கொண்ட காதலால் மரணத்தின் பின்னும் வாழ்கிறார் சூழலியலாளனாய் விவேக்.
சினிமாவில் நகைச்சுவை நாயகனாய், “போங்கடா வழி நெடுகிலும் உங்க சாமி தாண்டா இருக்கு” என்று மைல்கல் பற்றியும், “ஏண்டா எழுநூத்தியம்பது ஸ்பேர் பார்ட்சில் ஓடாத லாரி, இந்த ஒரு எலுமிச்சம்பழத்திலாயாடா ஓடுது..” போன்ற பல பகுத்தறிவு சிந்தனைகளை நகைச்சுவையாய் மக்கள் மனங்களை சிந்திக்க தூண்டியதாலேயே சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்பட்டார்.

அவரின் பகுத்தறிவு பூர்வமான சிந்தனைகள் அவரை பல ஆளுமைகளுடன் பழக வாய்ப்பை உருவாக்கியது. சிறுவயதிலேயே இந்தியாவின் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, பிறந்தநாள் வாழ்த்தையும் பெற்றார். பின்னாளில் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மனதிலும் இடம்பிடித்திருந்தார். கலாம் அவர்களின் மனதில் இடம் பிடித்தமையால் சின்னக்கலைவாணர் விவேக் சூழலியலாளராக பரிணமித்தார்.

ஒரு கோடி மரங்கள் என்ற இலட்சிய பயணத்தில் 33இலட்சத்தில் பயணிக்கையில் இறைவன் தன்னகத்தே அழைத்து கொண்டார் சூழலியலாளர் விவேக்கை. ஓர் சூழலியலாளனின் இழப்பு கவலையளிப்பதாயினும், அவரின் மரணத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் வாழும் தேசங்கள் யாவற்றிலும் இளையோர் பலரும் விவேக் அவர்களின் இலக்கை பற்றி சூழலியலாளர்களாய் பரிணமித்துள்ளது விவேக் எனும் சூழலிய ஆளுமையின் சாதனையே ஆகும்.
இளைப்பாறுங்கள்!!!
உங்கள் இலக்கை இளையோர் நாம் கரங்களில் எடுத்துக்கொண்டோம்!!!
-இளையோன்-
