இதழ்-25

நவீன வேதாள புதிர்கள் 04 – யார் தருவார் இந்த அரியாசனம்?

துமி வாசகர்களே!

உங்கள் உதவியுடன் 16 ஏக்கர் நிலத்தை ஏழைக் குடும்பங்களிற்கு வழங்கும் நோக்கில் பதிலழித்த விக்ரமாதித்தனின் சரியான பதில் கேட்ட வேதாளம் முன் போலவே கட்டவிழ்த்துக் கொண்டு முருங்கை மரத்தில் தொற்றிக் கொண்டது.

மன உறுதி கொண்டவர்கள் தாங்கள் எடுத்த காரியத்தை உயிர் திறக்க நேரிட்டாலும் நடுவில் கை விடாமல் செய்து முடித்தே தீருவார்கள் அன்றோ? அது போலவே விக்ரமாதித்தனும் மீண்டும் சுடுகாடு சென்று வேதாளத்தை சுமந்து வருகிறான். வழமைக்கு மாறாக விக்ரமாதித்தன் அறியாத அவன் இராஜ்ஜிய பூர்வீக கதை ஒன்றை சொல்லத் தொடங்கியது வேதாளம்.

உலகத்தின் கிரீடம் போல் உஜ்ஜியினிப் பட்டணம் முன்னொரு காலத்தில் திகழ்ந்தது. அந்த பட்டணத்தை அறநெறி வழுவாத போஜமகாராஜன் ஆண்டு வந்தான். அந்நாளையில் பக்கத்திலுள்ள காட்டுப் பிரதேசத்திலிருந்து துஷ்ட மிருகங்கள் அடிக்கடி நாட்டிற்குள் புகுந்து மக்களைத் துன்புறுத்துவதோடு அவர்களின் உடைமைப் பிராணிகளை கொன்று தின்றன. குடிமக்களின் கஷ்டத்தை போக்க நினைத்த மகாராஜன் தன் சதுரங்க சேனையை அணிவகுத்து நடத்தி மந்திரி பிரதானிகளுடன் வேட்டையாடச் சென்றான்.

சூரியன் உச்சியை நெருங்கும் சமயம் அனைத்து படைகளும் களைத்து விட்டன. போஜமகாராஜன் வேட்டையை நிறுத்தி களைப்பாற விரும்பினான். மன்னனும் அவரது பரிவாரங்களும் அருகிலிருந்த கம்பங்கொல்லை ஒன்றை அடைந்தார்கள். அந்தக் கொல்லை சரவணப்பட்டர் என்னும் ஓர் அந்தணனுக்குச் சொந்தமானது. அவன் கொல்லையின் காவலுக்காக கொல்லையின் நடுவே பரண் ஒன்றை அமைத்து அதன் மேல் உட்காந்திருந்தான்.

சரவணப்பட்டர் பரண் மீது இருந்தபடியே “வரவேண்டும் வரவேண்டும் வேட்டையில் மிகவும் களைத்துப் போயிருக்கிறீர்கள் இதோ இந்தக் கம்பங்கொல்லையில் முற்றிய கதிர்களும் பழங்களும் கொத்துக் கொத்தாக தொங்குகின்றன தாங்கள் தாராளமாக பசிதீர உண்ணுங்கள் என்றார்”. அவர்கள் பசிதீர உணவுண்ண ஆரம்பித்தார்கள். பரணில் இருந்து இறங்கிய சரவணப்பட்டர் “போஜமகாராஜனே இதென்ன காரியம்? கேள்வி முறையே கிடையாதா? தாங்களா இந்த அநீதமான காரியத்தில் இறங்கினீர்கள்? ஏழை அந்தணனுடைய கம்பங்கொல்லையை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

போஜராஜனுக்கு பெரும் வியப்பாகி விட்டது. பரண் மீதிருந்த போது பசிதீர கம்பங்கதிர்களை ஒடித்துச் சாப்பிடுமாறு கூறியவர் பரண் விட்டு இறங்கியதும் அவர் உள்ளத்தில் தோன்றிய அந்த உயர்ந்த எண்ணம் மாறி கீழ்தர எண்ணமும் சுயநலமும் மேலோங்கி இருந்தது. அந்த பரணின் மர்மத்தை அறிய அக் கொல்லையை வாங்க நினைத்த மகாரஜன் நீதிவாக்கிய மந்திரியுடன் ஆலோசித்து விலைநிர்ணயம் செய்ய யோசித்தான்.

முதலில் 125 பொற்காசுகளுக்கு விலைநிர்ணயம் செய்தார் மன்னன் ஆனால் மந்திரியோ இக் கொல்லையின் பெறுமதி இதை விட குறைவானதே எனக் கூற 100 பொற்காசுகளாக குறைத்தார். மந்திரி அதற்கும் உடன்படவில்லை அப்போது மன்னர் 80 பொற்காசுகளாக குறைத்தார். அதற்கு மந்திரி அரசே, இக் கொல்லை 80 பொற்காசுகளுக்கும்  பெறுமதி இல்லை என்றார்.மகாராஜன் பெறுமதியை இன்னும் ஒரு தடவை குறைக்க மந்திரியும் உடன்பட்டார்.

விக்ரமாதித்தனே இப்பொழுது உங்களுடைய நேரம் எத்தனை பொற்காசுகள் கொடுத்து அரசர் அக் கொல்லையை வாங்கியிருப்பார் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். பெறுமதி குறையும் ஒழுங்கையும் கவனத்தில் கொள்ளுங்கள் மன்னா என்று முடித்தது வேதாளம்.

துமி அன்பர்களே!

மீண்டும் ஒருமுறை விக்ரமாதித்தனுக்கு உதவிட உங்கள் பதிலை எங்கள் மின்னிதழிற்கு அனுப்பி வையுங்கள்.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 21

Thumi2021

தேடல்கள் உள்ளவரை தொடர்வோம்…

Thumi2021

ஈழச்சூழலியல் – 12

Thumi2021

Leave a Comment