இதழ்-25

சிங்ககிரித்தலைவன் – 25

25.குன்றை நோக்கி…

யானையின் பிளிறல் சத்தத்தில் அந்த அரங்கமே அதிர்ந்து போனது… கொம்பன் யானை சரிந்ததினால் உண்டான புழுதியை, காசியப்பன் இருந்த கூடாரம் வரை வாரி வந்தது காற்று…

“பார்த்தாயா மீகார என் யானைகளின் பலத்தை … இந்தப்பெரும் பலத்தோடு உன் துணையும் இருந்தால்… எதுவும் சாத்தியமே… சொல் என்ன தடை?” காசியப்பனின் வார்த்தைகளால் மீகாரன் உருகிப்போனான்…

“மைத்துணா… நீ காட்டிய ஒற்றைக்குன்று பற்றி பலரிடம் விசாரித்தேன்… பல ஓலைச் சுவடிகளைப் பார்த்தேன்… எதிலும் தெளிவான குறிப்புகள் இல்லை… இறுதியில் வடக்கே இருந்து யாத்திரை வந்த ஒரு துறவியை ஆற்றங்கரையில் சந்தித்தேன்… அவரிடம் பேச்சுக்கொடுத்த போது தான்… அந்த ஒற்றைச் சிகரத்தைப் பற்றி என்னிடம் எச்சரித்தார்…”

“ஹா..ஹா…ஹா… ஒரு துறவியின் வார்த்தைகளா உன்னை கலங்கச் செய்தன? துறவிகள் யாத்திரீகர்களாக யாசகம் கேட்டு செல்பவர்கள்… கட்டுக்கதைகளைக் காவியும் செல்வார்கள்… சரி அவர் என்ன கூறினார்?”

ஏளனம் மிகுந்து கேட்ட காசியப்பனை நோக்கி,

“காசியப்பா… அந்தத் துறவியின் கண்களில் தெரிந்த ஒளியே என்னை அவரிடம் ஈர்த்தது… யாசகம் கேட்கும் ஒருவர் அல்ல அவர்… அறிவின்…அனுபவத்தின் களஞ்சியமாகத் தோன்றினார்… அந்த ஓற்றைக் குன்று சித்தர்கள் அருவ நிலையில் வாழும் இடம் என்றார்..! இந்த இலங்கையின் ஆதிவேந்தன் இராவணன் வானமார்க்கமாகவே சஞ்சாரித்த குன்றம் என்றும் வியந்து சொன்னார்… அங்கு மனிதர்களின் ஓசை படுவது எதிர்காலத்துக்கு உகந்ததில்லை என்று எச்சரித்தும் சென்றார்…” என்று கூறி முடித்தான் மீகாரன்…

அருகில் நின்ற அபயராஜனை ஆசனத்தில் இருந்தபடியே நிமிர்ந்து பார்த்தான் காசியப்பன்…

“பார்த்தாயா அபயா… இந்த நாட்டின் மாவீரன் மீகாரன் ஒரு துறவியின் சொற்களை கேட்டு அஞ்சி நிற்பதை…அந்த குன்றில் ஏறி என் கனவுக்கோட்டையை அதில் அமைக்கும் பணியை நிறுத்தி விடலாம் என்கிறான்.. பார்…” என்று காசியப்பன் கூறி முடிப்பதற்குள்,

“மன்னிக்க வேண்டும் அரசே… தளபதியார் உங்கள் மீது கொண்ட அன்பினால் ஆழமாக யோசிக்கின்றார்… அதே வேளை உங்கள் கனவுகளையும் தன் தோளில் சுமக்கின்றார்… அங்கு செல்லவும் குன்றில் ஏறவும் எல்லா ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளது அரசே…” என்றான் அபயராஜன்…

சட்டென எழுந்து மீகாரனை அன்போடு அணைத்துக்கொண்டான் காசியப்பன்…

அனுராதபுரத்தில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் பாதையில் கயிற்றுக் கட்டுக்களும், கயிற்றில் பின்னப்பட்ட ஏணிகளும் ஏற்றப்பட்ட காளை பூட்டிய ஆறேழு வண்டிகள் அணிவகுத்து நின்றன…அவற்றுக்கு அருகிலே குதிரை வீரர்களும், நங்கூர ஈட்டிகளுடன் தயார்நிலையில் நின்றனர்… மரத்தச்சர்கள் சிலரும் இரும்பு வேலை புரியும் கட்டுமானப் பணியாளர்களும் வண்டிகளில் இருந்தனர்… அவர்களுக்குள் வாட்டசாட்டமாக இருந்த, ஒருவன் தன் குதிரையைச்செலுத்திக்கொண்டு அந்த வண்டிகளின் வரிசைக்கு முன்னே வந்து ஒரு கொடியை அசைத்து புறப்படும் சைகை செய்தான்… பெரும் ஆரவாரத்துடன் அந்த அணி, காளை மாடுகளின் சதங்கைகளின் சத்தத்துடன் புறப்பட்டது…

சில காத தூரம் சென்றதும் ஒரு சந்தியில் அனுராதாபுரத்தின் கொடி பறந்துகொண்டிருந்தது… அதற்கு சற்று அருகிலே ஒரு யானையின் மேலே மன்னன் காசியப்பன் கம்பீரமாக அமர்ந்திருந்தான்… அவன் அருகில் மீகாரனின் சிறிய படையும் காத்திருந்தது…

மன்னனைக் கண்டதும் வந்த வண்டிகள் நின்றன… வண்டிகளில் வந்தவர்கள் பாதைகளில் இறங்கி முளங்கால் மடக்கி வணங்கினர்…

காசியப்பன் தன் கைகளை அசைத்து,

“புதிய அனுராதாபுரத்தை செதுக்கப்போகும் என்னருமைப் பணியாளர்களே… உங்களை ஒரு அதிசயத்ததிசயத்தை நோக்கி அழைத்துப் போகிறேன்… என் கற்பனையில் நான் கண்ட அந்த அதிசய இலங்கையின் காவற்கோட்டையின் கட்டுமானத்தை கடந்த ஒரு திங்களாக தேர்ந்தெடுத்த உங்கள் கைகளில் தான் ஒப்படைக்கப் போகிறேன்… என் உயிரினும் இனிய மைத்துணன் மீகாரன் உங்களை வழிநடத்துவான்! உம் … புறப்படுவோம்! “

காசியப்பனின் யானை முன்னே செல்ல வண்டில்களின் வரிசையும் புறப்பட்டது… மேலும் சில காத தூரம் போனதும், வழியில் ஒரு மரத்தடியில் எமக்கு முன்னரே அறிமுகமான உன்னிச்ச ஒரு மாட்டு வண்டியில் காத்திருந்தான்… மூடி அடைக்கப்பட்ட அந்த வண்டியை காசியப்பனின் யானை நெருங்கியதும், யானையில் இருந்த காசியப்பனை உன்னிச்ச வாய்பிழந்து பார்த்தான்… அவன் உடல் வெடவெடத்தது… உடனே உடல்மடக்கி கும்பிடு போட்டான்! காசியப்பனை வணிகனாக எண்ணி தான் செய்த வம்புகள் அவன் கண்முன்னே வந்து போயின… காசியப்பனைப் பற்றி முன் பின் முரணாக அறிந்திருந்த உன்னிச்ச, பயமும் நடுக்கமுமுற்று நின்றதைப் பார்த்து புன்னகைத்த காசியப்பன்,

“என்ன தோழரே… விறைத்துப்போய் நிற்கிறீர்கள்? இதோ இந்த பை முழுதும் மின்னும் நாணயங்களை எடுத்துவந்திருக்கின்றேன்… வாங்கிவிடுவோமோ அந்த சிங்கச்சிகரத்தை?” தான் அருகில் இருந்த துணிப்பை ஒன்றைத் தூக்கிக்காட்டி பலமாகச் சிரித்த காசியப்பனின் விழிகள் உன்னிச்சவின் வண்டியை துளை போட்டது!

தன் யானைப்பாகனுக்கு சைகை செய்த காசியப்பன் யானையைப் பணியச் செய்து, கீழே இறங்கி வண்டியின் அருகில் போனான்… மடக்கிய முதுகு நிமிராமல் உன்னிச்ச வாயடைத்துப்போய் நின்றான்… வண்டியின் பின் சென்ற காசியப்பன் அதன் மறைப்புத் தட்டியைத் திறந்தான்… அவனின் கண்களில் காதல் தவழ்ந்தது… உள்ளே இருந்த லீலாதேவியின் முகம் நாணத்தால் சிவந்தது!

பயணம் தொடரும்….

Related posts

பெண்ணாகிய ஓவியம்

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 21

Thumi2021

இது மழைக்காலம்

Thumi2021

Leave a Comment