இதழ்-25

ஈழச்சூழலியல் – 12

இங்கே இறந்தவர்களுக்காக நடாத்தப்படுகின்ற கிரிகைகளும் சடங்குகளும் தொட்டுணர முடியாத யாழ்ப்பாணத்துப் பண்பாடாகக் காணப்படுகின்றது. பலரும் அவற்றினுடைய மரபுகளைச் சம்பிரதாயங்களை ஆராய்வதற்கு இன்று வில்லூன்றி தீர்த்தக் கேணி மண்டபத்தில் நடைபெறுகின்ற மரணச் சடங்குக் கிரியைகள், அந்தியேட்டி சடங்குகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக செல்லுகின்றனர். ஏனெனில் யாழ்ப்பாணத்தினுடைய பாரம்பரிய தொட்டுணர முடியாத பல அம்சங்கள், அப்படியே பேணப்படுகின்ற தன்மை காணப்படுகின்றது.இயற்கை வளங்களுக்கு அப்பால் குடாநாட்டில் பல தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவருகின்ற இடங்களாகக் காணப்படுகின்றன. அவற்றில் வழிபாட்டுத் தலங்கள் மிக முக்கியமான மரபுரிமை அம்சங்களாகக் காணப்படுகின்றன.   இங்கு இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சார்ந்த மரபுரிமைச் சின்னங்கள் காணப்படுகின்றன.   போர்த்துக்கேயர் தமது ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் சிறிதும் பெரிதுமான 500 க்கும் மேற்பட்ட ஆலயங்களை அழித்துள்ளனர். அவ்விடங்களில் கத்தோலிக்க தேவாலயங்களை அமைத்தார்கள் என்று கூறப்படுகின்றது.  அதன் பின்னர் இந்த ஆலயங்களில் பெரும்பாலானவை ஒல்லாந்தரால் புரட்டஸ்தாந்து ஆலயங்களாக மாற்றப்பட்டுள்ளன. போர்த்துக்கேய காலத்தைய ஆலயங்கள் மிக அரிதாக காணப்பட்டாலும் கலைமரபுடன் கூடியவை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதசுதந்திரம் அளிக்கப்பட்டதன் பின்னர், முன்னைய கொலனித்துவ ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட ஆலயங்கள் இருந்த இடத்தில் அவற்றின் பெயரோடு மீண்டும் ஆலயங்கள் தோற்றம் பெற்றன. இதனால் அந்தந்த ஆலயங்களின் வரலாறும் பண்பாடும் ஐதீகங்களும் முன்னைய ஆலயங்களின் ஒரு தொடர்ச்சியாகவே காணப்படுகின்றன.   அந்தவகையில் இன்று நல்லூர், நகுலேஸ்வரம், மாவிட்டபுரம், பறாளை விநாயகர், வல்லிபுரம் விஷ்ணு கோவில், சட்டநாதர் கோவில், வீரமாகாளி அமம்மன் கோவில் எனப் பல வரலாற்று ஆலயங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் அபிவிருத்தி செய்யப்படவேண்டியவையாகும்.  

இந்து ஆலயங்களுடன் ஒப்பிடும்போது, எண்ணிக்கையில் பௌத்தவழிபாட்டிடம் குறைந்தளவில் காணப்பட்டபோதிலும், கந்தரோடையிலும் நெடுந்தீவிலும் உள்ள பௌத்த ஸ்தூபிகளையும் அவற்றின் அழிபாடுகளையும் பார்ப்பதில் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் பரவியிருந்த தமிழ் பௌத்தத்தின் தொடர்ச்சியாக இலங்கையிலும் தமிழ் பௌத்தம் பரவியிருந்ததை நிரூபிக்கும் வகையில் இவை காணப்படுகின்றன.   16 ஆம் நூற்றாண்டின் பின்னர், ஐரோப்பியர் ஆட்சியில் அவர்களுடைய பயன்பாடு பெரிதும் யாழ்ப்பாணத்திலும் வட இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தியது. இதனால் போர்த்துக்கேயர் காலத்து கத்தோலிக்க ஆலயங்களும் ஒல்லாந்தர் பிரித்தானியர் கால வரலாற்றுப் பழைமைவாய்ந்த புரட்டஸ்தாந்து ஆலயங்களும் இங்கு முக்கிய மரபுரிமைச் சின்னங்களாகக் காணப்படுகின்றன.   பிரித்தானிய ஆட்சியின் பிற்பகுதியில் அவற்றின் கலைமரபுகள் மாற்றியமைக்கப்பட்டாலும் ஒல்லாந்து நாட்டவரினுடைய கலைமரபுகளுடன் கூடிய கிறிஸ்தவ ஆலயங்கள் மணற்காடு, வல்வெட்டித்தறை, சங்கானை, அச்சுவேலி என்று பல இடங்களில் காணப்படுகின்றன.  அதேபோலதான் சாட்டி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பழைமை வாய்ந்த மசூதிகளைப் பார்ப்பதற்கும் பலர் இங்கு வருகை தருகின்றார்கள். இந்த வழிபாட்டு ஆலயங்களைத் தவிர, யாழ்ப்பாண இராசதானி மையம்கொண்டிருந்த நல்லூரில் உள்ள மந்திரிமனை, சங்கிலியன்தோப்பு, யமுனா ஏரி போன்ற வரலாற்று மையங்களைப் பார்ப்பதற்காகவும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றார்கள்.  உலக அளவில் தொழில்சார் நிபுணத்துவ ரீதியில் வடபகுதி சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படாவிட்டாலும், இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளில் கணிசமானவர்கள் இவ்வாறான மையங்களுக்குச் சென்று அவற்றைப் புகைப்படமாகவும் ஒளிப்படமாகவும் எடுத்து ஆவணப்படுத்தி வருகின்ற ஒரு மரபு காணப்படுகின்றது.   

மேலும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள சமூகப் பழக்க வழக்கங்கள், ஆடைகள், ஆபரணங்கள், உணவு முறைகள் என்பவற்றையும் ஆராய்வதற்காகவும் இங்கே வருகின்றார்கள். இந்த வருகையின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, இன்று யாழ்ப்பாணத்திலும் வட இலங்கையிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பாரம்பரிய உணவு விடுதிகள், பாரம்பரிய ஆடைகள், பாரம்பரிய பாவனைப் பொருட்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாவனையிலிருந்த பாவனைப் பொருள்கள் வீட்டுப் பாவனைப் பொருள்கள் போன்றவை, முக்கிய வணிக மையங்களிலம் அரச நிறுவனங்களிலும் பிறர் பார்த்து இரசிக்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்படுகின்ற தன்மையும் வளர்ச்சிபெற்று வருகின்றது.    ஏ9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர், சுற்றுலாப் பயணிகளின் கணிசமான வருகையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் பலவிடுதிகள் உருவாகி வருகின்றன. பெரும்பாலானவர்களின் முதலீடு விடுதிகளை உருவாக்குதிலேயே காணப்படுகின்றது.பொதுவாக இந்தச் சுற்றுலாவினால் வருமானம் வருகின்றது; பலருக்கு வேலைவாய்ப்பு வருகின்றது. புதிய தொழிற்கூடங்கள் உருவாகின்றன என்பது மறுப்பதற்கில்லை. பல நன்மைகள் இருக்கின்றபோதிலும் சில தீமைகள் காணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் தங்களுடைய உணவுமுறை, வாழ்க்கைமுறை பண்பாடு என்பவற்றை தாம் செல்லுகின்ற இடத்தில் பின்பற்றுகின்றபோது, அதை அங்கிருக்கின்றவர்களும் பின்பற்றும்போது, சில வேளைகளில் வடபகுதியின் பாரம்பரிய பண்பாட்டுக்கு முரணாக இருக்கும்.எமது சுற்றுலாத்துறையின் வளர்ச்சி என்பது, வெறுமனே பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு நன்மைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது, எமது பண்பாட்டு தனித்துவத்தை மற்றவர்கள் மதிப்பதற்கு ஏற்ற வகையில் சுற்றுலாப்பயணிகளுக்குச் சொல்லப்பட்டு, பாதுகாக்கப்படுவது அவசியமாகும். அதேநேரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எங்களுடைய தனித்துவம், பண்பாடு, விழுமியங்கள், சமூக, குடும்ப உறவு முறைகள் மாற்றமடையாமல் பாதுகாக்கப்படுவதும் சுற்றுலாவை ஊக்குவிக்கின்ற திணைக்களங்கள் அமைப்புகளுக்கு முக்கிய பொறுப்புகளாகக் காணப்படுகின்றன. இன்று சீன, ஜப்பான் போன்ற நாடுகள் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொண்டாலும் தமது மரபுரிமை அடையாளங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் அழிந்தும் மறைந்தும் போகாமல் இருக்கும் வகையில் அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர்.   ஆகவே வடபகுதியின் சுற்றுலா என்பது, எம்முடைய பாரம்பரிய பண்பாடுகளைப் பாதுகாக்கக்கூடிய வகையில் வளர்த்து மக்கள் பொருளாதார ரீதியில், தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றம் அடையக்கூடிய வகையில் மாற்றியமைப்பது எங்களுடைய கைகளிலேயே தங்கியுள்ளது

ஆராய்வோம்……

Related posts

மரண வாக்குமூலம்

Thumi2021

வழுக்கியாறு – 19

Thumi2021

வரிசையற்றது வாழ்வு…!!!

Thumi2021

Leave a Comment