ஓடித்திரிந்தவர்களையும், தேடித்திரிந்தவர்களையும் வீட்டிற்குள் முடக்கி வைத்தது கடந்த வருடம். தனிமையில் இருப்பவர்களை பைத்தியம் என்ற உலகம் தனிமையில் இருப்பது தான் வைத்தியம் என்ற நேரம் அது. நேர்மாறாக உலக இயக்கம் மாறிக்கொண்டிருந்த நேரம் அது! முதலாவது மின்னிதழ் வெளிவந்து, ஒரு வருடமாகும் இன்றைய நாளில் 25 ஆவது மின்னிதழ் வருவது இரட்டிப்பு மகிழ்ச்சி.
எமது பாடசாலைக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது விஜய் பத்திரிக்கை. அந்த பத்திரிக்கையின் வரவை எதிர்பார்த்திருந்தவர்கள் அதிகம். அதன் தாக்கத்தால் வகுப்பறைகளில் போட்டிக்கு கைஎழுத்து சஞ்சிகைகள் வெளியிட்ட அனுபவம் உள்ளது. அந்த நினைவுகளை மீட்டிப்பார்க்க இந்த ஒடுக்கத்தின் ஓய்வு காலம் நேரம் தந்தது. அதே போல எழுதியபடி வாழ்ந்தவனாக போற்றப்படும் பாரதி எழுத்துக்கு களம் அமைத்தது பத்திரிக்கை. அந்த வகையில் பலரது எழுத்துக்கும் முகநூல் களம் அமைத்தாலும் உரிய அங்கீகாரத்தையும் கனதியையும் அளிக்கவில்லை.
“நீ தேடிக்கொண்டு இருப்பது உன்னை தேடிக்கொண்டு இருக்கிறது”
என்பார்கள்.
தேடிக்கொண்டிருந்த எல்லோரையும் துமி அமைப்பானது மின்னிதழ் என்கிற புள்ளியில் சந்திக்கச் செய்தது. இளையவர்களின் அதிலும் பத்திரிக்கைத் துறைக்கு புதியவர்களின் இந்த முயற்சிக்கு அனுபவம் நிறைந்த சில பெரியவர்கள் பக்க பலமாய் இருந்தார்கள். வழி மாறும் போதெல்லாம் வழி காட்டிய அவர்களுக்கு என்றும் நன்றியுடையோம்.
வருமானம் கருதாத பணி. இரண்டு மூன்று இதழ்களோடு நின்று விடுமோ என்று பயந்த போதெல்லாம் தோள் கொடுத்த தோழர்கள் போற்றுதலுக்குரியவர்கள். பல்வேறு பணிகள் இருந்தாலும் ஒவ்வொரு இதழுக்கும் அவர்கள் வழங்கும் நேரத்திற்கும் முக்கியத்துவத்திற்கும் என்றும் அன்புடையோம். திரையில் வரும் துமி மின்னிதழ் அச்சு ஊடகமாக வேண்டும் என்பது பலரது ஆசை. காலம் கை கூடுகையில் யாவும் சாத்தியமாகும் என்பதே சத்தியம். எண்ணம் போல் வாழ்க்கை என்பதை எண்ணிக்கொண்டே இருப்பவர்கள் நாங்கள். அவனருளால்,
தொடங்கினோம்…
தொடர்கிறோம்…
தொடர்வோம்….